கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் – கொழும்பு இராமநாதன் இந்து மகளீர் கல்லூரியின் அதிபருக்கு இடமாற்றம்
கொழும்பு இராமநாதன் இந்து மகளீர் கல்லூரியின் அதிபர் கல்வி அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலையின் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், இந்த இடமாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த பாடசாலைக்கு தற்போது புதிய அதிபர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு குறித்த பாடசாலையில் மாணவி ஒருவர் அந்தப் பாடசாலையின் ஆசிரியரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையின் அடிப்படையில் அதிபர் அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன், தொடர்புடைய ஆசிரியர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
எவ்வாறாயினும், பாதிக்கப்பட்ட மாணவி அண்மையில் உயரமான கட்டிடம் ஒன்றில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் பாடசாலைக்கு முன்பாக பெரும் போராட்டம் முன்னெக்கப்பட்டிருந்தது.
தற்போது மாணவியின் மரணம் தொடர்பில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், விசாரணைகள் மீளவும் ஜூன் 23ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய மூன்று பேர் கொண்ட விசாராணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பவத்துடன், தொடர்புடைய ஆசிரியரும் இப்போது கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment