அண்மைய செய்திகள்

recent
-

“இலங்கை போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர அனைவருக்கும் உரிமை உள்ளது”


இலங்கையில் நடைபெற்ற போரின்போது உயிரிழந்த தமது உறவினரை நினைவுகூரும் அனைத்து உரிமைகளும் அவர்களின் குடும்பத்தினருக்கு இருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

"உயிரிழந்த நபர் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினராக இருந்த காரணத்தை வைத்து இந்த உரிமையை மறுப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல" என்றும் இந்த ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

"நாட்டின் தேசிய ஓற்றுமை மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அந்த குடும்பங்களுக்கு இருக்கின்ற இறந்தோரை நினைவுகூரும் உரிமை மற்றும் அந்த நிகழ்வுகளில் கலந்து கொள்பவர்களின் பாதுகாப்பு ஆகியவை உறுதிப்படுத்தப்பட வேண்டும்'' என இலங்கை மனித உரிமைகள் ஆணையம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கடந்த மாதம் நினைவு கூரப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின்போது, அங்கு உயிரிழந்தோரின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவு தூபி அமைத்தல் உள்ளிட்ட சில ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த ஏற்பாடுகள் தொடர்பாக முல்லைத்தீவு யேசு சபையை சேர்ந்த அருட்தந்தை எழில் இராஜேந்திரன் பல தடவை போலிஸ் விசாரனைக்கு உட்படுத்தப்பட்டார். இது தொடர்பாக அவர் இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் செய்துள்ளார்.

இந்த புகாரை மையப்படுத்தி இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரான கலாநிதி தீபிக்கா உடகம, ஜனாதிபதிக்கு கடிதமொன்றையும் அனுப்பியுள்ளார்.

இந்த நிகழ்வுகள் தொடர்பாக விசாரனை செய்வதற்காக அருட் தந்தை எழில் இராஜேந்திரன் முல்லைத்தீவு மற்றும் வவுனியா போலிஸ் நிலையங்களுக்கு பல சந்தர்ப்பங்களில் அழைக்கப்பட்டதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நினைவு கூர்தலை தடை செய்யும் வகையில் போலிஸாரால் நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டுள்ள போதிலும், அதன் பின்னரும் கூட நினைவு தூபியில் பதிப்பதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள அனைத்து பெயர்களிலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தினரின் பெயர்கள் இல்லையென்பதை உறுதிப்படுத்துமாறும் போலிஸாரால் அருட்தந்தையிடம் கோரப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

''30 வருட கால உள்நாட்டு போரின் பின்னர் இனங்களுக்கிடையில் உறவுகளை கட்டியெழுப்பி நல்லிணக்கத்தை அடையும் முயற்சியில் இலங்கை ஈடுபட்டுள்ளது. இந்த சமயத்தில் பேரில் உயிரிழந்த தமது உறவினரை நினைவு கூர்வதற்கான உரிமை எல்லா குடிமக்களுக்கும் இருப்பது முக்கியமாகும். இது நல்லிணக்க செயற்பாட்டின்போது முக்கியமானதும் ஒருங்கிணந்த செயற்பாடுமாக இருக்கும்'' என்று இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தினால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆயுதப் போராட்டத்தின்போது உயிர் நீத்த இராணுவத்தினரை நினைவு கூர்வதற்காக நாட்டில் பல நினைவு தூபிகள் அமைக்கப்பட்டுள்ளதையும் நினைவுப்படுத்தியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணையம் ,''அவ்வாறே தமது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினரை நினைவு கூர்வதற்காக நினைவு தூபிகளை அமைத்துக் கொள்ளும் உரிமை எல்லா குடிமக்களுக்கும் இருக்க வேண்டும்" என்று வலியுறுத்துகின்றது

''தம்மை விட்டு பிரிந்த உறவினரை நினைவு கூர்வதற்கான உரிமையை ஒரு குடும்பத்திற்கு மறுப்பதற்கு, உயிரிழந்த நபர் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினராக இருந்தார் என்பதனை காரணமாக எடுத்துக் கொள்ள கூடாது ''

உயிரிழந்தவரின் தராதரம் மற்றும் அரசியல் கருத்துக்களுக்கு அப்பாற்பாட்டு தமது உறவுகளின் பிரிவை நினைவு கூர்வதற்கான உரிமை அனைத்துக் குடும்பங்களுக்கும் உண்டு.

தற்போதைய நல்லிணக்கத்திற்கான பயணத்தில் இந்த உரிமையை மறுப்பதால் இனங்களுக்கிடையிலான பிரிவை மேலும் விருத்தியடைந்து, நல்லிணக்கத்திற்கான முயற்ச்சியில் பின்னடைவு ஏற்படும்" என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணையம் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

- BBC - Tamil-
“இலங்கை போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர அனைவருக்கும் உரிமை உள்ளது” Reviewed by Author on June 11, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.