அண்மைய செய்திகள்

recent
-

ஜெயலலிதா வாழ்வு தரும் பாடம் ஒரு மறுபக்கப் பார்வை.


தமிழகத்தில் இருந்து மாரித்தவளை அரசியல் செய்து என்ன பயன்..

ஜெயலலிதா அம்மையார் கதை முடிந்துவிட்டது, ஆனால் அவருடைய ஆட்சிக்காலம் சாதாரண மனித வாழ்க்கைக்கு மிகப்பெரிய பாடப்புத்தகமாக அமைந்துவிட்டது.

கூர்ந்து சிந்திக்க வேண்டிய இடங்கள்..


சொத்து :

அவர் தேடிய சொத்து, அவரின் பெயரில் சுரண்டப்பட்ட சொத்து இவைகளை பட்டியலிட்டால் தலை சுற்றி விழுந்துவிடக்கூடியளவு பட்டியல் நீண்டு போகிறது.

இதில் ஒரு ரூபாவையாவது அவரால் கொண்டு போக முடிந்ததா.. எதற்காக இத்தனை கோடிகளையும் சேர்த்து ஊழல் வழக்கில் சிக்கி சிறையிருந்து.. மரணத்தைத் தேடிக் கொண்டார்..?

இந்தப் பணத்தை வைத்துத்தான் அதிகாரத்தை தக்கவைக்க முடியும் என்பதால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் ஜெ.அன் கம்பெனி போனது.

ஆனால் பாவம் அதிக உயரமெடுக்கும் போது கழுகுகளை சந்திக்க வேண்டுமென அவர்கள் கணக்கிடவில்லை, பணச்சுழர்ச்சி ஓர் இலட்சம் கோடிக்கு மேல் ஆடுகளத்தில் வந்தால் வட இந்திய கழுகுகளும், மேலைத்தேய கழுகுகளும் மொய்த்துக்கொள்ளும் ஆகாயத்தில் மிதக்கிறோம் என்பது பொருள்.

அது அழகான ஆகாயம் அல்ல மரண ஆகாயம் என்று அதற்குப் பெயர் சில ஆண்டுகளுக்கு முன் இந்த ஆகாய உயரத்திற்குள் பறந்து இருவர் சிக்குப்பட்டனர், ஒருவர் எகிப்திய முன்னாள் அதிபர் முபாரக், இன்னொருவர் லிபிய சர்வாதிகாரி கேணல் கடாபி.

இருவருக்கும் எதிரான புரட்சிகளை தூண்டிவிட்டவர்கள் முதலில் என்ன செய்தார்கள், இவர்களுடன் நட்பாக பழகி தமது நாட்டு வங்கிகளில் இவர்களுடைய செல்வத்தை பத்திரமாக பாதுகாப்பதாக ஆசை வார்த்தை காட்டி, படிப்படியாக இவர்களுடைய சொத்தை எல்லாம் தமது நாடுகளின் வங்கிகளில் முதலீடு செய்யச் சொன்னார்கள்.

முதலீடு செய்யாவிட்டால் தமக்கு எதிராக திரும்பிவிடுவார்கள் என்பதால் பணத்தை எல்லாம் அங்கு மாற்றினார்கள்.

எல்லாம் முடிந்த பின்னர் புரட்சிகள் வெடிக்க வைக்கப்பட்டன, பணத்தை வைத்திருந்த நாடுகள் இவர்கள் வைத்த பணம் பயங்கரவாத பணம் என்று கூறி அவற்றை உறைய வைத்தன, இப்போது ஒருவர் சிறையில் இன்னொருவர் மீளா சிறையில்..

இவர்கள் தேடிய பணம்.. வைப்புச் செய்த நாடுகள் திருடிவிட்டன.. இப்போதுதான் தமது தவறை உணர்கிறார்கள் ஆனால் வாய் திறக்க அவர்களால் முடியாது.

இவர்களைப் பார்த்தாவது ஜெயலலிதா தனது பணச்சாம்ராஜ்ஜியத்தை மாற்றியமைத்திருக்க வேண்டும், ஆனால் அவரால் முடியவில்லை.

இவருக்கு உண்மையாக ஏற்பட்ட நோய் என்ன.. மக்களுக்கு தெரியாது.

இவருக்கு 75 தினங்களாக அப்பலோவில் என்ன நடந்தது மக்களுக்கு தெரியாது..

உண்மையாக இவர் எப்போது இறந்தார்.. அதுவும் மக்களுக்கு தெரியாது.

ஒரு தடவை இறந்தாக அறிவித்து அரைக்கம்பத்தில் பறந்த அதிமுக காரியாலய கொடி மீண்டும் ஏற்றப்பட்டு அவர் உயிருடன் இருப்பதாக கூறினார்கள் பிறகு அவர் இறந்தாக அறிவிக்கப்பட்டது ஏன்.. எது உண்மை.

தனக்குப் பிறகு யார் என்பதைக் கூட தெளிவாக அறிவிக்க முடியாத வாழ்வொன்றை இத்தனை காலம்; உணராமலே வாழ்ந்தது எப்படி..?

தனது கடைசி நிமிடங்களின் உண்மையைக் கூட மக்களுக்குக் கூற முடியாதபடி மரீனாவிற்கே அனுப்பப்பட்டுவிட்டார்.

கொடநாடு பணம் எங்கே..

அம்மா என்ற வீதிக்கு வீதி காணப்பட்ட போஸ்டல்கள் எங்கே..

இவருக்கு உண்மையாக என்ன நடந்ததென கேட்க இவர் தேடிய பணத்தால் முடிந்ததா..?

நீதி கேட்க இவருடைய குடும்பத்திலாவது யாராவது இருந்தார்களா.. எதுவுமே இல்லை.. செத்து விழுந்த சிங்கத்தை கொத்தி இழுக்கும் கழுகுகளைத்தான் தன்னைச் சுற்றி வைத்திருந்தார் என்பதை இன்று தமிழகம் கண்களை மூடியபடி பார்க்கிறது.

அன்று தமிழக மக்கள் தங்கள் மன ஆதங்கத்தையோ உண்மையையோ வெளிப்படுத்த முடியாதபடி இரும்புக்குரலாக இருந்தார் ஜெயலலிதா இன்று அவர் மரணத்தை ஏன் நடந்ததென கேட்க முடியாது உறைந்துகிடக்கிறது தமிழகம்.

மக்கள்; வாயை மூடி, கஞ்சாப் பொட்டளங்கள் வைத்து அனைவரையும் ஊமையாக்கி விதைத்த விதையை இன்று அவரே அறுவடை செய்துள்ளார்.

அவர் என்ன செய்திருக்க வேண்டும்.. அவரை புதைகுழிக்குள் போட்ட ஆபத்தை அவர் அடையாளம் கண்டிருக்க வேண்டும், துணிந்து எதிர்த்திருக்க வேண்டும், அதற்கான வியூகத்தை அமைத்திருக்க வேண்டும் தவறிவிட்டார்.

தனக்குப் பின் யார்.. குறைந்தது பத்துப்பேரையாவது அடையாளம் காட்டியிருக்க வேண்டும்.. பக்கத்தில் உள்ள தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பார்த்தாவது இந்தத் தவறை அவர் விடாது திருந்தியிருக்க வேண்டும்.

பிரபாகரன் இருக்கிறார் என்றும் இல்லை என்றும் ஆபத்தான இரட்டைப்பக்க கொள்கை அறிமுகமானவுடன் ஏன் இதே கொள்கை எனக்கும் வராது என்பதை இரட்டை இலைகளின் தலைவியே சிந்திக்கவில்லை.

ஜெயலலிதா இருக்கிறார் பின் இல்லை.. சுகமாக வருகிறார்.. சாப்பிடுகிறார்.. காவிரிப் பிரச்சனைக்கு அப்பலோவில் மந்திராலோசனை நடத்துகிறார், கைநாட்டு போட்டு தேர்தல் உத்தரவு பிறப்பிக்கிறார்.. உட்கார்ந்திருக்கிறார்.. இத்தனையும் அவர் பேரில் அறிக்கைகளாக வந்துள்ளன.

இவ்வளவும் ஏன்..

கடைசியாக ஜெயலலிதாவை புதைத்த புதைகுழியை பாருங்கள் வெறும் சீமெந்துக் கல்லை வைத்து அதற்கு ஒரு மை கூட அடிக்காமல் உலக மக்களுக்கு அவர் உறங்கப்போகும் உள்ளிடத்தைக் காட்டினார்கள்.

கல்லறையின் உட்புறமே மக்களுக்கு நம்பிக்கை கொடுப்பது என்பதைக்கூட அறியாத பாமரர்களே அவரை சுற்றியிருந்திருக்கிறார்கள்.

ஒரு புதை குழியைக்கூட மை பூசி அழகுபடுத்த ஜெயலலிதாவின் பணத்தால் முடியவில்லை என்பதுதான் எத்தனை பெரிய துயரம்.

கடைசி நேர அஞ்சலியில் இராணுவம் ஒரு பக்கம் சுழழ கடற்படை வீரர் ஒருவர் மறுபக்கமாக சுழன்று பின் அடுத்த பக்கமாக சுழன்று போனதை உலகம் பார்த்தது.. ஒரு முதல்வருக்கான இறுதி அஞ்சலி ஒத்திகைகூட சரியாக செய்து பார்க்கப்படவில்லை என்பதை கண்டோம்.

இன்றுவரை அதை ஒரு இந்திய ஊடகம் கூட சுட்டிக்காட்டவில்லை..

இவர்களுக்கெல்லாம் முதல்வராக இருந்து ஜெயலலிதாவிற்கு பெருமையா இல்லை கொடுமையா.. அடுத்த முதல்வர் கனவில் மிதப்போருக்கு முன்னால் ஜெயலலிதாவின் வாழ்வும் மரணமும் வைத்துள்ள கேள்விகள் இவைதான்.

எம்.ஜி.ஆர் இறந்தபோது அவருடைய பிணத்தை மறுபடியும் தோண்டியெடுத்து பரிசோதனை செய்வேன் என்று முழங்க ஜெயலலிதா இருந்தார், இன்று ஜெயலலிதாவுக்காக உண்மையானவர் ஒருவர் கூட இல்லையே…

தமிழக முதல்வர் பதவிக்காக கிணற்றுத் தவளைகள் போல கத்தியதெல்லாம் வீண் என்பதை மீண்டும் ஒரு வரலாறு எழுதிப் போயுள்ளது..

ஜெயலலிதா படிப்பினையல்ல மகத்தான பாடப்புத்தகம்.

மூட மனிதா..
மனிதன் அச்சடித்த
காகிதப் பணத்தை
பெரிதாக நினைத்து
வாழ்வை அழித்தாயே..
இந்தப் பிரபஞ்சத்தையே
உன்னிடம் தந்தேனே..
புரியாமல் மரணித்துவிட்டாயே
கடவுளின் கண்ணீர்
ஜெயலலிதாவின் கல்லறையில்..

மீண்டும் சந்திப்போம் அதுவரை நம்பிக்கைகளுடன்..
ஜெயலலிதா வாழ்வு தரும் பாடம் ஒரு மறுபக்கப் பார்வை. Reviewed by NEWMANNAR on December 16, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.