அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் உள்ள சோதனைச் சாவடிகளில் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்ட அட்டை பரிசோதிக்க நடவடிக்கைகள்

மன்னாரில் உள்ள சோதனைச் சாவடிகளில் எதிர் வரும் புதன்கிழமை 15 ஆம் திகதி தொடக்கம் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்ட அட்டை பரிசோதிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு பீ.சி.ஆர். அல்லது அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

 மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று திங்கட்கிழமை (13) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,,, மன்னார் மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் முடிவுக்கு வருகின்ற நிலையில் உள்ளது.இதன் அடிப்படையில் இது வரையில் 71,396 பேர் முதலாவது கொரோனா தடுப்பூசியையும் , 56,363 பேர் இரண்டாவது தடுப்பூசியும் பெற்றுக்கொண்டுள்ளனர். 

 முதலாவது தடுப்பூசியை 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் 30 சதவீதமாகவும், 2 வது தடுப்பூசியை 68 சதவீதமானவர்களும் பெற்றுக்கொண்டுள்ளனர். இதே வேலை கடந்த வாரம் முதல் தெரிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களில் கடமையாற்றுகின்ற 29 மற்றும் 30 வயதிற்கு இடைப்பட்ட வர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

 மேலும் முழுமையாக 20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப் பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பமாக உள்ளது. அத்தோடு விசேட தேவையுடைய பாடசாலை மாணவர்களுக்கான வேலைத்திட்டத்தின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளும்,தரவுகள் சேகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த இரு நாட்களில் மன்னார் மாவட்டத்தில் 101 பேர் கொரோனா தொற்றுடன் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 66 பேர் நிலக்கண்ணி வெடி அகற்றும் நிறுவனம் ஒன்றில் கடமையாற்றும் பணியாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் அதிகமானவர்கள் மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு,கிளிநொச்சி,யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்த்து தற்போது வரை 1966 கொரோனா தொற்றாளர்களும்,இவ்வருடம் மாத்திரம் 1949 தொற்றாளர்களும்,இந்த மாதம் 282 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். புத்தாண்டு கொத்தணி உடன் தொடர்புடைய 1613 தொற்றாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் இதுவரையில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்கள் 23 பேர் உயிரிழந்துள்ளனர். 

 இவர்களில் கடைசியாக நேற்று ஞாயிற்றுக்கிழமை 63 வயதுடைய ஆண் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். இதேவேளை 30 வயதிற்கு மேற்பட்ட தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாத அனைவருக்கும் இன்று திங்கள் மற்றும் நாளை செவ்வாய் ஆகிய இரு தினங்கள் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை புதுக்குடியிருப்பு முஸ்லிம் மகா வித்தியாலயம் மற்றும் நாளை செவ்வாய்க்கிழமை கட்டையடம்பன் மகா வித்தியாலயத்தில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும். 

 எதிர் வரும் புதன்கிழமை 15 ஆம் திகதியில் இருந்து (15-09-2021) சோதனைச்சாவடிகளில் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட அட்டை பரிசோதிக்க நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது. 30 வயதிற்கு மேற்பட்ட தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு பீ.சி.ஆர். அல்லது அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் தொற்று உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டால் அவர்களை இடை நிலை சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாத 30 வயதிற்கு மேற்பட்ட சகலரும், உடனடியாக அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரியை நாடி இன்றும் நாளையும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும்.என அவர் மேலும் தெரிவித்தார்.


மன்னாரில் உள்ள சோதனைச் சாவடிகளில் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்ட அட்டை பரிசோதிக்க நடவடிக்கைகள் Reviewed by Author on September 13, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.