அண்மைய செய்திகள்

recent
-

சமாதான நீதவான்கள் என்றால் யார்? அவர்களின் பணி என்ன (முழுவிவரம்)


சமாதான நீதவான்கள் என்றால் யார்? அவர்களின் பணி என்ன (முழுவிவரம்)
Council of Justice of peace

சமாதான நீதவான் பற்றி அறியாதவர்கள் இச் சமூகத்தில் மிகக் குறைவு. சாதாரண மக்களுக்கு ஏதாவதொரு ஆவணம் அல்லது சத்தியக்கூற்று போன்றவற்றினை
அத்தாட்சிப்படுத்த வேண்டுமானால் உடனே ஞாபகத்தில் வருபவர் சமாதான நீதவான் ஆகும்.

இச் சமாதான நீதவான் எனப்படுபவர் சமூகத்தில் நல்ல குணங்களையும் மதிப்பினையும் உடைய நபர்களாக காணப்படுவதுடன் மரியாதைக்குரிய நற்பிரஜைகளாகவும் காணப்படுவார்கள். இவ்வாறமைந்த சமாதான நீதவானின் வரலாற்றுப் பிண்ணனியை நோக்கினால்,

வரலாற்றுப் பிண்ணனி
இப் பதவி நிலையானது இற்றைக்கு 12ம் நூற்றாண்டிலிருந்து தோற்றம் பெற்றதொன்றாகும். இது 1195ம் ஆண்டில் முதலாம் றிச்சார்ட் மன்னனினால் அறிமுகப்படுத்தப்பட்டதொன்றாகும். இதன் பிரகாரம் நியமிக்கப்பட்ட நபர்கள் அக்காலத்தில் சட்டத்தை மதிக்காது சமூகத்தில் குழப்பத்தினை உண்டு பண்ணும், கட்டுப்படுத்த முடியாத நபர்கள் வாழும் பிரதேசங்களில், சமூகங்களில் சமாதானத்தினை ஏற்படுத்தி அதனைப் பேணுவதனை பிரதானமான கடமையாக கொண்டிருந்ததுடன் இவர்கள் சமூகத்தில் சட்டமானது ஒழுங்காக பேணப்படுகின்றது என்பதனை மன்னனிடம் உறுதிசெய்பவர்களாகவும் காணப்பட்டனர். இதனால் இவர்கள் “சமாதானத்தின் பாதுகாவலர்கள்” எனவும் அழைக்கப்பட்டனர்.

இப் பதவி நிலைக்கு 1327ம் ஆண்டின் பின்னர் சட்டத்தினை மதிக்கக் கூடிய நல்ல பழக்கவழக்கமுடைய நபர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் சமூகத்திலுள்ள சட்டத்தை மதிக்காத நபர்களின் நடவடிக்கைகளினை கட்டுப்படுத்துபவர்களாகக் காணப்பட்டனர். இதனைத் தொடர்ந்து 1361ம் ஆண்டிலிருந்து “சமாதானத்தின் பாதுகாவலர்கள்” என்பதற்கு பதிலாக “சமாதான நீதவான்” என்ற தலைப்பு 3றாம் எட்வர்ட் மன்னனின் காலப்பகுதியில் வழங்கப்பட்டது. இக் காலப்பகுதியில் இவர்களுக்கு சமூகத்தில் சமாதானத்தினை குழப்பி அசாதாரண நிலையை உண்டுபண்ணும் நபர்களினை கட்டுப்படுத்துவதற்கும், திருத்துவதற்கும் அதிகாரம் வழங்கப்பட்டது. ஆனால் இவர்களுக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து 16ம் நூற்றாண்டில் இவர்கள் “நீதவான்” எனவும் அழைக்கப்பட்டனர்.

தொழிற் புரட்சியினைத் தொடர்ந்;து சமாதான நீதவான் என்ற பதவிநிலை பிரித்தானிய அரசாங்க முறைமையில் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக காணப்பட்டது. இதன் கீழ் பல அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நபர்களினை பிரித்தானிய அரசாங்கம் சமாதான நீதவானாக நியமித்தனா.; இருந்த போதிலும் இப் பதவிநிலை ஊதியமற்றதொன்றாக காணப்பட்டது.

பிரித்தானிய அரசாங்கத்தினர் தம் நாட்டில் மட்டுமல்லாது தமது காலணித்துவ நாடுகளிலும் தமது அரசாங்க வேலைகள் சரிவர நடைபெற வேண்டும் என்ற நோக்குடன் பல நபர்களை காலணித்துவ நாடுகளில் இருந்து தெரிவு செய்து சமாதான நீதவான்களாக நியமித்தனர்.

அதேவேளை 1919ம் ஆண்டு வரை சமாதான நீதவான்களாக பதவி நிலை வகிக்க பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தவொன்றாகும். ஆனால் தற்போது பிரித்தானியாவில் காணப்படும் சமாதான நீதவான்களில் 50மூ ஆனவர்கள் பெண்களாகும்.

தற்காலத்தில் கனடா, அவுஸ்ரேலியா, அமெரிக்கா மற்றும் பல நாடுகளில் நாட்டுக்கு நாடு வேறுபட்ட வகையில் அதிகாரங்கள் வழங்கப்பட்டு சமாதான நீதவான்கள் நியமிக்கப்படுகின்றனர்.

இலங்கையில் சமாதான நீதவானின் நிலை.

இலங்கையைப் பொறுத்த மட்டில் சமாதான நீதவான் என்ற பதவி நிலையானது ஆளுனர் பிரடரிக் நோர்த்தினால் 1801ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் கீழ் சமாதான நீதவான்களாக நியமிக்கப்பட்ட நபர்கள் பிரித்தானிய அரசாங்க நிர்வாக முறையானது சமூகத்தில் சமாதானமாக இடம் பெற உதவுபவர்களாக காணப்பட்டனர். இவர்களது அதிகாரங்கள் 1871ம் ஆண்டில் மீள வடிவமைக்கப்பட்டது.
அண்மைக் காலங்களில் 100,000க்கும் மேற்பட்ட சமாதான நீதவான்கள் இலங்கை பூராக காணப்படுகின்றனர். மேலும் இவர்கள் அதிகாரபூர்வமற்ற நீதவான்களாகவும் நியமிக்கப்பட முடியும்.

சமாதான நீதவான்களின் நியமனம்.
சமாதான நீதவானாக நியமனம் பெறுபவர் இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும் என்பதுடன் சமூக, பொது விடயங்களில் ஆர்வமிக்கவராகவும் சமூகத்தில் ஒழுக்கமுடைய நற்பிரஜையாகவும் காணப்படல் வேண்டும்.

இவர்களின் நியமனம் பிரதானமாக இருவழிகளில் இடம் பெறும்…
1. கௌரவ நியமனம் : சமூகத்தில் சிறந்த, சமூக சேவையை ஆற்றிய, ஆற்றக்கூடிய நற்பிரஜைகளுக்கு வழங்கப்படும் நியமனம்.

2. உத்தியோக பூர்வ நியமனம் : குறித்த பதவியின் பொருட்டு அப்பதவிக் காலம் முடியும் வரை நீதித்துறை சட்டத்தின் பிரிவு 45 ன் உப பிரிவு 01 ன் கீழ் நியமிக்கப்படும் நியமனம்.
இவ்வாறு நியமிக்கப்பட்ட நபர்கள் நீதி அமைச்சின் செயலாளரினால் வழங்கப்பட்ட நியமனக் கடிதத்துடன் அதன் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதியுடனும் தங்களது நியமனம் தொடர்பாக வெளியான வர்த்தமானி அறிவித்தலின் பிரதியுடனும் நியமனக் கடிதத்தில் குறித்துரைக்கப்பட்ட நீதிமன்ற பதிவாளரை சந்தித்து சத்தியப் பிரமாணத்திற்கான திகதியை பெற்றுக் கொள்ள வேண்டும். இதன் பின்னர் நீதவான் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டு சமாதான நீதவானாக செயற்பட முடியும்.

சமாதான நீதவான் கவனிக்க வேண்டிய விடயங்கள்.
• தாங்கள் கடமைபுரியும் நியாயாதிக்கத்தினை அறிந்து கொண்டு அதனுள் செயற்படல்.
• அரசாங்க இலச்சினையை தமது அலுவலக இலச்சினையில், கடித தலைப்புக்களில் பயன் படுத்தாமை.

• மக்களின் ஆவணங்களை அத்தாட்சிப்படுத்தும்போது விழிப்புணர்வுடன் இருத்தல் மற்றும் அத்தாட்சிப்படுத்துகையானது சம்பந்தப்பட்ட ஆளின் முன்னிலையில் அமைந்து காணப்பட வேண்டும்.

• கடமை நிமிர்த்தம் கட்டணங்களை அறவிடலாகாது என்பதுடன் சன்மானங்களையும் அன்பளிப்புக்களையும் கடமை நிமிர்த்தம் பெற முடியாது.

• தமது அணைத்துக் கடமைகளின் போதும் அலுவலக இலச்சினையை உபயோகிக்க வேண்டும் என்பதுடன் பதிவு இலக்கத்தினையும் குறிப்பிடல் வேண்டும்.

• தனது தனிநபர் நடத்தையில் அக்கறையுடன் இருக்க வேண்டும்.

• சமூகத்தில் முன்மாதிரியாக இருப்பதுடன் தனது பதவியின் கௌரவத்தினை பேணும் வகையில் காணப்படல்.

• தமது சேவையை நாடி வருபவர்களிடம் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ளல்.
• சமுதாய சட்ட விரோத செயல்களில் ஈடுபடல் மற்றும் துணைபோதல் போன்ற செயற்பாடுகளை தவிர்த்தலும் இவ்வாறான சட்ட விரோத செயல்களைத் தடுக்க ஏனைய ஊழியர்களுக்கு ஆதரவு வழங்கல்.

• சட்டத்தை அமுல் படுத்தும் பொலீஸ், நீதிமன்றம் போன்றவற்றின் தொழிற்பாட்டினை இலகுபடுத்த துணையாக இருத்தல்.

• தங்களால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட ஆவணம் தொடர்பில் பொறுப்பு கூறுபவராக இருத்தல்.

• பதவி இலச்சினையை தனிப்பட்ட கடிதங்களுக்கு பாவிக்கக் கூடாது. உடமை சம்பந்தப்பட்ட ஆவணங்களில் மாத்திரமே உபயோகிக்க வேண்டும்.

சமாதான நீதவான்கள் தமது பதவியினை துஸ்பிரயோகம் பண்ணுகையில் அல்லது அவரது நடவடிக்கை தொடர்பில் முறைப்பாட்டினை நீதி அமைச்சின் செயலாளருக்கு தெரிவிக்க முடியும்.

செயலாளர்,
நீதி அமைச்சு,
மீயுயர் நீதிமன்ற கட்டிடத் தொகுதி,
அதிகரணமாவத்தை,
கொழும்பு – 12.
தொலைபேசி இலக்கம் : 011 244 9959
மின் அஞ்சல் : secretary@justiceministry.gov.lk

ஆக்கம்,
பிரஷாந்தன் வேலுப்பிள்ளை
ஆலையடிவேம்பு.


சமாதான நீதவான்கள் என்றால் யார்? அவர்களின் பணி என்ன (முழுவிவரம்) Reviewed by Author on August 31, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.