அண்மைய செய்திகள்

recent
-

அரசியல்வாதிகளின் கருத்து மோதல்களால் மக்களுக்கு என்ன பயன்? -


வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வர னுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையிலான கருத்து மோதல்கள் பகிரங்க மோதலாக வெடிக்க ஆரம்பித்திருக்கின்றன.

தான் எந்தக் கட்சியையும் சார்ந்தவர் அல்லர் என்றும், தேர்தலில் நடுநிலைக் கொள்கையைக் கடைப்பிடிப்பவர் என்றும் முதலமைச்சர் கூறி வந்தாலும், தேர்தல் காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, குறிப்பாகத் தமிழரசுக் கட்சியைச் சாடி அதனைப் பலவீனப்படுத்தும் வகையில் செயற்படுவதை கடந்த தேர்தல் முதல் தனது வாடிக்கையாக்கிக் கொண்டுள்ளார் முதலமைச்சர்.

கடந்த தேர்தலில் அவரது கருத்துக்கள் தொடர்பில் அமைதி காத்த தமிழரசுக் கட்சி, இந்தத் தடவை தான் அத்தனை பொறுமையோடு நடந்து கொள்ளப் போவதில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது. பொறுமையைக் கைவிட்டது மட்டுமல்லாது மூர்க்கத்தனமாக விக்னேஸ்வரனுடன் மோதிப் பார்க்கவும் தான் தயார் என்பதை தனது முதலாவது பதில் அறிக்கையின் மூலமே கட்சி வெளிப்படுத்தி விட்டது.

விக்னேஸ்வரனின் அடாவடிகளை, சீண்டல்களை இனியும் பொறுமையோடு அணுகுவதில்லை என்ற முடிவுக்குக் கட்சி வந்து விட்டதையே நேற்று முன்தினம் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தனது அறிக்கையில் வெளிப்படுத்தியிருந்தார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் பதவி ஆசை பிடித்தவர், அது கிடைக்கவில்லை என்ற கோபத்திலேயே கட்சியை எதிர்க்கின்றார் என்று சீ.வி.விக்னேஸ்வரனைக் கீழ்மைப்படுத்தவும் தயங்காத விமர்சனத்தை முன்வைத்து அவரது நடவடிக்கைகளுக்கான உறுதியான தனது எதிர்ப்பைக் கட்சி பதிவு செய்துள்ளது.

தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் தமது கொள்கையில் இருந்து வழுவி விட்டார்கள், எலும்புத் துண்டுகளுக்காக விலைபோய் விட்டார்கள் என்றெல்லாம் தமிழரசுக் கட்சியினரைத் தனது அறிக்கையில் காட்டமாக விமர்சித்திருந்தார் முதலமைச்சர் விக்னேஸ்வரன். அப்படி விமர்சிக்கும் போது கூட இத்தகைய ஓர் உறுதியான பதில் அறிக்கை கட்சியிடம் இருந்து வெளிவரும் என்று அவரே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்.

முன்னாள் நீதியரசர், அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து தான் தன்னை இந்தப் பதவிக்கு அழைத்து வந்தன போன்ற காரணங்களால் தன்னைப் பகிரங்கமாகத் தூற்றித் தூக்கியெறியும் என்று நினைத்திருக்க மாட்டார் என்றே நம்பலாம்.

தெரிந்தோ தெரியாமலோ அவர் சீண்டி விட்டதில் கட்சி இப்போது படமெடுத்து ஆடத் தொடங்கி விட்டது. தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவி தனக்குக் கிடைக்கும் என்று கனவு கண்டு கொண்டிருந்த முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு அது கிடைக்கவில்லை என்றவுடன்தான் அவர் கட்சியை விமர்சித்து, எதிர்த்து நடக்கத் தொடங்கினார் என்பதே கட்சியின் குற்றச்சாட்டு.

முதமைச்சர் என்ற வகையிலும் அந்தக் கட்சி உள்ளிட்ட கூட்டமைப்பைக் கடுமையாக விமர்சிப்பவர் என்ற வகையிலும் இந்தக் குற்றச்சாட்டுக்குரிய பதிலை அவர் வழங்க வேண்டியது கட்டாயம். இருப்பினும் இரு தரப்பினருக்கும் இடையே நீண்டு செல்லக்கூடிய இந்தப் பிரச்சினையால் அல்லது விமர்சனங்களால், கருத்து மோதல்களால் மக்களுக்கு என்ன பயன்? எதுவுமில்லை.

உள்ளுராட்சித் தேர்தல் சமயத்தில் இந்த மோதல்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மேலும் பலவீனப்படுத்தவே செய்யும். தங்களுடைய சுயநலன்கள் கருதிய இத்தகைய கருத்து மோதல்களைத் தவிர்த்து விட்டு, மக்களுக்குப் பயனுள்ள விதத்திலான கருத்து மோதல்களில், விவாதங்களில் தலைவர்கள் ஈடுபடுவதே சிறந்ததும் வரவேற்கத் தக்கதுமாகும். அதைவிடுத்து இவ்வாறு ஒரு தரப்பினரை மறுதரப்பினர் மலினப்படுத்தும் விதத்திலான அறிக்கைகளை விடுப்பது தேவையற்ற குழப்பங்களையும் அரசியல் மீதும், அரசியல்வாதிகள் மீதும் வெறுப்பையுமே வளர்க்கும்.

தமிழரசுக் கட்சியினர் மற்றும் முதலமைச்சர் ஆகிய இரு தரப்பினரும் இதனைப் புரிந்து கொண்டு உருப்படியான வகையில் மக்களுக்குப் பயனுள்ள விடயங்களில் பணியாற்ற முன்வர வேண்டும். பேசுவதற்கும் அடைவதற்கும் தமிழ் மக்களுக்கு எவ்வளவோ விடயங்கள் இன்னும் இருக்கையில், அதை நோக்கிய ஆரோக்கியமான விவாதங்களே இப்போதைக்குத் தேவையானவை. அரசியல்வாதிகள் அதனைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.


அரசியல்வாதிகளின் கருத்து மோதல்களால் மக்களுக்கு என்ன பயன்? - Reviewed by Author on January 01, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.