அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் சட்டத்தின் ஆட்சி செத்துவிட்டது! சி.வி.விக்னேஸ்வரன் ஆதங்கம் -


அண்மைய தண்டனைக் குற்றவாளியின் மன்னிப்பு இலங்கையில் சட்டத்தின் ஆட்சி செத்துவிட்டதென்பதை எடுத்துக் காட்டுகின்றது என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையின் ஐ.நா சபை அங்கத்துவம் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டிய தருணம் உதயமாகியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், இந்த விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார். அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“தண்டனைக் குற்றவாளி சார்ஜன்ட் சுனில் ரத்நாயகவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களால் அளிக்கப்பட்டுள்ள மன்னிப்பும் விடுவிப்பும் கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரசுடன் எவ்விதத்திலும் தொடர்புடையதன்று.

அது ஒரு அரசியல் சார்ந்த நடவடிக்கை. இந்நடவடிக்கையானது சர்வதேச நாடுகளுடன் இலங்கை செய்து கொண்ட பல உடன்பாடுகளின் படி அதற்கிருக்கும் கடப்பாடுகளை உதாசீனம் செய்து வருகின்றது என்பதை மட்டுமல்ல நீதித்துறை உள்ளடங்கிய சகல சமூகம்சார் அமைப்புக்களையும் அரசியல் ரீதியாக்கும் அதன் மனோநிலையையும் எடுத்துக் காட்டுகின்றது.
ஜனாதிபதித் தேர்தலின் போது கோட்டாபய ராஜபக்ச, போரின் போது சிறையில் அடைபட்டிருந்த சகல சிறைக்கைதிகளையும் விடுதலை செய்து விடுவிப்பதாக பொறுப்பேற்றிருந்தார் என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் சுட்டிக்காட்டியுள்ளது.

இல்லாத பொல்லாத காரணங்களைக் காட்டி தம்மக்களைப் பாதுகாத்து அதே நேரத்தில் பெரும்பான்மை சமூகத்தினரின் பெரும்பான்மை வாக்குகளை எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பெற்றுக் கொள்ளவும் வழியமைத்துவருகின்றது இன்றைய அரசாங்கம்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இப்பொழுதும் தக்க காரணங்கள் ஏதுமின்றி கைதிகளை தொடர்ந்தும் சிறைகளில் அடைத்து வைத்து வருகின்றது இலங்கை அரசு.

இந்நடவடிக்கைகள், குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் சார்ந்த உடன்படிக்கைகள் போன்றவற்றின் ஏற்பாடுகளுக்கு முற்றும் முரணானவை.
எனவே ரத்நாயக்கவின் விடுவிப்பானது மனித நேயத்திற்கு முரணானது மட்டுமல்ல மனித குலத்தை வெறுப்பேற்றும் செயலுமாகும்.
ராஜபக்ச அரசாங்கத்தின் முன்னுரிமைகளாவன அதன் சர்வதேச கடப்பாடுகளுடன் முரண்படுபவையாகவே தென்படுகின்றன.
இதிலிருந்து எம் நாட்டு மக்களிடையே சமரசம் உண்டாக்குவதோ இனங்களிடையே இருக்கும் மன அலைவை நீக்கி புரிந்துணர்வை ஏற்படுத்துவதோ இன்றைய அரசாங்கத்தின் ஒரு குறிக்கோளாக தென்படவில்லை.

இதுவரையில் தனது சர்வதேச கடப்பாடுகளையும் ஐக்கிய நாடுகளின் பரிந்துரைகளையும் உதாசீனப்படுத்தியே இலங்கை அரசாங்கம் வந்துள்ளது.
இலங்கையின் அண்மைய நடவடிக்கையும் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமையை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இணக்கப் பிரேரணையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டமையும் ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகளுக்கு ஒரு பாரிய கடப்பாட்டை உண்டுபண்ணியுள்ளன.
அதாவது இலங்கையின் ஐக்கிய நாட்டு தொடர் உறுப்புரிமை மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்பதே அந்தக் கடப்பாடு.
ரத்நாயக்காவின் மன்னிப்பும் விடுவிப்பும் எமது அதிகார மையத்தின் தரத்தையும் தகுதியையும் சர்வதேச சமூகததிற்கு எடுத்துக் காட்டுவதாய் அமைந்துள்ளன.

முறையாக விசாரித்து, விளங்கி, குற்றவாளியாகக் காணப்பட்ட அதாவது தமிழருக்கெதிரான இலங்கையின் யுத்த குற்றவாளிக்கெதிரான இலங்கை நீதிமன்றங்களின் தீர்ப்பைக் கூட நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்பதே அரசின் நோக்கம்.
இதை சர்வதேச சமூகம் கவனத்திற்கு எடுத்துள்ளது. அதன்படி ராஜபக்ச அரசாங்கத்துடன் உரியவாறு அது நடந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.
வேண்டுமென்றே எடுக்கப்பட்ட ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை காலம் காலமாகத் தமிழர்களுக்கு எதிராக இந்த நாட்டில் எடுக்கப்பட்டுவந்த நடவடிக்கைகளை ஒட்டியே எடுக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
1956ல் காலி முகத்திடலில் நடைபெற்ற சம்பவங்கள், 1958ம் ஆண்டின் கலவரங்கள், அதன் பின்னர் நடாத்தப்பட்ட 1983ம் ஆண்டின் கலவரங்கள் உள்ளடங்கிய மனித இனப் படுகொலைகள் போன்றவற்றின் சூத்திரதாரிகளை நீதிமன்றின் முன் நிறுத்தாமலும் அல்லது நிறுத்தி குற்றவாளிகள் ஆக்கப்பட்ட போது அவர்கள் தண்டனை பெறாமல் தடுக்கப்பட்டமையும் ஜனாதிபதியின் இந்த நடவடிக்கைக்கு ஒத்ததாகவே இருந்து வந்துள்ளன.

தமிழ் மக்களின் சகிப்புத்தன்மை எல்லை கடந்துவிட்டது. அவர்களின் சிறு சிறு வெற்றிகள் கூட இன்று மாற்றியமைக்கப்படுகின்றன.
எனவே போர்க்குற்றவாளிகள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிந்தவர்கள், தமிழர்க்கு எதிராக இனப்படுகொலை செய்தவர்கள் அனைவரும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன் அல்லது ஐக்கிய நாடுகளால் இலங்கைக்கு எதிராக வகுக்கப்படும் விசேட நீதிமன்றமொன்றின் முன்னிலையில் உடனே கொண்டுவரப்பட வேண்டிய காலம் இன்று கனிந்துள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சட்டத்தின் ஆட்சி செத்துவிட்டது! சி.வி.விக்னேஸ்வரன் ஆதங்கம் - Reviewed by Author on March 29, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.