அண்மைய செய்திகள்

recent
-

ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாவில் உருவாகும் கடவுளைக் கண்டுபிடிக்கப்போகும் தொலைகாட்டி!


பூமியில் இருந்து சுமார் பதினாறு இலட்சம் கிலோமீற்றர் தொலைவில் நிலைநிறுத்தப்படவுள்ள, உலகின் விலையுயர்ந்த தொலைகாட்டி ஏறக்குறைய பூர்த்தி நிலையை எட்டியுள்ளது.

ஏறக்குறைய எட்டு பில்லியன் டொலர் (ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபா!) செலவில் உருவாகிவரும் ‘ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொலைகாட்டியை கடந்த இரண்டு வருடங்களாக உருவாக்கி வருகிறது நாஸா!

கண்ணாடிகளுக்குப் பதில், தங்கத்தாலான பதினெட்டு அறுங்கோணங்கள் ஒன்றாகப் பொருத்தப்பட்டுள்ளன. இதன் விட்டம் மட்டும் 6.5 மீற்றர். இதன்மூலம், விண் கதிர்கள் ஊடுருவ மாட்டா. இந்தப் பாரிய தங்கப் பரப்பின் மூலம், சூரியனில் இருந்து நட்சத்திரங்கள் பெறும் ஒளியைவிட ஏழு மடங்கு அதிகமான ஒளியைப் பெற்றுக்கொள்ளும். அகச்சிவப்புக் கதிர்கள் மூலமே தான் சேகரிக்கும் தகவல்களைப் பரிமாறவிருப்பதனால், கடும் குளிரான சூழலில் இது இயங்கத் தேவையான முறையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறித்த தொலைவில் இந்தத் தொலைகாட்டி நிலைநிறுத்தப்பட்டால், ‘பிக் பாங் தியரி’ என்று சொல்லப்படும் அண்டத்தின் முதல் வெடிப்புக்கான காரணத்தை ஆராய முடியும் என்று நாஸா நம்புகிறது. அதாவது, இந்தப் பேரண்டம் உருவாவதற்குக் காரணமாக இருந்த முதல் ஒளியைக் கண்டுபிடிக்க முடியும். இந்த ஒளியே கோள்கள், நட்சத்திரங்கள் அடங்கிய விண்மீன் திரள்கள் உருவாகக் காரணம்.

அந்த ஒளியை இந்தத் தொலைகாட்டி மூலம் கண்டுபிடிக்க முடியும் என்றும், இதன்மூலம் பிரபஞ்சத்தின் உருவாக்கம் பற்றிய பல நம்ப முடியாத, ஆச்சரியம் தரும் தகவல்களைப் பெற முடியும் என்றும் விண்மீன் திரள்களின் நடுவே காணப்படும் ‘பிளாக் ஹோல்’ எனப்படும் கருந்துளையை ஆராய முடியும் என்றும் நாஸா உறுதியாக நம்புகிறது.

என்றாலும், இந்தத் தொலைகாட்டியை அவ்வளவு எளிதாக விண்ணில் செலுத்தி விட முடியாது என்றும் நாஸா தெரிவித்துள்ளது.

தற்போது அமெரிக்காவின் மேரிலேண்டில், க்றீன்பெல்ட்டில் மிக மிகப் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டிருக்கும் இந்தத் தொலைகாட்டி முழுமைபெற்றதும் இதை, காலநிலைப் பண்புகளால் தாக்கப்படமுடியாத ஒரு கொள்கலனுக்குள் வைக்கப்படவேண்டும். பின்னர் இதை ஏவுவதற்காக அன்ட்ரூஸ் நகருக்கு எடுத்துச் செல்லப்படவேண்டும். இது மிக மிகச் சவால்கள் நிறைந்தது.

ஒரு ட்ரக் மூலம் மிக மிக மெதுவாகவும், மென்மையாகவும் இரவு நேரத்தில் இடம் மாற்றப்பட வேண்டும். வீதிகளில் மேடு, பள்ளம், குழிகள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக சில வாகனங்கள் இந்த ட்ரக்கின் முன்புறம் செல்லும். இதற்காக இந்த இரண்டு நகரங்களினதும் பிரதான வீதிகளை மூட வேண்டியிருக்கும். இவ்வாறு மிகக் கவனமாக எடுத்துச் செல்லப்படும் தொலைகாட்டி, இராணுவத்துக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்லும் சி-5சி என்ற விசேட ரக விமானத்தில் மிகக் கவனமாகப் பொருத்தப்படும்.

இந்த விமானத்தின் மூலமாக ஹூஸ்டன் ஏவுதளத்துக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கு விண்வெளியைப் போன்ற புறச்சூழல் கொண்ட - அதாவது ஈர்ப்புவிசை அற்ற - ஒரு அறையில் மிதக்கவிடப்பட்டு பரிசோதிக்கப்படும்.

பின்னர் அங்கிருந்து லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கே, சூரிய ஒளியில் இருந்து தப்புவதற்கான பாதுகாப்புக் கவசங்கள் மற்றும் திசையறை தொழில்நுட்பங்கள் என அனைத்தும் பொருத்தப்படும். பின்னர், வட அமெரிக்காவின் பிரெஞ்சு கயானாவுக்கு, பனாமா கால்வாய் வாயிலாக கவசப் படகு ஒன்றில் எடுத்து வரப்படும். அங்கிருந்தே இந்தத் தொலைகாட்டி விண்ணில் ஏவப்படும்.

விஞ்ஞானிகளின் தற்போதைய கணிப்பின்படி அடுத்த ஆண்டு ஒக்டோபர் மாதம் இந்தத் தொலைகாட்டி விண்ணுக்கு ஏவப்படும் என்று தெரியவருகிறது. எனினும், 2019ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதமளவிலேயே இது விண்ணில் நிலைநிறுத்தப்படும் எனத் தெரியவருகிறது.

பூமியில் இருந்து மிக மிக அதிக தொலைவில் நிலைநிறுத்தப்படும் என்பதால், இதில் ஏதும் பழுதுகள் ஏற்பட்டால் அங்கு போய் அதைச் சரிசெய்வது முடியாத காரியம். எனவே, தற்போது இந்தத் தொலைகாட்டியை விஞ்ஞானிகள் மிகக் கவனமாக உருவாக்கி வருகிறார்கள்.

ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாவில் உருவாகும் கடவுளைக் கண்டுபிடிக்கப்போகும் தொலைகாட்டி! Reviewed by Author on February 28, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.