அண்மைய செய்திகள்

recent
-

கால்நடைகளுக்கு எமனாக அமையும் பரம்பிஸ்டோமியோசிஸ் -Dr.S.கிருபானந்தகுமாரன் [ MVSc ] கால்நடை வைத்தியர்

கால்நடைகளுக்கு எமனாக அமையும் பரம்பிஸ்டோமியோசிஸ் Dr.S.கிருபானந்தகுமாரன் [ MVSc ] 
கால்நடை 

 வைத்தியர் செட்டிகுளம் கால்நடை வளர்ப்பாளர்களின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்திருக்கக்கூடிய இந்த இழப்புகள் மனவருத்ததுக்குரியவை. ஒரு கால்நடை வைத்தியராக இந்த நோய் நிலைமைகளுக்கு இன்றைய நாட்களில் சிகிச்சை அளிப்பவராக எனது பார்வையை இந்த கட்டுரையில் முன்வைக்கிறேன். கடந்த இரண்டு மாதங்களாக எனது அலுவலகத்தில் சிகிச்சைக்கு வரும் பெரும்பாலான கால்நடைகளில் பரம்பிஸ்டோமம் எனும் புழுத்தொற்று அதிகமாக இருப்பதை அவதானிக்க முடிந்தது. அண்மைய நாட்களில் இலங்கையில் மேற்படி புழுத் தொற்று காரணமாக ஆடு,மாடு,எருமை மாடு போன்ற ஆயிரக்கணக்கான கால்நடைகள் இறந்திருகின்றன. இதனை செய்திகள் வாயிலாகவும் பத்திரிகை மூலமும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். 

 குறிப்பாக கடந்த இரண்டு மாத காலத்துக்குள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல ஆயிரக்கணக்கான கால்நடைகள் மரணித்துள்ளன. இதன் காரணமாக கால்நடை வளர்ப்பாளர்கள் தமது பெறுமதி மிக்க கால்நடைகளை இழந்ததோடு மட்டுமின்றி நோயுற்ற கால்நடைகளை காப்பாற்ற பெருமளவு பணத்தை செலவழிக்க வேண்டியும் ஏற்பட்டுள்ளது. பரம்பிஸ்டோமியாசிஸ் எனும் தட்டைப் புழுத் [Tramatodes] தாக்கமே இந்த கால்நடைகளின் இறப்புக்கு பிரதான காரணமாக அமைகிறது. சில இடங்களில் தட்டைப் புழுக்கள் மட்டுமின்றி நாடாப்புழுக்கள் [cestodes] ,வட்டப் புழுக்கள் [ Nematodes] என கலந்த புழுத் தாக்கமும் [ Mixed infection ] அவதானிக்கப்பட்டுள்ளது. 

 அண்மையில் பெய்த கடும் மழையின் காரணமாக ஏற்பட்ட நன்னீர் நத்தைகளின் [plane orbit snails] பெருக்கம் பரம்பிஸ்ட்டோம் போன்ற தட்டைப் புழு ஒட்டுண்ணியின் அதிகரிப்புக்கு வாய்ப்பாக அமைந்து விட்டது. பொதுவாக மழையின் பின்னர் ஏற்படும் நத்தைகளின் பெருக்கம் பல்வேறுபட்ட குடல், இரப்பை, ஈரல் ஒட்டுண்ணிகளின் வாழ்க்கை வட்ட பருவங்கள் பூர்த்தியாவதற்கு காரணமாக அமையும். 

 அதுபோல் இந்த முறை ஏற்பட்ட மிதமிஞ்சிய மழை ஏனைய புழுக்களுடன் அதிகமாக பரம்பிஸ்டோம் எனும் ஆசையூன் இரப்பை [ Rumen fluke] புழுவின் மித மிஞ்சிய பெருக்கத்துக்கு எதுவாக அமைந்து விட்டது. கடந்த வருட இறுதியில் பெய்த கடும் மழையை தொடந்து பெரும்போக நெற்செய்கை நாடு முழுவதும் அமோகமாக இடம்பெற்றதன் காரணமாக வயல்களில் மேய்ச்சலில் ஈடுபடும் கால்நடைகளை வேறு இடங்களில் கால்நடைகளை மேய்க்க பிரத்தியேக மேய்ச்சல் பகுதிகள் இல்லாததால் அவற்றை குளங்களை அண்மித்த பகுதிகளில் மேய விட வேண்டிய நிலை ஏற்பட்டது.

 இந்த மாதிரியான குளங்களை அண்மித்த புல் நிலங்கள் தான் நத்தைகளின் வாழிடமாக அமைகின்றன.. Metacercaria எனும் தட்டைப் புழுவின் இளம் பருவம் மேற்படி புற்களில் அதிகம் காணப்படுவதால் அவற்றை உட்கொள்ளும் கால்நடைகள் பரம்பிஸ்டோமம் இளம் பருவத்தையும் உண்கின்றன. கால்நடைகளின் சிறுகுடல் பகுதியை அடையும் மேற்படி இளம் புழுக்கள் அதன் சுவரை கடித்து காயப் படுத்துவதோடு அதிகளவு இரத்தத்தையும் உறிஞ்சுகின்றன. பாதிப்படையும் சிறுகுடலில் ஏற்படும் நோய் நிலைமையால் [infection] கடும் வயிற்ரோட்டம் ஏற்படுகிறது.

  சிகிசையளிக்காத கால்நடைகள் சில நாட்களில் மரணமடைகின்றன. பொதுவாக கால்நடைகளின் அசையூன் இரப்பையில் பரம்பிஸ்டோமம் புழுவின் முதிர்ந்த பருவங்கள் வாழ்கின்ற போதும் சிறுகுடல் பகுதியில் வாழும் அல்லது தாக்கும் இளம் பருவ புழுக்களே ஆபத்தான நோய் விளைவை தருவன. இந்த நிலைமை Immature parampistomiasis என அழைக்கப்படும். இலங்கையில் 1990 ம் ஆண்டு காலப்பகுதியில் அனுராதபுர மாவட்டட பகுதிகளில் ஏற்பட்ட கால்நடைகளின் இழப்பைத் தொடர்ந்து மேற்படி நோய்த் தாக்கம் அன்றைய கால்நடை வைத்தியர்களால் பேராதனை பல்கலைக் கழக விலங்கு மருத்துவ விஞ்ஞான பீடத்தின் உதவியுடன் முதல்முதலில் ஆராய்ந்து அறியப்பட்டது. 

 அதனை தொடர்ந்து வருடா வருடம் குறிப்பிட்ட அளவு கால்நடைகளை பாதித்து வந்த இந்த தாக்கம் இந்த வருடம் சற்று அதிகரித்திருப்பதை எம்மால் உணர முடிகிறது. தொடர்ச்சியாக மெலிதல், உரோமப் பகுதி சுருளுதல் அல்லது சிலிர்த்து காணப்படுதல், கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதிகள் வீங்குதல் ,உணவில் நாட்டம் குறைதல், தொடர்ச்சியான வயிறோட்டம் போன்ற அறிகுறிகளுடன் சில நாட்களில் பலமின்றி விழுந்து இறுதியில் மரணமும் சம்பவிக்கிறது. அண்மைய நாட்களில் எனது கால்நடை வைத்திய பிரிவில் மேற்படி அறிகுறிகளுடன் தொடர்ச்சியாக ஆடு மாடுகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வவுனியா மாவட்ட விளங்கு புலனாய்வு நிலையத்தின் [veterinary investigation center] உதவியுடன் இந்த நிலை பரம்பிஸ்டோம் என உறுதிப் படுத்திக் கொண்டோம்.

 வவுனியா மட்டுமின்றி நாட்டின் இதர உலர் வலய பகுதிகளிலும் இந்த நோய்த் தாக்கம் கடுமையாக இருப்பதை சக கால்நடை வைத்தியர்களின் மூலம் அறியக் கூடியதாக இருந்தது. கால்நடைகளை பிரேத பரிசோதனை செய்யும் போது சிறுகுடல் [ duodinum ] பகுதி தடிப்படைந்து இரத்தப் பெருக்கு காயங்களுடன் காணப்படும் அதே வேளை நாட்பட்ட தொற்று காணப்படும் விலங்குகளின் அசையூன் இரப்பை பகுதியில் நூற்றுக் கணக்கான சிவப்பு நிறமுடைய மாதுளம் பழம் போன்ற புழுக்கள் காணப்படும். பொதுவாக விலங்குகளில் காணப்படும் முதிர்ந்த புழுக்கள் ஆபத்தற்றவை. இதனை விட வயதான மற்றும் அதே பிரதேசத்தில் நீண்ட காலம் வாழும் விலங்குகள் இந்த புழுக்களுக்குரிய எதிர்ப்பு சக்தியை [ immunity ] கொண்டவை. எனினும் சிறிய மற்று நடுத்தர விலங்குகள் நோய் எதிர் சக்தி குறைந்தவை.

 இந்த வருடம் போல் சடுதியான அதிகரித்த புழுத் தாக்கம் [ acute infection] ஏற்படும்போது எதிர்ப்பு சக்தி இன்றிய விலங்குகள் கடும் தொற்றுக்கு உள்ளாகி இறக்கின்றன . அத்துடன் இந்த முறை மழைக்கு பின் ஏற்பட்ட அதிகரித்த நுளம்புப் பெருக்கம், கால்நடை வளர்ப்புக்கு சாதகமற்ற காலநிலை நிலவியமை , மேய்ச்சல் பகுதிகளான வயல் பகுதிகளில் பெருமளவு நெற் செய்கை செய்யப்பட்டதால் சரியான ஊட்ட சத்து கொண்ட தாவர உணவுகள் இன்மை போன்ற காரணிகளால் கால்நடைகள் நோய் எதிர்ப்பு சக்தி குன்றி நலிவடைந்திருந்தன. இந்த பலவீனமான உடல் நிலை காரணமாக அவை இலகுவில் பரம்பிஸ்டோமம் போன்ற புழுத்தாக்கத்துக்கு உள்ளாகியிருக்கின்றன.. அதிக அல்புமின் போன்ற புரதங்களின் இழப்பு காரணமாக கழுத்து மற்றும் வயிற்றுப்பகுதிகள் வீங்கிக் காணப்படுகின்றன.

 தொடர்ச்சியான இரத்த இழப்பு காரணமாக இரத்த சோகை நிலையும் ஏற்பட்டிருக்கிறது. நாட் செல்லச் செல்ல கால்நடைகள் தொடர்ச்சியாக நலிவடைந்தன.. நாட்டின் பல பகுதிகளில் இந்த காலப்பகுதியில் கடுமையான் நுளம்புக் கடி காரணமாக ஏற்படும் நோய் நிலைகளும் [ Ephimeral fever] கால்வாய் நோய் [ foot and mouth disease] நிலைமையும் அவதானிக்கப்பட்டிருந்தது . அத்துடன் இந்த பருவம் பெரும்பாலான மாடுகள் கன்று ஈனும் பருவமாதலால் பெண் கால்நடைகள் நிர்ப்பீடன ரீதியில் பலவீனமடைந்திருந்தன. இவை அனைத்தும் இந்த நோய் நிலையை மோசமடைய செய்திருந்தன. ஓச்சி குளசனைட்[oxy clozanide] போன்ற குளசண்டோல் கொண்ட பூச்சிக் கொல்லி மருந்துகள் ஆரம்ப நிலை பூச்சி தொற்றை கட்டுப்படுத்தியிருந்தன.

 இதனை விட பலமான அண்டி பயோடிக் [anti biotic] சிகிச்சையும் மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டது. நோய் நிலை முற்றிய குறிப்பாக இளம் கால்நடைகள் பெருமளவு மரணித்திருந்தன. எமது அவதானிப்பின் படி பெரும்பாலான கால்நடை வளர்ப்பளர்கள் கால்நடைகளுக்கு பூச்சி மருந்து கொடுக்கும் போது தவறான அணுகு முறைகளையே பின்பற்றுகின்றனர். பூச்சி மருந்துகள் கால்நடைகளின் நிறைக்கு அமைவாகவே கொடுக்கப் பட வேண்டும். எனினும் கள மட்டங்களில் பெரும்பாலான கால்நடைகளுக்கு சரியான விகிதத்தில் கொடுக்காமல் விடுவதை அவதானிக்க முடிகிறது .

 மாடுகளின் நிறையை இறைச்சியின் நிறைக்கே பல பண்ணையாளர்கள் அனுமானிகின்றனர். இது தவறானது.இறைச்சி நிறை எலும்புகள், தோல் ,இரத்தம் மற்றும் இரப்பையில் உள்ள உணவுகள் கழிக்கப்பட்டே கணிக்கப்படுகின்றது. எனவே பூச்சி மருந்துகள் அரை வாசிக்கும் குறைவான நிறைக்கே வழங்கப்படுகின்றன. மேலும் அவற்றை சரியான கால இடை வெளியில் கொடுப்பதும் கிடையாது. பல கால்நடை பண்ணையாளர்கள் வருடக் கண்ணகில் பூச்சி மருந்து கொடுக்காத நிலையை பொதுவாக அவதானிக்க முடிகிறது. மேலும் வில்லைகளாக அல்லது உருளைகளாக [tablets / bolous] கொடுக்க வேண்டிய மருந்துகளை அரைத்து தூளாக்கி கொடுக்கின்றனர்.

 வெளிப்புறம் உறையிடப்பட்ட வில்லைகளை அல்லது உருளைகளை அப்படியே கொடுக்கும் போது அவை மெதுவாக இரப்பையில் வெளிவிடப்பட்டு சரியான விகிதத்தில் வேலை செய்யும். இதனால் வாழைப்பழம் போன்றவற்றில் வைத்து கொடுக்கும் படி கால்நடை வைத்தியர்கள் பரிந்துரை செய்வார்கள். அவற்றை தூளாக்கி கொடுக்கும் போது அவை செயற்பட முன்னரே விரைவாக அவை கழிவுடன் வெளியேறி விடும். மேலும் பண்ணையாளர்கள் ஒரே வகையான பூச்சி மருந்துகளை தொடர்ச்சியாக பாவிப்பார்கள். உண்மையில் ஒரே மருந்தை தொடர்ச்சியாக பாவிக்கும் போது பெரும்பாலான புழுக்கள் அவற்றுக்கு எதிர்ப்பு சக்தியை அந்த பகுதியின் பூச்சி வகைகளின் தன்மையை பற்றி நிச்சயம் தெரிந்திருக்கும். தற்காலத்தில் மிகவும் மேம்பட்ட ஏராளமான பூச்சி மருந்துகள் உள்ளன. நாட்டில் தற்போது . 

 மேலும் சினைப்பட்ட கால்நடைகளுக்கு பூச்சி மருந்து கொடுக்க கூடாது எனும் தன்மை எமது பண்ணையாளர்களிடம் உள்ளது. உண்மையில் ஆரம்ப நாட்களில் [ early pregnancy] மட்டும் தான் சில ஆபத்துகள் இளம் முளையத்துக்கு ஏற்படுகிறது.அதுவும் மிக மிக குறைந்த அளவில். பின்னைய நாட்களில் [ late pregnancy] பெருமளவு ஆபத்து ஏற்படுவதில்லை.மேலும் சினைப் பட்ட மாடுகளுக்கு என்றே சில மருந்துகள் உள்ளன. அவை இளம் சினை மாடுகளுக்கு கூட பாதுகாப்பானவை.

 எனவே ஆபத்தான காலகட்டங்களில் சினை மாடுகளுக்கும் பூச்சி மருந்தை கால்நடை வைத்தியரின் அறிவுரைக்கு அமைய கொடுக்கலாம். மழை காலத்துக்கு பின்னர் கட்டாயம் பூச்சி மருந்து கொடுக்க வேண்டும் என்பதோடு ஏனைய பருவங்களில் மூன்று மாதத்துக்கு ஒருமுறை பூச்சி மருந்தை கொடுப்பதை வாடிக்கையாக செய்தால் தேவையற்ற கால்நடைகளின் இழப்புகளை தவிர்க்கலாம். இன்று ஏற்பட்டிருக்கும் இந்த கால்நடைகளின் இறப்புகளை சரியான முகாமைத்துவ முறைகளை [ Good management practices] கால்நடை வைத்தியர்களின் சரியான அறிவுறுத்தல்களுக்கு அமைய பின்பற்றி முகாமைத்துவம் செய்து இனி வரும் காலங்களில் நோய் நிலைமைகளை அறிந்து சரியான மருந்துகளை கொடுத்தல் மற்றும் சரியான ஆலோசனைகளை பெறுதல் மூலம் கால்நடைகளின் இழப்பை தவிர்க்க முடியும்.





கால்நடைகளுக்கு எமனாக அமையும் பரம்பிஸ்டோமியோசிஸ் -Dr.S.கிருபானந்தகுமாரன் [ MVSc ] கால்நடை வைத்தியர் Reviewed by Author on January 05, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.