தமிழர்கள் தங்களைத் தாங்களே ஆளுகின்ற சுயநிர்ணய உரிமை உண்டு: நாடாளுமன்ற அமர்வில் கன்னி உரையில் சாள்ஸ் நிமலநாதன்
தமிழர்கள் இம்மண்ணின் பூர்வீககுடிகள் தங்களைத் தாங்களே ஆளுகின்ற சுயநிர்ணய உரிமை உண்டு என்பதை எவராலும் மறுதலிக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிமலநாதன் தெரிவித்தார்.
நேற்று நாடாளுமன்ற அமர்வில் கன்னி உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வன்னி தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்து அதில் எனக்கு அதிகூடிய விருப்பு வாக்குகளை அளித்த மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மக்களுக்கு எனது அன்புகனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
துன்பத்தில் வடுக்களையும் துயரத்தின் வலிகளையும் சுமர்ந்து இங்கு உரைத்திடும் ஒவ்வொரு வார்த்தைகளும் கற்பனையில் கதைவடிக்கும் காவியம் அல்ல. நிதர்சன வரிகள்.
மனித முலாம் பூசப்பட்ட இவ் உலகில் மதவாதம் இனவாதம் தலைவிரித்து நிமிர்வு கொண்டு நிற்க, தர்மம் தலைகுனிய இன வன்கொடுமைகள் நிகழ்கின்றன.
சாட்சி அற்றும்மனசாடசி அற்றும் மனித படுகொலைகள் இம்மண்ணில் நடந்தேறியதையும் மனித அடக்கு முறைகளும் இங்கு நிகழ்ந்துள்ளதையும் எவராலும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது.
தமிழர்கள் இம்மண்ணின் பூர்வீக குடிகள். அவர்கள் இம் மண்ணில் தங்களைத் தாங்களே ஆளுகின்ற சுயநிர்ணய உரிமை உண்டு என்பதை எவராலும் மறுதலிக்க முடியாது.
ஆனால் இனவாதக் கொள்கை கொண்ட இனவாத அரசுகள் காலம் காலமாய் பல வடிவங்களில் எம்மை ஏமாற்றி வந்தமையை நாம் அறிவோம்.
குறிப்பாக காலத்துக்குக்காலம் ஒப்பந்தங்கள் எழுதப்படுவதும் பின்பு அவை செல்லா காகிதங்களாகவும் கிழித்தெறியப்பட்டவையும் எமது வரலாற்றுப் பதிவாகி நிற்கின்றது.
இனவாத அடக்கு முறைகளுக்கு எதிராக அன்று அகிம்சையில் போராடினோம். அவை அடக்கப்பட்டு எமது மக்கள் ஒடுக்கப்பட்டார்கள். அதன் மாற்றுவழியாகவே ஆயுதம் ஏந்தி போராடும் நிலை ஏற்பட்டு அதன்மூலம் ஈழத்தமிழரின் அடையாளங்களும், தமிழின அழிப்புகளும் சர்வதேசம் முன்நிலை நிறுத்தியது.
அந்த ஆயுத போராட்டமும் 2009 மே மாதம் முள்ளிவாய்ககலில் மௌனித்து நின்றது. 2009 ல் இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டது.
எங்கும் தமிழர்களின் உயிரற்ற உடல்களும், குவிந்து கிடந்ததை எவராலும் மறுக்கவோ,மறைத்துவிடவோ முடியாது.
இதன் விளைவாக ஆயிரக்கணக்கானோர் விதவையானார்கள், அனாதையானார்கள், உடல் உறுப்புகள் இழந்தார்கள் இத்தனையுத் இழந்து முடிந்த நிலையில் இன்று அமைந்துள்ள புதிய தேசிய அரசு எமது மக்களுக்கு என்ன செய்யப்போகின்றது.
தமிழ் மக்களுக்கான நீதியான நிலையான நிம்மதியான தீர்வினை தரப்போகின்றதா? இல்லை ஏனைய அரசின் வஞ்சகவலை விரிப்புத்தானா?
இந்நாடானது சர்வதேச சமூகத்தின் முன் ஜனநாயக சோசலிசக்குடியரசு என்ற நாமத்தைக் கொண்டுள்ளது. இங்கு ஜனநாயகம் பேணப்பட வேண்டும். ஜனநாயகம் மதிக்கப்பட வேண்டும்.
ஒரு ஜனநாயக நாட்டில் வாழும் ஒரு இனம், பேச்சு, மதகலாச்சார பண்பாட்டுச் சுதந்திரத்துடனும் தமது இன அடையாளத்தை உறுதி செய்யும் சுய நிர்ணய உரிமை கொண்ட வாழ்வியலை வாழும் உரிமையுண்டு. இதை ஒரு ஜனநாயக அரசு நிராகரித்து நின்றிடமுடியாது.
அதனடிப்படையில்தான் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசில் வாழ்கின்ற எமது இனம் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் எமது வாழ்வினை வேண்டுகின்றோம்.
கடந்தகால அரசுகள் நடந்து கொண்டது போன்று இந்த அரசும் அவ்வாறான நிலைக்கு நின்றிடாது என்று நான் நம்புகிறேன்.
அதன் நல்லெண்ண அடிப்படையில் கடந்த இறுதிக்கட்ட யுத்தத்தின்போது நடந்த படுகொலைகளுக்கு, பாலியல் வன்கொடுமைகளுக்கு சர்வதேச பொறிமுறை விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு நல்கி தமிழ்மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பது இந்த ஜனநாயக அரசின் உயரிய கடமையாகும்.
ஒரு மனித உயிர்களைப் பலியெடுப்பது எச்சந்தர்ப்பத்திலும் எவருக்கும் அனுமதியில்லை. அவ்வாறு நிகழுமாயின் அது மனித மாண்பிற்கு அப்பாற்பட்ட கொடூர கொடுங்கோல் செயலாகும். இதை பௌத்ததர்மமும் இடங்கொடாது.
உயிர்களை கொல்லக்கூடாது என்பது பௌத்த சித்தாந்த கோட்பாடாகும். மேலும் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்திடம் சரணடைந்து கைது செய்யப்பட்டு காணாமல்போன முன்னால் போராளிகள், மக்கள் மற்றும் யுத்தகாலங்களில் கைது செய்யப்பட்டும் வெள்ளை வானில் கடத்தியும்,
சுமார் 4578ற்கும் அதிகமானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள் இதுவரைக்கும்மன்னார் பிரசைகள் குழுவிடம் 4000ற்கும் அதிகமானவர்கள் தங்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ளார்கள்.
இவர்களுள் 3302 பெயர் விபரங்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டு காணாமல் போனோர் தொடர்பான விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இவர்களின் நிலைதனை எமது மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் முன்வைக்க வேண்டியது இந்த அரசின் தலையாய கடைமையாகும். அத்தோடு தவறுகள் இளைத்தவர்கள் யாவரும் சர்வதேச முன் பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடும் உண்டு.
இதை இந்த ஜனநாயக புதிய அரசு செய்யுமென்று நம்புகின்றேன். அத்தோடு எமது தாயகப் பிரதேசங்களில் யுத்தத்திற்குப் பின் அபிவிருத்திப் பணிகள் யாவும் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன.
கடந்த காலங்களில் மத்திய அமைச்சில் அங்கம் வகிக்கும் சில அரசியல் தலைமைகள் மதவாத இனவாத உணர்வுடனும் பக்கச்சார்பான முறையிலும் தங்களின் நேரடித் தனித்துவத்திலும் அபிவிருத்தியினை மேற்கொண்டு வந்தனர் என்பதை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
அக்காலகட்டங்களில் அரசநியமனங்களில் தகுதியான எமது தமிழ் இளைஞர் யுவதிகள் புறக்கணிக்கப்பட்டும் தகுதியற்ற நியமனங்கள் வழங்கப்பட்டது.
குறிப்பாக க.பொ.த சாதாரண தர பரீட்சையில் கணித பாடம் சித்தி பெறாதவர்கள் இன்று வன்னியில் சமூர்த்தி உத்தியோகத்தர்களாக இருக்கின்றார்கள். இவர்களால் மக்களுக்கு எப்படி சரியான முறையில் சேவையளிப்பது.
ஆரச திணைக்களத்தில் உயர் பதவியில் இருப்பவர்கள் சிலர் தகுதியற்ற முறையில் பதவி வகிக்கின்றனர்.
தற்பொழுது பதவி வகிக்கின்றவர் அதற்குரிய பரீட்சையில் சித்தியடையவில்லை. முன்பு வேலை செய்யும் போது பணமோசடி செய்து தற்காலிக இடைநிறுத்தப்பட்டவர் இன்று மன்னார் போக்குவரத்து சபையில் பதவி வகிக்கின்றார்.
பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் அவருக்குக்கீழ் வேலை செய்கின்றார்கள் இப்படிப்பட்ட நிலைதான் வன்னியில் இருக்கின்றது.
தகுதியற்ற அரச நியமனங்களையும் தகுதியற்ற முறையில் பதவி வகிப்பவர்களையும் மாற்றி தகுதியானவர்களை நியமித்து மக்களுக்கு உண்மையான சேவை செய்ய உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
சமுர்த்திப் பயனாளிகள் தெரிவில் கடந்த காலங்கள் அரசியல் ரீதியிலான தெரிவுகளாகவே நடைபெற்றன. தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆதராவாளர்கள் என்று பலர் ஒதுக்கப்பட்டார்கள் சமுர்த்திப் பயனாளிகள் உண்மையில் வறியவர்களுக்கு வழங்கும் படியும் சமுர்த்திப் பயனாளிகளை அதிகரிக்கும் படியும் இவ் அரசை கேட்டுக்கொள்ளுகிறேன்.
யுத்தத்தின் மத்தியில் கல்வி கற்று அரச நியமனங்களுக்காக காத்திருக்கும் எமது வடக்கு கிழக்கு இளைஞர் யுவதிகளுக்கு அவர்களின் தகுதிக்கேற்ப நியமனங்கள் வழங்கியும், வன்னியில் தொழில் பயிற்சி நிலையங்களை நிறுவி அதன்மூலம் வேலை வாய்ப்பை பெற்றுக்கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகின்றேன்.
எமது வன்னி பிரதேச நிலங்களில் மக்ளுக்கு சொந்தமான குடியிருப்பு காணிகள் இராணுவ ஆக்கிரமிப்புக்குள் உட்படுத்தப்பட்டுள்ளது.இதனை எமது முந்தைய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தும் எப்பயனும் கிடைக்கவில்லை.
ஜனாதிபதியின் ஆட்சி மாற்றத்திற்குப்பின் சில நிலப்பரப்புகள் விடுபட்டுள்ளது. ஆயினும் வன்னியில் எந்த நிலப்பரப்புகும் விடுவிக்கப்படவில்லை.
எமது ஆயர் வணக்கத்திற்குரிய இராயப்பு யோசேப் ஆண்டகைக்கு மன்னார் மாவட்டத்தில் உள்ள முள்ளிக்குளம் பிரதேசத்தை விடுவிப்பதாக இந்த அரசு கூறியபோதும் இன்னமும் நிலங்கள் விடுவிக்கப்படவில்லை.
யுத்தகாலங்களில் போடப்பட்ட இராணுவ முகாம்கள் இன்றும் அப்படியே இருக்கின்றது. இந்த நிலப்பரப்புகள் பெரிதாகிக் கொண்டே போகின்றது. யுத்தம் முடிந்துவிட்டதா? இல்லையா? என்ற சந்தேகம் எழுகிறது.
மக்கள் குடியிருப்பிற்கு மத்தியில் இருக்கும் இராணுவ முகாம்களால் எமது மக்கள் அச்சத்துடனே வாழ்கின்றார்கள். குறிப்பாக பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு மத்தியிலே வாழ்கின்றார்கள்.
அவர்கள் வெளியில் செல்ல அச்சப்படுகின்றார்கள். உதாரணமாக வவுனியா மாவட்டத்தில் செட்டிகுள பிரதேசத்தில் அடப்பன் குளம் எனும் கிராமத்தில் கிராம அபிவிருத்திச்சங்க கட்டடத்திலும் கமநலசேவைத் திணைக்களத்திலும் கூட்டுறவு நிலையத்திற்கும் சொந்தமான காணியில் அமைந்திருக்கும் சிறப்பு அதிரடிப்படை முகாமிற்கு சட்ட விரோதமாக மின்சாரம் பெற்று அதை முட்கம்பி வேலியில் பாய்ச்சி மின்சாரம் தாக்கி ஒருபெண் உயிரிழந்துள்ளார்.
இதற்கு இந்த அரசு என்னசொல்லப் போகின்றது? வடமாகாணத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 888 6சதுர கி.மீ காணிகள் உள்ளன.
அவற்றில் இராணுவத்தினர் வசம் 144சதுர கி.மீ விவசாயக் காணிகளும் 86 சதுர கி.மீ மீனவர்களின் கடற்கரைக் காணிகளும் உள்ளதாக புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.
எமது அச்சத்தைப் போக்கவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இராணுவ முகாம்களை அகற்றி மக்களின் இயல்பான வாழ்விற்கு வழி சமைக்க இந்த புதிய அரசை கேட்டுக்கொள்ளுகின்றேன்.
மேலும் இந்தப்புதிய அரசை வினையமாகக்கெட்டுக்கொள்வது பலநூறு தமிழ்அரசில் கைதிகள் சிறையில் உள்ளார்கள். இவர்களை மன்னித்து மிக விரைவில் விடுதலை செய்யவேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகின்றேன்.
இதன்மூலம் இவர்களின் குடும்ப வறுமையை போக்கிடவும் சிறார்களின் கல்வி மேம்படவும் இந்த அரசை கேட்டுக்கொள்ளுகின்றேன்.
மேலும் எமது தாயகப் பிரதேசத்தில் கடல்தொழிலிலை வாழ்வாதாரமாய்க் கொண்டுவாழ்கின்ற மக்கள் இன்று பாரிய வாழ்வாதார நெருக்கடியிலும் பொருளாதார இழப்புகளையும் எதிர்கொண்டு வாழ்கின்றார்கள்.
அதற்கான முக்கிய காரணி எமது எல்லைக்குட்பட்ட கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் அத்துமீறி இழுவைப் படகுகளுடனும் இயந்திரப் படகுகளுடனும் மீன்பிடியில் ஈடுபடுவதால் எமது கடல்வளம் முற்றாக அழிவடைந்து வருகிறது. .
அத்தோடு எமது மீனவர்களின் வலைகளும் அழிக்கப்படுகின்றது. அதுமட்டுமன்றி தென்பகுதி மீனவர்களும் பாரிய இயந்திரப் படகுகள் மூலம் மீன்பிடியில் ஈடுபடுவதாலும் எமதுபகுதி மீனவர்கள் பாரிய இழப்புகளையும் இன்னல்களையும் எதிர்கொள்கின்றார்கள்.
இப்பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தந்து எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு இந்த அரசு துரிதகதியில் செயல்படவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகின்றேன்.
மற்றும் விவசாயத்தை நம்பி வாழ்கின்ற மக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படுகின்ற பசளைகளை தொடர்ந்து வழங்கியும் அறுவடையாகும் நெல் அனைத்தினையும் மக்களின் நிர்ணகிக்கப்பட்ட விலையில் கொள்வனவு செய்வதற்கு ஆவணை செய்திட வேண்டும்.
30வருடங்களாக் புனரமைப்பு செய்யப்படாத ;குளங்கள் வாய்க்கால்கள் என்பனவற்றை புனரமைப்பு செய்து விவசாயிகள் வாழ்விலும் ஒளியேற்ற வேண்டும். அத்தோடு போரில் கணவர்களை இழந்த பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்புகளை வழங்கி அவர்கள் சமூகத்தின் முன் வாழ வழிசமைக்க வேண்டும்.
எமது வன்னிப் பிரதேசத்தில் மின்சாரம் 30 வருடங்களாக சீர்செய்யப்படாமலே உள்ளது. குறிப்பாக மன்னாரில் மின்சாரத்தை நம்பி எந்த வேலையும் செய்யமுடியாது.
மின்சாரத் தடையால் பரீட்சை நேரங்களில் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மன்னாரில் மின் பொறியியலாளர்கள் இல்லாமல்தான் மின்சாரசபை இயங்குகிறது.
உடனடியாக மின் பொறியியலாளர்களை நியமிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகின்றேன்.
வடக்கின் வசந்தம் மூலம் மக்களுக்காக வழங்கப்பட்ட மின்னிணைப்பு எல்லா மக்களுக்கும் சரியாக வழங்கப்படவில்லை. வழங்கப்படாத மக்களுக்கு வழங்கும் படியும் கேட்டுக்கொள்ளுகின்றேன்.
இப்பாராளுமன்ற அவைதனில் நின்று இலங்கை அரசிற்கும் சர்வதேச சமூகத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோளையும் விடுத்திட விரும்புகின்றேன்.
எமது மக்கள் சுயநிர்ணய உரிமையுடனும் இறைமையுடனும், பொருளாதார, சமூக மேம்பாடு உயரவும் வழி சமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகின்றேன்.
எமது மக்களுக்கு நிரந்தர சமாதானம், நிலையானதீர்வு, நின்மதியான வாழ்வு இவற்றிற்காக தொடர்ந்து போராடுவேன். என குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்கள் தங்களைத் தாங்களே ஆளுகின்ற சுயநிர்ணய உரிமை உண்டு: நாடாளுமன்ற அமர்வில் கன்னி உரையில் சாள்ஸ் நிமலநாதன்
Reviewed by NEWMANNAR
on
September 24, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 24, 2015
Rating:


No comments:
Post a Comment