அண்மைய செய்திகள்

recent
-

புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் வீட்டிற்கு வந்து அச்சுறுத்தியதாக முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டை "ஏற்றுக்கொள்ள தயக்கம் காண்பித்த பொலிஸார்

 அரச புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட சிலர் தனது வீட்டிற்கு வந்து அச்சுறுத்தியமை தொடர்பில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்யச் சென்ற வன்னியைச் சேர்ந்த தமிழ் அரசியல் செயற்பாட்டாளர் ஒருவருக்கு, பொலிஸாரின் இடையூறுகளையும் எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.


தான் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்த ஒரு குழுவினர் தனது மனைவியிடம் தன்னைப் பற்றிய தகவல்களை விசாரித்ததமை தொடர்பில், முறைப்பாடு செய்வதற்காக ஓகஸ்ட் 12ஆம் திகதி பொலிஸ் நிலையத்திற்குச் சென்றதாகவும், அப்போது தனது முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ள பொலிஸ் அதிகாரிகள் மறுத்ததாகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் (TNPF) வவுனியா மாவட்ட அமைப்பாளர் சுப்பிரமணியம் தவபாலன் தெரிவித்துள்ளார்.

பின்னர், அந்த முறைப்பாட்டைப் பதிவு செய்ய பொலிஸ் அதிகாரிகள் இணங்குவதற்காக, அவர்களுடன் நீண்ட நேரம் விவாதிக்க வேண்டியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


“இந்த அச்சுறுத்தல் தொடர்பாக முறைப்பாடு செய்வதற்காக கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்திற்குச் சென்றபோது, எனது முறைப்பாட்டைப் பதிவு செய்ய முடியாது என முதலில் தெரிவித்தனர். நீண்ட நேர கலந்துரையாடல் மற்றும் விவாதத்திற்குப் பின்னரே இறுதியாக எனது முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.”


தாம் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திலிருந்து அறிக்கை ஒன்றைக் கோரியுள்ளதாகக் கூறி, புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் என தங்களை அடையாளப்படுத்திக்கொண்ட நபர்கள் தனது மனைவியிடம் தகவல்களை விசாரித்ததாக தவபாலன் ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டார்.


“நான் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதாகவும், அது தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி செயலகத்தினால் தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறி, நான் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் எனக் கூறிக்கொண்ட மூவர் முச்சக்கர வண்டியில் வந்து, எனது மனைவியிடம் என்னைப் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.”


2011ஆம் ஆண்டுக்குப் பின்னர் தாம் இவ்வாறான அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் ஏழாவது சந்தர்ப்பம் இது, என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரான அவர் தெரிவித்துள்ளார்.


அச்சுறுத்தல்கள் எந்த வகையில் விடுக்கப்பட்டாலும் தனது பயணத்தைத் தடுத்து நிறுத்த முடியாது என ஊடகவியலாளர்களிடம் தெரிவித்த அரசியல் செயற்பாட்டாளர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் செயற்படும் தற்போதைய அரசாங்கமும், முன்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களைப் போலவே தமிழ் மக்களை ஒடுக்குவது தொடர்பில்  எந்தவித மாற்றமும் இன்றி செயற்படுவதாக,  இந்த சம்பவத்தின் மூலம் தெளிவாகிறது என மேலும் குறிப்பிட்டார்.





புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் வீட்டிற்கு வந்து அச்சுறுத்தியதாக முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டை "ஏற்றுக்கொள்ள தயக்கம் காண்பித்த பொலிஸார் Reviewed by Vijithan on August 21, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.