அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் - நானாட்டான் பகுதியில் கிடைத்த பழங்காலத்து நாணயங்கள் பாண்டியர் காலத்து நாணயங்களா? அல்லது அநுராதபுரம் இராசதானி காலத்து நாணயங்களா?

 மன்னார் - நானாட்டான் பகுதியில் கிடைத்த பழங்காலத்து நாணயங்கள் பாண்டியர் காலத்து நாணயங்களா? அல்லது அநுராதபுரம் இராசதானி காலத்து நாணயங்களா?

உமாச்சந்திரா பிரகாஷ்
அண்மையில் மன்னார் - நானாட்டான் பகுதியில் பழங்காலத்து நாணயங்கள் 1906 கிடைத்தமை தொடர்பில் பலரும் அறிந்திருப்பீர்கள். இவ்விடயம் தொடர்பில் பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் அவர்களுடன் கலந்துரையாடிய விடயங்களை இங்கு கட்டுரையாகக் குறிப்பிடுகிறேன்.
மன்னார் - நானாட்டான் பகுதியில் பழங்காலத்து நாணயங்கள் கிடைத்த செய்தி அறிந்த பேராசிரியர் உடனடியாக அங்கு சென்று, குறித்த நாணயங்களை ஆய்வுக்கு உட்படுத்தியிருந்தார். மன்னாரில் கிடைத்த 1906 நாணயங்களும் முழுமையாக பொலிஸ் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அந்த பொலிஸ் அதிகாரி பாடசாலையில் வைப்பதற்காகக் கொடுத்த சில நாணயங்களையும், கள ஆய்வில் கிடைக்கப்பெற்ற நாணயங்கள் சிலவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்திய பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் அவர்கள் சில கருத்துக்களை முன்வைத்தார். பொதுவாக 1906 நாணயங்கள் கிடைக்கப்பெற்றதாகக் குறிப்பிட்டாலும், அதை விட கூடுதலான எண்ணிக்கையிலான நாணயங்கள் அங்கு கிடைக்கப்பெற்றமை தொடர்பில் அங்கிருந்தவர்களுடன் உரையாடியதில் இருந்து பேராசிரியர் அறிந்து கொண்டமையை உறுதிப்படுத்தினார்.
மன்னார் - நானாட்டான் பகுதியில் கிடைக்கப்பெற்ற பழங்காலத்து நாணயங்கள் தொடர்பில் செய்தி வெளியிட்ட ஊடகங்கள் பலவும், குறித்த நாணயங்களில் மீன் சின்னம் இருப்பதால் அந்நாணயங்கள் பாண்டியர் காலத்து நாணயங்கள் என செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் தென்னிலங்கையில் இருந்து வெளிவரும் ஊடகங்கள் பல, அந்நாணயங்கள் அனுராதபுர இராசதானி காலத்து நாணயங்கள் என செய்தி வெளியிட்டிருந்தன.
ஆனால் மன்னார் - நானாட்டான் பகுதியில் கிடைத்த பழங்காலத்து நாணயங்களுக்கு ஒப்பான நாணயங்கள் முதன்முறையாக இங்கு கண்டுபிடிக்கப்படவில்லை. இவ்வாறான நாணயங்கள் பல 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி தொடக்கம் வட இலங்கையில் தொடர்ச்சியாகக் கண்டுபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அந்த நாணயங்களும் பற்றி பிரின்செப் (Prensep), எம். மிச்செனர் (M. Mitctciner), எப். ஹுல்சே (F. Hultzsch) மற்றும் எச். டபிள்யூ. கொட்றிங்கன் (H. W. Codrington) முதலியோர் ஆய்வு செய்துள்ளார்கள். கே. என். வி. சேயோன் (K. N. V. Seyon) என்னும் நிலஅளவையாளர் பல நூற்றுக்கணக்கான நாணயங்களை மன்னார், மாதோட்டம், கந்தரோடை போன்ற இடங்களில் கண்டுபிடித்துள்ளார். அத்துடன் பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்போது, இவ்வகையான நாணயங்கள் பல 1991 ஆம் ஆண்டு தொடக்கம் அவரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இடம்பெற்ற மூன்று தசாப்த கால உள்நாட்டு யுத்தம் 2009 இல் நிறைவுக்கு வந்தது. ஆயினும் யுத்த காலப் பகுதியான 2001 ஆம் ஆண்டு ‘இலங்கைத் தமிழரின் பண்டைய கால நாணயங்கள்’ என்னும் நூலையும், 2002 ஆம் ஆண்டு ‘Ancient Coins of Sri Lankan Tamil Rulers’ என்னும் நூலையும் பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் எழுதி, வெளியிட்டிருந்தார். ஈழத் தமிழர் வரலாற்றில் மிக முக்கியத்துவம் பெற்ற நூல்களாக அவை வரலாற்றில் பதிவாகின்றன. யாழ்ப்பாண அரசுக்கு முன்னோடியாக தமிழ் நாணயங்கள் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டபோது, அவை தமிழ் நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட நாணயங்கள் என்ற கருத்தே பொதுவாகக் காணப்பட்டது. ஆனால் அக்கருத்து முற்றிலும் தவறானது என்பதை பேராசிரியர் எழுதிய குறித்த இரண்டு நூல்கள் ஊடாகவும் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.
பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் அவர்கள் கலாநிதிப் பட்டம் பெற்றுக் கொள்வதற்காக 1997 ஆம் ஆண்டு இந்தியாவின் தஞ்சாவூருக்கு சென்றபோது, வட இலங்கையில் கிடைத்த நாணயங்களின் புகைப்படங்களையும் பேராசிரியர் தமிழகத்திற்கு தன்னுடன் எடுத்துச் சென்றிருந்தார். அங்குள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் தனிநபர் நாணய சேகரிப்பாளர்களிடம் இருந்த நாணயங்களை அவர் ஆய்வுக்கு உட்படுத்தியிருந்ததுடன், இங்கிருந்து தமிழகத்திற்கு எடுத்துச் சென்ற நாணயங்களின் புகைப்படங்கள் தொடர்பில் நாணயங்கள் தொடர்பான ஆய்வாளர்களுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு பேராசிரியருக்கு கிடைத்திருந்தது. பெரும்பாலான தமிழ் நாணயங்கள் தமிழக அரச வம்சங்களால் வெளியிடப்பட்டமைக்கான எவ்விதமான ஆதாரங்களும், சான்றுகளும் அங்கு கிடைக்கவில்லை என்பதுடன், இலங்கையில் பெருந்தொகையாகக் கிடைக்கப் பெறுகின்ற நாணயங்களில் ஒன்று கூட தமிழகத்தில் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் அவர்கள் குறிப்பிட்டார்.
மேலும் தமிழகத்தில் கிடைத்த நாணயங்களுக்கும் இலங்கையில் கிடைத்த தமிழ் நாணயங்களுக்கும் இடையில் கலைமரபு, வடிவமைப்பு மற்றும் சின்னம் ஆகியவற்றில் பெரும் வேறுபாடு காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இதேவேளை இலங்கையில் கிடைக்கப்பெற்ற தமிழ் நாணயங்கள் ஏறத்தாழ கி.மு. 3 ஆம் நூற்றாண்டு தொடக்கம் சிங்கள மன்னர்கள் வெளியிட்ட நாணய மரபுடன் பெருமளவு ஒற்றுமை கொண்டுள்ளன. சிங்கள மன்னர்கள் தாங்கள் வெளியிட்ட நாணயங்களில் சிங்க உருவத்தை அரச இலட்சினையாகப் பிரதானப்படுத்தியிருந்தார்கள். ஆனால் தமிழ் மன்னர்கள் சிங்கள மன்னர்களுக்கு முன்னரே நந்தி சின்னத்தை அரச இலட்சினையாக பிரதானப்படுத்தி நாணயங்களை வெளியிட்டிருந்தார்கள். ஆயினும் அந்நாணயங்கள் வெளியிடப்பட்ட பிற்பகுதியில் சிங்கள அரசர்களும் இலங்கைத் தமிழ் அரசர்களும் வெளியிட்ட நாணயங்களில் ஒரே வகையான சின்னங்கள் இடம்பெற்றதை அவதானிக்கலாம். அதாவது அந்நாணயங்கள் இலங்கை நாட்டை அல்லது அநுராதபுர அரசைக் குறிப்பதாக அமையலாம் என்று பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் அவர்கள் ஏற்கனவே கூறிய கருத்தை வரலாற்று ஆய்வாளர்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர்.
மன்னார் - நானாட்டான் பகுதியில் கிடைத்த பழங்காலத்து நாணயங்கள் போன்ற நாணயங்களின் தகவல்களை ஏற்கனவே பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் அவர்கள் தனது ‘இலங்கைத் தமிழரின் பண்டைய கால நாணயங்கள்’ மற்றும் ‘Ancient Coins of Sri Lankan Tamil Rulers’ என்னும் நூல்களில் ‘வட இலங்கை அரசு கால நாணயங்கள்’ மற்றும் ‘Coins of Northern Sri Lanka’ ஆகிய தலைப்புகளில் தனித் தனி அத்தியாயமாக தமிழிலும் ஆங்கிலத்திலும் விரிவாக எழுதியுள்ளார். அதில் கிட்டத்தட்ட 7 ஆம் நூற்றாண்டு தொடக்கம் யாழ்ப்பாண அரசு தோன்றுவதற்கு இடையேயான காலப் பகுதியில் வெளியிடப்பட்ட நாணயங்களை ஆய்வுக்கு உட்படுத்தி, அவற்றைக் கால அடிப்படையில் வரையறை செய்து பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் அவர்கள் குறித்த நூல்களில் குறிப்பிட்டுள்ளார்.
பேராசிரியர் அவர்கள் குறித்த நாணயங்கள் தொடர்பான காலக் கணிப்பும் வரலாற்று ஆய்வாளர்கள் பிரிட்செப், மிச்னர் (Mitchner) மற்றும் எப். ஹுல்சே (F. Hultzsch) ஆகியோரின் காலக் கணிப்பும் ஒன்றாக உள்ளன. ஆயினும் இலங்கையில் கண்டெடுத்த நாணயங்களில் உள்ள மீன் சின்னத்தை அவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தி, இலங்கைத் தமிழ் மன்னர்களின் நாணயங்களில் சில தனித்துவமான பண்புகள் இருப்பதை சுட்டிக்காட்டிய அதேவேளை, அவை தமிழ் நாட்டு அரசர்களால் வட இலங்கைக்கு என தனித்துவமாக வெளியிட்ட நாணயங்கள் என்ற கருத்தையே முன்வைத்திருந்தார்கள். ஆனால் பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் அவர்கள் எழுதிய நூல்களில் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு தொடக்கம் அநுராதபுரத்திற்கு வடக்கே உள்ள திருகோணமலையில் ஒரு தனி அரசு இருந்ததமைக்கான ஆதாரங்கள் பாளி இலக்கியங்களில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அநுராதபுரத்திற்கு தெற்கிலும் தென்மேற்கிலும் உள்ள பிரதேசங்களில் அரசனின் சார்பாக ஆட்சி புரிவதற்கான பிரதிநிதிகளை நியமித்த வேளைகளில், அநுராதபுரத்தின் வடக்கில் பிரதிநிதிகளை நியமித்தமைக்கான எந்தவிதமான சான்றுகளும் கிடைக்கவில்லை எனவும், அதேவேளை அநுராதபுரத்திற்கு தெற்கே மிக நீண்ட தொலைவில் அமைந்திருந்த தென்னிலங்கையில் அரசியல், பொருளாதாரம், பண்பாட்டு மற்றும் வரலாறு ஆகியவற்றைக் குறிப்பிடும் பாளி இலக்கியங்கள் வட இலங்கை தொடர்பான அரசியல், பண்பாடு மற்றும் பொருளாதாரம் தொடர்பான உறவுகளை அதிகம் குறிப்பிடவில்லை எனவும் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் குறிப்பிடுகிறார்.
மேலும் குறித்த பாளி இலக்கியங்கள் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு தொடக்கம் அநுராதபுரத்திற்கு வடக்கில் அமைந்திருந்த பிரதேசம் தொடர்பான அரசியல் உறவுகள் தொடர்பாகக் குறிப்பிடுகின்றன. அந்த உறவுகள் கூட வடக்கில் இருந்து அநுராதபுர அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சிகள் மற்றும் படையெடுப்புக்கள் பற்றியதாகவும், தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு படையெடுத்த தமிழ் அரசர்களுக்கு இங்கு வாழ்ந்த தமிழர்கள் ஆதரவு வழங்கி, அநுராதபுர அரசிற்கு எதிராக சேர்ந்து செயற்பட்டு, அநுராதபுர அரசை தோற்கடித்ததாகவும் பாளி மற்றும் சிங்கள இலக்கியங்களில் பல ஆதாரங்கள் காணப்படுவதாகவும் பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் குறிப்பிட்டார்.
இதேவேளை இலங்கைத் தமிழர் வரலாறு தொடர்பாகக் கூறுகின்ற தமிழ் இலக்கியங்கள் 8 ஆம் நூற்றாண்டில் சோழர்களின் வருகையைத் தொடர்ந்து கந்தரோடையில் இருந்த தமிழ் அரசு சிங்கை நகருக்கு மாறியதாகக் கூறுகின்றன. மேற்குறிப்பிட்ட வரலாற்றுப் பின்புலங்களையும் அநுராதபுர அரசிற்கும் வட இலங்கைக்கும் இடையில் இருந்த தொடர்புகளையும் பார்க்கும்போது, அநுராதபுரம் மற்றும் பொலநறுவை ஆகிய அரசுகளின் ஆட்சிக்குள் வட இலங்கை உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என்பது புலனாகிறது. இவற்றை உறுதிப்படுத்துவதற்கு முன்பக்கத்தில் நந்தி சின்னமும் பிற்பக்கத்தில் மீன் சின்னமும் பொறிக்கப்பட்ட நாணயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன என்பது பேராசிரியரின் வாதமாகும்.
ஏனெனில் யாழ்ப்பாண அரசு காலத்தில் வெளியிடப்பட்ட சேது நாணயங்களை விட வகையிலும் தொகையிலும் நந்தி சின்னமும் மீன் சின்னமும் பொறிக்கப்பட்ட நாணயங்கள் அதிகமாக கிடைத்துள்ளன. இந்தியாவின் தமிழகத்தில் ஆட்சி புரிந்த தமிழ் மன்னர்கள் மீன் சின்னத்தைப் பயன்படுத்தியிருந்தாலும், தமிழகம் மற்றும் இலங்கையில் கிடைக்கப்பெற்ற இரண்டு மீன் சின்னங்களுக்கும் இடையில் எந்தவிதமான ஒற்றுமைகளும் காணப்படவில்லை. சங்க காலத்தில் பாண்டியர்கள் மீன் சின்னத்தை கோட்டு உருவில் பயன்படுத்தியபோது, இலங்கையில் குறித்த மீன் சின்னம் முழுமையான உருவமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் பாண்டியர் காலத்தில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டாலும், அதன் முன்பக்கத்தில் நந்தி சின்னம் பொறிக்கப்பட்டமைக்கான காரணம், நந்தி சின்னம் மாத்திரம் பொறிக்கப்பட்ட அரச நாணயங்கள் இருந்தமைக்கான எவ்வித ஆதாரங்களும் இதுவரையில் இல்லை எனவும் பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் குறிப்பிட்டார்.
அண்மையில் மன்னார் - நானாட்டான் பகுதியிலும் வேறு பல இடங்களிலும் கிடைத்த நாணயங்களை பேராசிரியர் ஆய்வுக்கு உட்படுத்தியபோது, குறித்த நாணயங்களில் பொறிக்கப்பட்ட நந்தி சின்னமானது, மூன்று கோடுகளாலான பீடத்தின் மேல் அமைந்துள்ளமையையும், குறித்த மூன்று கோடுகளாலான பீடம் இலங்கையில் கிடைத்த தமிழ் - சிங்கள அரச நாணயங்களைத் தவிர இந்தியா - தமிழகத்தில் வெளியிடப்பட்ட ஆதி கால அல்லது இடைக்கால நாணயங்களிலோ காணப்படவில்லை என்பதையும் பேராசிரியர் குறிப்பிட்டார். ஆகவே அதன் மூலம் குறித்த வகையான நாணயங்கள் இலங்கைக்கு உரிய தனித்துவமான பண்புகளுடன் காணப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் தெரிவித்தார்.
மேற்குறிப்பிட்டவாறு மூன்று பீடத்தின் மேல் நந்தி சின்னம் பொறிக்கப்படும் மரபானது, இலங்கைத் தமிழர்களிடம் கி.பி. 3 நூற்றாண்டு தொடக்கம் தோற்றம் பெற்று வளர்ச்சிடைந்துள்ளது. ஆகவேதான் மீன் சின்னமும் நந்தி சின்னமும் பொறிக்கப்பட்ட நாணயங்களை வட இலங்கை அரசுகளுடன் மாத்திரம் தொடர்புபடுத்த முடியும் என பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் அவர்கள் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை பாளி மற்றும் சிங்கள இலக்கியங்களில் யாழ்ப்பாண அரசுக்கு முன்னோடியாக தமிழர்களுக்கு சார்பாக கலிங்கமாகன், சாவகன் அரசுகள் வன்னிப் பெருநிலப்பரப்பிலும் குடநாட்டிலும் இருந்தமைக்குப் பல ஆதாரங்கள் உள்ளன. அத்துடன் அவர்களின் படைவீரர்கள் தங்கியிருந்த இடங்களாக மன்னார், மாதோட்டம், இலுப்பைக்கடவை, திருகோணமலை, பதவியா, கந்தளாய், கோணாவில், ஊற்காவற்துறை, வலிகாமம் முதலிய இடங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஆகவே குறித்த விடயங்களை கருத்தில் கொள்ளும்போது, அண்மையில் மன்னார் - நானாட்டான் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட நாணயங்கள் யாழ்ப்பாண அரசுக்கு முன்னோடியாக வெளியிடப்பட்ட நாணயங்கள் என்பதை உறுதியாகக் குறிப்பிட முடியும். பொதுவாக பாண்டிய மன்னர்கள் இந்தியா - தமிழகத்தில் இருந்து வேறு நாட்டின் மேல் படையெடுத்து, குறித்த நாட்டைக் கைப்பற்றிய சந்தர்ப்பங்களில் தங்கள் மீன் சின்னத்தை நாணயங்களில் பொறிக்கும் மரபைப் பின்பற்றினார்கள். முதன்முதலாக யாழ்ப்பாணத்தில் நல்லூரைத் தலைநகராகக் கொண்டு அரசு ஒன்றைத் தோற்றுவித்தவர்கள் பாண்டியர்களான ஆரியச்சக்கரவர்த்திகள் ஆவார்கள். ஆனாலும் அவர்கள் நல்லூரில் அமைக்கப்பட்ட அரசுக்கான நாணயங்களில் மீன் சின்னத்தை பொறிக்கவில்லை. மாறாக ஆரியச்சக்கரவர்த்திகள் நந்தி சின்னத்தையே பொறித்திருந்தர்கள். அதற்கான பிரதான காரணம் யாழ்ப்பாண அரசுக்கு முந்தைய காலத்தில் நந்தியை அரச இலட்சினையாகக் கொண்டு ஆட்சி புரிந்த தமிழ் அரசு இருந்தமை காரணம் என பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் அவர்கள் குறிப்பிட்டார்.

உமாச்சந்திரா பிரகாஷ்







மன்னார் - நானாட்டான் பகுதியில் கிடைத்த பழங்காலத்து நாணயங்கள் பாண்டியர் காலத்து நாணயங்களா? அல்லது அநுராதபுரம் இராசதானி காலத்து நாணயங்களா? Reviewed by NEWMANNAR on October 14, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.