அண்மைய செய்திகள்

recent
-

சிறு ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்களை ஒன்றுகூட்டி பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப உரிய நடவடிக்கை எடுங்கள்’

 சிறு ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் பொருளாதாரத்தில் தேர்ச்சி பெற்றவர்களை ஒன்றுகூட்டி, கலந்தாலோசனை செய்து, பிரச்சினைகளை இனங்கண்டு பொருளாதார வீழ்ச்சிக்கான அடிப்படை பிரச்சினைகளை முதலில் தீர்க்க வேண்டியது அரசின் பொறுப்பு என்று முன்னாள் கைத்தொழில், வர்த்தக அமைச்சரும்  பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

பாராளுமன்றில் (07) உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

 

“முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டைப் பொறுப்பேற்றதிலிருந்து நாடு மிக மோசமான நிலைக்கு  தள்ளப்பட்டதோடு, பொருளாதார அழிவையும் சந்தித்தது. தொழில்கள் இல்லாமலாக்கப்பட்டன. கைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டன. ஒட்டுமொத்தத்தில் நாட்டையே அதலபாதாளத்தில் தள்ளிய ஜனாதிபதியாக அவரை நாங்கள் நோக்குகின்றோம்.

 

தற்போதைய கைத்தொழில் அமைச்சர் திறமையானவர், அறிவார்ந்தவர், முற்போக்கு சிந்தனைகொண்டவர். அவரின் மீது நான் நல்லெண்ணம் கொண்டிருக்கின்றேன். அவரை சந்திக்கும்போதெல்லாம் கைத்தொழில்துறை வளர்ச்சி தொடர்பான எனது ஆலோசனைகளை தெரிவிப்பது வழக்கம்.

 

கோட்டா ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர்,  சுமார் 20 சதவீதமான சிறு ஏற்றுமதியாளர்கள், சிறு கைத்தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்தத் துறையில் ஈடுபட்டவர்கள் பல இன்னல்களையும் கஷ்டங்களையும் எதிர்நோக்கினர். தற்போதும் எதிர்நோக்கி வருகின்றனர். ஆட்சியாளர்கள் செய்யும் தவறுக்காக அவர்கள் அனுபவிக்கின்றனர்.

 

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் பல்வேறு தவறுகளை செய்தார் எனக் கூறுகின்றனர். எனினும், அப்போது அவரை அமைச்சராக்கி, பின்னர் ஆளுநராக்கி, அமைச்சரவை அந்தஸ்தையும் அவருக்கு பெற்றுக்கொடுத்தனர்.  இவ்வாறு அழகுபார்க்கப்பட்ட மத்திய வங்கி ஆளுநர் 3 ட்ரில்லியன் நாணயத்தாள்களை அச்சிட்டார். அப்போது நாங்கள் இதனை எதிர்த்துக் குரல்கொடுத்த போது “துறைசார்ந்தவர்கள் அதனைச் சரியாக செய்கின்றார்கள். நீங்கள் பின்னர் இதைப்பற்றி அறிந்துகொள்வீர்கள்” என்று அவர்கள் கூறினர். கப்ரால் நாட்டை நாசமாக்கி, முதலீட்டாளர்களை நாட்டுக்கு வரவழைக்க முடியதா துர்ப்பாக்கிய நிலையை ஏற்படுத்தினார். அந்தக் குறுகியகாலத்தில் நாடு பொருளாதார சீரழிவுக்குள்ளாகி இனவாதம் தலைவிரித்தாடியது. மத்திய கிழக்கு முதலீட்டாளர்களை இனவாதக் கண்ணோட்டத்தோடு பார்த்தனர். ஊடகங்கள் வாயிலாக இனவாத செயற்பாடுகளை பரப்பினர். நாடு குட்டிச்சுவராகியது. எதிர்காலத்தில் இதனை சீரமைக்க வேண்டிய பொறுப்பு அமைச்சருக்கும் ஆட்சியாளருக்கும் உள்ளது.

 

புதிய ஜனாதிபதி 2048 தொடர்பில் இப்போது கனவு காண்கின்றார். அதனைக் கூறிக்கொண்டு நாம் இருக்கின்றபோது, தொழிற்சாலைகள் இங்கு மூடப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. நாட்டின் தற்போதைய பொருளாதாரப்  பிரச்சினைக்கு நிவாரணம் காண்பதை விடுத்து, நீண்டகாலத்துக்குப் பின்னர் நாம் அதனை அடைந்துவிடுவோம் எனப் பேசுவது வியப்பாக உள்ளது. அது மாத்திரமின்றி இவ்வாறான செயற்பாடுகள் நாட்டுக்கு பேரழிவையே ஏற்படுத்தும்.

 

தற்போது, பாரிய ஆடைத்தொழிற்சாலைகள் எல்லாம் மூடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. முதலீட்டாளர்கள் பங்களாதேஷ், வியட்நாம் மற்றும் இன்னோரன்ன நாடுகளுக்கு படையெடுத்துக்கொண்டிருக்கின்றனர். இதனைத் தடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. அவர்களை தொடர்ந்தும் இந்த நாட்டில் தொழில்களை செய்வதற்கான ஆலோசனைகளை வழங்கி, அதற்கான சூழலையும் மனோவலிமையையும் ஏற்படுத்தி உத்தரவாதத்தை வழங்குங்கள். தற்போது, இயங்கிக்கொண்டிருக்கின்ற கைத்தொழிற்சாலைகளையாவது தொடர்ந்தும் இயங்குவற்கு முயற்சி செய்யுங்கள்.

 

உதாரணமாக, புத்தளத்தில் குறிப்பாக, மதுரங்குளியில் 170 தும்புத் தொழிற்சாலைகள் இருக்கின்றன. சுமார் 510 வாகனங்கள் இந்தத் துறைக்காக சேவையில் ஈடுபடுகின்றன. 1360 பேர் இந்தத் தொழிலில் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். மறைமுகமாக இந்தத் தொழிலுடன் தொடர்புபட்ட 3500 பேர் இருக்கின்றனர்.  தும்பு மற்றும் தும்புச் சோறு ஆகியன சுமார் 2 மில்லியன் டொலர் வரையில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவ்வாறு பிரமாண்டமான தும்புத் தொழிலில் ஈடுபாடு காட்டுபவர்களுக்கு பல்வேறு சிரமங்கள் இருக்கின்றன. தும்புக்கான சரியான விலை நிர்ணயிக்கப்படவில்லை. சவூதி அரேபியா கூட பல மில்லியன் ரூபா பெறுமதியான தும்பைக் கோரி நிற்பதாக பத்திரிகைகள் வாயிலாக அறிய முடிந்தது. ஆனால், உற்பத்தியாளர்கள் இதனை ஏற்றுமதி செய்ய முடியாது திண்டாடுகின்றனர். எனவே, இந்த விடயத்தில் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும்.

 

அத்துடன் மருதமுனை, பாலமுனை, குருநாகல் போன்ற இடங்களில் நெசவுத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் இருக்கின்றன. வியாபார மாபியாக்கள் இதற்குத் தடையாக உள்ளனர். எனவே, இந்த விடயத்திலும் கூடிய கவனம் செலுத்துமாறு வேண்டுகின்றேன்.

 

இதேவேளை, பாராளுமன்றத்தில் உரையாற்ற வருகை தரவிருந்த கஜேந்திர குமார் பொன்னம்பலம் எம்.பியின் திடீர் கைது தொடர்பிலும், அவரது சிறப்புரிமை மீறப்பட்டமை தொடர்பிலும் எனது கண்டனத்தை தெரிவிக்கின்றேன்” என்று கூறினார்.


சிறு ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்களை ஒன்றுகூட்டி பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப உரிய நடவடிக்கை எடுங்கள்’ Reviewed by Author on June 08, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.