அண்மைய செய்திகள்

recent
-

நாட்டில் மீண்டும் யுத்த அபாயம் இல்லை - ஜனாதிபதி

 நாட்டில் மீண்டும் எந்த விதமான யுத்தமும் ஏற்படாத வகையில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப தற்போதைய அரசாங்கம் பாடுபடுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 


யாழ்ப்பாணம், மயிலிட்டி மீன்பிடி துறைமுக மேம்பாட்டுத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் இன்று (1) கலந்து கொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி இந்தவிடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

மீனவ சமூகத்திற்குத் தேவையான வசதிகளை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும், வடக்கில் மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் மீனவ சமூகத்திற்குத் தேவையான வசதிகளை வழங்கவும் அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 

மயிலிட்டி மீன்பிடி துறைமுக அபிவிருத்தித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை ஜனாதிபதி அடையாள ரீதியாக தொடங்கி வைத்தார். 

இதன் கீழ், வட மாகாணத்தில் உள்ள மீனவ சமூகம் மாத்திரமன்றி, கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் இருந்து வரும் மீன்பிடி படகுகளுக்கும் நீர், மின்சாரம், எரிபொருள் போன்ற அத்தியாவசிய வசதிகள், குளிர்பதன சேமிப்பு வசதிகள், வலை தயாரிப்பு நிலைய வசதிகள், ஏலவிற்பனை மண்டப வசதிகள் மற்றும் தொடர்பாடல் பரிமாற்ற மைய வசதிகள் என்பனவும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இதற்காக இந்த ஆண்டு அரசாங்கம் 298 மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளது. 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவிக்கையில், பிளவுபட்ட மக்களை ஒன்றிணைப்பதில் வடக்கு மக்கள் ஒரு தீர்க்கமான காரணியாக கடந்த பொதுத் தேர்தலில் இருந்ததாகவும், எதிர்காலத்தில் இந்த ஒற்றுமை மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். 

கடந்த அரசாங்கங்கள் போரை எதிர்பார்த்து பணியாற்றிய போதிலும், இந்த நாட்டில் மீண்டும் எந்த விதமான யுத்தமும் ஏற்படாத வகையில் நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப தற்போதைய அரசாங்கம் பாடுபடுவதாகவும் குறிப்பிட்டார். 

கடந்த போரின் போது பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிற்காக கையகப்படுத்தப்பட்ட வடக்கில் விடுவிக்கக்கூடிய அனைத்து காணிகளும் மக்களுக்காக விடுவிக்கப்படும். 

நாட்டைச் சுற்றியுள்ள கடல், தீவுகள் மற்றும் காணிகளை மக்களுக்காகப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றும், அதில் எந்த விதமான அழுத்தத்திற்கும் இடமளிக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.



நாட்டில் மீண்டும் யுத்த அபாயம் இல்லை - ஜனாதிபதி Reviewed by Vijithan on September 01, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.