அண்மைய செய்திகள்

recent
-

ஈழம் இறந்த காலத்திற்கான நீதி!


ஈழம் காணாமல் ஆக்கப்பட்டவர்களால் வெளித்துப் போன தேசம். போர் வளையத்தில் தொலைந்து போகச் செய்யப்பட்டவர்கள் திரும்பி வருவார்கள் என்று காத்திருக்கும் தேசம்.
சிங்கள இராணுவத்தின் கையில் கையளிக்கப்பட்டவர்கள் திரும்பி வருவார்கள் என்று காத்திருக்கும் தேசம். தன் கணவன் நிச்சயம் வருவான் என்று பூவோடும் பொட்டோடும் காத்திருக்கும் பெண்களின் தேசம்.
எனது அப்பா திரும்பி வருவார் என்று ஏக்கம் மிகுந்த விழிகளுடன் குழந்தைகள் காத்திருக்கும் தேசம். அறம் மீறி நடத்தப்பட்ட போருக்கும் நீதி கிடைக்கும் என்று காத்திருப்பவர்களின் தேசம். இறந்த காலத்திற்கான நீதி கிடைக்கும் என்று ஒவ்வொரு ஈழத்தவரும் காத்திருக்கும் தேசம்.
அண்மையில் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஒரு சர்வதேச உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். காணாமல் ஆக்கப்படுதலுக்கு எதிரான சர்வதேச உடன்படிக்கையில் அவர் கையெழுத்து இட்டிருந்தார்.
இவ்வாறு கையெழுத்து இடுவதன் மூலம் ஜனநாயகத்தையும் மனித உரிமையையும் நிலைநிறுத்தும் நாடு இலங்கை என்ற தோற்றப்பாடு ஏற்படும்படி ரணில் பேசினார்.

கடந்த காலத்தில் ஈழத் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுபடவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு பேசுகிறார். அந்த அரசியல் தேவைக்காகவே இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டார்.
ஆனால் காணாமல் போனோர் தொடர்பான விடயங்களைக் கண்டறிவதற்கான உடன்படிக்கை, எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், இறந்த காலத்திற்குரியதல்ல என்றும் இலங்கைப் பிரதமர் கூறியது தான் ஈழத் தமிழ் மக்களை பெரும் சினங்கொள்ள வைத்தது.
இலங்கைப் பிரதமரின் தந்திரமான செயல் குறித்து ஈழத் தமிழ் மக்கள் பெரும் விமர்சனங்களை முன்வைத்தார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என்று வலியுறுத்தி அவர்களின் உறவினர்கள் பல மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பிரதமர் ரணில் இவ்வாறு கூறியிருப்பது பெரும் அதிர்ச்சிகரமானது.
ஈழத்தில் 2009ம் ஆண்டு நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டதுடன் யுத்தம் நிறைவடைந்த பின்னர் சரணடைந்தவர்களும் காணாமல் ஆக்கப்பட்டார்கள்.
சரணடையும் புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று ஒருநாளேனும் புலிகள் இயக்கத்தில் இருந்தால் இராணுவத்திடம் சரணடைய வேண்டும் என்றும் விடுவிக்கப்பட்ட அரசியல் வாக்குறுதிக்கு அமைவதாகவே போராளிகள் சரணடைந்தனர்.

சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்கிறது என்று சிங்கள இராணுவத்தின் சொல்லை நம்பி அவர்கள் சரணடைந்தார்கள். கிறிஸ்தவ அருட்தந்தை பிரான்சிஸ் யோசப் தலைமையில் விடுதலைப் புலிகளின் முக்கிய போராளிகள் அனைவரும் சரணடைந்தனர்.
இதில் சரணடைந்த நூற்றுக்கணக்கானவர்களும் குறித்த போராளிகளின் பெற்றோர்கள், மனைவியரால் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டார்கள். இவர்களையும் இலங்கை அரசு காணாமல் ஆக்கப்பட்ட பட்டியலில் தள்ளியது தான் பெரும் அதிர்ச்சிகரமானது.

உயிருடன் கையளிக்கப்பட்டவர்களையும் உயிருடன் சரணடைந்தவர்களையும் காணாமல் ஆக்கி விட்டோம் என கைவிரிக்கும் இலங்கை அரசு யுத்த களத்தில் ஆங்காங்கே சரணடைந்தவர்களை என்ன செய்திருக்கும்? இத்தகைய மனித உரிமை மீறலை, இனப்படுகொலையை இந்த உலகம் மெளனமாக சகித்துக் கொண்டிருப்பது எவ்வளவு கொடுமையானது?
யுத்தத்தின் போது 20 ஆயிரம் பேர் காணாமல் போயிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அமைத்த காணாமல் போனோரைக் கண்டறியும் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை குறிப்பிடுகின்றது.
ஆனால் சுமார் நாற்பதாயிரம் பேர் காணாமல் ஆக்கப்பட்டிருப்பதாக மன்னார் மாவட்ட முன்னாள் ஆயர் இராசப்பு யோசேப், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்குக் கூறியிருந்தார்.
அத்துடன் போரின் இனப்படுகொலை செய்யப்பட்டவர்களுடன் ஒன்றரை லட்சம் மகக்ள் இல்லை என்ற புள்ளி விபரத்தையும் ஆயரே உலகிற்கு எடுத்துரைத்தார்.
காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் நாற்பதாயிரம் பேரை இலங்கை அரசு என்ன செய்தது? அவர்களுக்கு என்ன நடந்தது? அதற்கான நீதி என்ன என்பதே ஈழ மக்களின் இன்றைய போராட்டமாகும்.
சசிரேகா தமிழ்ச்செல்வன், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மனைவி. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வில் கலந்து கொண்ட இவர் இலங்கை அரசின் இனப்படுகொலை குற்றங்கள் தொடர்பில் சாட்சியம் அளித்துள்ளார்.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தன்னையும் தனது இரு பிள்ளைகளையும் விசாரணைக்கென சிவில் உடையில் வந்தவர்கள் இரவு 1 மணியளவில் அழைத்துச் சென்றதாகக் கூறிய அவர், அங்கு இடம்பெற்ற இனவதைகள் தொடர்பில் முக்கிய சாட்சியம் ஒன்றையும் குறிப்பிட்டுள்ளார்.
யோசப் முகாமை நெருங்கும் போது எனது கண்களை கட்டினர். எனது கண்கள் கட்டப்பட்டிருந்தாலும் பெண்களின் அழுகுரல்களும் ஆண்கள் சித்திரவதைகளால் கதறியதையும் கேட்கும் போது அது ஒரு நிலத்தின் கீழ் அமைக்கட்ட சித்திரவதை முகாம் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது என அவர் கூறினார்.
இலங்கையில் அதிகமான சித்திரவதைகள் நடைபெற்ற முகாமாக கருதப்படும் யோசப் முகாமில் என்னை தனி அறையில் தடுத்து வைத்து விசாரணை நடத்தும் போது, புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பற்றி விசாரித்தனர். எனக்குத் தெரிந்த விடயங்களைக் குறிப்பிட்டேன் என்றும் சசிரேகா கூறியுள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயம் என்பது இனப்படுகொலை குறித்த விசாரணையில் மிகவும் முக்கியமானது. காணாமல் ஆக்கப்படுதலைச் செய்த, காணாமல் ஆக்கப்படுதலுக்கு கட்டளையிட்டவர்களை இன்றைய அரசும் பாதுகாக்க முற்படுகின்றது.
காணாமல் போனோர் தொடர்பான விடயங்களைக் கண்டறிவதற்கான உடன்படிக்கை எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்படிருப்பதாக இலங்கைப் பிரதமர் கூறியிருப்பதன் மூலம், ராஜபக்ச உள்ளிட்ட ஈழ இனப்படுகொலையாளிகளை அச்சட்டம் ஊடாக தண்டிக்க முடியாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

வடக்கு பயங்கரவாதத்துடன் தொடர்புபட்ட தனிப்பட்ட நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு எந்தவித சந்தர்ப்பமும் இல்லை என்று இலங்கை அதிபர் மைத்திரிபாலாவும் தானும் தெரிவித்திருப்பதாக கூறியுள்ள ரணில்,
குறித்த உடன்படிக்கை ஊடாக பத்திரிகையாளர் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் தாஜூடின் கொலை செய்யப்பட்டமை போன்ற சம்பவங்களின் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க முடியும் என கூட்டு எதிர்க்கட்சி கூறி வரும் குற்றச்சாட்டை தான் நிராகரிப்பதாகவும் கூறியிருக்கிறார்.

ஆனால், இதே ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சி கூறி வரும் குற்றச்சாட்டை தான் நிராகரிப்பதாகவும் கூறியிருக்கிறார். ஆனால், இதே ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது பத்திரிகையாளர் எக்னலிகொட போன்றவர்களின் படுகொலைகளுக்கு எதிராகப் போராடினார்.
நான் ஆட்சிக்கு வந்தால் இதற்கெல்லாம் தண்டனை வழங்குவேன் என்று கூறிய ரணில் விக்கிரமசிங்க இன்று அந்த கொலைகளைச் செய்த கொலையாளிகளே அஞ்சாதீர்கள் எந்த சட்டத்தாலும் உங்களை தண்டிக்க முடியாது என்று நம்பிக்கை கொடுக்கிறார்.

தவிரவும், வடக்கு கிழக்கில் இடம்பெற்ற காணாமல் ஆக்கபட்டமை மற்றும் கொலைகளுடன் மேற்குறிப்பிட்ட கொலைகளையும் தாமே செய்தோம் என்பதை மகிந்த ராஜபக்ச தரப்பு ஒப்புக்கொள்வதும், அதற்காக உங்களை தண்டிக்க இடமளிக்க மாட்டோம் என்பதை இன்றைய ஆட்சியாளர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளிப்பதையும் இங்கு தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும்.
சிங்கள மக்களுக்கு எதிராக செய்யப்பட்ட குற்றங்களுக்காகக் கூட குற்றவாளிகளை தண்டிக்க இடமளிக்க மாட்டோம் என்று கூறும் இன்றைய சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு எதிரான குற்றங்களை எவ்வாறு அணுகும்.
ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றும் ஜனாதிபதி, இலங்கையில் கண்ணீருடன் ஒரு இனம் போராடுவதை மறைத்துக் கொண்டு எல்லாம் தீர்க்கப்பட்டு வருவது போல பெருமிதமாக பேசுகின்றார். இலங்கையில் தேனும் பாலும் ஓடுகின்றது என்றும் மக்கள் எல்லாரும் மகிழ்ச்சியாக இணைந்து வாழ்வதாக காட்டுகிறார்.

இங்கே எங்கள் மக்கள் கண்ணீரும் கம்பலையுமாக வீதி வீதியாக இருந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். சர்வதேச சமூகத்தை அணைத்து இனப்படுகொலை விவகாரத்தை நீர்த்துப் போகச் செய்யும் விதமாகவே மைத்திரிபாலா இவ்வாறு அணுகுகிறார்.
இறந்த கால நீதியை மறுக்கும் குறித்த சட்டத்தை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பாராட்டியுள்ளார். அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்தை திறத்தல் தொடர்பிலும் இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான உண்மையைக் கூறாமல், இப் பிரச்சனையை உடன் தீர்க்காமல் காணாமல் போனோர் அலுவலகத்தை திறந்து மேலும் காலத்தை வீணடித்து இந்த விவகாரத்தை நீர்த்துப் போகச் செய்யப் போகிறதா இலங்கை அரசு என்ற ஆதங்கமே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடம் உள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தை இழூத்தடிக்க ராஜபக்ச, காணாமல் போனோரைக் கண்டறியும் ஆணைக்குழுவை அமைத்தது போலவே தற்போதைய அரசாங்கம் காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கிறதா என்று தமிழ் மக்கள் சந்தேகம் கொள்கின்றனர்.
உண்மையை வெளிப்படுத்தவும் நீதியை நிலைநாட்டவும் அலுவலகங்களும் ஆணைக்குழுக்களும் தேவையில்லை. காலத்தை இழுத்தடிக்கவும் நீதியை குழிதோண்டிப் புதைக்கவுமே இவை பயன்படுத்தப்படுகின்றன.

இந்த நிலையில் இலங்கை அரசின் மற்றுமொரு மோசமான செயலாக காணாமல் போனோர் தொடர்பான விடயங்களைக் கண்டறிவதற்கான உடன்படிக்கை இறந்த காலத்திற்கு உரியதல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன அரசைக் கொண்டு வருவதிலும் ராஜபக்ச தரப்பைத் தோற்கடிப்பதிலும் முன் நின்றவர் நிமல்கா பெர்னாண்டோ. ஐ.நா.வில் உரையாற்றிய இவர் மைத்திரி அரசும் தமிழ் மக்களின் மங்களை வெல்லத் தவறி விட்டது என்றும் குற்றம் சுமத்தியிருக்கிறார்.
    காணாமல் போனோர் அலுவலகம் சர்வதேசத்தின் நம்பிக்கையைப் பெறத் தவறி விட்டது என்றும் அதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்பது கேள்விக்குறி என்றும் கூறினார்.
எவ்வாறெனினும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பதில் என்பது ஈழத்தின் இறந்த காலத்திற்கான நீதி. அந்த நீதியில் இருந்தே எதிர்காலத்தை கட்டமைக்க முடியும்.

ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் சிங்கள அரசு நிகழ்த்திய இனப்படுகொலைக் கொடுமைகள் ஆறாத வடுவாக நிலைத்து விட்டதுடன் அதற்கான நீதியையும் பதிலையும் ஈழ மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
அறுபது வருடங்களாக இன ஒடுக்குமுறையையும் முப்பது வருடங்களுக்கு மேலாக இன அழிப்பு யுத்தத்தையும் சந்தித்த எமது மக்கள் நீதியைப் பெற்று உரிமையை நிலைநாட்டும் விடயத்தில் பின்வாங்க மாட்டார்கள். பின்வாங்கவும் முடியாது.
Kumudam
 
ஈழம் இறந்த காலத்திற்கான நீதி! Reviewed by Author on November 03, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.