அண்மைய செய்திகள்

recent
-

பொலிஸாரை தாக்கியோரை புலிகள் என்று கூற முடியாது! இராணுவத் தளபதி



யாழ்ப்பாணம், கொக்குவிலில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியவர்களை தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறுவதற்கு நான் விரும்புவதில்லை.

கடும் போக்குவாத குழு அல்லது இளைஞர் குழு தங்களது சமூகத் தேவைக்காக சில பிழைகளைச் செய்வதற்கு உந்தப்படலாம். அதன் அர்த்தம் விடுதலைப் புலிகள் எனப்படாது இவ்வாறு இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்தார்.

பௌத்த மதத் தலைவர்களான மல்வத்துப் பீடம் மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயகர்களை சந்திப்பதற்காக இராணுவத் தளபதி நேற்று கண்டிக்கு பயணம் மேற்கொண்டார்.

தனது பாரியார் மற்றும் இராணுவ அதிகாரிகளுடன் கண்டிக்குச் சென்ற அவர், மகாநாயக்கர்களை சந்தித்து கலந்துரையாடி ஆசி பெற்றுக்கொண்டார்.

அங்கிருந்து திரும்பிய இராணுவத் தளபதி செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டார்.

யாழ்ப்பாணம், கொக்குவிலில் இடம்பெற்ற பொலிஸார் மீதான தாக்குதல் சம்பவத்தையடுத்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, விடுதலைப் புலிகள் முழுமையாக அழிக்கப்பட்டதாகக் கூறினாலும், அதன் விதைகள் உயிருடனே இருப்பதாகவும், இந்த மோதல்களைப் போன்றே புலிகளின் ஆரம்பகால சூழ்நிலை இருந்ததாகவும் கூறியிருந்தார்.

இந்த கூற்று தொடர்பில் செய்தியாளர்கள் இராணுவத் தளபதியிடம் கேள்வி எழுப்பினர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு என்று கூறுவதற்கு நான் விரும்புவதில்லை. கடும்போக்குவாதக் குழு அல்லது இளைஞர் குழு தங்களது சமூகத் தேவைக்காக சில பிழைகளைச் செய்வதற்கு உந்தப்படலாம்.அதன் அர்த்தம் விடுதலைப் புலிகள் எனப்படாது.

விடுதலைப் புலிகள் இயக்கம் இல்லை என்று நான் கூறவரவில்லை. ஆனால் அதன் அர்த்தம் முழுமையாக தமிழீழ விடுதலைப் புலிகள் அல்ல. எனினும் இப்படிப்பட்ட அமைப்புக்களை எதிர்கொள்ள முப்படைகளும் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் தயாராகவே இருக்கின்றோம்.

பொலிஸ்மா அதிபர் கூறுவதில் சில உண்மை இருக்கலாம். ஏனென்றால் பொலிஸார் தமது நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் தடங்கல் ஏற்படுகிறது. அந்த சந்தர்ப்பத்தில் இராணுவம் தலையீடு செய்து கடமையை நிறைவேற்ற வேண்டும்.

அது யாராலும் கூறும் வரை இருக்கக்கூடாது.இதுகுறித்து நான் பொலிஸ்மா அதிபரை சந்தித்து பேச்சு நடத்தினேன்.

மது அருந்தும் இடத்தில் வாள் ஒன்றை வைத்துக்கொண்டு மது அருந்த முடியும் என்றால் வடக்குக்கும் சரி, கிழக்குக்கும் சரி அதற்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மது அருந்துவதற்கு வேறொரு சட்டமும், மது அருந்தும்போது வாளை வைத்திருப்பதற்கு இன்னுமொரு சட்டமும் வித்தியாசமாகும்.

வாள் வைத்துக்கொண்டு வேறொரு வேலைக்குச் சென்றால் அதற்கு வோறொரு சட்டம்.

எனவே சட்டத்தை இந்த நாட்டில் சரியாக நடைமுறைப்படுத்தினால் மக்கள் ஒழுக்கத்தை கடைபிடித்தால் இந்த நிலை குறித்து என்னிடம் கேள்வி எழுப்ப மாட்டீர்கள் என்று இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்தார்.
பொலிஸாரை தாக்கியோரை புலிகள் என்று கூற முடியாது! இராணுவத் தளபதி Reviewed by NEWMANNAR on August 05, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.