Slider

காணொளிகள்

மன்னார் செய்திகள்

விம்பம்

உள்நாட்டு செய்திகள்

சர்வதேச செய்திகள்

பல்சுவை

School events

மருத்துவம்

புகைப்படத்தளம்

கட்டுரைகள்

சினிமா

-

மேதகு தலைவர் பிரபாகரனின் பிறந்ததினத்தை முன்னிட்டு உருவாகிய உன்னத படைப்பே ''அண்ணா''

விடுதலை போராட்டத்தின் ஆணிவேர் மேதகு தலைவர் பிரபாகரனின் பிறந்ததினத்தை முன்னிட்டு ஈழத்து கலைஞர் திரு புவிகரனின் இயக்கத்திலும் புலம்பெயர் கலைஞன் திரு கரன் வரதனின் மூல திரைக்கதையிலும் உருவாகிய உன்னத படைப்பே ''அண்ணா''


அண்ணா எம் அனைவரின் மனதிலும் ஆழமாக பதிந்துள்ள காந்த சக்தி. அண்ணாவின் பிறந்ததினத்தை முன்னிட்டு இன்றைய எமது ஈழத்து நிலையினையும் எமது எதிர்பார்ப்பையும் முன்னிறுத்தி கதையை கருவாக்கி இருக்கின்றார் கரன் வரன். அவரின் கதையின் கரு மிகவும் ஆழமானது. ஒவ்வொரு மனிதனின் மனதிலும் உறங்கியுள்ள உன்னத நினைவு. கரன் வரதனின் அண்ணா கதையின் எண்ணக்கருவுக்கு தனது சிறப்பான செயற்பாட்டின் மூலம் உயிரூட்டி இருந்தார் புவிகரன்.
கதையின் வலுவினை ஆழமாக புரிந்த நடிகை தனது பணியை செவ்வனவே செய்து இருப்பதாகவே கூறமுடிகின்றது. படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை ஒவ்வொரு நிகழ்வுகளும் மிக துல்லியமாக கவனிக்கப்பட்டு பின்னணிஇசையானது மிகவும் சிறப்பாகவே வழங்கப்பட்டுள்ளது. அந்த இசையினை வழங்கிய இசையமைப்பாளருக்கு மனம்திறந்த நன்றிகள்.

இரு கட்டுப்பாட்டு பிரதேசங்களை பார்வையாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக குறும்பட தொடக்கத்தில் புத்த விகாரையும் குறும்பட முடிவில் தமிழீழ எல்லை பலகையும் உயிர்ப்பான கற்பனை.

எமக்கு தமிழீழம் மிகவும் அவசியமும் அவசரமுமான தேவை என்பதனை இன்றைய சூழல் எடுத்துக்காட்டுவதற்கு அமைவாக கதையின் பின்னணி பின்னப்பட்டதும் தமிழீழம் என்ற எல்லை எந்தப் பெண்ணுக்கும் பாதுகாப்பானது அதுவே எமது தேவை என்பதனை மிகவும் இயல்பாக நடைமுறையுடன் ஒன்றிணைத்து கூறியதே இந்த குறும்படத்தின் சிறப்பம்சம்.

ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தேர்வுசெய்யப்பட்ட நடிகர்கள் மிகவும் சிறப்பாகவே தமது பாத்திரத்தின் கனதி தெரிந்து நடித்திருக்கின்றார்கள்.
அவர்கள் அனைவரையும் பாராட்டிட வார்த்தைகள் போதவில்லை.

தனது ஒளிப்பட கருவிக்குள் ஒட்டுமொத்த ஈழத்து கனவையும் அடக்க நினைத்த ஒளிபதிப்பாளர் நடிகை நடந்துவரும் இடத்தில் கமராவை அசையவிட்டு இருப்பதை உணர முடிகின்றது.அது தவிர கண்ணிற்கு குளிர்ச்சியான இடமும் ஈழத்தின் அழகும் குறும்படத்தில் மிக அழகாகவே எடுத்துக்காட்டப்பட்டு உள்ளது.

சிறந்த படத்தொகுப்பை வழங்கிய வில்ஸீயை பாராட்ட வார்த்தைகளை தேடவேண்டி உள்ளது. குறும்படத்தில் சில இடங்களில் விமர்சனங்கள் இருந்தாலும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட ''அண்ணா'' என்ற பெயரை குறும்படம் கொண்டிருப்பதால் விமர்சன வார்த்தைகள் வலுவிழந்து போகின்றது.

ஒவ்வொரு ஈழத்து தமிழரின் மனதிலும் உயிரோடு உலாவும் மறக்கமுடியாத உன்னத தேசம்.
கனவும் நியமாகும் என்ற நம்பிக்கையில் கண்ணில் உயிர்ப்பை தேக்கி உள்ள காவல் தெய்வங்களினதும் வசந்தமாளிகை.
அண்ணாவின் தாயக தேசம்.


இனிவரும் காலங்களில் இந்த குழுவானது மிகவும் சிறப்பான குறும்படங்களையும் முழுநீள படங்களையும் எடுக்கவேண்டும் என்று வாழ்த்துகின்றோம்.


சின்னத்திரை நடிகை சபர்ணா மரணம்


சின்னத்திரை நடிகை சபர்ணாவின் உடல் உயிரிழந்த நிலையில் அவரது வீட்டில் மீட்கப்பட்டுள்ளது. மதுரவாயலிலுள்ள அவரது வீட்டின் கதவு 3 நாட்களாக திறக்கப்படவில்லை என்றும் துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் அளித்ததாகவும் கூறப்படுகிறது. 

போலீஸார் வந்து பார்த்தபோது கதவு வெறுமனே சாத்தப்பட்டிருந்தது. போலீஸார் வந்து தள்ளியதும் திறந்துவிட்டது. இறப்பதற்கு முன்பு சபர்ணா கடிதம் எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். 

ஆனால் இன்னும் அதை வெளியிடவில்லை. போலீசார் சபர்ணாவின் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர். இவரது மரணம் தற்கொலையா கொலையா என பல்வேறு கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரபல திரைப்பட பாடலாசிரியர் நா. முத்துக்குமார் சென்னையில் காலமானார்


சென்னையில் பிரபல திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் சென்னையில் காலமானார்.

மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவரது உயிர் பிரிந்தது. சீமானின் வீர நடை திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகம் ஆனவர். நா. முத்துக்குமார் 1500-க்கும் அதிகமான பாடல்களை எழுதிஉள்ளார். 41 வயதாகிய நா. முத்துக்குமார் 2 முறை தேசிய விருது வாங்கிஉள்ளார். தங்க மீன்கள் மற்றும் சைவம் படத்தில் அவர் எழுதிய பாடல்களுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. சைவம் படத்தில் இடம்பெற்ற அழகு... அழகு... பாடலுக்கும், தங்க மீன்கள் படத்தில் இடம்பெற்ற 'ஆனந்த யாழை' பாடலுக்கும், சிறந்த பாடலாசிரியருக்கான விருதை பெற்றவர். தமிழக அரசு விருதையும் வாங்கிஉள்ளார்.

பாடலாசிரியர் நா.முத்துக்குமார் கடந்த 1975-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தவர். இயக்குநர் ஆகவேண்டும் என்று தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கிய அவர், சிறந்த பாடலாசிரியர் ஆனார். அவருடைய இறப்பு திரையுலகம் மட்டுமின்றி அனைத்து தரப்பினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. முத்துக்குமார் கவிதை மற்றும் கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதிஉள்ளார். புத்தகங்களையும் எழுதிஉள்ளார். நா. முத்துக்குமார் இறப்பிற்கு திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நா.முத்துக்குமார் மரணம் அதிர்ச்சியளிக்கிறது என்று கங்கை அமரன் கூறிஉள்ளார். கவிஞர் நா.முத்துக்குமார் மரணம் எழுத்து உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று இயக்குநர் விக்ரமன் கூறிஉள்ளார். தமிழ் திரையுலகிற்கு மாபெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தி சென்று உள்ளார் என்று திரைஉலகினர் கண்ணீர் மலங்க இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

நா.முத்துக்குமார் மரணம் மிகுந்த வேதனையை தருகிறது என்று சமுத்திரகனி கூறிஉள்ளார்

பழம்பெரும் நடிகை ஜோதிலட்சுமி மரணம்! - நடிகை நினைவலைகள்!


பிரபல தமிழ்த்திரைப்பட நடிகை ஜோதிலட்சுமி உடல்நலக்குறைவால் தனது 68வது வயதில் சென்னையில் காலமானார். தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய பல மொழிகளில் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் நடிகை ஜோதிலட்சுமி. 1963ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்த 'பெரிய இடத்துப் பெண்' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் இவர். ' பூவும் பொட்டும்' என்ற படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.தொடர்ந்து எம்.ஜி.ஆரின் 'அடிமைப்பெண்' படம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கடந்த ஒரு மாதம் முன்பு ஜோதிலட்சுமி திடீர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு ரத்த புற்று நோய் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.இதனையடுத்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.ஆனால் சிகிச்சைப் பலனின்றி நேற்று இரவு 12 மணிக்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

மறைந்த ஜோதிலட்சுமிக்கு, ஜோதிமீனா என்ற மகள் உள்ளார். ஜோதி லட்சுமியின் உடல் சென்னை தியாகராயநகர் ராமராவ் தெருவில் உள்ள அவரின் வீட்டில் திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அவருக்கு இறுதிச் சடங்கு இன்று(செவ்வாய்) மாலை சென்னையில் கண்ணம்மாப்பேட்டை மயானத்தில் நடக்கவுள்ளது.

நடிகை ஜோதிலட்சுமி நினைவலைகள்!

பெரிய இடத்துப் பெண்' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான ஜோதிலட்சுமி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் சுமார் 300 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தனது நடனம் மற்றும் நடிப்பின் மூலம் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த நடிகையானார்.

எழுபதுகளில் எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் தொடர்ந்து ஜோதிலக்‌ஷ்மிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு பல ஹிட் பாடல்கள் அவரது நடனத்துடன் வெளிவந்தன. நடிப்பு மட்டுமன்றி இவர் தனது சகோதரியும் நடிகையுமான விட்டலாச்சார்யா படப் புகழ் ஜெயமாலினியுடன் இணைந்து படத்தயாரிப்பிலும் ஈடுபட்டிருந்தார். இவரது நடிப்பில் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரிட்டாக இருக்கும் சில பாடல்களில் பெரிய இடத்துப் பெண் திரைப்படத்தில் வரும் ’கட்டொடு குழலாட ஆட’ பாடலும், அடிமைப்பெண் திரைப்படத்தில் இடம் பெறும் ’காலத்தை வென்றவன் நீ’ பாடலையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் முதலில் இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமானாலும் பின்னாட்களில் கவர்ச்சி நடிகையாக மாறும் சூழல் வந்த போதும் மனம் கலங்காது தைரியமாக தனது வாழ்வின் சவாலை ஏற்றுக் கொண்டு செய்யும் தொழிலே தெய்வம் என்பதற்கிணங்க வெற்றிகரமான நடிகையாகத் திகழ்ந்தவர் நடிகை ஜோதிலட்சுமி. நடிப்பு தவிர தங்களது தன்னம்பிக்கை மற்றும் திறமைக்காக ஜோதிலட்சுமி, ஜெயமாலினி சகோதரிகளைத் தமிழ் திரையுலகின் ஜாம்பவான்கள் பலர் பல சூழல்களில் பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது படங்களில் பெரும்பாலானவற்றில் ஐட்டம் டான்சராக தோன்றினாலும் நடிகை 'சில்க் ஸ்மிதா' போல ஜோதிலக்ஷ்மியும் பெண்களுக்கும் பிடித்த நடிகையாகவே நீடித்தார். சில்க் ஸ்மிதாவின் வாழ்கைக் கதை ‘டர்ட்டி பிக்ச்ஸர்’ என்ற பெயரில் இந்தியில் வெளியானதைப் போல தெலுங்கில் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிகை ஷார்மி நடிக்கும் 'ஜோதிலட்சுமி' எனும் திரைப்படம் ஜோதிலக்ஷ்மியின் வாழ்க்கை சம்பவங்கள் சிலவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் கசிகின்றன. எழுபது, எண்பது கால கட்டங்களில் தமிழ் திரையுலகில் வெற்றிகரமாக கோலோச்சி விட்டு பின்னர் சில காலம் தமிழில் அவரை காணமுடிந்ததில்லை.

மறுபடியும் அவரை திரைக்கு அழைத்து வந்தவர் இயக்குனர் பாலா. அவரது 'சேது' திரைப்படத்தில் ஜோதிலக்ஷ்மியின் நடனத்துடன் கூடிய "கானாக் கருங்குயிலே' எனும் பாடல் இப்போதும் சூப்பர் ஹிட் லிஸ்டில் இருக்கிறது. ஜோதிலட்சுமி பழம் பெரும் நடிகை டி.ஆர். ராஜகுமாரியின் உறவினர் என்பதும் நடிகை ஜோதிமீனா ஜோதிலக்ஷ்மியின் மகள் என்பதும் உபரித் தகவல்கள். சமீப காலமாக சன் தொலைக்காட்சியில் பிற்பகலில் ஒளிபரப்பப்படும் "வள்ளி' தொடரில் ஜோதிலட்சுமி நடித்துக் கொண்டிருந்தார். திரையுலகில் அறிமுகமான காலத்தில் இருந்து இன்று அவரது இறப்பு வரையிலும் ஒரே விதமான தோற்றப் பொலிவில் இருந்ததால் வயதான பின்னரும் அவரது சுறு சுறுப்பான நடிப்பு அனைவரையும் கவர்வதாகவே இருந்தது. இந்த நிலையில் அவரது திடீர் மரணம் ஜோதிலட்சுமி ரசிகர்களை பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

என் மகன் இருந்திருந்தால்... பிரபாகரனையே அவனுக்கு ரோல்மாடலாகக் காட்டிருப்பேன்!! – பிரகாஷ்ராஜ்

என் மகன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா, வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களைத்தான் அவனோட ரோல் மாடல்னு பெருமையா சொல்லியிருப்பேன். அந்த அளவு தூய்மையான நேர்மையான வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன். அவர் போன்ற தலைவர்கள் பிறந்ததே ஈழ மண்ணுக்குள்ள பெருமை”, என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.

பிரபாகரன் வாழ்க்கை வரலாறு அடிப்படையில் உருவாகும் படத்தில் பிரபாகரனாக நடிக்கிறார் பிரகாஷ்ராஜ்.

சமீபத்திய ஈழப் போர் மற்றும் அதன் முடிவில் பிரபாகரன் குறித்து வந்த தகவல்களைக் கேட்டு மிகவும் வருத்தப்பட்ட பிரகாஷ்ராஜ், ‘நான் ஈழத்தில் பிறந்திருந்தால் நிச்சயம் பிரபாகரனைத்தான் ஹீரோவாகக் கொண்டு வளர்ந்திருப்பேன். அவர் பின்னால்தான் விசுவாசமாக நின்றிருப்பேன்’ என்று கூறியுள்ளார்.

பிரபாகரன் குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது…

“பிரபாகரனைப் போய் சிலர் சர்வாதிகாரின்னு சொல்றாங்க. அவர் என்ன சொந்த மக்களையே கொன்று குவித்த ஹிட்லரா… தன் மக்களுக்காக களத்தில் நின்று 30 ஆண்டுகளுக்கும் மேல் உயிரைப் பணயம் வைத்துப் போராடிய சுத்த வீரன் பிரபாகரன். தாக்குறது அல்ல அவர் நோக்கம்… தற்காப்புதான்.

அவர் என்ன வல்லரசு ஆசையில் உலகம் பூரா வலிந்து தாக்குதல் செய்து நாட்டைப் பிடிக்கவா முயற்சி பண்ணார்… கால காலமா தாங்கள் வாழ்ந்த மண்ணை அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுக்க போர்க்களம் புகுந்தவர். அவர் கண்முன் நிகழ்ந்த இனவெறிக் கொடுமைகள்தான் அவரை, தன் மக்களின் விடுதலைக்காக வாழ்க்கையையே அர்ப்பணிக்க வைத்திருக்கிறது.

அவர் வாழ்க்கையை நினைத்தால் உடல் சிலிர்க்கிறது. அவரைப் போன்ற நேர்மையான, எளிமையான, மன உறுதியும் வீரமும் கொண்ட தலைவர்களை நாம் பார்த்ததில்லை. இது வெறும் ஹீரோ வொர்ஷிப் இல்லை. இப்படிப்பட்ட மாவீரர்களை, தலைவர்களைப் போற்றாவிட்டால், நாம் மாபெரும் சரித்திர தவறு செய்தவர்களாவோம்.

கொண்ட கொள்கை, லட்சியம் வெல்ல தன் உயிரைப் பணயம் வைத்து எப்போதும் கழுத்தில் சயனைடு குப்பியுடன் காட்சி தந்த பிரபாகரன்தான் இப்போதும் எப்போதும் இளைஞர்களின் ரோல்மாடல். நாமெல்லாம் நேதாஜி, பகத் சிங் வீரத்தைப் பத்தி படிச்சிதான் தெரி்ஞ்சிக்கிட்டோம். ஆனா ஒரு மாவீரன் எப்படி இருப்பார்னு பிரபாகரனைப் பார்த்துதான் தெரிஞ்சிக்கிட்டோம். அவரைப் பாத்துதான் நாம வளர்ந்தோம்.

என் மகன் மட்டும் உயிரோடு இருந்திருந்தால், ‘இதோ பார்… இந்த மாவீரன்தான்டா உன் ரோல்மாடல்’ என்று காட்டி வளர்த்திருப்பேன்…

பிரபாகரனைப் போல் அர்ப்பணிப்பு குணம் உள்ள ஒரு பெரும் தலைவனைப் பெற்றெடுத்ததே ஈழத் தமிழ் மண்ணுக்குள்ள பெருமையா நான் பார்க்கிறேன்.

‘வன்னி குண்டு வெடிப்புகளில் 5 புலிகள் இறக்கிறார்கள்… 50 புலிகள் பிறக்கிறார்கள்’ என்ற கவிதை நூறு சதவிகிதம் உண்மையானது”, என்று கூறியுள்ளார் பிரகாஷ்ராஜ்.

முகநூல் 2025
நடிகர் சங்க தேர்தல்: தலைவர் நாசர், செயலாளர் விசால் ...

<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
நடிகர் சங்கத்தின் இறுதித் தேர்தல் முடிவுகளின் படி தலைவர் பதவிக்காக போட்டியிட்ட, நடிகர் நாசர் 1,344 வாக்குகளைப் பெற்றதோடு, சரத்குமார் 1,231 வாக்குளைப் பெற்றிருந்தார்.

1,445 வாக்குகளைப் பெற்ற நடிகர் விசால், நடிகர் சங்கத்தின் செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ராதாரவி 1,138 வாக்குகளை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெரும் பரபரப்புக்கு மத்தியில் இடம்பெற்ற இந்தத் தேர்தலின் இறுதி முடிவுகளின் அடிப்படையில் 'பாண்டவர் அணி' (நாசர், விசால், கார்த்தி, கருணாஸ், பொன்வண்ணன்) என பெயர் சூட்டப்பட்டிருந்த விஷால் அணியினர் நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாக சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்தான தேர்தல் முடிவு, நீதிபதி இ. பத்மநாபனினால், சற்று முன் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தை, தமிழ்நாடு திரைப்பட நடிகர்கள் சங்கம் என பெயர் மாற்றச் சொல்லி தொடர்ந்து நாம் வலியுறுத்தி வருகிறோம்-பாரதிராஜா

நடிகர் சங்க தலைமை பதவிகளுக்கு தமிழன் தான் வரவேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா அறிக்கையில் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடக்கும் பிரச்சினைகள் நான்கு சுவற்றுக்குள் பேசித் தீர்க்கப்பட வேண்டியவை. ஆனால், அரசியல் கட்சிகள் போல ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டும், தூற்றிக்கொண்டும் இருக்க அவை நாள்தோறும் நாளேடுகளிலும், தொலைக்காட்சி மற்றும் இதர ஊடகங்களிலும் அவர்களைப் பற்றிய அவதூறான செய்திகள் வருவது மிகவும் வருத்தத்துக்குரிய ஒன்றாகும்.

நடிகர் சங்கத்தில் முதலில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை, படைப்பாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையான .தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தை, தமிழ்நாடு திரைப்பட நடிகர்கள் சங்கம் என பெயர் மாற்றச் சொல்லி தொடர்ந்து நாம் வலியுறுத்தி வருகிறோம்

சரத்குமார் நடிகர் சங்கத் தலைவராக பொறுப்பேற்ற உடனே என் வேண்டுகோளுக்கிணங்க நடிகர் சங்க பொதுக்குழுவில் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவோடு ஒரு மனதாக தமிழ்நாடு திரைப்பட நடிகர்கள் சங்கம் என பெயர் மாற்றம் செய்ய தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மிக்க மகிழ்ச்சி அடைந்தோம்.

ஆனால், இன்று வரை அந்தத் தீர்மானம் எந்த காரணத்தினாலோ நடைமுறைக்கு வரவில்லை. மீண்டும் மீண்டும் வலியுறுத்தினோம். ஆனால், இன்று வரை நடிகர் சங்கத்தில் பொறுப்பில் உள்ளவர்கள் அதற்கு செவி சாய்க்கவில்லை. இதற்கு காரணம் சங்கப் பொறுப்பில் உள்ளவர்கள் பெரும்பாலும் பிறமொழியை சேர்ந்தவர்களாக இருப்பதினால் தானோ என சந்தேகிக்கத் தோன்றுகிறது.

தமிழக திரைப்பட வரலாற்றில், ஒரு காலகட்டத்திற்குப் பிறகு அண்டை மாநிலத்தைச் சார்ந்தவர்கள் சங்கத்தைப் பிரித்துக்கொண்டு, அவரவர் மாநிலத்திலேயே புதிய சங்கங்களை உருவாக்கிக் கொண்டார்கள். அதற்கு பிறகு தான் நமது படைப்பாளிகள் எல்லாம் ஒன்று கூடி தமிழ்நாடு இயக்குனர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என பெயர் மாற்றப்பெற்று மகுடம் சூட்டப்பட்டது. ஆனால், இதுநாள் வரை தென்னிந்திய நடிகர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய அமைப்புகள் பெயர் மாற்றம் செய்ய மறுத்து வருகின்றன.

தமிழக அரசியல் மற்றும் திரைத்துறையிலும் தமிழர்கள் அல்லாதவர்களே ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அதிகாரமிக்க பதவிகளுக்கு தமிழர்கள் அல்லாதவர்களையே ஆசனத்தில் அமரவைத்து அழகு பார்க்கிறார்கள். இதனால் தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. ஆனால், பிற மாநிலத்தில் தமிழன் ஒருவன் ஒரு வார்டு உறுப்பினராக பதவி வகிப்பதற்குக் கூட தகுதியற்றவனாகக் கருதப்படுகிறான்.

நடிகர்கள் சங்கம் மட்டுமில்லாமல், ஏனைய திரைப்பட சங்கங்களில் பிற மொழியினர் உறுப்பினராக இருப்பதில் தவறில்லை. ஆனால், தலைமைக்கும், நிர்வாக பதவிகளுக்கு தேர்ந்தெடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

இது வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு. உங்களை வரவேற்கிறோம், உபசரிக்கிறோம். ஒருவருக்கொருவர் சகோதரத்தோடு கலாச்சார வேறுபாடின்றி இருக்கிறோம். நீங்கள் தொழில் செய்யலாம். சமுதாய கடமையாற்றலாம். எந்த துறையாக இருந்தாலும் தலைமை பதவிகளுக்கு மட்டும் தமிழன் தான் வரவேண்டும். மண்ணின் மைந்தன் வரவேண்டும் என்கிற தார்மீகம் உங்களுக்குப் புரியாததல்ல.

ஆகையால், தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கப் பொறுப்பிற்கு போட்டியிடும் நடிகர்கள், தமிழ்நாடு திரைப்பட நடிகர்கள் சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்து தமிழர்களின் தன்மானத்தையும், உரிமையையும் காப்பாற்ற முன்வருமாறு வேண்டுகிறேன்.

நடிகர் சங்கத்தில் தமிழகத்தைச் சார்ந்த நாடக நடிகர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருக்கும் பட்சத்தில், பின்பு ஏன் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் என பெயர் உள்ளது?

தேர்தலில் வாக்களிக்க காத்திருக்கும் நடிகர்கள் மற்றும் நாடக நடிகர்கள் வாக்களிக்கும் முன் ஒரு முறை சுயமாக சிந்தித்து வாக்களியுங்கள்''என்று பாரதிராஜா கூறியுள்ளார்.

நடிகை மனோரமாவின் உடல் மயிலாப்பூர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது


நடிகை மனோரமாவின் உடல் மயிலாப்பூர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. நடிகை மனோரமா இறுதி ஊர்வலம் முக்கிய சாலைகளின் வழியே நடைபெற்றது. தி.நகரில் இருந்து புறப்பட்டு ஆர்.கே. சாலை வழியாக மயிலாப்பூர் நோக்கி சென்றது. மயிலாப்பூரில் உள்ள மயானத்தில் நடிகை மனோரமாவின் உடலை தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வழிநெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் மனோரமாவுக்கு அஞ்சலி செலுத்தினர். ஏராளமான திரையுலகினரும் மனோரமா இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளனர்.

மக்கள் வெள்ளத்தினிடையே, மனோரமாவின் உடல் வைக்கப்பட்டுள்ள அலங்கார வண்டி மயிலாப்பூர் நோக்கி மெதுவாக வந்து கொண்டிருக்கிறது. சாலையின் இருபுறங்களிலும். ஆயிரக்கணக்கான மக்கள் கூடி. மனோரமாவிற்கு அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஐஸ் அவுஸ் ஐ.ஜி. ஆபிஸ் பின்புறம் உள்ள கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது. மகன் பூபதி சிதைக்கு தீ மூட்டுகிறார். மனோரமா மறைவையடுத்து சினிமா படப்பிடிப்புகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிரபலங்கள் அஞ்சலி:

மனோரமா இறந்த செய்தி அறிந்து திரையுலகத்தை சேர்ந்த முன்னணி நடிகர்கள், நடிகைகள் முதல் திரையுலக கலைஞர்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் அவர் வீட்டுக்கு திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் , நடிகர் ரஜினிகாந்த்,டி.ராஜேந்தர் அஞ்சலி செலுத்தினார். அப்போது பேசிய அவர் நடிகை மனோரமா கலை உலகின் தாய் என்றும் சேலை கட்டிய சிவாஜி என்றும் புகழாரம் சூட்டினார். மேலும் பேசிய அவர் திரையுலகை ஆட்சி செய்து வந்தவர் ஆச்சி என கூறினார்.

மறைந்த நடிகை மனோரமாவின் உடலுக்கு நடிகர்கள் விஜய், சிம்பு, நிழல்கள் ரவி, நடிகர் ஜெய், வி.டி.வி கணேஷ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். மறைந்த மனோரமா உடலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர் அஜித்குமார், தேமுதிக தலைவர் விஜயகாந்த், நேரில் அஞ்சலி செலுத்தினார்.

கலாமின் கனவை நனவாக்க ஒரு கோடி ரூபாவை வழங்கும் லாரன்ஸ்


அப்துல் கலாம் கனவு கண்ட மரம் நடுதல், கல்வி, மருத்துவ உதவி போன்றவற்றுக்கு 1 கோடி ரூபாய் வழங்குவதாக நடிகரும் இயக்குநருமான லாரன்ஸ் தெரிவித்தார்.

வேந்தர் மூவிஸ் நிறுவனத்துடன் இயக்குநர் லாரன்ஸ் இரண்டு படங்களுக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறார். ‘நாகா’ மற்றும் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ என தான் இயக்க இருக்கும் படங்களுக்கு பெயரிட்டு இருக்கிறார் லாரன்ஸ்.

இவ்விரண்டு படங்களின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ திரைப்படம் சமூக கருத்தை வலியுறுத்தி உருவாக இருக்கும் வர்த்தக படமாகும். இப்படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடிக்க இருக்கிறார்.

அதே போல ‘நாகா’ திரைப்படத்தை ‘காஞ்சனா’ படத்தைப் போல இயக்க திட்டமிட்டு இருக்கிறார் லாரன்ஸ். ‘நாகா’ படத்துக்கு வரவேற்பு கிடைத்தால் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் என தொடர்ச்சியாக இயக்க திட்டமிட்டு இருக்கிறார். ராஜ நாகம் பாம்பை மையப்படுத்தி ‘நாகா’ கதையை அமைத்திருக்கிறார் லாரன்ஸ்.

இவ்விழாவில் வேந்தர் மூவிஸ் நிறுவனம் அளித்த முற்பணம் ரூ. 1 கோடிக்கான காசோலையை, மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கனவு நனவாக அளிப்பதாக தெரிவித்தார் லாரன்ஸ்.

காற்றில் கரைந்தது மெல்லிசை; எம்.எஸ்.விஸ்வநாதனின் உடல் தகனம்


உடல்நலக் குறைவால் காலமான பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இன் உடல் சென்னை பெசண்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

சுமார் 1200 இற்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ள பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் நேற்று காலை சென்னையில் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 87.

சாந்தோமில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப் பட்டிருந்தது. அவரது உடலுக்கு திரையுலகப் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், இன்று காலை இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசை அஞ்சலிக்குப் பின் அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது.

சாந்தோம் வீட்டில் இருந்து பெசண்ட் நகர் மின்மயானத்திற்கு அவரது உடல் வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப் பட்டது. இறுதி ஊர்வலம் நடைபெற்ற சாலைகளின் இரண்டு பக்கங்களிலும் பொதுமக்கள் கூடி நின்று எம்.எஸ்.வி.க்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், பெசண்ட் நகர் மின்மயானத்தில் எம்.எஸ்.விஸ்வநாதனின் உடல் தகனம் செய்யப்பட்டது. எம்.எஸ்.வியின் இறுதிச் சடங்கில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். மறைந்த எம்.எஸ்.விக்கு இறுதி மரியாதை செலுத்தும் வகையில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் இன்று ஒரு நாள் படப்பிடிப்புகளை ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இயற்கை எய்தினார்


பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் தனது 87 ஆவது வயதில் இன்று (14) காலமானார்.

தமிழ் திரையுலகின் மெல்லிசை மன்னர் என்று அழைக்கப்படுவர் எம்.எஸ்.விஸ்வநாதன். இவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள்.

உடல்நிலை சீரானதைத் தொடர்ந்து வீட்டுக்கு அழைத்து செல்ல குடும்பத்தினர் முடிவு செய்த நேரத்தில், மீண்டும் எம்.எஸ்.விஸ்வநாதனின் உடல்நிலை மோசமடைந்தது.

இந்நிலையில் இன்று (14) அதிகாலை 4:15 இற்கு சிகிச்சை பலனின்றி அவருடைய உயிர் பிரிந்தது. சென்னை சாந்தோமில் உள்ள அவரது இல்லத்தில் திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவருடைய உடல் வைக்கப்பட்டுள்ளது.

எம்.எஸ்.விஸ்வநாதனின் இறுதிக் கிரியைகள் நாளை (15) காலை நடைபெறவுள்ளது.

பம்பரக் கண்ணாலே நடிகை ஆர்த்தி அகர்வால் மரணம்


‘பம்பரக் கண்ணாலே’ படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் ஆர்த்தி அகர்வால். இப்படத்தில் இவர் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். தமிழில் ஒரு படம் மட்டுமே நடித்தாலும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவருக்கும் அமெரிக்காவில் வசிக்கும் தொழிலதிபர் உஜ்வால் குமாருக்கும் கடந்த 2007-ல் திருமணம் நடந்தது.


திருமணத்துக்கு பிறகு கணவருடன் அமெரிக்காவில் குடியேறினார். நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு அமெரிக்காவிலேயே செட்டில் ஆனார். இந்நிலையில் இவர் அமெரிக்காவில் இறந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவருக்கு வயது 31. சிறிது காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர் திடீர் என்று இன்று இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த 2 படமும் ராஜபக்சே பணத்தில் உருவானதுதான்.. ராஜ்கிரண் அதிரடி பேச்சு


புன்னகைப் பூ கீதாவின் எஸ்.ஜி.பிலிம்ஸ் , முக்தா ஆர். கோவிந்தின் முக்தா எண்டர்டைன்மென்ட் பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் “ சிவப்பு”.

நவீன்சந்திரா, ரூபா மஞ்சரி, ராஜ்கிரண் நடிப்பில் கழுகு சத்யசிவா இயக்கியுள்ள இப்படத்தை ராஜ்கிரண் பார்த்து பரவசமாகி விட்டாராம் . “மஞ்சப்பை” படம் தனக்கு மிகப்பெரிய அந்தஸ்தை ஏற்படுத்தி கொடுத்தது மாதிரி “சிவப்பு” படம் மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று நம்புகிறார் ராஜ்கிரண்.

இலங்கைத் தமிழர், குறிப்பாக இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளின் வாழ்க்கையை மையமாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படம் குறித்து நடிகர் ராஜ்கிரண் கூறுகையில், “ஈழத் தமிழர் விடுதலை போராட்டம் பற்றிய உண்மையான படங்கள் எதுவும் தமிழில் இதுவரை வந்ததில்லை. சமீபத்தில் வெளியான ஈழம் தொடர்பானது என்று சொல்லப்பட்ட இரண்டு தமிழ்ப் படங்களும்கூட சிங்கள சார்புடன், ராஜபக்சே கொடுத்த பணத்தில் தயாரிக்கப்பட்டவைதான்.
அவை ஈழத் தமிழர் போராட்டத்தையும், விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனையும் கொச்சைப்படுத்திய படங்கள்தானே தவிர, ஈழத் தமிழர் பற்றிய உண்மையான படங்கள் அல்ல. இங்கேயுள்ள அகதி மக்கள் படும் கஷ்டத்தை அரசியல்வாதிகளும், அதிகாரவர்க்கமும் உணரவில்லை. பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், பர்மா போன்ற நாடுகளின் அகதிகள் இந்தியாவில் இருக்கிறார்கள்.
ஆனால் அவர்களுக்கெல்லாம் இந்திய மக்களைப் போன்ற வசதி, வாய்ப்புகளை வழங்கியிருக்கும் இந்திய ஏகாதிபத்திய அரசு, ஈழத் தமிழ் அகதி மக்களுக்கு மட்டும் அந்த சம உரிமையை வழங்க மறுத்து வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான மறுவாழ்வு திட்டத்தில் இந்திய அரசு பல்லாண்டு காலமாக கையொப்பமிட மறுத்து வருகிறது. அதில் கையெழுத்திட்டால் ஈழத்து அகதிகளுக்கு முறையான வசதி, வாய்ப்புகளை செய்து தர வேண்டுமே என்று மத்திய அரசு அஞ்சுகிறது.
ஈழத் தமிழருக்கு ஆதரவாக இங்கே படம் எடுக்க முடியாது. காரணம் இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையும், அதை முழு மூச்சாகப் பின்பற்றும் திரைப்பட தணிக்கைக் குழுவும் அதை அனுமதிக்காது. எனவேதான் இயக்குநர் சத்யசிவா, இந்தப் படத்தை ஒரு காதல் கதையாக எடுத்திருக்கிறார். இதனால்தான் படத்திற்கு ஒரு வெட்டுகூட சொல்லாமல் ‘யு’ சான்றிதழ் கொடுத்திருக்கிறது தணிக்கைக் குழு,” என்றார்.

அஜித், விஜய்க்கு ஜோதிகா சவால் விடுத்துள்ளார்


நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஜோதிகாவின் நடிப்பில் வெளியாகவுள்ள 36 வயதினிலே படத்தின் வேலைகள் மிக வேகமாக இடம்பெற்று வருகின்றன.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ஜோதிகா அஜித், விஜய், தனுஷ் என அனைத்து முன்னணி நாயகர்களுக்கும் சவால் விடுத்துள்ளார்.

சந்திரமுகி படத்தில் ரஜினி நடித்தது போல, பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் கதைகளில் ஒவ்வொரு நாயகர்களும் நடிக்க வேண்டும் என்ற சவாலே அது.

நேபாளத்தில் நில நடுக்கத்தில் சிக்கி தெலுங்கு நடிகரும்,நடன இயக்குனருமான விஜய் பலி


ஐதராபாத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ‘எட்டகாரம் டாட் காம்‘ என்ற தெலுங்கு படத்தை தயாரித்து வருகிறது. வீரேந்திரி ரெட்டி இயக்கும் இந்த படத்தில் தினேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தின் நடன இயக்குனரான கே.விஜய் (வயது 25) முதன் முதலாக இந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் இரு பாடல் காட்சிகள் நேபாளத்தில் படமாக்கப்பட்டன. இதற்காக படப்பிடிப்பு குழுவினர் கடந்த 20-ந் நேபாளம் சென்றனர்.


கடந்த சனிக்கிழமை நேபாளத்தில் காட்மாண்டு அருகே உள்ள லாம்ஜங் என்ற இடத்தை மையமாக கொண்டு பூகம்பம் ஏற்பட்டதில் அந்த நாடே உருக்குலைந்தது. பூகம்பம் மையம் கொண்டிந்து லாம்ஜங் பகுதியில்தான் படப்பிடிப்பு குழுவினர் பாடல் காட்சிகளை படமாக்கினார்கள். அதிர்ஷ்டவசமாக படப்பிடிப்பு குழுவினர் பூகம்பத்தில் இருந்து தப்பினார்கள். பின்னர் அவர்கள் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு நேபாளத்தில் இருந்து இந்தியா திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

ஆனால், படத்தின் நடன இயக்கத்தையும் ஏற்றுக் இருந்த விஜய், அதற்கான ரிகர்சலில் ஈடுபட்டிருந்தார். எனவே, ரிகர்சலை முடித்து விட்டு தனிக்காரில் சென்றுள்ளார் விஜய்அப்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அவரது கார் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே விஜய் பரிதாபமாக பலியானார். மேலும் படக்குழுவைச் சேர்ந்தவர்கள் 3 பேர் படுகாயமடைந்தனர்.

நிலநடுக்கத்தின் காரணமாக விபத்தில் சிக்கி பலியான நடிகர் கே.விஜய் சிங் என்ற விஜய் ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பாபட்லா என்ற இடத்தைச் சேர்ந்தவர். சிறு வயதிலேயே நடனத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட விஜய், பிரபla நடன இயக்குனரும் டைரக்டருமான பிரபுதேவாவை பார்த்து தீவிரமாக நடனம் கற்று நடன இயக்குனர் ஆனார்.
படங்களுக்கு நடன காட்சிகள் அமைத்துக் கொண்டே கடந்த 5 ஆண்டுகளாக நடிகர் ஆக முயற்சி செய்து வந்தார். அந்த முயற்சி இப்போதுதான் கைகூடியது. எட்டகாரம் டாட் காம் படத்தி ல் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்து இருந்தது.

கே.விஜய் பலியானதை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர். உடனடியாக விஜயின் உடலை ஆந்திரா கொண்டுவர நடவடிக்கை எடுக்கும் படி அம்மாநில அரசுக்கு தெலுங்கு திரைத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எமிஜெக்சனின் உயிரைக் காப்பாற்றிய நகைச்சுவை நடிகர்


படப்பிடிப்பு தளத்தில் நடிகை எமி ஜெக்ஸனின் உயிரைக் காப்பாற்றினார் நகைச்சுவை நடிகர் கருணாகரன். ஐ படத்துக்குப் பிறகு உயதநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து மான் கரேத்தே படத்தின் இயக்குநர் திருக்குமரன் இயக்கத்தில் நடித்து வருகிறார் எமி ஜெக்ஸன்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடந்தது வருகிறது. கேரளாவில் உள்ள மலைப்பகுதியில் படப்பிடிப்பு நடந்த போது, எமிஜெக்சன் மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்வது போலவும் உதயநிதி ஸ்டாலின் அதை ஓட்டுவது போலவும் காட்சி.

ஆனால் படபிடிப்பு தளத்தில் எமிஜெக்சன் மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்த போது எதிர்ப்பாரதவிதமாக மோட்டார் சைக்கிள் தனது கட்டுபாட்டை இழந்து அருகில் இருக்கும் மலைக்கு விளிம்பில் சென்றது உடனடியாக அருகில் நின்ற நகைச்சுவை நடிகர் கருணாகரன் சுதாரித்து கொண்டு மோட்டார் சைக்கிளை நிறுத்தி எமி ஜெக்சனை காப்பாற்றினார்.

உடனடியாக படிப்பிடிப்பு நிறுத்தபட்டது. இதற்கு நன்றி தெரிவித்துள்ள எமிஜெக்சன், ‘என் உயிரை காப்பாற்றிய கருணாவிற்கு நன்றி’ என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

கவிதாயினி தாமரையை விட்டு பிரிந்தாரா கணவர் தியாகு?- கவிஞர் தாமரை தர்ணா போராட்டத்தில்

சூப்பர் சிங்கர் ஜெசிக்காவுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து!


சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பரிசாக வென்ற ஒரு கிலோ தங்கத்தை தானம் செய்த ஈழத்து மாணவி ஜெசிக்காவுக்கு நடிகர் சூர்யா நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

விஜய் டி.வி. சார்பில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கனடாவில் வசிக்கும் ஈழத்தை சேர்ந்த மாணவி ஜெசிக்கா இரண்டாவது இடம் பிடித்தார்.

இதற்காக அவருக்கு ஒரு கிலோ தங்கம் பரிசாக வழங்கப்பட்டது. தனக்கு கிடைத்த ஒரு கிலோ தங்கத்தை அந்த மேடையிலேயே தமிழகம் மற்றும் ஈழத்தில் அனாதையாக தவிக்கும் குழந்தைகள் நலனுக்காக வழங்குவதாக ஜெசிக்கா அறிவித்தார்.

இந்நிலையில் ஜெசிக்காவுக்கு நடிகர் சூர்யாவிடம் இருந்து நேரில சந்திக்க வருமாறு அழைப்பு வந்தது. இதையடுத்து நடிகர் சூர்யாவை சந்திக்க சென்ற ஜெசிக்காவை, போட்டியில் வெற்றி பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்தார்.

நடிகை ஜோதிகா கொடுத்தனுப்பிய சிறப்பு பரிசையும் ஜெசிக்காவுக்கு இந்த சந்திப்பின்போது சூர்யா வழங்கி பாராட்டினார்.

நடிகர் சூர்யாவை சந்தித்தது தனது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு என்று ஜெசிக்கா தெரிவித்தார்.

நடிகர் சூர்யாவும் தனது அகரம் அறக்கட்டளை மூலம் பல்வேறு நலப்பணிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

நடிக்கும் எண்ணம் எனக்கு இல்லை


பாய்ஸ், சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் ஆகிய படங்களின் மூலம் தமிழ் மக்கள் அனைவரையும் கவர்ந்தவர் ஜெனிலியா.

இவர் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டு திரைத்துறையில் இருந்து விலகினார்.

சமீபத்தில் தான் இவருக்கு குழந்தை பிறந்தது. இந்நிலையில் மீண்டும் நடிப்பீர்களா? என்று கேட்டதற்கு நல்ல கதாபாத்திரங்கள் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன்.மேலும், என் கணவர் என்னை நன்றாக பார்த்து கொள்கிறார், அதனால் நடிக்கின்ற எண்ணம் எனக்கு வரவில்லை, அப்படியே நடித்தாலும் சொந்த தயாரிப்பில் தான் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.

Photos