அண்மைய செய்திகள்

recent
-

இன்றைய கேள்வி பதில் -31-08-16


கேள்வி:−

எனது குருவாகிய சட்டத்தரணி சுதன் sir உங்களுக்கு எனது வணக்கத்தினையும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.சுயநலம் பார்க்காது இலவசமாக, எமக்காக சமூக சேவை செய்வதற்காக பாராட்டுகின்றேன்.Sir நான் குருணாகலையிலிருந்து சிவோஜினி.sir எனக்கு வீட்டில் திருமணம் பார்க்கிறார்கள்.எனது அப்பா−அம்மா அடிக்கடி சண்டை போடுவார்கள்.அதனை பார்த்து வளர்ந்தமையால் எனக்கு திருமணம் பண்ணவே பயமாக உள்ளது.கணவன்−மனைவி இடையே ஏன் சண்டை வருகிறது sir?அதனால குடும்பத்திற்கு பாதிப்புத்தானே அதிகம்?

பதில்:−

அன்பான சகோதரியே! உங்கள் பெற்றோர் சண்டை பிடித்தார்கள் என்பதற்காக திருமணத்தை வெறுப்பது முட்டாள்தனம்.அனைத்து தம்பதியினரும் சண்டை போடுவதுமில்லை."சண்டை போடாமலிருக்கும் தம்பதியினர் பிரியாமல் இருந்ததுமில்லை".குற்றவியல் ஆய்வின் பிரகாரம் சண்டை போடாமல் இருக்கும் அதிக தம்பதியினரே கணவனுக்கு மனைவியும்,மனைவிக்கு கணவனும் துரோகம் பண்ணுவதாக ஆவ் ஆய்வறிக்கை கூறுகிறது.எனவே தம்பதியினரிடேயே சின்ன சின்ன சண்டையும் தேவைதான்.சண்டை போட்டு பிறகு சமாதானமாகும் போது ஒருவகை சந்தோஷம்,அன்பு பெருகும். அதனை அனுபவித்தவர்களுக்கே அதன் பெறுமதி புரியும்.அதற்காக சண்டை பிடியுங்கள் என்று கூறவில்லை."வீதியில் முள் கிடப்பது பயணத்திற்கு தடையாயினும்,அந்த முள் கவனத்தினை அளிக்கிறது"என்பதே எனது வாதமாகும்.

மனிதனானவன் பிற விலங்கிலிருந்து வேறுபடுவதுடன், அனைத்து ஜீவராசிகளையும் அவன் ஆளுகை செய்கிறான்.அதற்கு காரணம் அவனது ஆறாவது அறிவாகிய "பகுத்தறிவாகும்".ஆனால் மனித உருவத்திலுள்ள அனைவருமே தமது பகுத்தறிவினை பயன்படுத்துகிறார்களா என்பது பிறருடைய சண்டையிலிருந்து புலனாகும்.அது போன்றதொரு விடயமே கணவன்−மனைவி இடையிலான சண்டையாகும்.தெளிந்த எண்ணமுள்ள எந்தக் கணவனும் மனைவியும் சண்டை போட விரும்புவது கிடையாது, இருப்பினும் இதெல்லாம் இந்த உலகத்தில் மிக சகஜம்.


ஒரு குடும்பத்தில் எரிச்சலூட்டுகிற மாதிரி ஏதாவதொன்றை ஒருவர் சொல்கிறார். உடனே சத்தம் ஏழு வீட்டுக்குக் கேட்கிறது, கோபம் தீப்பொறி போல் பறக்கிறது, குத்தலான பேச்சுகள் உணர்ச்சிப் பிழம்பாக பற்றியெரிகின்றன. பிறகு இருவரும் மௌன விரதம் எடுத்துக்கொள்கிறார்கள், துளிகூட வாய்திறக்க மாட்டார்கள் சில நாட்கள். நாளாக நாளாக கோபம் மெதுமெதுவாக தணிகிறது, ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறார்கள். இப்பொழுது சமாதானம் ஆகிவிடுகிறார்கள்.⁠இன்னொரு முறை தகராறு வரும் வரை...ஆனால் அவர்கள் ஒன்றை அறிவதில்லை.."தீப்பொறியாகப் பறந்தது அவர்களுடைய கோபமில்லை. அவர்களுடைய மானம்"

கணவன்−மனைவி இடையே நடக்கும் சின்னச் சின்ன தகராறுகள் சினிமாவிலும், நாடகங்களிலும் வரும்போது அதனை இரசிக்கலாம்.ஆனால் நிஜ வாழ்க்கையில் இதெல்லாம் ஒரு வேடிக்கை அல்ல. சொல்லப்போனால், கடுகடுப்பான பேச்சு உணர்ச்சிப்பூர்மான மனக் காயங்களை ஏற்படுத்திவிடலாம், ஆனால் அதுவே பிற்காலத்தில் நிரந்தரமான பிரிவிற்கான வழியினை தந்துவிடுகான்றன. வாய்ச்சண்டை நின்று வெகு நாட்களுக்குப் பிறகும் அது தொடர்ந்திருக்கும். வாக்குவாதம் வன்முறைக்கும் வித்திடலாம்.

மனிதனுடைய அறியாமையால் மணவாழ்க்கையில் சில சமயங்கள் சண்டை சச்சரவுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாதவையே. "வீட்டுக்கு வீடு வாசலுண்டு" அதுபோல ஒவ்வொரு குடும்பத்திலும் சண்டையானது வழமையாகும்.ஒரு மனிதனுக்கு அதிகமாக மனிதன் எங்குள்ளானோ அங்கு பிரச்சனை வருவது சகஜம்.காரணம் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விருப்பு வெறுப்புண்டு. அதனால் விட்டுக் கொடுப்பிருக்கனும். விட்டுக் கொடுப்பு இருக்குமிடத்தில் சண்டைக்கு வாய்ப்பு குறைவு."எனது மனைவிக்கு எனது விருப்பம்,வெறுப்பு மட்டுமே இருக்க வேணும் என்றும், அது 100% இருக்கனும் என்று நான் நினைப்பது தவறு. எனது விருப்பு,வெறுப்பு எனது மனைவிக்கு 50%இருந்தால் போதும் என்று நினைப்பதே எனது குடும்ப சந்தோஷத்திற்கு நல்லது. என்றாலும், அடிக்கடியும் தீவிரமாயும் வாய்ச்சண்டை போடுவதை சகஜமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.தம்பதியர் ஒருவருக்கொருவர் தினமும் சண்டை போடுவது கடைசியில் விவாகரத்தில் போய் முடிவடையலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆகவே, நீங்களும் உங்களுடைய மணத் துணையும் மனஸ்தாபங்களை சமாதானமாக சரிசெய்ய கற்றுக்கொள்வது முக்கியம்.

சூழ்நிலையை ஆராய்ந்து அதன்படி வாழ பழக வேண்டும். உங்கள் மணவாழ்வில் எப்பொழுது பார்த்தாலும் வாய் தகராறுகள் ஏற்பட்டால், அவையெல்லாம் ஒரே மாதிரி இருக்கின்றனவா என்பதை கண்டுபிடியுங்கள். உதாரணமாக, நீங்களும் உங்களுடைய துணைவரும் ஏதாவதொரு விஷயத்தில் ஒத்துப்போகாத சமயத்தில் என்ன நடக்கிறது? அந்த உரையாடல் சட்டென்று திசைமாறி வசைமொழிகளும் குற்றச்சாட்டுகளும் பறக்கும் ஒன்றாக மாறிவிடுகிறதா? அப்படியானால், நீங்கள் என்ன செய்யலாம்?..முதலாவதாக, அந்தப் பிரச்சினைக்கு தனிப்பட்ட நபராக நீங்கள் எப்படி காரணமாக இருக்கிறீர்கள் என்பதை நேர்மையுடன் தீர்க்கமாக சிந்தித்து ஆராயுங்கள். நீங்கள் எளிதில் கோபப்படுபவரா? நீங்கள் இயல்பாகவே வாக்குவாதம் செய்பவரா? இந்த விஷயத்தில் உங்களைக் குறித்து உங்களுடைய துணை என்ன சொல்வார்? இந்தக் கடைசி கேள்வி சிந்திக்க வேண்டிய முக்கியமான கேள்வி, ஏனெனில் வாக்குவாதம் செய்வதென்றால் உண்மையிலேயே எது என்பதைக் குறித்து உங்களுக்கும் உங்களுடைய துணைக்கும் மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம்.

உதாரணமாக, உங்களுடைய துணை சற்று கூச்ச சுபாவமுள்ளவர், ஆனால் நீங்களோ எதையும் மனந்திறந்து வெளிப்படையாக பேசிவிடுபவர், மிகவும் உணர்ச்சிவசப்படுபவர் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் சொல்லலாம்: “நான் வளர்ந்து வந்த சூழ்நிலையே அப்படித்தான், என் வீட்டிலுள்ள எல்லாருமே அப்படித்தான் பேசுவார்கள். அது வாக்குவாதமே கிடையாது!” ஒருவேளை உங்களுக்கு அது வாக்குவாதமாக தோன்றாமல் இருக்கலாம். ஆனால், அப்படி நீங்கள் ஒளிவுமறைவின்றி நேரடியாகப் பேசுவதைப் புண்படுத்துவதாகவும் தர்க்கம் செய்வதாகவும் இருக்கிறதென உங்களுடைய துணை உணரலாம். அப்படியானால், பேச்சுத்தொடர்பு கொள்வதில் உங்களுக்கும் உங்களுடைய துணைக்கும் மாறுபட்ட பாணி இருக்கிறது என்பதை அறிந்திருப்பதே மனஸ்தாபங்களைப் போக்குவதற்கு உதவும்.

வாக்குவாதம் செய்வதென்றால் எப்பொழுதும் கத்திப் பேசுவதுதான் என நினைத்துக் கொள்ளாதீர்கள். ‘கூக்குரலிடுதல்’ என்பது கத்திப் பேசுவதைக் குறிக்கிறது, அதேசமயத்தில் ‘தூஷணம்’ என்பது பேசப்படும் விஷயத்தைக் குறிக்கிறது. ஆகவே இந்தக் கோணத்தில் பார்த்தால், எரிச்சலூட்டும் விதமாகவோ அல்லது இழிவாகவோ பேசினால், மெல்லிய குரலில் பேசும் வார்த்தைகளும்கூட வாக்குவாதமாக இருக்கலாம்.

மேற்குறிப்பிடப்பட்டதை மனதிற்கொண்டு, உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படுகையில் அதை எப்படி சரிசெய்கிறீர்கள் என்பதை மறுபடியும் ஆராய்ந்து பாருங்கள். நீங்கள் வாக்குவாதம் செய்பவரா? நாம் பார்த்தபடி, இந்தக் கேள்விக்கு உண்மையான பதில் உங்களுடைய துணையின் அபிப்பிராயத்தையே பெரும்பாலும் சார்ந்திருக்கிறது. உங்களுடைய துணை எளிதில் புண்படக்கூடியவர் என்று சொல்லி அவருடைய அபிப்பிராயத்தை ஒதுக்கித் தள்ளுவதற்குப் பதிலாக, அவருடைய கண்ணோட்டத்தில் உங்களைப் பார்க்க முயலுங்கள், தேவையான மாற்றங்களைச் செய்யுங்கள்.ஒன்றை மட்டும் தம்பதியினர் கவனத்தில் கொள்ள வேண்டும்.தனது கோபத்தினை வெளிப்படுத்தி சண்டை போடுவதனால் தங்களுடைய பிள்ளைகள்,குடும்பம், பரம்பரை, உறவினர்கள் மற்றும் சமூகத்தினை பாதிக்கிறது.அதனை உணர்ந்து சண்டை போடுங்கள். 

இத்தனை பாதிப்புக்களும் உள்ள சண்டை தேவைதானா? என்பதனை உணர வேண்டும்.கணவன் மனைவியினுடைய,மனைவி கணவனுடைய விருப்பு,வெறுப்புக்களை இனங்கண்டு திருப்தி கொள்ள வைக்க வேண்டும்."எங்கு எது திருப்தி அடையவில்லையோ அங்கே திருப்பியடையாத தரப்பினரிடேயே விரக்கி,வெறுப்பு ஏற்பட்டு அங்கு பிரச்சனை வெடிக்கும் என்பதே மனித நடத்தையின் ஜதார்த்தமாகும்".


இன்றைய கேள்வி பதில் -31-08-16 Reviewed by NEWMANNAR on August 31, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.