உக்ரைன் நகரங்கள் மீது ரஷியா மீண்டும் தாக்குதல் பலர் பலியானதாக தகவல்
அங்கு 900-க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பது மானுட சோகமாக மாறி இருக்கிறது. அவர்கள் அத்தனை பேரும் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது நெஞ்சை நொறுக்குவதாக அமைந்துள்ளது. உக்ரைனில் இதுவரை 4,633 பேர் கொல்லப்பட்டிருப்பதாக பதிவு செய்துள்ள ஐ.நா. சபை, இது குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதாக கூறி இருப்பது அடிக்கோடிட்டு காட்டத்தக்கது.
தங்கள் நாட்டின் கிராமங்களை குறிவைத்து உக்ரைன் தாக்கியதாக குற்றம் சாட்டிய ரஷியா, இதற்கு பதிலடி தரப்போவதாக எச்சரித்தது. இந்த நிலையில் தலைநகர் கீவ், லிவிவ் நகரங்களில் ரஷியப்படைகள் நேற்று மீண்டும் தாக்குதல்களை நடத்தி உள்ளன.
கீவ் நகரில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார், பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என மேயர் விட்டலி கிளிட்ச்சோ தெரிவித்தார்.
படுகாயம் அடைந்தவர்களின் உயிரைக்காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருவதாகவும் அவர் கூறினார். பாதுகாப்புக்காக வெளியேறியவர்கள் திரும்பி வரவேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். “ரஷிய ராணுவ தளபதிகள், தலைநகர் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்படும் என மிரட்டினர், அதை செயல்படுத்தியும் உள்ளனர், வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் மக்களை பாதுகாக்க உக்ரைன் முயற்சிக்கிறது” எனவும் அவர் தெரிவித்தார்.
தலைநகர் கீவில் உள்ள ராணுவ தொழிற்சாலை மீதும் ரஷியா ஏவுகணைகளால் தாக்கியது. இதை ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியதாக டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இதையொட்டி ரஷிய ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் கொனாஷென்கோவ் கூறும்போது, “எதிரிகளின் 16 இலக்குகள், உபகரணங்கள், கிடங்குகள், ஆயுத சேமிப்பு தளங்கள் உள்ளிட்டவை துல்லிய தாக்குதல்கள் மூலம் அழிக்கப்பட்டன. தெற்கு உக்ரைனில் மைகோலெய்வில் உள்ள ராணுவ உபகரணங்கள் பழுதுபார்க்கும் பணிமனையும் தாக்கப்பட்டது” என தெரிவித்தார்.
மேற்கு உக்ரைனில் உள்ள லிவிவ் பிராந்தியத்தில் காலை 5.46 மணி தொடங்கி 7.02 மணி வரையில் வான்வழிதாக்குதல் எச்சரிக்கை மணி ஒலித்ததாகவும், வான் பாதுகாப்பு பணிகள் செயல்படுவதாகவும் லிவிவ் ராணுவ கவர்னர் மாக்சிம் கோஸிட்ஸ்கீ தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
லிவிவ் நகரில் காலையில் இருந்தே வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
போர் தொடங்கிய நாள் முதல் ரஷிய படைகள் முற்றுகையிட்டுள்ள மரியுபோல் நகரில் சண்டை தொடர்கிறது. அங்கு ரஷிய துருப்புகள், உடல்களை தோண்டியெடுப்பதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
அது மட்டுமின்றி நாளை (திங்கட்கிழமை) முதல் இந்த நகருக்குள் நுழைவதற்கும், அங்கிருந்து வெளியேறுவதற்கும் வழியின்றி நகரம் ‘சீல்’ வைக்கப்படும் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடகிழக்கு நகரமான கார்கிவில் அடுக்குமாடி குடியிருப்பின்மீது ரஷிய படைகள் நடத்திய குண்டுவீச்சில் 7 மாத குழந்தை உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.
34 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தகவலை பிராந்திய கவர்னர் ஓலே சினேகுபோவ் தெரிவித்தார். தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சன் மற்றும் ஜபோரிஜியா பகுதிகளில் சில குறிப்பிட்ட பகுதிகளை ரஷிய துருப்புகள் ஆக்கிரமித்து பொதுமக்களை பயமுறுத்துவதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டினார். இந்த போரில் உக்ரைன் படை வீரர்கள் 3 ஆயிரம் பேர் பலியாகி உள்ளதாகவும், 10 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ரஷியா மீதான தற்போதைய பொருளாதார தடைகள் வேதனையானவை என்றாலும், அவை ரஷிய ராணுவத்தை தடுத்து நிறுத்த போதுமானவை அல்ல என்றும், ரஷிய எண்ணெய்க்கு ஜனநாயக நாடுகள் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இத்தனைக்கும் மத்தியில் உக்ரைனுக்கு அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் ஆயுதங்கள் வழங்கினால், கணிக்க முடியாத அளவுக்கு விளைவுகள் ஏற்படும் என்று ரஷியா எச்சரித்து இருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ்வில் மீண்டும் ரஷிய படையினர் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் ஒருவர் பலியானதாக அந்த நகர மேயர் விட்டாலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் காயம் அடைந்தவர்களின் உயிரை காப்பாற்ற மருத்துவ குழுவினர் போராடி வருகின்றனர். தலைநகர் கீவ்வில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் என ரஷிய ஜெனரல்கள் எச்சரித்திருந்தது தற்போது உண்மையாகி விட்டது என்றும் கீவ் மேயர் கூறினார்.
உக்ரைன் நகரங்கள் மீது ரஷியா மீண்டும் தாக்குதல் பலர் பலியானதாக தகவல்
Reviewed by Author
on
April 17, 2022
Rating:
Reviewed by Author
on
April 17, 2022
Rating:


No comments:
Post a Comment