அண்மைய செய்திகள்

recent
-

சேர்ந்திருந்து சாதிக்க முடிந்தது என்ன? -


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் காலக் குழப்பங்கள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. வழக்கமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்சியாகப் பதிவு செய்யவேண்டும் என்கிற குழப்பம் தேர்தலுக்கு முன்னர் உருவாகும். இந்தமுறை அப்படியல்லாமல் சற்றே வித்தியாசமாக தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் தமது கட்சி போட்டியிடாது என்று அறிவித்துள்ளார் ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2001ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் தமிழ்க் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, ரெலோ, ஈபிஆர்எல்எவ் ஆகிய கட்சிகள் இணைந்து இந்தக் கூட்டை உருவாக்கின.

ஒக்ரோபர் 20ஆம் திகதி கூட்டமைப்புத் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்த நான்கு கட்சிகளும் கையெழுத்திட்டன.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதய சூரியன் சின்னத்தின் கீழேயே 2001 தேர்தலில் கூட்டமைப்புப் போட்டியுமிட்டது.
தமது தரப்பு ஆள்கள் எனச் சிலரையும் அந்தத் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் சேர்த்துக் கொண்டதன் மூலம் கூட்டமைப்பின் கையெழுத்திடாத 5ஆவது பங்காளிகளாக விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் விளங்கினர்.
இருக்கும் வரையில் அவர்களே கூட்டமைப்பின் தீர்மான சக்திகளாக இருந்தனர் என்பதும் பரகசியம்.

2004 பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரிக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளைத் தொடர்ந்து உதய சூரியன் சின்னத்தைக் கூட்டமைப்பின் தேவைக்குப் பயன்படுத்த அனுமதி மறுத்தார் அவர்.
இதனால் கூட்டணிக்குள் ஓர் அங்கமாக இருந்த தமிழரசுக் கட்சி மேற்கிளம்பி தனது வீட்டுச் சின்னத்தை கூட்டமைப்புக்காக வழங்கியது.
இக்கட்டான நேரத்தில் ஆபத்தாந்தவனாக வந்த தமிழரசுக் கட்சி, பின்னாளில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் செயலிழந்தபோது கூட்டமைப்பின் அதிகாரத்தை இயல்பாகவே எடுத்துக்கொண்டது.

தமிழரசுக் கட்சி கூட்டமைப்புக்குள் முன்னுக்கு வந்ததுடன் உள்ளே இருந்த விடுதலைப் புலிகள் சார் ஆள்களை வெளியேற்றியது. இதனால் ஏற்பட்ட முரண்பாடுகளால் தமிழ்க் காங்கிரஸ் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியது.
போரில் தமிழர்கள் தோற்றுப் போயிருந்த அந்த நேரத்தில் ஆயுத வன்முறையில் நேரடித் தொடர்பற்றிருந்த தமிழரசுக் கட்சி, ஆயுத வன்முறையிலும் தமிழர் விருப்புக்கு மாறான நடவடிக்கைகளிலும் கடந்த காலங்களில் ஈடுபட்ட மற்றைய இரு முன்னாள் ஆயுதக் குழுக்களையும் பின்தள்ளி தலைமை இடத்தை அடைந்ததும் இயல்பாகவே நடந்தது.


காங்கிரஸ் வெளியேறிய வெற்றிடத்திற்கு பின்னாள்களில் புளொட் அமைப்பை இணைத்துக் கொண்டது கூட்டமைப்பு. மூன்று முன்னாள் ஆயுதக் குழுக்கள் கூட்டமைப்புக்குள் சேர்ந்து கொண்டபோது நான்கில் மூன்று பெரும்பான்மையை கட்சிக்குள் கொண்டிருந்த அவை தமிழரசுக் கட்சிக்கு நிகரான இடம் தமக்கும் வேண்டும் என்று கேட்டு உரசிப் பார்ப்பது அவ்வப்போது நடந்து வந்தது.

தேர்தல் ஒன்று நடப்பதற்கு முன்பாகக் கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்றதாக இந்த உரசல் ஆரம்பிக்கப்படும்.
என்றாலும் தமது கடந்த காலத்தின் மீது இந்த மூன்று முன்னாள் ஆயுதக் குழுக்களும் கொண்டிருக்கக்கூடிய அச்சம் மற்றும் வாக்கு வங்கியற்ற கையறு நிலை காரணமாகக் கடைசியில் தமிழரசுக் கட்சியிடமிருந்து ஆசன ஒதுக்கீட்டைப் பெறுவதற்கான பேரம் பேசலாக மாறுவதுடன் கூட்டமைப்புப் பதிவு என்ற விடயம் அடங்கிப் போகும்.

அவ்வப்போது இந்த உரசல் தேர்தல் காலத்தைத் தாண்டியும் நீள்வதுண்டு . அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவரான இரா.சம்பந்தன் மீதும் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரா எம்.ஏ.சுமந்திரன் மீதும் காரசாரமான விமர்சனங்களையும் அந்தக் கட்சிகள் முன்வைக்கும்.
இந்த விளையாட்டுக் கொஞ்சம் முற்றி தமிழ் அரசுக் கட்சிக்கும் ஈபிஆர்எல்எவ் கட்சிக்கும் இடையிலான உறவு கொஞ்சக் காலமாகவே விவாகரத்துக்கு முந்திய பிரிவு என்றவாறாக இருந்தது.

தற்போது விவாகரத்தை நோக்கிய அடுத்தபடியாக தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடப் போவதில்லை என்று ஈபிஆர்எல்எவ் கட்சித் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருக்கிறார்.
கூட்டமைப்புக்குள் இதற்கு ஆதரவும் எதிர்ப்புமான இருதரப்புக் கருத்துக்களும் உள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் இதுவரையில் சேர்ந்திருந்து தமிழ் மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் முக்கிய போரில் சாதிக்க முடிந்தது என்ன என்ற கேள்வி மக்களிடம் இருக்கும் போது, ஈபிஆர்எல்எவ் பிரிந்து போவதால் என்ன இழப்பு வந்துவிடப் போகிறது என்ற கேள்வியும் அவர்களிடம் எழத்தான் செய்கிறது.
சேர்ந்திருந்து சாதிக்க முடிந்தது என்ன? - Reviewed by Author on November 07, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.