அண்மைய செய்திகள்

recent
-

கடும் நிபந்தனையுடனான கால நீடிப்பு வழங்குவதை ஏற்கவில்லை : ஈபிஆர்எல்எப்

கடும் நிபந்தனையுடன் கால நீடிப்பு வழங்குவதை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி (ஈபிஆர்எல்எப்) ஏற்கவில்லை என அக்கட்சியின் அரசியல் உயர்பீடம் தீர்மானித்துள்ளதாக அக் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையில் நேற்று (11) நடைபெற்ற அவசர அரசியல் உயர்பீடக் கூட்டத்தில் ஜெனீவாவில் நடைபெற்றுவரும் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாகவும், அது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் நிலைப்பாடு தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.

இன்றைய காலத்தின் தேவை கருதி தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதாக தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

11.03.2017 அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கக்கூடிய நான்கு கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களை உள்ளடக்கிய ஓர் கூட்டம் சம்பந்தன் அவர்கள் தலைமையில் வவுனியாவில் நடைபெற்றது.
கடந்த இரண்டு மாதங்களாக சம்பந்தனும், சுமந்திரனும் இலங்கை அரசாங்கத்திற்கு கால நீடிப்பு அளிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக அறிக்கைவெளியிட்டு வருகின்றனர்.

ஆனால் இறுதியாக நடந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் அவ்வாறான முடிவுகள் தொடர்பாக எந்தவொரு கட்டத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பேசப்படவில்லை என்றும் முடிவுகள் எட்டப்படவில்லை என்றும் கூறியதுடன் இவ்வாறான அறிக்கைகள் சுமந்திரனதும், சம்பந்தனதும் தான்றோத்தினமான அறிக்கைகள் என சுட்டிக்காட்டியிருந்தோம்.
அதுமட்டுமன்றி, இத்தகைய அறிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் எமது கட்சியும் ஏனைய இரண்டு பங்காளிக்கட்சிகளும் கூட ஏற்றுக்கொள்ள மறுத்திருந்தது.

அத்துடன், ஈபிஆர்எல்எவ் பாராளுமன்ற உறுப்பினரும் மாகாணசபை உறுப்பினர்களும், அதேப்போல் ரெலோ மற்றும் புளொட் அமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களும் தமிழரசுக் கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் காலநீட்டிப்பு அவசியமற்றது எனக்கூறி ஐ.நா.மனித உரிமைகள் ஆணையகத்திற்கு தமது கோரிக்கைக் கடிதங்களை அனுப்பியிருந்தனர்.

இதேசமயம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எந்தவித ஒப்புதலுமின்றி சுமந்திரனும் இரகசியமாக ஜெனிவா சென்று உறுப்பு நாடுகளுடன் கலந்துரையாடி இலங்கை அரசாங்கத்திற்குக் கால அவகாசம் கொடுக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி வந்திருக்கிறார்.
பாராளுமன்றக் குழுக்கூட்டத்தின்போது சம்பந்தனுக்கோ, மாவை சேனாதிராஜாவுக்கோ தனக்கோ தெரியாமல் இரகசியமான முறையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்திற்கு இத்தகைய கடிதங்கள் அனுப்பியது பிழை என்பதை சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
அந்தக் கூட்டத்திலேயே இது ஒன்றும் இரகசியமான விடயமில்லை என்றும் அந்தக் கடிதம் பகிரங்கமாகவே அனுப்பப்பட்டது என்றும் பல்வேறு பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுத்துக் கூறியதுடன், இரகசியமான முறையில் ஜெனீவா சென்று காலநீட்டிப்புக்கு ஒப்புதல் கொடுத்ததை ஏனைய கட்சிகள் கண்டித்தும் இருந்தன.

ஆனால் பாராளுமன்றக் குழுக் கூட்டம் முடிவில் 2015ஆம் ஆண்டின் 30.1. தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்
என்பதை ஏகமனமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்திருப்பதாக ஒரு பொய்யான பத்திரிகை அறிக்கையை சுமந்திரன் பத்திரிகைகளுக்கு வழங்கியிருந்தார்.
அவ்வாறான ஏகமனதாக முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்பதை அன்றே கட்சித்தலைவர்கள் மறுத்திருந்தார்கள்.
இந்தப் பின்னணியில்தான் வவுனியா கூட்டம் கூட்டப்பட்டது. வவுனியா கூட்டத்திலும் ஒரு சில தமிழரசுக் கட்சி அங்கத்தவர்கள் தவிர, ஏனையோர் எல்லோரும் காலஅவகாசம் வழங்கப்படக்கூடாது என்பதையே வலியுறுத்தினர்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைப் பொறுத்தவரையில், எந்தவிதமான சொல்லாடல்களையும் ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் கடும் நிபந்தனையுடனான கால அவகாசம் நீட்டிப்பு என்பது இலங்கை அரசை பாதுகாக்கும் நடவடிக்கை என்பதையும் இதனால் இலங்கையில் எத்தகைய மாற்றங்களும் ஏற்படப்போவதில்லை என்பதையும் நாங்கள் வலியுறுத்திக் கூறினோம்.
கால அட்டவணையுடன் கூடிய காலநீட்டிப்பை வழங்க வேண்டும் என்று சம்பந்தனால் கூறப்பட்டது. அதனை ஏற்பதற்கு அனைவரும் மறுதலித்தபோது இவை கடுமையான நிபந்தனையின் கீழ் நிறைவேற்றப்படுவதை ஐக்கிய நாடுகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் இலங்கையில் நிறுவப்பட்டு மேற்பார்வை செய்யப்பட வேண்டும் என்று கூறினார்.

அதாவது, கடும் நிபந்தனையுடன் காலநீடிப்பு தேவை என்பதே சம்பந்தன் கூற்றின் பொருளாகும். சம்பந்தனின் இந்த சொல்லாடல்களை ஏனைய பங்காளிக் கட்சிகள் ஏற்றுக்கொண்டிருப்பதானது ஏற்கனவே அவர்கள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்திற்கு அனுப்பிய கோரிக்கை கடிதத்திற்கு முரணானது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
கடந்த பதினெட்டு மாத காலமாக 2015ஆம் ஆண்டு தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு சம்பந்தனும் சுமந்திரனும் எத்தகைய அழுத்தங்களை இலங்கை அரசாங்கத்திற்கோ அல்லது சர்வதேச சமூகத்திற்கோ கொடுத்தார்கள் என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த முடியுமா?
இறுதியாக, இறுக்கமான நிபந்தனைகள் என்ற பெயரில், கால அட்டவணைகள் அடிப்படையில் 2015ஆம் ஆண்டின் 30.1 பிரேரணையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சிலர் கோருகின்றனர்.
அது நிறைவேற்றப்படாத பட்சத்தில் ஓர் கால அட்டவணையின் பிரகாரம் அரசாங்கத்திற்கு கொடுக்கும் ஒத்துழைப்பை நிறுத்துவதாகவோ அல்லது அதுவும் சரிவராவிட்டால் எதிர்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாகவோ அல்லது பல்வேறுபட்ட பொறுப்புக்களை வகிக்கக்கூடிய தமிழரசுக் கட்சி அங்கத்தவர்கள் அந்தப் பொறுப்புக்களிலிருந்து விலகுவார்கள் என்ற உறுதிமொழியினை இவர்களால் தமிழ் மக்களுக்கு வழங்கமுடியுமா? என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் நிபந்தனையுடனான கால நீடிப்பு வழங்குவதை ஏற்கவில்லை : ஈபிஆர்எல்எப் Reviewed by NEWMANNAR on March 13, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.