அண்மைய செய்திகள்

recent
-

பழம்பெரும் நடிகை ஜோதிலட்சுமி மரணம்! - நடிகை நினைவலைகள்!


பிரபல தமிழ்த்திரைப்பட நடிகை ஜோதிலட்சுமி உடல்நலக்குறைவால் தனது 68வது வயதில் சென்னையில் காலமானார். தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய பல மொழிகளில் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் நடிகை ஜோதிலட்சுமி. 1963ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்த 'பெரிய இடத்துப் பெண்' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் இவர். ' பூவும் பொட்டும்' என்ற படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.தொடர்ந்து எம்.ஜி.ஆரின் 'அடிமைப்பெண்' படம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கடந்த ஒரு மாதம் முன்பு ஜோதிலட்சுமி திடீர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு ரத்த புற்று நோய் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.இதனையடுத்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.ஆனால் சிகிச்சைப் பலனின்றி நேற்று இரவு 12 மணிக்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

மறைந்த ஜோதிலட்சுமிக்கு, ஜோதிமீனா என்ற மகள் உள்ளார். ஜோதி லட்சுமியின் உடல் சென்னை தியாகராயநகர் ராமராவ் தெருவில் உள்ள அவரின் வீட்டில் திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அவருக்கு இறுதிச் சடங்கு இன்று(செவ்வாய்) மாலை சென்னையில் கண்ணம்மாப்பேட்டை மயானத்தில் நடக்கவுள்ளது.

நடிகை ஜோதிலட்சுமி நினைவலைகள்!

பெரிய இடத்துப் பெண்' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான ஜோதிலட்சுமி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் சுமார் 300 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தனது நடனம் மற்றும் நடிப்பின் மூலம் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த நடிகையானார்.

எழுபதுகளில் எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் தொடர்ந்து ஜோதிலக்‌ஷ்மிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு பல ஹிட் பாடல்கள் அவரது நடனத்துடன் வெளிவந்தன. நடிப்பு மட்டுமன்றி இவர் தனது சகோதரியும் நடிகையுமான விட்டலாச்சார்யா படப் புகழ் ஜெயமாலினியுடன் இணைந்து படத்தயாரிப்பிலும் ஈடுபட்டிருந்தார். இவரது நடிப்பில் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரிட்டாக இருக்கும் சில பாடல்களில் பெரிய இடத்துப் பெண் திரைப்படத்தில் வரும் ’கட்டொடு குழலாட ஆட’ பாடலும், அடிமைப்பெண் திரைப்படத்தில் இடம் பெறும் ’காலத்தை வென்றவன் நீ’ பாடலையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் முதலில் இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமானாலும் பின்னாட்களில் கவர்ச்சி நடிகையாக மாறும் சூழல் வந்த போதும் மனம் கலங்காது தைரியமாக தனது வாழ்வின் சவாலை ஏற்றுக் கொண்டு செய்யும் தொழிலே தெய்வம் என்பதற்கிணங்க வெற்றிகரமான நடிகையாகத் திகழ்ந்தவர் நடிகை ஜோதிலட்சுமி. நடிப்பு தவிர தங்களது தன்னம்பிக்கை மற்றும் திறமைக்காக ஜோதிலட்சுமி, ஜெயமாலினி சகோதரிகளைத் தமிழ் திரையுலகின் ஜாம்பவான்கள் பலர் பல சூழல்களில் பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது படங்களில் பெரும்பாலானவற்றில் ஐட்டம் டான்சராக தோன்றினாலும் நடிகை 'சில்க் ஸ்மிதா' போல ஜோதிலக்ஷ்மியும் பெண்களுக்கும் பிடித்த நடிகையாகவே நீடித்தார். சில்க் ஸ்மிதாவின் வாழ்கைக் கதை ‘டர்ட்டி பிக்ச்ஸர்’ என்ற பெயரில் இந்தியில் வெளியானதைப் போல தெலுங்கில் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிகை ஷார்மி நடிக்கும் 'ஜோதிலட்சுமி' எனும் திரைப்படம் ஜோதிலக்ஷ்மியின் வாழ்க்கை சம்பவங்கள் சிலவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் கசிகின்றன. எழுபது, எண்பது கால கட்டங்களில் தமிழ் திரையுலகில் வெற்றிகரமாக கோலோச்சி விட்டு பின்னர் சில காலம் தமிழில் அவரை காணமுடிந்ததில்லை.

மறுபடியும் அவரை திரைக்கு அழைத்து வந்தவர் இயக்குனர் பாலா. அவரது 'சேது' திரைப்படத்தில் ஜோதிலக்ஷ்மியின் நடனத்துடன் கூடிய "கானாக் கருங்குயிலே' எனும் பாடல் இப்போதும் சூப்பர் ஹிட் லிஸ்டில் இருக்கிறது. ஜோதிலட்சுமி பழம் பெரும் நடிகை டி.ஆர். ராஜகுமாரியின் உறவினர் என்பதும் நடிகை ஜோதிமீனா ஜோதிலக்ஷ்மியின் மகள் என்பதும் உபரித் தகவல்கள். சமீப காலமாக சன் தொலைக்காட்சியில் பிற்பகலில் ஒளிபரப்பப்படும் "வள்ளி' தொடரில் ஜோதிலட்சுமி நடித்துக் கொண்டிருந்தார். திரையுலகில் அறிமுகமான காலத்தில் இருந்து இன்று அவரது இறப்பு வரையிலும் ஒரே விதமான தோற்றப் பொலிவில் இருந்ததால் வயதான பின்னரும் அவரது சுறு சுறுப்பான நடிப்பு அனைவரையும் கவர்வதாகவே இருந்தது. இந்த நிலையில் அவரது திடீர் மரணம் ஜோதிலட்சுமி ரசிகர்களை பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
பழம்பெரும் நடிகை ஜோதிலட்சுமி மரணம்! - நடிகை நினைவலைகள்! Reviewed by NEWMANNAR on August 09, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.