உயர் மின்னழுத்த மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளான இரு மாணவர்கள்!
வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை பகுதியில், மரம் ஒன்றில் உலர்ந்த விறகுகளை வெட்டுவதற்காகச் சென்றிருந்த இரண்டு பாடசாலை மாணவர்கள், உயர் மின்னழுத்த மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், வட்டவளை பொலிஸாரின் துரிதத் தலையீட்டினால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் வட்டவளை குயில்வத்தை தமிழ் மகா வித்தியாலயத்தில் 7ஆம் மற்றும் 8ஆம் தரங்களில் கல்வி பயிலும் 12 மற்றும் 13 வயதுடைய இரு மாணவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவர்கள் தமது வீட்டிற்கு மேற்புறத்தில் அமைந்துள்ள புதர்க்காட்டுப் பகுதியில் இருந்த மரம் ஒன்றில் உலர்ந்த விறகுகளை வெட்டுவதற்காக ஏறியுள்ளனர்.
இதன்போது, அந்த மரத்திற்கு மேலாகச் சென்றிருந்த உயர் மின்னழுத்த மின்சாரக் கம்பிகள் மரத்துடன் உரசிய நிலையில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக மரம் முழுவதும் மின்சாரம் கசிந்த நிலையில், மரத்தின் மீது இருந்த இரு மாணவர்களுக்கும் திடீரென மின்சாரத் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்தவுடன் வட்டவளை பொலிஸ் அதிகாரிகள் உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று, மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களைப் பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பின்னர் இரு மாணவர்களும் உடனடியாக வட்டவளை பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் துரிதமான தலையீட்டினால் மாணவர்கள் இருவரும் சரியான நேரத்தில் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதால், அவர்களின் உயிரைக் காப்பாற்ற முடிந்ததாகப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Reviewed by Vijithan
on
August 27, 2026
Rating:


No comments:
Post a Comment