அண்மைய செய்திகள்

recent
-

பெண்கள் கொள்ளி வைக்கலாமா? அபரக்கிரியை செய்யலாமா? பிதிர்க்கடன் ஆற்றலாமா?

பெண்கள் கொள்ளி வைக்கலாமா? அபரக்கிரியை செய்யலாமா? 

பிதிர்க்கடன் ஆற்றலாமா? பெண்களுக்கு தம்முடைய தந்தை அல்லது தாயார் இறந்தபின் அவர்களுக்கு எமது சைவ சமய மரபுப்படி எரியூட்டவோ, செய்யவேண்டிய இறுதிக்கிரியைகள் செய்யவோ உரிமை இல்லை என்ற கருத்து பல காலமாக எம் மக்களிடையே வேரூன்றி இருக்கின்றது. இதை எமது சமயகுருமாரும் கூறி வருகின்றார்கள். ஒருவர் ஆண் சந்ததி இல்லாமல் இறந்துபோனால் அவருடைய ஆண் உறவினர் ஒருவரை நியமித்தே இறுதிக்கிரியைகள் செய்யும் வழமை உள்ளது. ஒரு சில தசாப்தங்களாக பெண்களும் இவ்வாறான கிரியைகளைச் செய்தாலும் இவை அருமையாகவே காணப்படுகின்றன;

விதிவிலக்காகவே கருதப்படுகின்றன. ஆயினும் இந்த பெண்களை இறுதிக்கிரியைகளில் இருந்து ஒதுக்கிவைக்கும் மரபு உண்மையிலேயே எமது சைவ சமய நூல்களில் உள்ளதா என்று பார்த்தால் நமக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும்தான் காத்திருக்கின்றது. இன்று மரபுச் சைவர்கள் கருதிவருவதுபோல பெண்களை இறுதிக்கிரியைகளில் இருந்து சைவம் ஒதுக்கிவைக்கவில்லை

 …………….நவின்ற தகனாதி அவை தனக்கு இங்கு அதிகாரி அவர் இருபதின்மர் ஆன இவர்தம் பெயரும் முறையும் அறைந்திடுவாம்; குவை தரும் சீர்ப் புத்திரன், நன் மனைவி, மகள், அன்பு கூர உடன் பிறந்தான், இங்கு உரைத்த இவர் மைந்தர். 

 கூறுமவன் தாய், அரிய மருமகள், ஓங்கு அன்பு குலவு சகோதரி, அவள் தன் புதல்வன், அருட் சபிண்டர், வீறி சமானோதகர், தாய்(ச்) சபிண்டர், சோதகர், தம் மெய்ப்புதல்வர், சீடன் எனச் சன்வியன், குரவன், கொண்ட பேறுபெறு மருகன், அன்பார் தோழன், அடல் அரசன் பேசும் இவர் என்றறிக; பிறங்கி வரில் உண்மை தேறு, பிரதானன் புத்திரன், ஒழிந்தோர் எல்லாம் சேர் இரண்டாம் பிரதானர் என அறிக தெளிந்தே.

 குறித்த தகனம் முதலிய கிரியைகளுக்கு வரிசையாய் அதிகாரிகள் இருபதின்மர் ஆவர். அவை வரிசைப்படி வருமாறு: 1. புத்திரன் 2. மனைவி 3. மகள் 4. மகளின் புதல்வன் 5. சகோதரன் 6. சகோதரனின் புதல்வன் 7. பிதா 8. மாதா 9. மருமகள் 10. சகோதரி, 11. சகோதரி புதல்வன் 12. பிதிர்வழிச் சபிண்டன் 13. பிதிர்வழிச் சமானோதகன் 14. தாய் வழிச் சபிண்டன் 15. தாய் வழிச் சமானோதகன் 16. சீடன் 17. குரு 18. பெண் கொண்ட மருமகன் 19. தோழன் 20. அரசன். இவர்களுள் புத்திரனே பிரதான கருத்தா, ஏனையோர் இரண்டாம் பிரதானர் ஆவர். 

 ஆசௌச தீபிகை, பாடல் 144, 145 (சிவாகமங்களிற் கண்ட விதிப்படி நெல்லையம்பதி தமிழாகரர் இயற்றியது, துன்னாலை ஆ. சபாரத்தினக் குருக்கள் எழுதிய தாற்பரிய உரையுடன் ) திருவிளையாடற் புராணத்திலும் தடாதகைப் பிராட்டியார் திரு அவதாரப் படலத்திலே அம்பாள் மீனாட்சியாக மதுரையை ஆண்ட காலத்தில் அவர் தந்தை மலையத்துவச பாண்டியன் இறந்தபொழுது தாமே இறுதிக் கிரியைகளைச் செய்ததாகவே திருவிளையாடற்புராணம் கூறுகின்றது. 

 விரதநெறி அடைந்து ஈற்றுக்கடன் பிறவும் தாதைக்கு விதியால் ஆற்றி அரதன மெல்லணை மேற்கொண்டு உலகமெலாம் ஒரு குடைக்கீழ் ஆழ்வாளானாள்…… - பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம், பாடல் 560 சபிண்டர் என்றால் யாவர் என்று இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாது. அதேபோல் தான் சமானோதகர் என்பதும். இங்கு சபிண்டர் என்பது தன்னில் இருந்து தொடங்கி ஏழு தலைமுறை வரை வருகின்ற உறவுகளாகும். ச- என்பது உடனான, சமனான என்று பொருள் தரும். பிண்டம் என்பது உடம்பு. ஒரே விதமான உடலை உடையவர் என்று பொருள். 

அதாவது பெரும்பாலும் ஒத்த பரம்பரை அலகுகளை தம்முடலில் கொண்டவர் என இக்கால அறிவியல் முறையில் கூறலாம். சமானோதகர் என்பது தன்னில் இருந்து எண்ண 8இல் இருந்து 12ம் தலைமுறை வரையுள்ள உறவுகளாகும். இங்கும் சமனான அல்லது ஒரேவிதமான உடல் கொண்டவர் ஆயினும் அவை சற்று தூரத்தில் உள்ளன. உதகம் என்பது குளிர் அல்லது உறை நிலை. ஒரே விதமான பரம்பரை அலகுகள் இருந்தாலும் அவை வெளிப்படையாக அன்றி உறங்குநிலையில் (unexpressed or dormant genes) உள்ளதாக இக்கால அறிவியலின் படி விளக்கலாம். 

 இவர்களுள்ளும் முதல் மூன்று தலைமுறைக்குள் உள்ளவர்களை மிக்க உரிமையாக ஞாதியர் என்று கூறுவர். ஈழத்தமிழ் மரபில் இவர்களை துடக்குக்காரர் எனும் சொல்லால் அழைப்பர். இவர்களுக்கு சடங்குகளில் உரிமை உள்ளதுபோல எமது நன்மை தீமைகளிலும் பங்குண்டு. இறப்பினூடாக நாம் நொடித்துப்போகும்பொழுது எம்மையும், நிர்க்கதியாக நிற்கும் எமது குடும்பம், பிள்ளைகளையும் தாங்கும் பொறுப்பும் உரிமை வரிசையில் முறையாக இவற்றினூடாக அவர்களுக்கு வலியுறுத்தப்படுகின்றது.

 தற்காலத்தின் திரமான சனநாயக அரசமைப்பும், திடமான பொருளாதாரமும் இவ்விதமான குடும்ப, சமூக உறவுகளின் தேவையையும், அவர்களில் தங்கியிருத்தலையும் பிரதியீடு செய்து வருகின்ற வேளையிலும் இவ்விதமான உறவுகளின் தொடர்பையும் தேவையையும் அறிவியல ரீதியாகவும் பார்க்கலாம். இக்கால மருத்துவ சிகிச்சையில் உயிர் காப்பதற்காக உறுப்பு மாற்றுச் சத்திரசிகிச்சை தேவைப்படும்பொழுது சிறுநீரகம், என்பு மச்சை போன்ற உறுப்புகளை இவ்விதமான ஒத்த பரம்பரை அலகுகளைக்கொண்ட உறவினர் தானம் செய்தாலே அது பெறும் நோயாளியின் உடலில் ஏற்றுகொள்ளப்பட்டு சிகிச்சை வெற்றியளிக்கும் சந்தர்ப்பம் அதிகம் உள்ளதை இங்கு ஒப்புநோக்கலாம். 

 எமது நாடும் சமயமும் அன்னியர் ஆட்சியில் ஆட்பட்டபொழுது தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் எனும் நிலையில் பெண்களை வீட்டின் உள்ளேயே வைத்துப் பாதுகாக்கும் முகமாக வழக்கில் வந்த சில கட்டுப்பாட்டு நடைமுறைகள் பின்னர் மருவி ஆணாதிக்கத்தையும், அதன் வழி சொத்துடைமையும் சமூக மரபாக்கும் நோக்கில் வேரூன்றியன எனலாம்.

குருவடி பணிந்து 
இ. லம்போதரன் MD 
சைவ சித்தாந்த பீடம், கனடா

பெண்கள் கொள்ளி வைக்கலாமா? அபரக்கிரியை செய்யலாமா? பிதிர்க்கடன் ஆற்றலாமா? Reviewed by Author on April 22, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.