அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்க பாராளுமன்றத்தில் ‘ஒபாமா கேர்’ காப்பீட்டு திட்டத்தை ரத்து செய்யும் முயற்சி மீண்டும் தோல்வி


அமெரிக்க பாராளுமன்றத்தில் ‘ஒபாமா கேர்’ காப்பீட்டு திட்டத்தை ரத்து செய்யும் முயற்சி மீண்டும் தோல்வி அடைந்தது. இது டிரம்புக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது தனது கனவு திட்டமாக ‘ஒபாமா கேர்’ என்ற மலிவு கட்டண காப்பீட்டு திட்டத்தை கொண்டு வந்தார்.

ஆனால் கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப், இந்த காப்பீட்டு திட்டத்துக்கு எதிராக பிரசாரம் செய்தார்.

அவர் தேர்தலில் வெற்றி பெற்று, சென்ற ஜனவரி மாதம் 20-ந் தேதி ஜனாதிபதியாக பதவி ஏற்று பிறப்பித்த முதல் நிர்வாக உத்தரவே, ‘ஒபாமா கேர்’ காப்பீட்டு திட்டத்தை ஒழித்துக்கட்டிவிட்டு, அதற்கு மாற்றாக வேறு ஒரு திட்டத்தைக் கொண்டு வருவதாகத்தான் அமைந்தது.

கடந்த மார்ச் மாதம் இதற்கான மசோதாவை அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் கொண்டு வந்து நிறைவேற்ற டிரம்ப் திட்டமிட்டார். அதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார்.

இந்த சபையில் டிரம்பின் குடியரசு கட்சிக்கு மெஜாரிட்டி உள்ளதால் மசோதா எளிதில் நிறைவேறிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குடியரசு கட்சி எம்.பி.க்களே கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் மசோதா வாபஸ் பெறப்பட்டது. இது டிரம்புக்கு கிடைத்த முதல் தோல்வியாக அமைந்தது.

இந்த நிலையில் தற்போது செனட் சபையில் இந்த மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்ற டிரம்ப் நடவடிக்கை எடுத்தார். இந்த மசோதா நேற்று முன்தினம் அங்கு வந்தபோது, குடியரசு கட்சி உறுப்பினர்களிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. சபையில் பெரும் அமளி ஏற்பட்டது. இதனால் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது.

அப்போது செனட் மெஜாரிட்டி தலைவர் மிட்ச் மெக்கன்னல் கூறும்போது, “ஒபாமா கேர் காப்பீட்டு திட்டத்தை ரத்து செய்துவிட்டு, அதற்கு பதிலாக மாற்று திட்டத்தை உடனடியாக கொண்டுவர மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை என்பது வெளிப்படையாகி விட்டது என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்” என கூறினார்.

‘ஒபாமா கேர்’ காப்பீட்டு திட்டத்தை ரத்து செய்துவிட்டு மாற்று மசோதா கொண்டு வந்து நிறைவேற்றுவதற்கு குடியரசு கட்சி உறுப்பினர்களான மைக் லி, ஜெர்ரி மோரன் ஆகியோர் தங்கள் சக உறுப்பினர்களான சூசன் காலின்ஸ், ராண்ட் பால் ஆகியோருடன் சேர்ந்து கொண்டு போர்க்கொடி தூக்கினர்.

இதனால் 100 உறுப்பினர்களைக் கொண்ட சென்ட் சபையில், குடியரசு கட்சியால் மசோதாவை நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்பட்டது.

‘ஒபாமா கேர்’ காப்பீட்டு திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மாற்று திட்டத்தை கொண்டுவருவதில் உடும்புப்பிடி பிடித்து வருகிற டிரம்புக்கு இது பெருத்த பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக டிரம்ப் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “ஒபாமா கேர் காப்பீட்டு திட்டத்தை அமெரிக்க பாராளுமன்றம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும், புதிய காப்பீட்டு திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என கூறி உள்ளார்.

இதற்கிடையே அறுவை சிகிச்சை செய்துகொண்டு தனது சொந்த மாநிலமான அரிசோனாவில் ஓய்வில் உள்ள குடியரசு கட்சியின் மூத்த எம்.பி., ஜான் மெக்கைன், ‘இந்த விஷயத்தில் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சி எம்.பி.க்களின் கருத்துகளையும் பெற்றுத்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க பாராளுமன்றத்தில் ‘ஒபாமா கேர்’ காப்பீட்டு திட்டத்தை ரத்து செய்யும் முயற்சி மீண்டும் தோல்வி Reviewed by Author on July 19, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.