கல்வி அமைச்சு 2023ஆம் ஆண்டு வரை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு! -
அகில இலங்கை தமிழ்மொழித்தினப் போட்டிகள் இவ்வாண்டு முதல் எதிர்வரும் 2023ஆம் ஆண்டுவரை புதிய சுற்று நிரூபத்திற்கமைவாக நடைபெறும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கென விசேடமாக 35/2018 எனும் புதிய சுற்றுநிரூபத்தை சகல பாடசாலைகளுக்கும் அனுப்பிவைத்துள்ளது.
அதன்படி தமிழறிவு வினாவிடை போட்டி கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் புதிதாக தமிழறிவு வினாவிடை எழுத்து பரீட்சைப்போட்டி அறிவிப்பாளர் போட்டி உள்ளிட்ட 5 நிகழ்ச்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
தமிழறிவு வினாவிடை எழுத்துப்போட்டி ஆரம்பப்பாடசாலை தவிர்ந்த ஏனைய சகல பாடசாலைகளும் (தரம் 6.7. 8 ஆகிய வகுப்புகளுக்கானது) கட்டாயம் பங்குபற்றவேண்டும். அறிவிப்பாளர் போட்டி ஐந்தாம் பிரிவிலுள்ள 12ஆம் 13ஆம் தர மாணவர்கள் பங்கேற்கலாம்.
அதேவேளை ஐந்து சிங்கள நிகழ்ச்சிகள் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
தமிழ்மொழித்தினப்போட்டிகள் 10பிரிவுகளில் 60போட்டிகள் இடம்பெறும். இவை பாடசாலை மட்டம் கோட்டமட்டம் வலயமட்டம் மாகாணமட்டம் ஆகிய நிலைகளில் நடைபெற்று இறுதியாக தேசிய மட்டத்திலும் நடைபெறும்.
சகல தமிழ்மொழிப் பாடசாலைகளிலும் தமிழ்மொழித்தினப் போட்டிகள் கட்டாயம் நடாத்தப்படுதல் வேண்டும். பெப்ரவரி 21ஆம் திகதி சர்வதேச தாய்மொழித்தினம் கொண்டாடப்படுவதோடு அன்றைய தினம் பாடசாலைகளில் பாடசாலைமட்டப் போட்டிகளை நடாத்தவேண்டும்.
பொதுப்பரீட்சை போன்று இப்போட்டிகள் நடாத்தப்படுவதவசியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெப்ரவரி 28ஆம் திகதிக்கு முன்பதாக பாடசாலை மட்டபோட்டி முடிவுகளை வலயக்கல்விப் பணிப்பாளருக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும்.
விதிமுறைகள்!
நடுவர்கள் கையடக்க தொலைபேசி பாவனையை முற்றாக நிறுத்தி அவற்றை இணைப்பாளரிடம் கையளித்தபின்னரே போட்டியை ஆரம்பிக்கவேண்டும்.
தராதரம் தகைமை நன்னெறி மற்றும் அனுபவமுள்ள நடுவர் பட்டியல் போட்டியைப்பொறுத்து உரிய அதிகாரியினால் அங்கீகரிக்கப்படுதல் வேண்டும்.
போட்டிகள் தொடர்பில் பெற்றோரோ மற்றோரோ அரசியல்வாதிகளோ தலையீடு அல்லது முறைப்பாட்டை செய்யமுடியாது.
போட்டிகளை பொறுத்து குறித்த ஆசிரியரோ அதிபரோ வலயக்கல்வி பணிப்பாளரோ மாகாணக்கல்வி பணிப்பாளரோ முறைப்பாட்டை போட்டி முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக எழுத்துமூலம் தகுந்த ஆதாரங்களுடன் பிரதம பதிவாளரிடம் முறையிடவேண்டும்.
ஒரு போட்டியாளர் தனிப்போட்டி ஒன்றிலும் குழுப்போட்டி ஒன்றிலுமாக இரு நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்கேற்கமுடியும்.
தேசியமட்ட போட்டியில் குழு நிலைப்போட்டியில் ஒருமுறைபங்கு பற்றி 1ஆம் 2ஆம் 3ஆம் இடங்களில் ஏதாவது ஒன்றைப்பெற்றிருந்தால் அடுத்துவரும் போட்டியில் பங்குபற்றமுடியாது. எனினும் ஒருவருடத்தடையின்பின்னர் அதற்கடுத்துவரும் போட்டியில் பங்கேற்கலாம்.
ஒரு போட்டியாளர் தனிப்போட்டியொன்றில் ஒருபிரிவில் ஒரு போட்டி இலக்கத்தில் ஒருமுறை மாத்திரமே பங்குபற்றமுடியும்.
இவ்வாறு பல விதிமுறைகள் நிபந்தனைகளுடன் அடுத்துவரும் 5 ஆண்டுகளுக்கு இப்போட்டி நடைபெறவுள்ளது.
இலங்கை அரசாங்கம் முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலாநந்தருக்கு கௌரவமளிக்கு முகமாக இப்போட்டிகள் நடாத்தப்படுவதோடு அவரது சிரார்த்ததினத்தில் தேசியமட்ட விழாவை நடாத்துவதும் குறிப்பிடத்தக்கது.
கல்வி அமைச்சு 2023ஆம் ஆண்டு வரை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு! -
Reviewed by Author
on
February 10, 2019
Rating:

No comments:
Post a Comment