அண்மைய செய்திகள்

recent
-

தமிழீழக் கனவைத் தகர்க்கும் புதிய சட்டம்! -


ஈழத்தில் திட்டமிட்டு தமிழின அழிப்பை சிங்கள அரசு நடத்தி முடித்து 9 வருடங்கள் உருண்டோடி விட்டன. சிங்களக் கொடுங்கோல் அரசின் போர்க்குற்றங்கள் சர்வதேச அரங்கில் பலமுறை நிரூபிக்கப்பட்டும் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதிலும் ஈழத்தமிழர்களுக்கான அரசியல் உரிமைகளைப் பெற்றுத் தருவதிலும் எந்த ஒரு தெளிவான, திருப்திகரமான தீர்வுகளும் எட்டப்படவில்லை. வல்லரசு நாடுகளின் துணைகொண்டு தங்களுக்குத் தோதான அனைத்தையும் சாதித்துக்கொண்டிருக்கிறது மைத்ரிபால சிறீசேன தலைமையிலான சிங்கள அரசு.
இந்த நிலையில், இந்தியாவின் மோடி அரசைப் பின்பற்றி, ஒரே தேசம்; ஒரே இனம் என்கிற கோட்பாட்டுடன் சிங்கள தேசத்தை முழுமையாக கட்டியமைக்க புதிய அரசமைப்புச் சட்டத்தை (யாப்பு) உருவாக்கி வருகிறார்.

 அதிபர் மைத்ரிபால. இன அழிப்பை சட்டபூர்வமாக்கவும், இலங்கையில் தமிழர்கள், சிங்களவர்கள் என இரு இனங்கள் இனி கிடையாது; சிங்கள இனம் மட்டுமே ஒரே இனமாக கொள்ளப்படுவதை உறுதி செய்வதுமே புதிய அரசியல் யாப்பின் அடிப்படை நோக்கம்! இதன் ஆபத்தை உணர்ந்து, சிங்கள அரசின் புதிய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக தேசியத்தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளிலும் (நவம்பர் 26), மாவீரர் தினத்திலும் (நவம்பர் 27) உலக முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கிறார்கள் ஈழத்தமிழர்கள்.
இதற்கு முன்னோட்டமாக, அறிவாயுதம் ஆய்விதழின் சிறப்பாசிரியர் விசுவநாதன் ஒருங்கிணைப்பில் சிங்கள அரசின் புதிய அரசியல் சட்டத்தை எதிர்த்து சென்னையில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், திராவிடர் விடுதலை கழகத்தின் பொதுச்செயலர் விடுதலை ராசேந்திரன், தமிழ்த்தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், எம்.எல்.ஏ. தனியரசு, திரைப்பட இயக்குநர் வ.கௌதமன், பேராசிரியர் ஜெயராமன், கவிஞர் காசி ஆனந்தன் என ஈழ ஆதரவுத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டு ஆவேசமாகப் பேசினர்.

ஈழ உணர்வாளர்கள் திரளாகக் கலந்துகொண்ட அக்கருத்தரங்கத்தில் பேசிய வைகோ, ‘’ சிங்கள அரசு கொண்டுவரும் அரசியல் யாப்பை இலங்கை நாடாளுமன்றத்திலேயே கொளுத்த வேண்டும். ஒரே மதம், ஒரே மொழி என்கிற இந்த புதிய சட்டம், தமிழர்களை மொத்தமாக அழித்துவிடும். உலக நாடுகளை ஏமாற்றுவதற்காக இதனைக் கொண்டுவருகின்றனர். ஈழத்தமிழர்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து அடிமைகளாக மாற்ற இந்த புதிய யாப்பு வழிவகுக்கிறது. இதற்கு இந்திய அரசும் துணை நிற்கிறது. தமிழர்களுக்குத் தொடர்ச்சியாக துரோகமிழைத்து வருகிறது இந்திய அரசு. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தைவிட தற்போதைய மோடி அரசு, தமிழர்களை மொத்தமாக காவு வாங்கத் துடிக்கிறது. இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்பதுதான் ஏழரைக் கோடி தமிழர்களின் எண்ணம். இதற்கு மாறாக, சிங்கள அரசுக்கு துணையாக இந்திய தேசியம் இருந்தால், பல தேசிய இனங்களின் கூட்டமைப்பாக இருக்கும். இந்திய அரசு எப்போது வேண்டுமானாலும் பிரிந்துபோகும்'' என தனக்கேயுரிய பாணியில் எச்சரிக்கை செய்தார்.
திரைப்பட இயக்குநர் கௌதமன், ""சிங்கள அரசு கொண்டுவரும் ஒருமித்த தேசம் என்பது தமிழினத்தை அழிக்க வல்லது. உலக அரசியலில் சர்வதேச நாடுகளை ஏமாற்றும் வகையில் தந்திரமாக இந்த யாப்பினை உருவாக்கியிருக்கிறார்கள். தமிழர்களின் நில உரிமைகளைக் கையகப்படுத்துவதையும், வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணையக்கூடாது என்பதையும் இந்த சட்டம் அழுத்தமாக வலியுறுத்துகிறது. வடக்கு-கிழக்கு இணைந்துவிட்டால் தமிழர்கள் ஒன்றிணைந்து மீண்டும் ஈழ தேசத்தை கட்டமைக்கவும் தங்களின் உரிமைகளுக்காக போராடவும் செய்வார்கள். ஆக, தமிழர்கள் ஒன்று சேர்வதை தடுக்கிறது இந்த சட்டம். இலங்கை நாடாளுமன்றத்தில் இருக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் சம்பந்தனும் சுமந்தனும் தமிழர்களுக்கு எதிராகக் கொண்டுவரப்படும் இந்த சட்டத்தை எதிர்க்காமல் இருக்க சிங்கள அரசிடமிருந்து 700 கோடி ரூபாய் வாங்கியிருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய துரோகம்! இவர்களை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். தமிழின அழிப்பைத் திட்டமிட்டு நடத்தியவர் ராஜபக்சே. அதே இன அழிப்பையும் தமிழர்களுக்கான உரிமைகளையும் மூடி மறைப்பவர் சிறீசேன. சிங்கள அரசின் புதிய சட்டத்தை நிறைவேற்றவிடாமல் தடுத்து நிறுத்தி தமிழர்களையும் அவர்களது நிலங்களையும் பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. இதற்காக, வலுவான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்''’என்றார் ஆவேசமாக.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், ""தமிழினத்துக்கென்று ஒரு தனி நாடு உருவாகாதா என்கிற ஏக்கத்தில் ஒட்டுமொத்த தமிழினமும் எதிர்பார்க்கும் நிலையில், ஐக்கிய ராஜ்ஜியம் என்கிற கட்டமைப்பை உருவாக்க புதிய சட்டத்தை கொண்டு வந்து ஈழத்தமிழர்களை ஒடுக்கத் துடிக்கிறது சிங்கள அரசு. ஈழத்தமிழர்களின் நிலங்களை அவர்களின் அனுமதியின்றியே சிங்கள ராணுவம் கைப்பற்றிக்கொள்ள இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. யாருடைய நிலத்தை எவன் கபளீகரம் செய்வது? எதிர்காலத்தில் ஈழத்தேசம் உருவாகிட கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு அதனை கொண்டு வருகின்றனர். துவக்கத்திலேயே இதனை நாம் முறியடிக்காவிட்டால் இலங்கையில் தமிழர்களே இல்லாத நிலையை ஏற்படுத்திவிடுவார்கள். சிங்களவர்களால் ஈழத்தமிழர்களின் இன்னல்கள் எப்படி குறைவதில்லையோ அதேபோல இந்திய அரசால் தமிழக தமிழர்களுக்கும் இன்னல்கள் குறைந்தபாடில்லை. நமக்கான உரிமைகளையும் நாம் இழந்து வருகிறோம்.

தமிழகத்தில் இந்திய அதிகாரிகளின் ராஜ்ஜியம் அதிகரித்து வருகிறது. எதிர்காலத்தில் வெளிநாட்டினர் நம்மை ஆட்சி செய்வார்கள். அதற்கான செயல்திட்டம் துவங்கிவிட்டது. தமிழகமும் ஈழமும் வேறல்ல என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்''’என்றார் அழுத்தமாக.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழினியன், ""இனப் படுகொலையை மூடி மறைப்பதற்காகவே புதிய யாப்பினை நிறைவேற்ற முயல்கிறது இலங்கை அரசு. போர்க்குற்றவாளிகளை பாதுகாப்பதும் இந்த சட்டத்தின் முக்கியமான கோட்பாடு''’’என்றார் மிக சீரியசாக. கருத்தரங்கத்தில் பேசிய ஈழ ஆதரவுத் தலைவர்கள் அனைவரும் சிங்கள அரசின் புதிய சட்டத்திலுள்ள ஆபத்துகளையும் ஈழத்தமிழர்களுக்கான உரிமை மறுப்புகளையும் அழுத்தமாக விவரித்தனர்.

புதிய சட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்பாக, இலங்கையில் மிச்சம் சொச்சமிருக்கும் தமிழின அடையாளத்தை முற்றிலும் அழித்துவிடத் துடிக்கும் மைத்ரிபால சிறீசேன சிங்கள அரசு, தமிழர்களின் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட பல்வேறு நிறுவனங்களுக்குச் சூட்டப்பட்டிருக்கும் சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை நீக்கி வருகிறது. இந்த நீக்கத்துக்கு உலகம் முழுவதுமுள்ள தமிழர்களிடையே எதிர்ப்புகள் வலுத்துவரும் நிலையிலும், சிங்கள அரசு அலட்டிக்கொள்ளவில்லை. சுயநலம் பாராமல் மலையகத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காகப் போராடியவர் சௌமிய மூர்த்தி தொண்டமான். அவருடைய பெயரை நீக்குவது ஒட்டுமொத்த தமிழினத்தையும் அவமதிப்பதாகும் என்கிறார் டாக்டர் ராமதாஸ்.
இலங்கையிலுள்ள தமிழ் எம்.பி.க்கள் சிலரிடம் நாம் பேசியபோது, "இலங்கையில் இனி தமிழர்களின் அடையாளம் இருக்கக்கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது சிங்கள அரசு. சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை மத்திய மாநிலத்தில் அழித்திருக்கிறார்கள். மற்ற மாநிலங்களிலும் அழிக்கும் பணிகளை விரைவுபடுத்தி வருகின்றனர். இலங்கையை சிங்களமயமாக்கும் முயற்சியின் முதல்கட்டம் இது.

மலையகத் தமிழர்களின் முன்னேற்றத்திற்கும் உரிமைகளுக்கும் தன்னலமில்லாமல் சௌமியமூர்த்தி தொண்டமான் ஆற்றிய பணிகள் வலிமையானவை. புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தின் வழித்தோன்றல் என்றாலும் சௌமிய மூர்த்தி, தன் தந்தை கருப்பையா போல தொழில் செய்வதில் மட்டும் ஆர்வம் கொள்ளாமல், மலையகத் தமிழர்களின் வாழ்வுரிமைகளுக்காகப் போராடினார். தொழிலாளர் காங்கிரஸ் கட்சியை தொடங்கி மலையகத் தமிழர்களின் குடியுரிமை, வாக்குரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைப் பெற்றுத்தந்தவர் சௌமியமூர்த்தி.
இதற்காக அவர் நடத்திய போராட்டங்களும் முயற்சிகளும் நீண்ட பெருமைக்குரியவை. அதனை அங்கீகரிக்கும் வகையில்தான் இலங்கை நாடாளுமன்ற வளாகத்தில் அவருக்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது.


அவரது உழைப்பும் தியாகமும்தான் பல்வேறு நிறுவனங்கள் அவரது பெயரில் திறக்கப்பட்டதற்கு காரணம். இருபதாண்டு காலம் அமைச்சராக இருந்து மலையகத் தமிழர்களின் எதிர்காலத்துக்காகவே உழைத்து வாழ்ந்து மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை அழித்து, மீண்டும் ஓர் இன அழிப்பை நடத்திக்கொண்டிருக்கிறார் அதிபர் சிறீசேன. ஈழத்தில் யுத்தம் நடத்தி தமிழின படுகொலை நடத்தினார் ராஜபக்சே! அதற்கான சுவடுகளை அழித்தொழித்தனர். தற்போது, தமிழினத் தலைவர்களின் பெயர் அடையாளங்களை அழித்தும், ஒரே தேசம்- ஒரே இனம் என்கிற ஒருமித்த சிங்கள ராஜ்ஜியத்திற்காக புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கவும் வேகமாக செயல்பட்டு வருகிறது இலங்கை அரசு. இதனை தடுத்து நிறுத்த வேண்டிய இந்திய அரசு, கண் மூடி, வாய் பொத்தி வேடிக்கை பார்க்கிறது. இதற்கு காரணம், இப்படிப்பட்ட சிந்தனைகளை சிங்கள அரசுக்குச் சொல்லிக் கொடுப்பதே இந்திய அரசின் கொள்கை வகுப்பாளர்கள்தான்'' என்று சுட்டிக்காட்டுகின்றனர்.
 -Nakkheeran-
தமிழீழக் கனவைத் தகர்க்கும் புதிய சட்டம்! - Reviewed by Author on November 28, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.