விவேக் சிந்திக்க வைத்த நடிகர்..
வாழ்க்கையிலும் அதுபோலவே வாழ்ந்தவர்.
சூழலியல் குறித்த புரிதல்களோடு மரங்கள் நடுவதிலும், பிறருக்கு உதவுவதில் சமூக சிந்தனையோடு முன் நின்றவர்.
திரைத் துறையில் தமிழின உணர்வும் சமூக உணர்வும் முற்போக்கு சிந்தனையும் உடைய பலருடன் எனக்கு நட்பும் உறவும் உண்டு. தமிழ் மொழி தமிழின உணர்வை பலர் வெளிப்படையாக வெளிப்படுத்திக் கொள்வார்கள். சிலர் வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார்கள். அந்த சிலரில் விவேக்கும் ஒருவர். அவர் திடீர் மறைவு எனக்கு அதிர்ச்சியையும் மனத் துயரத்தையும் அளிக்கிறது.
2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்கால் தமிழின பேரழிப்பிற்குப் பிறகு ஜூலை மாதம் 50 ஓவியங்களோடு "உயிர் உறைந்த நிறங்கள்:ஈழப் போர் ஓவியங்கள்" ஓவியக் காட்சியை சென்னையில் நடத்தினேன். ஓவியக் காட்சியைப் பார்வையிட வந்த நண்பர் ஒருவர், "நடிகர் விவேக் உங்களிடம் பேச விரும்புகிறார்" என்று தன்னுடைய கைபேசியை என்னிடம் கொடுத்தார்.
வியப்புடன் அக் கைப்பேசியைப் பெற்று, வணக்கம் என்று நான் சொன்னதும், "அய்யா, உங்கள் ஓவியக் காட்சி முடிவதற்குள் வந்து பார்த்துவிட வேண்டும் என்று நினைத்தேன். படபிடிப்புக்காக வெளியூரில் இருக்கிறேன். அதனால் வர இயலவில்லை என்று கூறிவிட்டு முள்ளிவாய்க்கால் பேரவலம் குறித்து தன் உணர்வை பகிர்ந்து கொண்டார். அவர் உள்ளுணர்வை அப்போது நான் புரிந்துகொண்டேன்.
எங்கள் உரையாடல் முடிகின்ற நேரத்தில், "உங்கள் தமிழீழம்: நான் கண்டதும் என்னைக் கண்டதும் நூலை வாங்கி வர சொல்லியிருக்கிறேன்.
கையெழுத்திட்டு கொடுத்தனுப்புங்கள்" என்று கூறினார். நண்பர் வாங்கி வைத்திருந்த நூலில் கையெழுத்திட்டு தந்தேன். அது என்றும் என் நினைவில் நிற்கக் கூடியவை..
நேற்றிருந்தவர் இன்றில்லை.
இன்றிருப்பவர் நாளை.....?
பிறப்புக்குப் பின் இறப்பும் நிச்சயம்.
மனிதன் வாழ்கின்ற காலத்தில்
செய்த செயல்களிலும்
படைத்த படைப்புகளிலும்
அவன் வாழ்தல் இருக்கிறது..
விவேக் வாழ்கிறார்...
என்றும் வாழ்வார்..
விவேக் சிந்திக்க வைத்த நடிகர்..
Reviewed by Author
on
April 17, 2021
Rating:

No comments:
Post a Comment