அண்மைய செய்திகள்

recent
-

தாயோடு அறுசுவை போம் தந்தையோடு கல்வி போம் மகிந்தவோடு றோட்டு போம்


நல்லவர் என்போரும் பலவீனமானவர் என்போரும் ஒரே குணவியல்பு கொண்டவர்கள் அல்லர்.
நல்லவர்களிடம் வல்லமை இருக்கும். எதையும் உடனுக்குடன் நிறைவேற்றும் ஆற்றல் இருக்கும். சரி, பிழை என்பதை கண்டறிந்து நீதி, நியாயம், அறம் என்ற சிந்தனையோடு செயற்படும் விவேகம் இருக்கும்.

ஆனால் பலவீனமானவர்கள் இத்தகையவர்கள் அல்லர். இவர்களிடம் முடிவெடுக்கும் விவேகம் இருக்காது. எதையும் காலம் தாழ்த்துவர்.


தீர்மானம் எடுத்தால் அதை அமுல்படுத்துவதில் இழுத்தடிப்பர். இத்தன்மை கொண்டோர் பலவீன முடையவர்களாகக் கருதப்படுவர்.

எனினும் சில சந்தர்ப்பங்களில் பலவீனமானவர்களை நல்லவர்கள் என்று கருதுவதும் நல்லவர்களை பலவீனமானவர்கள் என்று நினைப்பதும் வழமையில் உள்ளது.

இது மிகவும் மோசமான ஒரு நினைப்பு. நல்லவர்களைப் பலவீனமானவர்களாக நினைத்தால் அது நல்லவர்களை இல்லாமல் செய்து விடும்.

மாறாக பலவீனமானவர்களை நல்லவர்களாக நினைத்தால் அது ஆபத்தை ஏற்படுத்தும். எனவே இனம்காணல் என்பது மிகவும் முக்கியமானது.

அண்மையில் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் மறைவு இந்திய தேசம் முழுமையிலும் பெரும் துக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

எதிர்க்கட்சிகள் கூட முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் போது கலங்கினர். கலைஞர் கருணாநிதி உடல் நலக்குறைவுற்றிருந்ததால் தன் மகள் கனிமொழியை ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த அனுப்பி வைத்தார்.

ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய கனிமொழி கண்ணீர் விட்டு அழுதார். அரசியலில் மிகப்பெரும் எதிரிகள் என்றிருந்த நிலைமை மரணத்தில் மாறியதாயினும் மரணம் என்பதைக் கடந்து ஜெயலலிதாவின் ஆளுமை; அவரின் தீர்மானம் எடுக்கும் திறமை; மக்கள் அவர் மீது கொண்ட அளவு கடந்த அன்பு என எல்லாமும் சேர்ந்து, தமிழகத்தின் ஒரு பெரும் தலைவியின் இழப்பாக அந்த மரணம் மாறி விடுகிறது. இந்நிலைமைதான் எதிர்க்கட்சிகளையும் கண்ணீர் விட்டு அழ வைத்தது.

எனவே ஆட்சித் தலைவர்களாக இருப்போர் விரைவாகத் தீர்மானங்களை எடுத்து அதனை உடனடியாக அமுல்படுத்த வேண்டும்.

மக்கள் நலன்சார்ந்த பணிகளை காலம் தாழ்த்தாது - இழுத்தடிப்புச் செய்யாது நிறைவேற்ற வேண்டும். எனினும் இவற்றை இன்றைய நல்லாட்சியில் காணமுடியவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­ மீது தமிழ் மக்கள் கொண்டுள்ள ஆத்திரம் என்பது கொஞ்ச மல்ல. இருந்தும் வீதிகளை புனரமைப்பதில் மகிந்த ராஜபக்ச காட்டிய கருசனையும் கொண்டிருந்த வேகமும் அந்த வீதியால் பயணிக்கும் போது மகிந்த ராஜபக்ச­வை நினைக்கவே செய்கிறது.

காபற் வீதிகளை அமைத்தமை, வடக்குக்கான புகையிரதப் பாதை நிர்மாணம் என்பன முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வின் அதிரடி நடவடிக்கையால் நடந்து முடிந்தவை.

ஆனால் இன்றைய நல்லாட்சியில் வீதிகள் அமைக்கப்படவில்லை என்பதுடன் எத்தனையோ வீதிகள் திருத்தப்படாமலும் உள்ளன. வீதிகளை சீராக வைத்திருப்பது நாட்டின் அபிவிருத்திக்கு முக்கியமானது என்பதுடன் அந்தந்தப் பிரதேச மக்களின் வாழ்வியலிலும் வீதி என்பது மிகவும் முக்கியமானது.

இருந்தும் நல்லாட்சிக்கு வீதி புனரமைப்பதில் ஒரு சொட்டு அக்கறையும் இல்லை எனலாம். இந் நிலைமை நீடித்தால் மீண்டும் தமிழர் தாயகத்தில் வீதிகள் குன்றும் குழியுமாக மாறுவது தவிர்க்க முடி யாததாகிவிடும்.

இத்தகைய நிலைமையை ஒளவையாரின் பாடல் வரிகளில் கூறுவதாயின் தாயோடு அறுசுவை போம்; தந்தையோடு கல்வி போம்... மகிந்தவோடு றோட்டு போம் எனலாம்.

தாயோடு அறுசுவை போம் தந்தையோடு கல்வி போம் மகிந்தவோடு றோட்டு போம் Reviewed by NEWMANNAR on December 16, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.