அண்மைய செய்திகள்

recent
-

பாடசாலை நேரத்தை நீடிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை – கல்வி அமைச்சு திட்டவட்டம்

 இலங்கையில் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 02 மணி வரை நீடிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என கல்வி அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.


இந்த முடிவுக்கு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையிலும் அமைச்சு இந்த உறுதியை வழங்கியுள்ளது.


தாங்கள் இதில் நிபுணர்கள் அல்ல என்றும், இந்தக் கல்விச் சீர்திருத்தங்களை தேசிய கல்வி நிறுவகம் மட்டுமே வடிவமைப்பதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவேவ கருத்து தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


“தேசிய கல்வி நிறுவகத்தக்கு இந்தத் துறையில் தொழில்நுட்ப நிபுணத்துவம் உள்ளது. அமைச்சு அதனை நடைமுறைப்படுத்தும்.


தேசிய கல்வி நிறுவகம் முதலில் ஒரு பாட நேரத்தை ஒரு மணிநேரமாக நீட்டிக்க முன்மொழிந்தது. ஆனால், நடைமுறைச் சிக்கல்களைக் கருத்திற் கொண்டு, ஒரு பாட நேரம் 50 நிமிடங்களாகக் குறைக்கப்பட்டது.


இதன் காரணமாகவே பாடசாலை நேரத்தை பிற்பகல் 02 மணி வரை நீடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


இந்தச் சீர்திருத்தங்கள் தேசிய கல்வி நிறுவகத்தின் பரிந்துரைகளின்படி செயல்படுத்தப்பட வேண்டும் .


அதன் முக்கியக் கொள்கைகளை மாற்ற முடியாது. தொழிற்சங்கங்களுக்குத் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த உரிமை உண்டு, ஆனால் திட்டமிடப்பட்டதை நம்மால் மாற்ற முடியாது. இந்த நடவடிக்கைகளுக்காக ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட செலவு ஏற்கப்பட்டுள்ளது.


எனவே, பாடசாலை நேரத்தை 02 மணி வரை நீடிப்பதில் மாற்றம் இல்லை. அது அடுத்த வருடம் ஜனவரியில் நடைபெறும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


தற்போது பிற்பகல் 1.30 வரை இருக்கும் பாடசாலை நேரம், இந்தச் சீர்திருத்தத்தின் கீழ் காலை 7.30 முதல் பிற்பகல் 2.00 மணி வரை 30 நிமிடங்கள் அதிகரிக்கப்படவுள்ளது.


இந்நிலையில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் இந்த புதிய கால அட்டவணைக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.


எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதிக்குள் அரசாங்கம் முன்மொழியப்பட்ட கால அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ளப்படாவிட்டால்

புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கையில் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.


இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், தேசிய கல்வி நிறுவகத்தில் உள்ள உரிய தகுதியற்ற தனிநபர்களால் இந்தச் சீர்திருத்தங்கள் தன்னிச்சையாகச் செயற்படுத்தப்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.


2026 இல் நடைமுறைக்கு வரவுள்ள இந்த சீர்திருத்தங்கள், 50 நிமிட நீண்ட பாட நேரங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் கற்றல் சூழலை மேம்படுத்துவதையும், கொவிட்-19 தொற்றுநோய் போன்ற முந்தைய இடையூறுகளால் இழந்த கல்வியாண்டு நேரத்தை ஈடுசெய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




பாடசாலை நேரத்தை நீடிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை – கல்வி அமைச்சு திட்டவட்டம் Reviewed by Vijithan on October 28, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.