அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மீதான தாக்குதலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மீதான தாக்குதலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்றைய தினம் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேய இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், நேற்றைய தினம்(24) எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த, கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ந.சரவணபவன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் வன்மையான கண்டனத்துக்குரியது. அத்தியாவசிய சேவைகளுள் முதன்மையானதாக உள்ள சுகாதாரத்துறையின் பதவிநிலை உத்தியோகத்தரும், வைத்தியருமான அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுமளவுக்கு காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்டுள்ளமை இந்தமாவட்டத்தின் மிகமோசமான சமூகப்பிறழ்வுச் செயலாகும். 

 ஒட்டுமொத்த அரச சேவைத்துறையினரது பாதுகாப்பையும் கேள்விக்குட்படுத்தி, அவர்களிடையே அச்சநிலையைத் தோற்றுவித்த இச் சம்பவத்துக்கு எதிராக எனது கண்டனங்களைப் பதிவுசெய்வதொடு, இதுவிடயமாக உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறேன். முழு நாடும் எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடி நிலையில், மட்டுப்படுத்தப்பட்ட முறையில் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விநியோகம், ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் நீண்டதோர் வரிசை யுகத்தை தோற்றுவித்திருக்கிறது. இரவு, பகல், மழை, வெயில் பாராது அன்றாடத் தேவைக்கான எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் நிற்கும் அரச உத்தியோகத்தர்கள் அதிலும் குறிப்பாக பெண் உத்தியோகத்தர்கள் மீது அவதூறான வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டு, அவர்கள் ஆகப்பெரும் மன அழுத்தங்களோடு எரிபொருளைப் பெறாமல் அழுதபடியே வீடு திரும்பிய பல சம்பவங்கள் கடந்த ஓரிரு நாட்களில் கிளிநொச்சியிலும் யாழ்ப்பாணத்திலும் நடைபெற்றுள்ளன.

 எரிபொருள் என்பது அனைத்துத் துறைசார் தரப்பினருக்கும் அடிப்படைத் தேவையாக உள்ள இன்றைய காலச் சூழலில், தமது அன்றாடக் கடமைகளுக்கு அப்பால் நாளும், பொழுதுமாய் எரிபொருளுக்குக் காத்திருப்போர் கோபம், விரக்தி உள்ளிட்ட பல்வேறுவிதமான மனோநிலைகளோடு இருந்தாலும், அதே உணர்வுகளோடும், எதிர்பார்ப்போடும் காத்திருக்கும் சக மனிதர்களிடம், பொதுவெளியில் பிரயோகிக்கத்தகாத வார்த்தைகளாக அந்த மனோநிலையை வெளிப்படுத்துவது அவர்களை கடுமையாகப் பாதிக்கும் என்பதையும், அத்தகையை முரண் கருத்துக்கள் சமூக மற்றும் குழு வன்முறைகளுக்கு வழிகோலக்கூடும் என்பதையும் நாம் ஒவ்வொருவரும் உணரத்தலைப்பட வேண்டும். 

 துறைசார் வேறுபாடுகளற்று எல்லோரும் எரிபொருளுக்காக காத்திருக்க வேண்டியுள்ள போதும், அவரவர் பணிகளின் அவசியம் கருதி சில விட்டுக்கொடுப்புக்களைச் செய்ய வேண்டிய சமூகக் கடப்பாடு ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உண்டு. குறிப்பாக உயிர்காக்கும் சேவையாளர்களான மருத்துவர்களும், தாதியர்களும் கூட நீண்டிருக்கும் வரிசைகளில் நின்று எரிபொருளைப் பெறுவது இந்த நாட்டின் ஆகப்பெரும் அவல நிலையின் வெளிப்பாடே! எரிபொருளுக்கான தேவைப்பாடுகள் எல்லோருக்கும் உள்ளது என்பதை உணர்ந்தவர்களாக, சமூகப் பொறுப்போடும், மனிதாபிமானத்தோடும், எமது பண்பாட்டையும் அதன்வழியான சமூகக் கடப்பாடுகளையும், வார்த்தை வரைமுறைகளையும் மீறாதவர்களாக, இந்த சமூகப் பேரிடரை எதிர்கொள்ளும் வல்லமையை எல்லோருமாக இணைந்து ஏற்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் என்றுள்ளது. 




கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மீதான தாக்குதலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கண்டனம் தெரிவித்துள்ளார். Reviewed by Author on June 25, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.