யாழ்.நிலத்தடி நீர் மாசு தொடர்பில் ஆராய முற்பட்டால் பல சர்ச்சைகள் உருவாகும்: ரவூப் ஹக்கீம்
யாழில் நிலத்தடி நீர் எவ்வாறு மாசடைந்தது என்பதை அறிய முற்பட்டால் பல சர்ச்சைகள் நிச்சயமாக உருவாகும். எனவே அதை குறித்து நான் பேசவில்லை. எனினும் இரணைமடு நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருவதற்கு கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் ஒத்துழைப்பு நிச்சயம் பெறப்படும் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம்- கிளிநொச்சி நீர் வழங்கல், சுகாதார செயற்றிட்டத்தின் கீழ், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் வட பிராந்திய பொதுமுகாமையாளர் மற்றும் பிரதிமுகாமையாளர் அலுவலக கட்டிடங்களை இன்றைய தினம் யாழ்.பண்ணையில் அமைச்சர் திறந்து வைத்தார்.
இதனையடுத்து அங்கு உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம்,
வடக்கிற்கான குடிநீர் விநியோகத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளமை தொடர்பாக எமக்கு முறைப்பாடுகள் தொடர்ச்சியாக கிடைக்கப் பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் அதனை சீர்படுத்த வேண்டிய தேவையும், குடாநாட்டின் நிலத்தடி நீர் சுத்தப்படுத்தப்பட வேண்டிய தேவையும் எமக்குள்ளது.
குடாநாட்டில் சுன்னாகம் உள்ளிட்ட பகுதிகளின் நிலத்தடி நீர் மாசுபாட்டை, தீர்ப்பதற்கான முயற்சிகளை எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியளிக்கவும் நாம் துரித நடவடிக்கை ஒன்றை எடுத்துவருகின்றோம்.
இந்நிலையில் விடயம் தொடர்பாக ஜனாதிபதியுடன் நாம் இரு தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றோம். ஜனாதிபதியும் இந்த விடயத்தில் அக்கறையுடன் இருக்கின்றார்.
எனவே எமது செயற்றிட்டத்திற்கான ஒழுங்குகளை செய்யுமாறும் எமக்கு கூறியிருக்கின்றார். இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உள்ளிட்ட கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்து பேசியிருக்கிறோம். எனவே யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் நீர் பிரச்சினை தொடர்பாக நாங்கள் கரிசனை கொண்டிருக்கின்றோம்.
குடாநாட்டின் நிலத்தடி நீர் மாசுபாட்டு பிரச்சினையினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே மக்களுக்கு உதவும் செயற்றிட்டத்தை சவால்களுக்கும் மத்தியில் முன்னெடுப்போம்.
இரணைமடு- யாழ்ப்பாணம் குடிநீர் திட்டம் தொடர்பாக...
இரணைமடு குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நீர் கொண்டு வரும் செயற்றிட்டத்தில் வடக்கில் உள்ள அரசியல்வாதிகள் சற்றே விட்டுக்கொடுப்புடன் நடந்து கொள்ளவேண்டும்.
குறிப்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இந்த செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அதிகம் அக்கறை காட்டுகின்றார்கள்.
மேலும் கிளிநொச்சி மாவட்ட மக்களும் இந்த விடயத்தில் யாழ்ப்பாணத்திற்கு நீர் கொண்டுவ தனால் தமக்கு ஆபத்துக்கள் உண்டாகும் என பயப்படுகின்றார்கள்.
எனவே அவர்களுடனும் பேசவேண்டியே தேவை இருக்கின்றது. இந்த திட்டத்திற்காக அமைக்கப்பட்ட கட்டிடம் இங்கே வந்து விட்டது. ஆனால் தண்ணீர் கொண்டுவர முடியவில்லை.
எனவே மக்களும் அரசியல்வாதிகளும் விட்டுக் கொடுப்புடன் செயலாற்றவேண்டும். மேலும் நாங்கள் இரணைமடு குளத்தின் அணைக்கட்டு உயரத்தை அதிகரித்து நீர் கொள்ளளவினை அதிகரிப்பதற்கான முயற்சிகளை எடுத்திருக்கின்றோம். அந்தவகையில் மனமாற்றம் ஒன்றே இங்கு தேவையாக இருக்கின்றது.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இந்த திட்டத்தை இரு வருடங்களுக்குள் நடைமுறைப்படுத்துமாறு இறுக்கமாக கூறியிருக்கின்றார்கள்.
எனவே இந்த திட்டத்திற்கு மேலதிகமான நிதியை பெற்று திட்டத்தை நிச்சயமாக நடைமுறைப்படுத்த நாம் நடவடிக்கை எடுப்போம். அதற்கு இங்குள்ள அரசியல்வாதிகளும், மக்களும் விட்டுக்கொடுப்புடன் செயலாற்ற வேண்டும் என்றார்.
யாழ்.நிலத்தடி நீர் மாசு தொடர்பில் ஆராய முற்பட்டால் பல சர்ச்சைகள் உருவாகும்: ரவூப் ஹக்கீம்
Reviewed by Author
on
June 22, 2015
Rating:
No comments:
Post a Comment