அண்மைய செய்திகள்

recent
-

கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் அதிபர் தரச் சங்கத்தின் எச்சரிக்கை

 கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் வெற்றிகரமான பலன்களைப் பெற வேண்டுமானால், அது குறித்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்களை மேற்கொண்டு நெகிழ்வுத்தன்மையுடன் செயற்பட வேண்டுமென அதிபர் தரச் சங்கத்தின் பொதுச் செயலாளர் நிமல் முதுன்கொடுவ தெரிவித்துள்ளார். 


அவ்வாறான கலந்துரையாடல்களை முன்னெடுக்காமல், ஜனவரி 5ஆம் திகதி முதல் பிற்பகல் 2.00 மணி வரை பாடசாலைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டால், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 

இதன்படி, ஜனவரி 5ஆம் திகதிக்கு முன்னர் இதற்குத் தெளிவான பதிலொன்றை வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

அத்துடன் 6ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் ஏனைய வகுப்புக்களிலும் உயர்தர வகுப்புக்களிலும் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், இப்பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமானால் கல்வித் தொழிற்சங்கங்கள் மற்றும் துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாட வேண்டும் எனவும் நிமல் முதுன்கொடுவ வலியுறுத்தியுள்ளார். 

உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் கலந்துரையாடுவதன் மூலம் நாட்டின் கல்விச் சீர்திருத்தங்களை அமுல்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்தார். 

கல்விச் சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதற்கு முன்னர் பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகள் இருப்பதாகவும், அவற்றைப் பின்பற்றாமல் இறுதியில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்களை முதலில் செய்ய முயற்சிப்பதால் இதனை வெற்றிகொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். 

குறிப்பாக, பாடசாலைகளை பிற்பகல் 2.00 மணி வரை நடத்துவதும், பாடவேளைகளை 50 நிமிடங்கள் வரை நீடிப்பதும் தோல்வியடைந்துள்ளதாகவும், அதனை உடனடியாக மீளப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். 

ஜனவரி 5ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதும் 6ஆம் தரத்திற்கும், ஜனவரி மாத இறுதியில் 1ஆம் தரத்தில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கும் கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ள போதிலும், தற்போது அது பாரிய சிக்கலாக மாறியுள்ளதாக செயலாளர் குறிப்பிட்டார். 

ஏனைய தரங்களுக்கான பாடசாலை நேர அட்டவணைகளைத் தயாரிக்குமாறு கூறப்பட்டாலும், அது இதுவரை நான்கு முறை சுற்றறிக்கைகள் மூலம் மாற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். 

கடந்த ஆண்டுகளில் இந்த காலப்பகுதியில் பாடசாலை நேர அட்டவணைகள் அங்கீகரிக்கப்பட்டிருந்த போதிலும், இந்த ஆண்டு அதற்கான அனுமதியைப் பெறுவதற்கு கல்வி அமைச்சு தேவையான ஒத்துழைப்பை வழங்கவில்லை என அவர் தெரிவித்தார். 

இது அதிபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பிரச்சினையாக மாறியுள்ளதோடு, நேர அட்டவணைகளை அங்கீகரிப்பதற்கான அறிவுறுத்தல்கள் வலய மற்றும் கோட்டக் கல்வி அலுவலகங்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

40 நிமிடப் பாடவேளைகளுக்காகத் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டத்தை 50 நிமிடப் பாடவேளைகளுக்கு அமைய முன்னெடுப்பது சிக்கலானது என்றும், அதனை எவ்வாறு செய்வது என்பது குறித்து கல்வி அமைச்சு இதுவரை எவ்வித அறிவித்தலையும் வழங்கவில்லை என்றும் அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார். 

மேலும், சீர்திருத்தங்கள் தொடர்பான எந்தவொரு தொகுப்புகளும் (Modules) இதுவரை எந்தப் பாடசாலைக்கும் கிடைக்கவில்லை எனவும், இந்நிலையில் ஜனவரி 5ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பித்து கற்பித்தல் நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பதில் பெரும் கேள்விக்குறி நிலவுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.




கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் அதிபர் தரச் சங்கத்தின் எச்சரிக்கை Reviewed by Vijithan on December 28, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.