பன்முக ஆளுமை கொண்ட பேசாலை மண்ணின் பெருமை மகன் சாஹித்திய நாயகன் ஜோன் கெனடி உதயகுமார் துரம் (எஸ். எ. உதயன்) அவர்களின் அகத்திலிருந்து ..........
கணனியில் முகம் கலைஞனின் அகம்.
எத்துறையிலும் இருக்கும் எல்லோரையும் விட கலைத்துறையில் இருக்கும் கலைஞனுக்கு கௌரவமும் சிறப்பும் அதிகம். அவனுக்குத்தான் நிறைய பொறுப்பு உள்ளது. யாரும் என்னைக் கண்டுகொள்ளவில்லை. என்னை கௌரவிக்கவில்லை என்பதற்காக நான் எனது பணியினை கடமையினை செய்யாமல் இருந்துவிட முடியாது. என்னால் செய்யப்படவேண்டிய சேவை செய்தே ஆக வேண்டும் என முழங்குகிறார். நாட்டுக்கூத்து கலைஞர், ஓவியர், விழிகள் கலா முற்றம் இயக்குனர், கவிஞர், நெறியாளர், சிறப்பான நாவலாசிரியர் என பன்முக ஆளுமை கொண்ட பேசாலை மண்ணின் பெருமை மகன் சாஹித்திய நாயகன் ஜோன் கெனடி உதயகுமார் துரம் (எஸ். எ. உதயன்) அவர்களின் அகத்திலிருந்து ..........
தங்களைப் பற்றிய நினைவுகள்?
மன்னார் தீவின் கடல் வளமும் நல்ல சகோதரத்துவமும் கொண்ட மக்களின் வாசாப்புக் கலையின் சிறப்பியம்பும் பேசாலைதான் என் சொந்தக் கிராமம். அப்பா சந்யா ஆரோக்கியநாதன் துரம், அம்மா பேதுரு கிருஷ்ணா பீரீஸ் எனது தெய்வங்கள். எனது தெய்வங்கள் எனக்களித்த பெருங்கொடை வாசிப்புப் பழக்கமும், நாடகமும் தான்.
நீங்கள் முதலில் கால் பதிந்த துறை?
நான் முதலில் கால் பதித்த துறை எனும்போது அது நாடகத்துறைதான் காரணம். அதற்கான பின்புலம் என் தந்தை நாட்டுக்கூத்து அண்ணாவியார். அவரோடு இருந்து அவர் நாடகங்களை இயக்குவதை, பயிற்சியளிப்பதைப் பார்த்து சிறுவயதிலே ஆர்வ மிகுதியால் நானும் சிறுசிறு நாடகங்களை எழுதி இயக்கி பரிச்சாத்த முறையில் மேடையேற்றியுள்ளேன். சிறிய வெற்றிகளையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளேன்.
நாடகத்துறையில் உங்களை வளர்த்தவர்கள்?
1983ம் ஆண்டு காலப்பகுதியில் போர்ச்சூழல் காரணமாக இந்தியாவிற்கு செல்ல நேர்ந்தது. அங்கு சென்றதும் நான் கலைத்துறையில் ஆர்வ மிகுதியால் சென்னை எல்லீசன் கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்றேன். பிரளயன், நா. பாலசுப்ரமணியம், கோமஸ் சாமிநாதன் இன்னும் சிலருடைய வளர்ப்பில், நெறியாள்கையில் பட்டறையில் கூத்துப்பயிற்சியையும், நாடகப்பயிற்சியையும் முறையாகப் பெற்றேன். அதனூடாக சென்னை அடையாரில் உள்ள பிலிம் இன்டஸ்ரியல் திரைப்படத்துறை மாணவனாகப் பயிற்சி பெற்றேன். திடீரென இலங்கை வரவேண்டிய சூழ்நிலை காரணமாக முறையாக சான்றிதழ்களைப் பெற முடியவில்லை. ............
இதுவரை எத்தனை நாடகங்களை, நாட்டுக்கூத்துக்களை எழுதியுள்ளீர்கள். அதற்கான அங்கீகாரம் கிடைத்ததா?
இயன்றவரை சுமார் 79 நாடக நாட்டுக்கூத்துக்களை எழுதி, இயக்கி நெறியாள்கை செய்து பல பரிசில்களைப் பெற்றுள்ளேன் குறியீட்டு நாடகமாக 'நம் வீட்டு ஆத்திசூடி' நாடகத்திற்காக சிறந்த நெறியாளர் 'ஆனந்த கீர்த்திகா' விருதினையும் சிறந்த தயாரிப்பு விருதும் 1998இல் கிடைத்தது. 'மரணத்தின் விளிம்பில்' பாடசாலை மட்டம், மாவட்டம், கோட்டம் எனப் பல விருதுகளும் பரிசுகளும் பெற்றுள்ளன. நாட்டுக்கூத்து 'சங்கநாதம், ராமாயணம் (தேசிய ரீதியாகப் பரிசு பெற்றது) நிறைய வீதி நாடகங்கள், விழிப்புணர்வு நாடகங்கள் என எழுதிக்கொண்டு இருக்கின்றேன். குறிப்பாக நாடகப் பணியினைப் பாராட்டி எனக்கு இந்த ஆண்டு 'அண்ணாவியார்' பட்டம் தந்துள்ளார்கள்.
நாவல் எழுதுவதற்கான சந்தர்ப்பம் எப்போது அமைந்தது?
2006ம் ஆண்டில்தான் எனக்கு இதய சத்திர சிகிச்சை (வைப்பாஸ்) செய்ய வேண்டியதால் சிகிச்சையின் பின் என்னால் முன்போல் இயங்க முடியவில்லை. அதிகமான ஓய்வு நேரம் கிடைத்தது. அப்போது தான் எழுத ஆரம்பித்தேன். என்னுடைய முதல் நாவல் 'லோமியா' அப்பால் தமிழ் இலக்கிய மன்றம் பிரான்சில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. கி.பி.அரவிந்தன் அவர்களின் ஊடாக எனது முதல் நாவலை அச்சேற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது. சென்னை சாரளம் பதிப்பகத்தின் ஊடாக வெளியிடப்பட்டது. அத்தருணத்தில் கவிஞர் வைகறை மற்றும் முகுந்தன் மிகவும் உதவினர். 'லோமியா' நாவல் புலம்பெயர் தமிழ்ர்களினதும், இந்தியத்தமிழர், இலங்கைத் தமிழர் என்பவராலும் அதிகப்படிகள் வாங்கப்பட்டது. தினக்குரல், வீரகேசரிப் பத்திரிகைகளிலும் பாராட்டி எழுதினார்கள்.
தங்களது இரண்டாவது நாவல் பற்றி?
எனது இரண்டாவது நாவல் 'தெம்மாடுகள்' ஆகும். கருப்பொருள் இலங்கையிலிருந்து சின்னச்சின்ன பிரச்சினைகள் என்றதும் இந்தியாவின் கரைக்குச் செல்லக்கூடிய வாய்ப்பான சூழ்நிலை உள்ள இடத்தில் இருப்பதால் சின்னப்பிரச்சினை என்றதும் உடனே இந்தியாவிற்கு சென்றுவிடுவோம். அவ்வாறு 1983, 1984ம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெயர்ந்து இந்தியாவில் மண்டப முகாமில் அகதிகளாக இருந்தபோது நானும் அதில் ஒரு அகதியாக அங்கு கண்டு பார்த்து, உணர்ந்த பாதிக்கப்பட்ட தாக்கத்தினை என்ன நடந்தது எல்லாவற்றையும் பதிவு செய்தேன். அந்தப் பதிவுகளின் அடிப்படையில் தான் 'தெம்மாடுகள்' என்னும் நாவலை எழுதினேன்.
தங்களுடைய 'வாசாப்பு' நாவல் பற்றி?
மன்னாரில் பேசாலை மண்ணின் சிறப்பான அடையாளமான வாசாப்பு நாட்டுக்கூத்து மருவி இன்று வாசாப்பாக உருவம் பெற்றிருக்கும் கலையைப் பற்றியது. வாசாப்புக் கலையினை வாழ வைப்பதற்கான இங்கு படுகின்ற பிரயத்தனங்களும், அண்ணாவிமார்களும், கதைமாந்தர்களும் வாசாப்புக்கலையை வெளிக்கொண்டுவர உணர்வு ரீதியாகப் போராடுகிறார்கள் என்ற பதிவினை அதிலும் நானும் நாட்டுக்கூத்து கலைஞன் என்ற வகையில் அப்படியே எனது மனப்பதிவையும் மண்ணுக்கே உள்ள பெருமையையும் பதிவு செய்தேன். அந்த நாவலுக்கும் எனக்கும் சாஹித்திய விருதும் கிடைத்தது.
சொடுதா நாவல் பற்றி?
'சொடுதா' என்றால் வாலிபப்பருவத்தைக் குறிக்கும் சொல். பரம்பரை பரம்பரையாக இங்கு பேசாலையில் கடற்தொழிலை மேற்கொள்ளும் பழைய வலைகளை வைத்து மாய்ந்து மாய்ந்து இழுத்து அல்லல் படும் இளையவர்களின், அத்தொழிலில் புதிதான முறையினை கண்டுபிடிக்கும்போது ஏற்படுகின்ற மாற்றங்களும் தொழில் ரீதியாக கடல் ஓரமாக வாழுகின்ற அந்த மக்களின் நாயகர்களை வெளிக்கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் சொடுதாவாக வெளிவந்தது. இதற்கும் சாஹித்திய விருதும் மேலதிகமாக இரு விருதும் கிடைத்தது.
தற்போது எழுதிக்கொண்டிருக்கும் நாவல் பற்றி?
தற்போது எழுதிக்கொண்டிருக்கும் நாவலானது எமது போராட்ட வரலாறு நாம் இந்தியாவினால் எவ்வாறு ஏமாற்றப்பட்டோம் ஈழ போராட்ட வாதியான என்னையும் இந்தியாவின் துரோகம், ஏமாற்றியது, வழிகாட்ட மறந்தது ஈழ விடுதலைக்கும், இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம் என்பதையெல்லாம் சிந்திக்கும்போது பயங்கரமாகவுள்ளது. உண்மையிலேயே அந்தப் பதிவு அதில் பாதிக்கப்பட்டவர்கள் அதனுள் இருந்தவர்கள் என்னிடம் சொல்கிறார்கள் நிச்சயமாகப் பதிவு செய்யப்படவேண்டிய ஆவணம். உங்களால்தான் அது முடியுமென கேட்டுக்கொண்டதற்கிணங்க எழுதிக்கொண்டு இருக்கிறேன். பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வெளிக்கொண்டுவர முடியுமா..... என்ற கேள்விக்கு முன் வெளிக்கொண்டுவர முடியும் என்ற துணிச்சலோடு எழுதுகின்றேன். சில விடயங்களை எங்களால் சொல்ல முடியுமா? விட்டால் அது காலத்தால் அழிக்கப்பட்டுவிடும். மற்றவர்களால் அறிந்துகொள்ள முடியாது. இப்படியும் ஒரு சம்பவம் நடந்ததா? என்ற கேள்வியோடு இல்லாமல் போய்விடும். ஆகவே எழுதக்கூடிய நாங்கள் தான் அதை செம்மையாக செய்யவேண்டும். கடமையுணர்வோடும், தமிழன் என்ற கர்வத்தோடும் செய்கிறேன். வருவதை பிறகு பார்க்கலாம் என்று.
கவிதை துறை பற்றி?
கவிதைகள் எனும்போது நான் பல கவிதைகள் எழுதியுள்ளேன். அஞ்சலிக் கவிதைகள், பாமாலைகள், வாழ்த்துப்பாக்கள், எனப்பல எழுதினாலும் ஒரு நூலாக இதுவரை நான் வெளியிடவில்லை. அதற்காக நான் கவிதைத்துறையில் பிரகாசிக்கவில்லை என்று அர்த்தமில்லை. மன்னாரைப் பொறுத்தமட்டில் நிறையக் கவிஞர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் எழுதிக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களுடைய வேலையை அவர்கள் செய்கிறார்கள். என்னுடைய வேலையை நான் செய்கின்றேன். நாவல் என்ற பகுதியை யாரும் கைவைப்பதில்லை. பயப்படுகின்றார்கள், பெரிய விடயமாக எண்ணுகின்றார்கள். துணிச்சலாக கைவைத்தேன். அதிலும் அங்கீகாரத்தினைப் பெற்றுள்ளேன். அதுபோலவே கவிதைத்துறையில் இருந்து விலகி இருக்கிறேனே தவிர ஈடுபாடு இல்லாமலில்லை.
சிறுகதைத் தொகுப்பு ஏதும் வெளியிட்டுள்ளீர்களா?
ஆம். வெளிவந்துள்ளது. 'குண்டுசேர்' என்னும் சிறுகதைத் தொகுப்பு இந்தியாவிலும், இலங்கையிலும் வெளிவந்த வெளிவந்து கொண்டிருக்கின்ற ஆனந்தவிகடன், குமுதம், கலாநதி, தினக்குரல், வீரகேசரி, மன்னா என பல பத்திரிகைகளில் வெளிவந்த எனது சிறுகதைகளில் சிறந்த 15சிறுகதைகளைத் தொகுத்து 'குண்டுசேர்' என்னும் தலைப்பில் வெளியிட்டேன். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இக்கதைத் தொகுப்பினை வெளியிட முக்கிய காரணமானவர் சிறுகதை எழுத்தாளர், நல்லதொரு விமர்சகர், ஈட்டி போன்றவர். பட்டதை முகத்திற்கு நேரே சொல்லிவிடுவார். அவர் விமர்சனம் செய்தால் விமர்சனம்தான். என்னடைய அனுபவசாலி நண்பர், ஆற்றல் மிக்க ஒரு படைப்பாளி நந்தினி சேவியர் ஐயா அவர்களைத்தான் நான் நினைத்துப் பார்க்கிறேன். எனது வளர்ச்சியின் தூணாக நிற்கிறார்.
இந்தியாவில் இருந்த காலப்பகுதியில் திரைப்படங்களுக்கு கதை எழுதியதாக சொன்னீர்கள் அதுபற்றி?
இந்தியாவில் பிலிம் இன்ரியூட்டில் திரைப்படத்துறை பயிற்சியினை மேற்கொண்ட நேரத்தில் பல திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளேன். சில திரைப்படங்கள் வெற்றி விழாக் கொண்டாடியது. அத்தனையிலும் என்னுடைய பெயர் இல்லை. என்னுடைய 'காற்றில் ஆடும் கிளிக்கூடு' எனும் கதையைத்தான் ஒரு மலையாளப்பட இயக்குனர் அரவிந்தனிடம் வெறும் 500ரூபாய்க்கு திரைக்கதையினைப் விற்றேன். அப்போது எமக்கு கஸ்டமான சூழ்நிலையில் 500 ரூபாய் பெரும் உதவியாக இருந்தது. இலங்கையிலும் World Vision னுக்கு 'கஸ்ர கரணம்' குறும்படம் வந்து இன்றும் Mental Health விழிப்புணர்வு போட்டுக்காட்டுகிறார்கள். ஆசை மரிப்பு என்னும் 'டயபற்றிக்' நோயாளிகளின் எப்படி பராமரிப்புது தொடர்பான விழிப்புணர்வு படமாகும். இன்னும் சில குறும் படங்களுக்கும் கதையெழுதிக்கொண்டிருக்கின்றேன்.
இந்தியாவில் உங்கள் நாடக ஆளுமைபற்றி?
இந்தியாவில் 1984ம் ஆண்டு 'துயர இரவுகள்' எனும் நாடகத்தினை கலைவாணர் அரங்கில் அரங்கேற்றுவதற்காக நவீனமுறையில் செயல்படுத்த அதற்கான கலைஞர்களைத் திரட்டி அதற்கான ஒத்திகையினை சென்னை சைதாப்பேட்டையில் நாங்கள் மொட்டை மாடியொன்றில் பார்த்துக்கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்திருந்த பேராசிரியர் பெரியாசான் என்னிடம் ஒருவரைக் காட்டினார். அவர் உங்கள் நாடகம் நன்றாக உள்ளது. இந்நாடகத்திற்கு முன்கவி பாடலாமா? எனக் கேட்கவும் பெரியாசான் இவர்தான் வைரமுத்து கவிஞர். சில திரைப்படங்களுக்கு பாடல் எழுதிக்கொண்டிருக்கின்றார். உங்களால் முடிந்தால் பாடுங்கள் என்றேன். எனது 'துயரஇரவுகள்' எனும் நாடகத்திற்கு முன்கவி பாடியவர்தான் இப்போது எல்லோராலும் கவிப்பேரரசு என்று அழைக்கப்படுகின்ற வைரமுத்து அவர்கள். ....... 'ருத்தர தாண்டவம்' என்னம் நாடகமும் இன்னும் பல நாடகங்களை சென்னை, பாண்டிச்சேரி, கொல்கத்தா, பெங்களூர், ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் மேடையேற்றி வசூலைப் பெற்றதோடு பாராட்டினையும், வரவேற்பையும் பெற்றது. அதன் பலனாக பல பெரும் கலைஞர்களை சந்திக்கவும், அவர்களின் அனுபவத்தினைப் பெற்றுக்கொள்ளவும் முடிந்தது. எனது வாழ்க்கையில் பலரை திறமையானவர்களை சந்தித்துள்ளேன்.
உங்களைக் கவர்ந்த நாடகம் பற்றி?
அர்த்தமுள்ள அபுதாசிகள் வெளிநாட்டிற்கு கணவனை அனுப்பிவிட்டு இங்கு புழுங்கிக்கொள்ளும் ஒரு இளம் மனைவியைப் பற்றிய நாடகம். 'வீணையடி நீ எனக்கு' எனும் நாடகம் - இந்திய இராணுவ வீரர்களினால் பாலியல் வல்லுனர்வுக்கு உட்படுத்திய இளம்பெண்ணின் வாழ்வை வெளிக்காட்டிய நாடகம். வரலாற்று நாடகமாக தாஜ்மகாலை வைத்து 'இரத்தமகால்' என்ற நாடகத்தையும் சொல்லலாம்.
முதன் முதலில் கதை எழுதி நெறியாள்கை செய்து மேடையேற்றிய நாடகம் எது?
'கூடாரம்'தான் இந்தியாவில் எழுதி நெறியாள்கை செய்து மேடையேற்றிய பல நாடகங்களை விட்டு இலங்கைக்கு வந்து இலங்கைச் சூழலின்படி எழுதியது அகதிகளாய் இருந்து படகுப்பணம் கொடுக்கமுடியாமல் கைகளில், கழுத்தில் இருந்த எல்லாவற்றையும் உருவி முன்னேறிய பெருச்சாளிகளான முதலாளி வர்க்கத்தினை சாடும் நாடகம்தான் 'கூடாரம்'
நாடகங்களை அமைக்கும்போது நீங்கள் மேற்கொள்ளும் உத்தி?
எடுத்துக்கொள்ளப்படுகின்ற கருப்பொருள் அந்தச் சூழ்நிலை, சமூகப்பார்வை, மொழியாடல் எந்தப்பகுதியில், எச்சந்தர்ப்பத்தில் எத்தனை பேரை எப்படிப் பயன்படுத்தவேண்டும். அணுகுமுறைகள், பாத்திர அமைப்புக்கள் எல்லாவற்றையும் நுட்பமுறைகளையும் நாடகப் பட்டறையிலும் எனது அனுபவத்தினாலும் பெற்றுக்கொண்டு திறமையான முறையில் நாடகத்தினைப் அமைக்கின்றேன். நாடகம் ஒன்றை எழுதும்போது அது எனக்குப் பிடிக்க வேண்டும். இல்லையென்றால் தொடர்ந்து எழுத மாட்டேன்.
நாவல் ஒன்றைப் படைக்கும்போது எவற்றையெல்லாம் அவதானிப்பீர்கள்?
எடுத்தவுடனேயே காட்சியை சித்தரிக்க முடியாது. அதனுடைய பின்புலம், அதன் சூழல், நிகழ்விடம் உண்மைத்தன்மை இன்னும் பல எழுதிக்கொண்டு இருக்கும்போது வாசகனாக என்னை நினைத்து எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் அமைய வேண்டும். எந்தவொரு இடத்திலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வாசகனுக்கு சந்தேகம் ஏற்பட்டுவிடக் கூடாது. இது நிகழ்ந்திருக்குமா .... சாத்தியமா.... என்ற கேள்வி தோன்றக் கூடாது. அப்படித் தோன்றினால் அந்த நாவல் தோற்றுப் போய்விடும். பிழையான எண்ணக்கருவினை ஏற்படுத்தி விடும். உண்மையினை சொல்ல வேண்டுமானால் அந்த சூழலில் சமுதாயத்தில் நாமும் வாழ்ந்தாக வேண்டும். வாழும் அனுபவத்தினையாவது பெறவேண்டும்.
நீங்கள் எழுதிய நாவலில் எந்த நாவலை எழுதும்போது மிகவும் கடினமான கசப்பான சோதனைகளை அனுபவித்தீர்கள்?
எனக்கு சோதனையான நாவலாக அமைந்தது என்றால் அது 'சங்குமுள்ளு' நாவல்தான். ஒன்று அது என்னுடைய சமூகம் சார்ந்த கதையல்ல. இரண்டாவது அது மீள் குடியேற்ற பகுதியில் நடைபெறும் அநீதிகள் பற்றி குறிப்பிடும்போது அது நான் யுத்தத்தால் பாதிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட மனிதனைப் பற்றி, சமூகத்தைப்பற்றி எழுதவேண்டும் என்ற தேவை எனக்கு ஏற்பட்டது. உண்மையாக அனுபவிக்காத நான் அந்த அனுபவத்தின் ஊடாகச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தின் காரணமாக அங்கு சென்று பல நாட்கள் அந்த மக்களோடு வாழ்ந்தேன். அங்கு பணி புரியும் Mental Health பணியாளர்களிடம் வரும் விசாரணைகளை விசாரித்தேன். பல தொழிலாளர்களைச் சந்தித்தேன். என்.ஜி.ஓ (N.G.O) நிறுவனங்களின் உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடினேன். பலரிடமும் இருந்து தகவல்களை குறிப்பெடுத்தேன். நான் எழுத ஆரம்பிக்கும்போது சில சிக்கலை எதிர்கொண்டேன். மொழியாடல் மிக முக்கியமானது. பேசாலையில் பேசுவதைப்போல அல்ல. அந்த சூழலில் மொழியியல் வேறு மாதிரியாகவும் அவர்களின் சூழல் வயல் வரப்புக்கள், காடுமேடுகள், விலங்குகள், பறவைகள், தொழில்முறைகள், விருந்தோம்பல், நடத்தைகள், மனித இயல்புகள் பலவாறான சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது. எழுதும்போது ஒவ்வொரு இடத்திலும் தப்பான எண்ணம் வந்துவிடுமோ என்று பயந்ததுண்டு. நிறையக் கேள்விகள் என்னில் எழுந்ததும் நிறையப் பதில்களை தேடவேண்டிய கட்டாய சூழல் அமைந்ததும் இந்த நாவலுக்குத்தான் முடியுமா.....? என்று தொடங்கினேன். முடியும் என்று எழுதி முடித்துள்ளேன். இழந்ததை மீள்குடியேற்றம் செய்துவிட்டோம். வீடுகள், வீதிகளை திருத்திவிட்டால் மட்டும் சமாதானம் கிடைத்துவிடாது. இழந்தது இழந்ததுதான். அது எத்தனை யுகமானாலும் ஈடுசெய்யமுடியாது. வலியோடு வாழும் விதவைகள் எம்மக்களின் வலியினை கொஞ்சம் குறைக்க எடுத்த முயற்சிதான். இந்த 'சங்குமுள்ளு' தான் சங்குமுள்ளானது. அழகானது ஆனால் அது நிறைய முட்களால் ஆனது. தொட்டாலும், பட்டாலும் ஒரு முள் அல்ல. குத்துவது பல முள்ளுகள், ஒரே தடவையில் குத்தும் வலியோ வலிதான். ...........
நீங்கள் எழுதிய நாவல்களில் உங்களை மிகவும் கவர்ந்த நாவல்?
நான் எழுதிய எல்லா நாவலுமே என்னை கவர்ந்தவைதான். அதிலும் நான் எழுதிய 'வாசாப்பு' நாவல்தான் என்னைப்பற்றிய என் மண்ணின் சிறப்பான கலையம்சம் பொருந்திய வாசாப்பின் கலையார்வத்தை அந்த மாந்தரின் வரலாற்றை கண்முன்னே கொண்டுவந்தேன். நான்தான் அந்த கதாநாயகன். எனக்கு நானே எழுதிய நாவல் வாசாப்புத்தான். என் மனம் கவர்ந்த மண்பேசும் நாவல்.
நீங்கள் எழுதிய நாவலில் பிறரைக் கவர்ந்தது எது?
அது'லோமியா'தான். தெளிவத்தை யோசப் ஐயா சொன்னார் தம்பி இதைப் போல ஒரு நாவலை நான் வாசித்ததே இல்லை. அருமையான நாவல். டொமினிக் ஜீவா ஐயா சொன்னார் இப்படியொரு நாவலை நான் படிக்கவில்லையடா. செங்கை ஆழியன் தம்பி கடல் சார்ந்த கதையை ஒருமையான முறையில் சொல்லியிருக்கின்றாய் எனப் பலரும் பாராட்டியிருக்கிறார்கள்.
நீங்கள் இதுவரை வாசித்த நாவலில் உங்களைக் கவர்ந்த நாவல்கள்?
தெளிவத்தை ஜோசப் அவர்களின் 'குடைநிழல்' யுத்தமற்ற பகுதியில் கொழும்பில் தமிழன் பட்ட நிலை. தேவா என்ற விடத்தல் தீவைச் சேர்ந்த புலம்பெயர் தமிழர் பிரான்சு மொழியில் இருந்த 'அனோனிமா' – தமிழ் மொழி பெயர்ப்பு 'குழந்தைப் போராளிகள்' டானியல் சகல படைப்புக்களை வாசித்தேன். ஈழத்து எழுத்தாளரான பாலமுனை பாரூக் எழுதிய 'தோட்டுமை முத்தம்மா' , 'எஞ்சியிருந்த பிராத்தினைகள்' இந்திய இராணுவ வருகையின் அவலத்தை சாடியிருக்கிறார். ஓட்டமாவடி 'அரபாத்' 'மண்புளு' எனும் சிறுகதையை இஸ்லாமிய சமுக மார்க்கத்தில் இருந்து மௌளவியான இவரின் துணிவு வெளிப்படுகிறது. பள்ளுவர் சமுதாயத்தில் இருந்து இன்றைய அரசியல் நுகர்வு வரை அப்பட்டமாக வெளிப்படுத்திய பூமணியின் ஐஞ்நாடி நாவலும் ................... ஜெயமோகன் - வெள்ளையானை நாவலும் போன்றன இன்னும் வாசித்து வருகின்றேன்.
நாடகக் கலைஞர் நாவலாசிரியர் ஓவியர் என மூன்று பிரிவிலும் பிரபலிக்கும் நீங்கள் இவற்றுக்கிடையில் காணப்படும் வேறுபாடுகள்?
ஒன்றையொன்று பின்னிப் பிணைந்த சங்கிலித்தொடர் அமைப்பே ஆகும். நாடகக்கலைஞராக இருந்த நான் நாவலாசிரியரானேன். நாவலாசிரியரான நான் அந்தக் காட்சியை கதையம்சத்துடன் சித்தரிக்க சித்திர ஆசிரியராக மாறினேன். அந்த இடத்தில் கதைக்கருவாக மாற்றமுடியும். இவ் மூன்றில் ஏதாவதொன்று இல்லாமல் இருந்திருக்குமானால் என்னுடைய திறமையினை 100ற்கு 100வீதம் வெளிப்படுத்தியிருக்க முடியாது என்பது திண்ணம்.
நீங்கள் கண்டு வியந்த கலைஞர் பற்றி ?
இலக்கியத்திற்கு அப்பாலும் அற்புதமான படைப்பாளி. திறமையான கலைஞர் என்றால் அது வேறு யாருமல்ல. உலகநாயகன் 'பத்மசிறி' கமலஹசன்தான். நடிகர் என்பதையும் தாண்டி அவரின் பார்வை உலகத்தையே நோக்கி பயணிக்கின்றார். எனது இளமைக்காலத்தில் அவரது தீவிர ரசிகனாக இருந்து அவரின் பாணியிலே ஜீன்ஸ், சேட், தலைமுடி ஸ்ரைல், கிப்பி வெட்டு, அவர் பேச்சு, நடனம் என அனைத்தையும் பின்பற்றிய எனக்கு இப்ப சகிக்க முடியவில்லை. இன்றைக்கு இருக்கும் கமல் அன்று 1983ம் ஆண்டு இருந்த கமல் அல்ல. அவரின் படைப்புக்கள், செயற்பாடுகள் ஒவ்வொன்றுமே புதிய புதிய பார்வையில் கோணத்தில் மாற்றம் பெற்றுக்கொண்டே செல்கிறது. சினிமா என்று மட்டும் நின்றுவிடாமல் அதையும் தாண்டி அவரின் தேடல் இன்னும் விரிவடைந்தே உள்ளது. நிறைய வாசிப்பார், நிறையக் கற்றுக்கொள்வார் தன்னைச் சுற்றியுள்ள அனைத்தையும் தினம் தினம் ஆராய்ந்து கொள்வார். எல்லா விடயங்களிலும் இவரின் ஆளுமைதான் எந்த துறைசார்ந்த விடயங்களானாலும் அவர் அத்துப்படி. பல்துறை வித்தகர், உத்தம ஞானி. அவர் தமிழ் உலகிற்குக் கிடைத்த அரிய பொக்கிஷம். எக்காலத்திற்கும் தன்னை மாற்றி தமிழனின் தெளிவையும், தேடலையும் உடைய இளம் கலைஞன் காலத்தை வெல்லும் கலைத் தமிழன். ......
உங்களின் வளர்ச்சியில் பங்களிப்பு செய்யும் நண்பர்கள் பற்றி?
நண்பர்கள் வட்டமே உள்ளது. என்னுடய ஒவ்வொரு படைப்பையும் வாசித்துப் பாராட்டி விமர்சனம் செய்து பக்கபலமாக இருப்பவர்கள் ஏராளம். பெயர் சொல்லி குறிப்பிட முடியாது. அதிலும் தற்போதைய சூழலில் எனது 'சங்குமுள்ளு' நாவலை முன்னின்று அச்சிட்டு வெளியிட்ட சைபர்சிற்றி நிர்வாக இயக்குனர் சதீஸ் அவர்கள் இந்த மாபெரும் உதவியை செய்துள்ளார். தற்காலத்தில் இதை யார் செய்வார். அவரை என்னால் மறக்கவே முடியாது.
சோதனையும், வேதனையும் கடந்துதான் சாதனை படைக்கமுடியும். தங்களின் வேதனை?
அதிகாலை ஐந்து மணியில் இருந்து 6.30 மணி மட்டும் எழுதுவேன். மாலையில் 5.30 மணியிலிருந்து 7.30 மட்டும் எழுதுவேன். அப்படியான நேரத்திலும் நான் விரும்பி பல மணி நேரங்கள் எழுதிக்கொண்டிருப்பேன். அப்படியான நேரத்திலும் என்னை யாரும் குழப்பிவிடக் கூடாது. ஏதும் இடைஞ்சல் பண்ணக் கூடாது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் மிகவும் கவலையும், வேதனையும் அடைவேன். எழுத்தாளன் என்று என்னை அடையாளப்படுத்தியும் அதனால் என் குடும்பத்திற்கு குடும்பத் தலைவனாக எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தி விடக் கூடாது என்பதில் உறுதியாய் இருப்பேன். இதுவரை எனக்கு எந்தவிதமான இடையூறுகளும் வரவில்லை. என் மனைவி, பிள்ளைகள் எல்லோருமே எனக்கு பக்கதுணையாக உள்ளனர்.
மிகவும் நீங்கள் சந்தோஷம் அடைந்த தருணங்கள்?
பல இருந்தாலும் இரண்டு விடயங்களை குறிப்பிடுகிறேன். எனது முதலாவது நாவல் இந்தியாவில் வெளிவந்ததினால் இலங்கையில் அறிமுக விழா செய்தபோது தமிழ்மணி அகளங்கள் அவர்கள் கலந்து கொண்டார். அந்த விழாவில் என்னைப்பற்றி அருட்தந்தை ஜெறோம் அவர்கள் நாவலாசிரியராக நான் அங்கு நிற்கிறேன். எனது இன்னொரு சிறப்பினை நாடக ஆளுமையினைப் பற்றிப் பேசும்போது மனம் நெகிழ்ந்து போனேன். ...... நாடகப் பாணியினைப் பாராட்டி 'ஆனந்த கீர்த்திகா' விருதினைப் பெறுவதற்கு (ஏ.ஐ.P, வி.ஐ.பி) யாக எம்மை அழைத்து மேடையில் அமர்கின்ற போது அங்கே அமர்ந்திருப்பவர்கள் ஒவ்வொருவரும் பெரும் கலைஞர்கள் அட நானும் பெரிய கலைஞனாக மதிக்கப்படுகின்றேன் என்னும் சந்தோஷம் எனக்கு ஒவ்வொரு விருது பெறும்போதும் ஏற்படும். இது கலைஞர்களுக்கே உரிய கௌரவமானது. வேறு யாருக்கும் இவ்வாறு அமைவதில்லை.
நீங்கள் இதுவரை பெற்றுக் கொண்ட விருதுகள் பட்டங்கள் பற்றி?
1. 1998 - இளைஞர் விருது – ஆனந்த கீர்த்திகா (சிறந்த தேசிய நாடக நெறியாளர்)
2. 1998 - சிறந்தநாடகத்தயாரிப்பு- இளைஞர் விருது
3. 2008 - சிறந்த நூல் விருது வடமாகாணம் (லோமியா)
4. 2009 - சிறந்த நூல் விருது வடமாகாணம் (தெம்மாடுகள்)
5. 2010 - சிறந்த நூல் விருது வடமாகாணம் (வாசாப்பு)
6. 2010 - தமிழியல் விருது – 'தெம்மாடுகள்'
7. 2008 - தமிழியல் விருது – 'லோமியா'
8. 2011 - தேசிய சாஹித்ய விருது - 'வாசாப்பு'
9. 2012 - தேசிய சாஹித்ய விருது – 'சொடுதா'
10. 2012 - கொடகே தேசிய சாஹித்ய விருது - 'சொடுதா'
11. 2012 - சிறந்த நூல் விருது வடமாகாணம் - 'சொடுதா'
12. 2013 - நற்புகழ் நாவற்கோன் விருது – மன்னார் தமிழ்ச் சங்கம்
13. 201 - இலங்கை இலக்கியப்பேரவை விருது – 'வாசாப்பு'
14. 2008 - இலங்கை இலக்கியப் பேரவை விருது – 'லோமியா'
15. 2010 - இலக்கியசாதனையாளர் விருது - இலக்கியவட்டம், திருகோணமலை
16. 2010 - எழுத்தாளர் கௌரவிப்பு விருது – வளர்கலைமன்றம், பேசாலை.
17. 2014 - அபின் அக்கடமி சான்றிதழ்
18. 2013 - Literary Festival –
Bhutan official nominee – of
Sri Lanka
19. 2014 - வடமாகாண பாரம்பரியகலை – ஆளுனர்விருது- நாட்டுக்கூத்து அண்ணாவியார்.
எஸ்.ஏ. உதயனின்.........
எழுதி இயக்கிய நாடகங்கள்.
1983-1985 வரை ஈழ விடுதலைப் போராட்ட எழுச்சி நாடகங்கள்.
1. துயர இரவுகள் - 1984 சென்னை கலைவாணர் அரங்கு
2. இதுதான் வழி - 1984 சமுதாயக்கண் அரங்கு, வியாசர் பாடி, சென்னை.
3. ருத்ர தாண்டவம் - 1985 ஆசிய இளைஞர் மாநாடு, சென்னை
4. எங்கே போகிறோம் - 1984 தமுக்கம் மைதானம் - மதுரை
5. யுத்தம் சரணம் கச்சாமி - 1985 தமிழ் வணிகர் சங்கம் - பெங்களூர்
1986 - 2014 வரை
6. கூடாரம் - 1987 வளர்கலை மன்றம் பேசாலை
7. கல்விக்கொரு வேள்வி - 1987 புனித வெற்றிநாயகி இளைஞர் ஒன்றியம்.
8. ரத்த மஹால் - 1988 வளர்கலை மன்ற ஆண்டு நிறைவு விழா
9. கவிராசன் (இலக்கிய நாடகம்) 1989 வளர்கலை மன்ற அரங்கு
10. சிதறிய கற்பலகை - 1989 புனித சவேரியார் பெண்கள் கல்லூரி அரங்கு.
11. குருதிப்பூக்கள் - 1990 O.M .I கண்காட்சி அரங்கு பேசாலை
12. விடிவெள்ளி - 1990 ஒளிவிழா அரங்கு புனித வெற்றிநாயகி ஆலயம்.
13. ஏவாளின் பாவம் - 1991 ஒளிவிழா அரங்கு புனித வெற்றிநாயகி ஆலயம்.
14. குடில் - 2004 ஒளிவிழா அரங்கு புனித வெற்றிநாயகி ஆலயம்.
15. கானகம் அடைந்த அன்னை - 1986 மடுத்திருப்பதி நூற்றாண்டு விழா வானொலி சிறப்பு நிகழ்ச்சி
16. ஆண்டவரில் உயிர்ப்பேன் - 1987 உயிர்ப்பு விழா வானொலி சிறப்பு நிகழ்ச்சி
17. நம்ம வீட்டு அத்திசூடி - 1994 ஜனாதிபதி விருது (ஆனந்த கீர்த்திகா)
18. ஒரு மரணத்தின் விளிம்பில் - 1998 தேசிய விருது.
19. அர்த்தமுள்ள அபஸ்வரங்கள் - 1999 இளைஞர் ஒன்றியம், மன்னார் மாவட்டம்.
20. அவலங்கள் - 2010 பொங்குதமிழ் அரங்கு
21. இதுவா அந்த இரத்தம் - 2009 வேதாசாட்சிகள், தோட்டவெளி அரங்கு
22. மீண்டும் செனட்ரீன் தவக்கால இளைஞர் ஒன்றுகூடல், மன்னார்.
23. யுக புருஷர்கள் (வரலாற்று நாடகம்) – 2009 வளர்கலை அரங்கு
24. தூண்டில் புழுக்கள் - 2012 இளைஞர் ஒன்றிய அரங்கு
25. விதியின் வழியிலே - 2000 வளர்கலை மன்றம், பேசாலை
26. பிஸி - 2010 அரச சாரா நிறுவனத்திற்காக
27. துன்பமினி எதுவரை(இலக்கிய நாடகம்) – 1999 கோப்பாய் அரசினர் ஆசிரியர் கலாசாலை
28. பழி படரும் துயரம் (இலக்கிய நாடகம்) - 2001 தமிழ் தினப் போட்டி
29. கனம் கோட்டார் அவர்களே - 2000 Non.R.C அரங்கு பேசாலை
30. ஓய் பேசாலை(நகைச்சுவை நாடகம்) - 2000 வெற்றிநாயகி அரங்கு பேசாலை.
31. இந்த காக்கையை விரட்டு (நகைச்சுவை நாடகம்) 2000 இளைஞர் ஒன்றியம்.
32. உலகம் உருண்டையப்பா (நகைச்சுவை நாடகம்) 2000 இளைஞர் ஒன்றியம்.
33. ஊர் வாய் (நகைச்சுவை நாடகம்) 2000 பாத்திமா ம.ம.வி பேசாலை.
34. புரோக்கர் பொன்னையா (நகைச்சுவை) - 2001 வளர்கலை மன்ற அரங்கு
35. கொன்றால் பாவம் தின்றால் போச்சு - 2012 வீதி நாடகம்
36. அவனும் மனிதன்தான் - 2012 விழிப்புணர்வு வீதி நாடகம்
37. மன்னார் அழுகிறது. - 2014 விழிப்புணர்வு வீதி நாடகம்
38. ஸ்கொலர் சிப் சோதனை - 2014 மன்ஃபத்திமா ம.ம.வி
39. கெடுவான் கேடு நினைப்பான் - 2008 சிறுவர் அரங்கு
40. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - 2009 சிறுவர் அரங்கு
41. சாலமன் நீதி - 2010 சிறுவர் நாட்டுக் கூத்து
42. கடற்கள்ளன் (நாட்டிய நாடகம்) - 2008 மன். பத்திமா விளையாட்;டு அரங்கு.
43. மனமே .. மங்காதே (வீதி நாடகம்) - 2011 உளவள நிலையம் வேல்ட் விசன்.
44. சங்கநாதம் - 2004 நாட்டுக்கூத்துப் போட்டி மன்னார்.
45. சூது (நாட்டுக்கூத்து) - 2005 மன்னார் இலக்கிய மன்றப் போட்டி
46. இராமபாணம் (நாட்டுக்கூத்து) - 2014 வடமாகாண ஆளுநர் விருதுப் போட்டி
47. மனித மாண்பு (வீதி நாடகம்) - 2014 மறைமாவட்ட இளைஞர் போட்டி
48. அணையும் விளக்கு சமூக சீர்கேடு விழிப்புணர்வு
49. பாருள்ளேயோர் வலிமை - 2010 புத்துருவாக்கக் கூத்து அப்புத்தளை அரங்கு.
50. மாநாகன் நாட்டுக்கூத்து - 2011 வெற்றிநாயகி அரங்கு
51. உயிர்ப்புக்கு ஒரு பாலம். - 1995 வானொலி உரைச்சித்திரம்
52. மண்பிடியின் காதல் - 1992 புத்தாக்க நாட்டுக்கூத்து
53. வெள்ளை மனம் - 2000 ஆசிரியர் தின அரங்கு மன்னார்.
54. நமக்கு நாமே - 2000 வளர்கலை மன்ற அரங்கு
55. அவன் பித்தனல்ல சித்தன் - 1993 வானொலி நாடகம்
56. ட்ரான்சர் - 2006 பேசாலை பத்திமா ம.ம.வி
57. இருளும் ஒளியும் - 2003 தமிழ் தினப் போட்டி
58. நீதிமானின் இரத்தம் - 2003 தவக்கால தியான ஒன்றுகூடல் நிகழ்வு
59. வீணையடி நீ எனக்கு - 2001 கலையருவி அரங்கு மன்னார்.
60. ஒரு நேரம் விதி போல - 2002 கலையருவி அரங்கு மன்னார்.
61. தேசம் கடந்து - 1999 கல்விக்;காட்சி. புனித சவேரியார் பெண்கள் கல்லூரி
62. ஞானோதயதம் - ஒளிவிழா நாடகம்
63. ஏலேலோ வானொலி நாடகம்
64. அந்திக்கவி வானொலி நிகழ்ச்சி
65. இயேசு வந்தார் மனசுக்குள்ளே ஒளிவிழா நாடகம்
66. உயிர்ப் பூக்கள் வேதசாட்சிகள் அரங்கு
67. நான் சமாதானத்தின் கருவியானால் சிறுவர் அரங்கு
68. நட்டாற்று மனிதர்கள்
69. கெம்பஸ் கனவுகள் - 1999
70. சமாதானப்பந்து - ஊமம்
71. ஆடி விலைப்பட்டவள். நாட்டுக்கூத்து
குறும்படங்கள்.
1. கஸ்ரகரணம் - 2013 (உளவள நிலையத்துக்காக வேல்ட் விசன்)
2. அபஸ்வரம் - 2010
3. ஆசை மரிப்பு - 2014
4. கிளினிக் திருவிழா
திரைக்கதை சினிமா (இந்தியா)
1. காற்றிலாடும் கிளிக்கூடு
2. விபத்தில் உண்டான சோகத்திலே
என்னிடம் இருக்கும் பிரதிகளின் அடிப்படையில் பெறப்பட்ட தகவல்கள்.
விருது கலைஞர்களுக்கு ஒர அங்கீகாரம் அதுவும் முதல்முறை விருது பெறும் போது சொல்லவே தேவையில்லை அப்படியொரு தருணம்?
உண்மையிலும் உண்மைதான் என்னை முதல் முதல் பரவசத்தில் மிதக்க வைத்தது. 'வாசாப்பு' நாவல் தான் இது என்னுடைய மண்ணின் பெருமை நான் வாழும் சமூகத்தின் எமது கலையின் மகத்துவத்தையும் மனமுருகி வெளியிட எனது உணர்வுகளை எம்மண்ணின் மைந்தர்களின் உணர்ச்சி சித்திரம் தான் இந்த 'வாசாப்பு' நாவல் 2010ம் ஆண்டு 11 நாவல்களுக்கு இடையில் பலமுறை மோதி இறுதிச் சுற்றுக்கு 3 நாவல்கள் தெரிவானது. அதில் என்னுடைய வாசாப்பு நாவலும் ஒன்று. சாகித்திய அமைப்பில் இருந்து அழைப்பு வந்தது. நானும் எனது மனைவியும் சென்றோம். மிகவும் கௌரவமாக அழைத்துச் சென்றார்கள். நாவல்கள் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகிய மூவருள் நானும் தெணியான், கமால்டீன், இறுதிமுடிவு காட்டும் திரைக்கு முன்னால் இருக்கின்றோம். ஒவ்வொரு முறையாக திரையில் மூவருடைய நாவல்களையும் காட்டும் போது நுனிக்கதிரையில் இருந்து முடிவை எதிர்பார்க்கும் போது எனது மனம் பாடாய்பட்டது பெரும்பாடு.
என் நாவல் தோற்றுவிடுமா? அது தோற்றுவிட்டால் என் மண் தோற்றுவிடும் எனது கலை தோற்றுவிடும். நான் தோற்று விடுவேன். நான் தோற்றால் பரவாயில்லை என் மண் தோற்கக் கூடாது. என் ஆதங்கப் பட்டேன். ஏnனினில் என்னுடன்போட்டிபொட்ட இருவருமே நாவலின் வித்துவான்கள் கண் இமைக்காமல் நுனிக் கதிரையில் இருந்து திரையை பார்க்கின்றேன். மனம் அதிகமாய் துடிக்கின்றது. மூவருடைய நாவல்களையும் மாறி மாறி காட்டியவர்கள். திரையில் எனது நாவல் தான் வந்து நின்றது. இவ் வாண்டுக்கான சிறந்த நாவல் என்று அறிவிப்பு வந்தபோது நான் மட்டுமல்ல எனது மண் எனது கலை வென்றது. என் மனம் இறக்கையின்றி பறந்தது..
பின்பு எனது நாவலை படித்துவிட்டு தெணியனும் கமால்டீனும் சொன்னார்கள். உம்முடைய நாவல்தான் சிறந்தது. இரட்டிப்பு மகிழ்ச்சி.
மன்னாரில் கலைஞர்கள் கௌரவிப்பு குறைவு என்பது பற்றிய தங்களின் எண்ணக்கருத்து?
மன்னார் தமிழ் செம்மொழி மாநாட்டில் 'நற்புகழ் நாவற்கோன்' விருதினை தந்திருந்தார்கள். மன்னார் மண் ஏன் இலக்கிய வாதிகளை கண்டு கொள்ளவில்லை. எந்தவொரு விழாவும் ஒருநாள் விழாவாக இருக்கக்கூடாது. பொதுவாக ஒரு வைத்தியரை இஞ்சினியரை எல்லோருக்கும் தெரிகிறது
.ஒரு கலைஞனை ஏன் மக்களோ சமூக அமைப்புகளோ கண்டு கொள்வதில்லை. தெரியப்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தவில்லை. அண்மையில் பேசாலை சார்பாக நாடகப் போட்டியினை நானே எழுதி நெறியாள்கை செய்து போட்டியிலும் முதலாம் இடத்தைப் பிடித்து 75000 ரூபா பணப்பரிசையும் வென்றது. இவ்வெற்றியை கோயிலில் அறிவிக்கும் போது நாடகப் போட்டியில் எமது பேசாலை 1ம்இடத்தை பெற்றது என்று மட்டும் தான் அறிவிப்பு செய்தார். பாதர் நான் பாதரிடம் (பங்குத்தந்தை) நேரடியாக கேட்டேன். பாதர் ஏன் S.A.உதயனின் நெறியாள்கையில் இம்முறை எமது பேசாலை நாடகத்தில் 1ம் இடத்தை பெற்றது என்று அறிவிக்கவில்லை என்றதும் அவர் பல காரணங்களை முன்வைத்தார்.
நான் மீண்டும் எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு அள்ளிக் கொடுக்கவேண்டாம். எங்களின் திறமையினை பாராட்டி பரிசு தர வேண்டாம். ஆனால் எங்கள் பெயர்களை பலர் அறியச் செய்யுங்கள் என்றேன். அதுதான் ஒவ்வொரு கலைஞனும் விரும்பும் பெருமையான விடையம். இப்படியாக பல இலக்கிய விழாக்களில் கூட சம்மந்தமில்லாதவர்களை அழைத்து பொன்னாடை போர்த்தி கௌரவித்து அனுப்புவார்கள். அதே விழாவில் நாங்களும் இருப்போம். எங்களை கண்டு கொள்வதே இல்லை. இவர்களின் எண்ணம் என்னவென்;பது வளக்கமில்லாமல் இருக்கின்றது.
நீங்கள் விருதுகள் பெறும் போது உங்களுக்கான பாராட்டு விழாக்கள் எடுத்தார்களா?
இதுவரை எதுவுமே இல்லை எங்களின் கோயிலில் என் பெயரைச்சொல்லாமலே அறிவிப்பார்கள். என்னை அடையாளப்படுத்துவதும் இல்லை. நாம் சும்மா பணத்திற்காகவும் படிப்பிற்காகவும் இலகுவாக எழுதிவிடவில்லை சமுதாய சிந்தனை பற்றுணர்வோடு எனது மனித உழைப்பை உயர்வை வெளிப்படுத்தும் போது நீங்கள் மட்டும் ஏன் எங்களை கவனிப்பது இல்லை. விருது ஒன்று கிடைத்து விட்டால், அடுத்தமாவட்டத்தில் இருந்து வாழ்த்துக்கள், கௌரவிப்புக்கள் மட்டுமல்லாது வசந்தம், ரூபவாஹினி தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் என்பனவும் கலாசார அமைச்சர் கூட என்னையும் எனது விருதையும் கௌரவிக்கும் முகமாக தன்னுடன் தனது மாளிகையில் விருந்து தருகிறார். மரியாதை தருகிறார். ஆனால் என்னைச் சார்ந்த என் மண்ணைச் சார்ந்தவர்கள் நான் வாங்கிய விருதுகளையோ பட்டங்களையோ கௌரவங்களையோ கண்டு கொள்ளாமல் இருப்பது எனக்கு மிகுந்த மன வேதனையைத் தந்தாலும் இன்னொரு கேள்வியை எழுப்புகிறது. இவர்களுக்கு இங்கிருக்கும் அமைப்புக்களுக்கு சாஹித்தய விருது, இலக்கிய விருது, தமிழியல் விருது, இலக்கிய பரிசு என்பன பற்றிய போதிய அறிவின்மை அதன் பெறுமதி பற்றி தெரியாமை மடமையினை வட்டம் போட்டு வாழும் சமுதாயமா...? இது.இதற்குள் தான் நின்று எனது இலக்கை எனக்காக அடையாளத்தை பெற முனைகின்றேன்.
உங்களால் உருவாக்கப்பட்டுள்ள அமைப்பு பற்றி?
எனது பல கேள்விகளுக்கு விடையாகத்தான் எனது தலைமையின் கீழ் இலக்கை தேசிய கலாசார அனுமதியோடு 'விழிகள் கலா முற்றம்' எனும் அமைப்பை உருவாக்கியுள்ளேன். இவ்வமைப்பிற்கு என இலட்சினை பாடல், கொடி விதிமுறைகள், சட்டங்கள் என வகுத்து கலைஞர்களை ஒன்றிணைத்து கலை வளர்ப்பதோடு கலைஞர்களையும் கௌரவப்படுத்தவேண்டும் என்ற பெரும் சவாலோடு ஆரம்பித்துள்ளேன். அமைப்புக்கான உதவியும் கிடைக்க விருக்கின்றது. இதுவரை 30 இற்கு மேற்பட்ட கலைஞர்கள் இருக்கின்றார்கள். பேசாலை மண்ணின் பெருமை பேசும் அமைப்பாகவும் கலைஞர்களின் கலைக் கூடமாகவும் இருக்கும்.
தங்களுடைய இலக்கிய ஆசிரியப்பணியின் அனுபவத்தில்இருந்து இளைஞர் யுவதிகளுக்கான கருத்தப் பகிர்வு?
இளைஞனாகட்டும் யுவதியாகட்டும் முதலாம் வகுப்பு தொடக்கம் சாதாரணதரம் உயர்தரம் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு பொருளாதாரம் என பொருள் ஈட்டுவதோடு முடிந்து விடுவதில்லை. வாழ்க்கை, பிறந்த ஒவ்வொரு மனிதனும் கல்வி கற்கிறான். வழமையான செயல் அதைவிட மேலதிகமாக உங்களுடைய ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும். அது நிச்சயமாக கலைத்துறை சார்ந்ததாக இருக்க வேண்டும். வெறுமனே நடிப்பு கவிதை, கதை என்று நின்று விடாமல் உலகத்தரத்தில் கலைஞர்களின் திறமையினை விஞ்சும் அளவுக்கு உங்களை எல்லாத் துறைகளிலும் உயர்த்திக் கொள்ள வேண்டும். அப்போது தான் வாழ்வதற்கான வெற்றி வாய்ப்பை பெறுவதற்கான பல சந்தர்ப்பங்கள் உருவாகும். விடாமுயற்சியும் பயிற்சியும் உங்களோடு இருக்குமானால் வெற்றி உங்கள் பக்கம் தான்.
பெற்ற விருதுகள் பற்றி?
நான் பெற்ற ஒவ்வொரு விருதையும் ஒவ்வொரு சாதனையாகத் தான் கருகின்றேன். 2008ம் ஆண்டு தான் நான் என்னை மும்முரமாக எழத்தில் ஈடுபடுத்திக் கொண்டேன். இருபது வயதில் எழத்தில் இருந்த ஆர்வம் வளராமல் பல்வேறு காரணங்களால் தடைப்பட்டதும் உண்மைதான். 2008ம் உடல் நலக் குறை காரணமாக ஓய்வு அதிகமாகியது. அந்த ஓய்வை நல்லமுறையில் எழுத்து வடிவத்திற்கு பயன்படுத்தினேன். குறுகிய காலத்தினுள் பல பெருமதியான உயர் விருதுகளை பெற்றுள்ளேன். இப்போது விருது என்றால் போதும் என்று சொல்லும் அளவிற்கு மனப் பக்குவப்பட்டுள்ளது. நான் மன்னார் பேசாலை மண்ணில் பிறந்திருந்தாலும் 'இலங்கை தேசிய கலைஞர்'Sri
Lanka national Artist என்ற அங்கீகாரம் உண்டு. இந்தக் கௌரவம் ஒரு டாக்ரருக்கோ, இஞ்சினியருக்கோ கிடைத்து விடாது. இது கலை யுகத்திற்காக தன்னை அர்ப்பணித்து செயற்படுகின்ற கலைஞனுக்கு கிடைக்கின்ற உயர் கௌரவம் அரச அங்கீகாரம் ஏனைய நாடுகளுக்கும் என்னை அடையாளப்படுத்தும்.
எழுத்துப் புலமையில் தங்கள் கவலை கொண்டது?
உண்மையான ஒரு விடையம் என்னவென்றால் நான் எப்படி எனது உணர்வுகளை என் சமூகம் சாந்த விடையங்களை அழகிய தமிழ் மொழிப் புலமையோடுவெளிப்படுத்தி அங்கீகாரம் பெற்றேனோ அதே போல ஆங்கில மொழியில் எனக்கு புலமை இருந்திருந்தால் அழகான முறையில் புக்கர் நோபல் பரிசுகளுக்கும் எனது படைப்புக்களை போட்டிக்கு அனுப்பி பரிசுகளை பெற்றிருப்பேன்.இது எனது எழுத்தின் மீது புலமையின் நம்பிக்கை.
• வானொலி, தொலைக்காட்சி,பத்திரிகை என உங்களை நேர்காணல் கண்டிருந்தாலும் இணையம் ஊடாக அதுவும் மன்னார் கலைஞர்களுக்கு மணி மகுடம் சூடும் நியூமன்னார் பற்றி?
நிர்வாக இயக்குனர் மு.விஜிதன் அவர்களுக்கும் என்னை இவ்வளவு நேரமாக எனது இல்லத்திற்கே வந்து செவ்வி காணும் கவிஞர் கஜேந்திரனாகிய உங்களுக்கும் எனது முதல் வணக்கங்கள் உரித்தாகுக. நியூமன்னார் இணையம் நான் கேள்விப்பட்டதும் பல வேளையிகளிலும் பார்க்கும் இணையமாகும். இவ்விணையம் மன்னாருக்கு செய்யும் அளப்பரிய சேவையை பாராட்டியாக வேண்டும்.மட்டக்களப்பு,யாழ்ப்பாணம், ஏனைய மாவட்டங்களைப் பற்றியும் பலபல புகழிடக் கலைஞர்களால் புலம் பெயர் பூமிகளில் இருந்து தகவல்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புக்களை பல இணையங்கள் வழங்குகின்றன. மன்னார் மண்ணின் பெருமை பேசவென உருவான இணையங்களில் உயர்ந்து நிற்பது நியூமன்னார் இணையமே..மன்னாரின் பெருமையை முனைப்பாக கொண்டு மலர்ச்சித் தன்மையை உதயமாக்கி அதன் பணியினை வெற்றிகரமாக நடை பயின்று கொண்ட இருக்கின்ற இந்த நியூமன்னார் இணையத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். என்னைப்போன்ற வெளிப்படுத்தப்படாமல்இருக்கின்ற பலவிருதுகளை வேண்டிய மகிழ்ச்சியோடு பெருமைப்பட்டு காலத்தை கழித்து விடுவென். ஆனால் பல திறமையானவர்கள் பொருளாதார பிரச்சினையினால் தங்களின் திறமையினை மறைத்து வைத்து கொண்டு அங்கலாய்ப்போடு எந்த விருத கிடைக்காமல் உண்மையாக மானசீகமாக எழுதிக் கொண்டிருக்கின்ற ஒவ்வொரு கலைஞனையும் வெளிக் கொணர வேண்டும். அவர்களின் திறமையினை அறுவடை செய்ய வேண்டும்.அதற்கு மன்னார் மண் மாண்புற வேண்டுமெனில் மன்னார் இணையம் அதனை புரிகின்ற சக்தி மிக்க ஊடகமாக மன்னார் இணையம் எங்களோடு என்றும் இருக்க வேண்டும். எங்களின் பெருமையும் சந்தோசமும் நியூ மன்னார் இணையமே..
மன்னார் இணையத்துக்காக
சந்திப்பும் சிந்திப்பும்
வை. கஜேந்திரன்.
பன்முக ஆளுமை கொண்ட பேசாலை மண்ணின் பெருமை மகன் சாஹித்திய நாயகன் ஜோன் கெனடி உதயகுமார் துரம் (எஸ். எ. உதயன்) அவர்களின் அகத்திலிருந்து ..........
Reviewed by NEWMANNAR
on
August 29, 2014
Rating:

No comments:
Post a Comment