அண்மைய செய்திகள்

recent
-

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தேவையற்றது தமிழ்க் கட்சிகள் தீர்மானம்...


இலங்கையில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதாக தற்போதைய அரசாங்கமும் அதற்கு முன்னரான அரசாங்கமும் பகிரங்கமாக கூறி வருகின்ற நிலையில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தேவையற்றது எனவும் அதனை நீக்குவதற்கு தமிழ்க் கட்சிகள் அரசாங்கத்திற்கு பல்வேறு வழிகளில் அழுத்தம் கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்.பண்ணையில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் விந்தன் கனகரத்தினத்தின் அலுவலகத்தில் நேற்றைய தினம் தமிழரசு கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழர் சமூக ஜனநாயக கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம் ஆகியன நேற்றைய தினம் சந்திப்பொன்றை நடத்தியிருந்தன. இதன்போதே பயங்கரவாத தடை சட்டம் ஒன்று தேவையற்றது எனவும், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதம் நாட்டில் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக, கடந்த அரசாங்கமும் இந்த அரசாங்கமும் பகிரங்கமாக கூறி வருகின்ற நிலையில், பயங்கரவாத சட்டம் என்பதே தேவையற்றது என இந்த கூட் டத்தில் அனைத்து கட்சிகளாலும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்ட மசோதாக்களை நீக்குவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்க வேண்டும் எனவும், இந்த அழுத்தத்தை மலையக மக்களையும், முஸ்லிம் மக்களையும் இணைத்து கொண்டு வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தவிர தென்னிலங்கையில் உள்ள முற்போக்கு கட்சிகளும் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் இணைத்து கொள்வது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. நாடு தழுவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கைகள், போராட்டங்களை முன்னெடுத்து பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நீக்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்குவது எனவும் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது.

மேற்படி கூட்டத்தில் தமிழரசு கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதி ராசா, வலி.வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.சுகிர்தன், தமிழீழ விடுதலைக்கழகத்தின் சார்பில் அதன் தலைவரும் (புளொட்) பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சார்பில் அதன் தலைவரும் (ஈ.பி.ஆர்.எல்.எப்) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் சார்பில் அதன் தலைவர் சுகு சிறிதரன், தமிழீழ மக்கள் விடுதலை இயக்கத்தின் (டெலோ) சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி என்.சிறிகாந்தா, உப தலைவர் ஹென்றி மகேந்திரன், வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்களான எம். கே.சிவாஜிலிங்கம், விந்தன் கனகரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த கூட்டத்திற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழர் விடுதலைக்கூட்டணி ஆகியவற்றுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர்கள் கலந்துகொள்ளவில்லை என ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த இரு கட்சிகளும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தேவையற்றது என் பதில் ஒத்த கருத்தோடு உள்ளனர் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.           

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தேவையற்றது தமிழ்க் கட்சிகள் தீர்மானம்... Reviewed by Author on May 22, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.