அண்மைய செய்திகள்

recent
-

வடமாகாண ஆளுநரின் வாக்குறுதி பொய்த்துப் போயுள்ளது:மயானங்களை அகற்றக் கோரி மக்கள் குற்றச்சாட்டு...


யாழ். குடாநாட்டில் மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியிலுள்ள மயானங்களை அகற்றக் கோரி யாழ். புத்தூர் மேற்கு கிராம மக்கள் மண்டபத்திற்கு முன்பாக ஆரம்பமான மாபெரும் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று 20 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தினை சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு ஏற்பாடு செய்துள்ளதுடன், இரவு பகலாக தீர்வின்றி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

வடக்கு மாகாண சபையே! மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியிலுள்ள மயானங்களை அகற்று, மக்களின் வாழ்விடச் சூழலைப் பாதுகாத்துக் கிராமியக் கட்டமைப்பை வலுப்படுத்து எனும் தொனிப்பொருளில் இந்தப் போராட்டம் நடைபெற்றுள்ளது.

இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

எமது கிராமத்தில் மயானத்திற்கு மிக அருகாமையில் குடிமனைகள் அமைந்துள்ளன. மயானத்திற்கருகில் முன்பள்ளியொன்றும் அமைந்துள்ளது.

இதனால், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள் உடல், உள ரீதியான பல்வேறு பாதிப்புக்களுக்கு முகம் கொடுத்துள்ளார்கள். மயானம் அமைந்துள்ளமையால் பெரும் சுற்றுச் சூழல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

பத்து வீதமானவர்கள் மாத்திரமே மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியிலுள்ள மயானங்களில் இறந்த உடல்களை எரிக்க வேண்டும். இது எங்கள் பரம்பரை எனக் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

நாங்கள் கடந்த கால யுத்தத்தால் எமது உடன்பிறந்தவர்களை, உற்றவர்களை இழந்து பெரும் அவலத்தின் மத்தியில் வாழ்ந்து வரும் இந்த வேளையில் பழமை வாதம் பேசிக் கொண்டிருப்பது நியாயமா?

போராட்டத்தின் 8 ஆவது நாளான கடந்த 19 ஆம் திகதி மாலை வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே போராட்டக் களத்திற்குத் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு எங்களுடன் கலந்துரையாடியிருந்தார்.

 எமது பகுதியில் மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியில் அமைந்துள்ள மயானத்தையும் அவர் பார்வையிட்டிருந்தார்.

இந்த விஜயத்தின் போது மக்களின் அன்றாட வாழ்வியலுக்கு எந்த வகையிலும் பாதிப்பில்லாத வகையில் மாயானங்கள் பிரத்தியேகமான இடங்களுக்கு மாற்றப்பட வேண்டும் என நாம் வலியுறுத்திக் கூறியிருந்தோம்.

எமது கருத்துக்களை ஏற்றுக் கொண்ட ஆளுநர் இந்த விடயத்தை மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்வதாக வாக்குறுதியளித்திருந்தார்.

எனினும், வடமாகாண ஆளுநர் எமக்கு வாக்குறுதி வழங்கிப் பத்து நாட்கள் கடந்துள்ள நிலையில் அவரது வாக்குறுதி பொய்த்துப் போயுள்ளது எனவும் பகிரங்கக் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், எமக்குப் பொருத்தமான தீர்வினை வடக்கு மாகாண சபை பெற்றுத்தரும் வரை நாம் எமது போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனவும் போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வடமாகாண ஆளுநரின் வாக்குறுதி பொய்த்துப் போயுள்ளது:மயானங்களை அகற்றக் கோரி மக்கள் குற்றச்சாட்டு... Reviewed by Author on August 01, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.