ஒரு மனிதனிடம் செல்வம் மிகுந்துவிட்டால் மட்டும் போதாது! சி.வி.விக்னேஸ்வரன் -
ஒருமனிதனிடம் செல்வம் மிகுந்துவிட்டால் மட்டும் அறப்பணிகளை ஆற்றக்கூடிய தன்மைவந்து விடாது என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இயல்பாகவே, பிறப்பிலிருந்தே ஏனையவர்களுக்கு உதவுகின்ற மனோநிலை வரவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
குப்பிளான் சிவபூமி ஆச்சிரமத்தின் புது வருட அறப்பணி நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “குப்பிளான் சிவபூமிநிலையத்தைப் பற்றியும் அவர்கள் ஆற்றுகின்ற இறைபக்தியுடன் கூடிய அறப்பணி நிகழ்வுகள் பற்றியும் நான் அறிந்திருக்கின்றேன்.
இந்த நிலையத்தை ஒருமுறை வந்து பார்வையிட விரும்பியபோதும் பல்வேறு வேலைகளின் அழுத்தம் நிமித்தம் இங்குவர நேரம் கிடைக்கவில்லை.
எதிர்பாராதவிதமாக இந்நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் அழைப்பு அண்மையில் கிடைத்தபோது மிகவும் மகிழ்வுடன் அதனை ஏற்றுக்கொண்டேன்.
நீண்டகால யுத்தத்தின் விளைவாக சொத்துக்கள், விவசாயபூமிகள், வீடு ,வளவு போன்றவற்றையும் மற்றும் பல இனிய உறவுகளையுந்தொலைத்து விட்டநிலையிலும் எம்மக்கள் தொடர்ந்தும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் என்றால் கருணையுள்ளம் படைத்த எம்முட்பலர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்தவண்ணம் எம்மக்களைத் தாங்கிக்கொள்வதற்காக மேற்கொண்டுவ ருகின்ற இதுபோன்ற அறப்பணிகள், வாழ்வாதார மேம்பாட்டு நிகழ்வுகளே காரணம் என்று சொன்னால் அதுமிகையாகாது.
உயர் திரு.கந்தையாகிருஷ்ணன் அவர்கள் வளம்கொழிக்கும் சிங்கப்பூர் நாட்டில் அஞ்சல் அதிபராகப் பணியாற்றி ஓய்வுபெற்று 102 வயது நிரம்பிய நிலையிலும் தனது உழைப்பின் ஒருபகுதியை இவ்வாறான சமூகமேம்பாட்டு நிகழ்வுகளுக்கென ஒதுக்கி இந்நிகழ்வுகளை வருடாந்தம் முன்னெடுத்துவருகின்றார்.
அதுமட்டுமன்றி இங்குநடைபெறுகின்ற அனைத்து நிகழ்வுகளையும் நேரடியாக video காட்சிகள் மூலம் பார்த்துக்கொண்டிருக்கின்றார் என்றும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது.
ஒருமனிதனிடம் செல்வம் மிகுந்துவிட்டால் மட்டும் அறப்பணிகளை ஆற்றக்கூடிய தன்மைவந்து விடாது. இயல்பாகவே, பிறப்பிலிருந்தே ஏனையவர்களுக்கு உதவுகின்ற மனோநிலை, தமது மண்ணை நேசிக்கின்ற தன்மை, தமது உடன்பிறப்புக்களையும் வாழ்வில் உயரச்செய்ய வேண்டும் என்ற உயரிய சிந்தனைகள் ஆகிய நற்பண்புகள் ஒன்றாக உள்ளத்தில் உதயமாக வேண்டும்.
அப்போதுதான் பிறருக்கு உதவுகின்ற மனப் பக்குவம் இயல்பாகவே வெளிப்படும். குப்பிளான் பிரதேசத்தில் பிறந்த பலரிடம் இவ்வாறான நற்பண்புகள் மிகுதியாக இருந்துள்ளதை நான் பலதடவைகளில் உணர்ந்திருக்கின்றேன்.
இந்தநிலையம் அமைந்திருக்கின்ற வீடு, வளவு அனைத்தும் திரு.ஸ்ரீஸ்கந்தமூர்த்தி அவர்களுக்கு சீதனமாக வழங்கப்பட்ட போதும் திருமதி ஞானா ஸ்ரீஸ்கந்தமூர்த்தி அவர்களின் திடீர் மறைவின் பின்னால் அவரின் ஞாபகார்த்தமாக தமது சொத்துக்களை சிவபூமி அறக்கட்டளை நிலையத்திற்குக் கையளித்து அவர் பொதுப்பணிக்கு வித்திட்டுள்ளார்.
முன்னாள் உதவிக்கல்விப்பணிப்பாளரான திரு.ஸ்ரீஸ்கந்தமூர்த்தி அவர்களின் உயர்ந்த நற்பண்புகளை வெளிக்காட்டுவதற்கு இது ஒருநல்ல உதாரணம்.
இவ்ஆதனம் திரு.வைத்திலிங்கம் அதனைத் தொடர்ந்து திரு.நல்லையா என வழிவழியாக MalayanPensionerகளுக்கே சொந்தமான ஆதனமாக இருந்ததால் இதற்கு Pension வளவுஎனப் பெயரும் உண்டு என அறிகின்றேன்.
இந்தப் பூமிமற்றும் ஐந்தறிவு வரையான உயிரினங்கள் அனைத்தையும் படைத்த இறைவன் இவற்றைப் பராமரித்து உயர்வடையச் செய்வற்கு பகுத்தறிவு படைத்த மனித உயிரினங்களையுந்சேர்த்துப்படைத்தாராம்.
அவ்வாறு தோன்றிய மனிதகுலம் தமதுசெல்வச் செருக்கினாலும் அதிகாரமமதையினாலும் எமது பூமியையே அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லக்கூடிய வழி வகைகளை இன்று வளரச் செய்துவருவது மனவருத்தத்தை அளிக்கின்றது.
இவர்களிடமிருந்து இந்த மண்ணையும் மக்களையும் பாதுகாத்துவளமுறச் செய்வதற்காகத்தானோ என்னவோ கலாநிதி ஆறுதிருமுருகன் போன்ற சில உயர்ந்த உள்ளங்களையும் இறைவன் படைத்துவிட்டிருக்கின்றான் என எண்ணத் தோன்றுகின்றது.
நான் முன்பு குறிப்பிட்டது போல செல்வம் மிகுந்து விட்டால் மட்டும் பரோபகார சிந்தனைகள் வந்துவிடாது. ஆனால் பரோபகார சிந்தனைகள் மேலோங்குகின்ற போது ஏனைய அனைத்துச் செல்வங்களும் அவர்களைவந்து சேரும் என்பதே உண்மை.
இஸ்லாத்தில் ஒருநம்பிக்கை உண்டு. நாம் ஈட்டும் வருமானத்தில் ஒருபங்கை வாராவாரம் சகாத்தாக (Zakath) மற்றவர்களுக்கு ஈய்ந்தால் அச்செயல் எமக்கு பலமடங்கு வருமானத்தைக் கொண்டுவரும் என்று.
அதுபோலத்தான் நண்பர் ஆறுதிருமுருகன் பொதுப்பணிகளைச் செய்யச் செய்ய அவருக்கு மேலும் மேலும் கொடைகள் கிடைத்த வண்ணம் உள்ளன. ஆறு திருமுருகன் அவர்கள் தனியொருமனிதனாக தனியொரு அறக்கட்டளையினூடாக ஆற்றுகின்ற பொதுப்பணிகள் எம்மை மலைக்கவைக்கின்றன.
சிவபூமி அறக்கட்டளை நிலையம், சிவபூமிமுதியோர் இல்லம், சிவபூமி சிறுவர் காப்பகம், அபயம் மருத்துவ நிலையம் என அவரின் பணிகள் நீண்டுசெல்லுகின்றன. அதைவிட தெல்லிப்பழைதுர்க்கை அம்மன் ஆலயத்தைப் பரிபாலிக்கும் பொறுப்பும் அவருடையதே.
நேற்றைய தினம் இயக்கச்சிப் பகுதியில் 20 ஏக்கர் விஸ்தீரனம் கொண்டபெருநிலப்பரப்பில் நாய்கள் காப்பகம் ஒன்றை நிறுவி தெருவில் திரிகின்ற கட்டாக்காலி நாய்களைப் பராமரிப்பதற்காக ஒரு நாய்கள் காப்பகத்தை திறந்துள்ளார் என்று அறிகின்றேன்.
அண்மையில்தான் கட்டாக்காலி நாய்கள் பற்றியும் மாடுகள் பற்றியும் ஆளுனருடன் பேசியிருந்தேன். நண்பர் அதை நடைமுறைப்படுத்திக் காட்டியுள்ளார்.
குறித்த காப்பகக் காணி என் பால்ய நண்பரும் உறவினருமான இந்திரன் பேராயிரவரின் சகோதரியால் வழங்கப்பட்டுள்ளதாக இன்றைய பத்திரிகை வாயிலாக அறிந்தேன்.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வசிக்கின்ற பலர் தமது வீடு வளவுகளை சிவபூமி அறக்கட்டளை நிலையத்திற்கு தொடர்ந்து வழங்கிய வண்ணம் உள்ளார்கள் எனத் தெரியவருகின்றது.
பொதுப்பணிக்குத் தமது சொத்துக்கள் உதவட்டும் என்ற உயர்ந்தநோக்கில் அவர்கள் தமது சொத்துக்களை வழங்கிவருகின்றமை பாராட்டப்பட வேண்டியது.
அதேநேரம் பலர் தமது காணிகளைப் பராமரிக்க முடியாமல் ஆனால் விற்கவோ இனாமாக வழங்கவோ விருப்பமில்லாத நிலையில் வெளிநாடுகளில் வசிக்கின்றார்கள்.
இந்தக் காணிகளைக் கையேற்க வேண்டும் என்று மத்திய அரசாங்கத்தினால் சில காலத்திற்கு முன்னர் கருத்து வெளிப்படுத்தப்பட்டது.
மத்திய அரசாங்கத்தின் கைவசம் சென்றால் என்ன நடக்கும் என்பதை அறிந்து எமது விவசாய அமைச்சோ அதன் உதவியுடன் செயற்படும் ஒரு நம்பிக்கைப் பொறுப்போ இவ்வாறான நிலங்களைக் குறைந்த குத்தகைக்கு எடுத்து அங்கு குறுகியகாலப் பயிர்களை நடலாம் என்று கருத்துத் தெரிவித்திருந்தேன்.
மிகக் குறைந்த குத்தகைப்பணத்தை சொந்தக்கார்களுக்கு வைப்பில் இட்டுவிட்டு அவற்றினால் வரும் மேலதிக வருமானங்களை மேலும் அவ்வூர்களிலேயே அபிவிருத்திச் செயற்பாடுகளுக்குச் செலவுசெய்ய வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்திருந்தேன்.
ஆனால் எனது அலுவலர்கள் அவ்வாறு செய்ய சட்டத்தில் இடமில்லை என்று கூறிவிட்டார்கள். அந்தக் காலகட்டத்தில் மாகாணசபையில் உள்ளக முரண்பாடுகள் ஏற்பட்டதால் இதனைப் பற்றிமேலும் நடவடிக்கை எடுக்கமுடியாமல் போய்விட்டது.
எமது நிலங்கள் பலவற்றை பிறமாகாண மக்கள் பலர் வாங்கிவருவதாகத் தெரிகிறது. தற்போது விற்கவிருப்பம் இல்லாதவர்கள் வருங்காலத்தில் வெளிநாடுகளிலிருந்தே இவற்றைப் பிறமாகாணமக்களுக்கு விற்க நடவடிக்கை எடுக்கக்கூடும்.
அண்மையில் அவ்வாறு நடந்தபோது என் நண்பர் ஒருவரே அந்த உறுதியை முடித்துக்கொடுத்தார். “நீஏன் இவ்வாறான நடவடிக்கைக்குத் துணைபோகின்றாய்” என்று கேட்டபோது “நான் உறுதி முடிக்காவிட்டால் இன்னுமொருவர் அதைச் செய்வார்.
நீங்கள் என் வயிற்றில் அடிக்கப்பார்க்கின்றீர்களே?”என்றார். ஆகவே இவ்வாறான விடயங்கள் சம்பந்தமாக போதிய விழிப்புணர்வு வளரவேண்டும். எமது இளைஞர்கள் பலர் வெளிநாடுகள் செல்கின்றார்கள்.
எமது காணிகள் பல வெளியார்களுக்குக் கைமாறுகின்றன. வெளி மாகாண மக்கள் அந்தக் காணிகளில் தொழில் அமைப்புக்களை உருவாக்கி வெளி மாகாணமக்களை வேலைக்கு அமர்த்துகின்றார்கள். இவை பற்றியெல்லாம் எமக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை.
இவ்வாறான கூட்டங்களில்தான் எமது கரிசனைகளை நாம் வெளிக்கொண்டுவரலாம். நண்பர் ஆறுதிருமுகன் போன்றவர்கள் இது பற்றிச் சிந்தித்து நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
அவரின் அந்தக் கட்டளை குறித்த காணிகள்ப லவற்றைக் குத்தகைக்கு எடுத்துப் பயிரிடலாம் அல்லது வேறுபாவனைகளுக்குப் பாவிக்கலாம். வெளிநாட்டில் உள்ள சொந்தக்காரர்களின் ஒரே கரிசனை தமது காணிகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதே.
அத்துடன் தேவையான போது திரும்பக் கிடைக்கவேண்டும் என்பது. இன்றைய நிகழ்வுகள் சிறப்புறவும் திரு.கந்தையாகிருஷ்ணன் அவர்கள் இன்னும் பலகாலம் தேகாரோக்கியத்துடன் வாழவும் இறையருளை வேண்டிநிற்கின்றேன்.
வெளிநாடுகளில் வசிக்கும் அவர் போன்றவர்கள் தமது தாயக மண்ணைப்பெருமைப்படுத்த, வளம் பெறச்செய்ய அவர் போல் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுக்கொள்கினறேன் ” என தெரிவித்துள்ளார்.
ஒரு மனிதனிடம் செல்வம் மிகுந்துவிட்டால் மட்டும் போதாது! சி.வி.விக்னேஸ்வரன் -
Reviewed by Author
on
April 14, 2019
Rating:

No comments:
Post a Comment