மீனவர்களை சுடக் கூடாது என்று இலங்கைக் கடற்படைக்கு அறிவுறுத்தல்: இந்திய மத்திய அரசு தகவல்

இலங்கைக் கடல் பகுதியில் தமிழக மீனவர்களை சுடக் கூடாது என இலங்கைக் கடற்படைக்கு அறிவுறுத்தியுள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் இருந்து 2014 ஆகஸ்ட் 25ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் எஸ்ரோன், டேனியல், வில்சன் ஆகியோர் வீடு திரும்பவில்லை. அவர்கள், இலங்கைக் கடற்படையாலும் கைது செய்யப்படவில்லை.
இந்த நிலையில், 3 மீனவர்களையும் ஆஜர்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக மீனவர் உரிமை கூட்டமைப்பின் அமைப்பாளர் சி.ஜே.ராஜன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், வி.எஸ்.ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுவுக்கு தமிழக மீன்வளத் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 3 மீனவர்களும் காணாமல் போனவுடன் கடலோரக் காவல்படைக்கும், கடற்படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், 3 பேரின் குடும்பத்தினருக்கும் நிவாரண நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல, மத்திய வெளியுறவுத் துறை துணைச் செயலாளர் பிரபுல்லா சந்திர சர்மா தாக்கல் செய்த மனுவில், மூன்று மீனவர்களும் இலங்கை நெடுந்தீவு கடல் பகுதியில் காணாமல் போயுள்ளனர். தகவல் தெரியவந்ததும் இலங்கை தூதரகத்தை தொடர்பு கொண்டு உரிய தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது.
இலங்கைக் கடல் பகுதிக்குள் செல்லும் போதுதான் மீனவர்கள் கைது செய்யப்படுகின்றனர். இந்திய மீனவர்களை நடுக்கடலில் தாக்குவதோ, சுடுவதோ கூடாது என்றும், மனிதாபிமான அடிப்படையில் நடத்த வேண்டும் என்றும் இலங்கைக் கடற்படைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கைதாகும் மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு அடிக்கடி பேச்சு நடத்துகிறது.
இந்த வகையில் 2012 முதல் 2014ம் ஆண்டு வரை 1,660 மீனவர்கள் இலங்கைச் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரியில் இருந்து இதுவரை 191 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 171 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் உள்ளவர்கள் பட்டியலில் மாயமான 3 மீனவர்கள் பெயர்கள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதில் மனுக்களைப் பதிவு செய்த நீதிபதிகள், விசாரணையை ஆகஸ்ட் 8ம் திகதிக்கு ஒத்திவைத்தனர்.
மீனவர்களை சுடக் கூடாது என்று இலங்கைக் கடற்படைக்கு அறிவுறுத்தல்: இந்திய மத்திய அரசு தகவல்
Reviewed by Author
on
June 24, 2015
Rating:

No comments:
Post a Comment