அண்மைய செய்திகள்

recent
-

பிரான்சில் நடைபெற்ற சுருதிகாவின் நடன அரங்கேற்றம்…

தாயகத்தின் யாழ்.மண்ணில் உரும்பிராயைப் பிறப்பிடமாக கொண்ட திரு. திருமதி கந்தசாமி புஸ்பலீலா தம்பதிகளின் அன்புக்குரிய பேத்தி செல்வி சுருதிகா கந்தசாமி தனது பரதநாட்டிய அரங்கேற்றத்தை பிரான்ஸ் சென் பிரிஸ் நகரில் 12.10.2024 சனிக்கிழமை அன்று இனிதே நிகழ்த்தி பலரது பாராட்டுக்களுடன் வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறார்.

சுருதிகா தனது ஐந்தாவது  அகவையில் பரத நாட்டியத்தை கலாவித்தகர் திருமதி ரேணுகா சுரேஷ் அவர்களிடம் கற்க ஆரம்பித்தார். கடந்த 15 வருடங்களாக முறையாக இந்நடனக்கலையை தனது குருவான திருமதி ரேணுகா சுரேஷ் அவர்களிடம் முறைப்படி பயின்று பல மேடைகளில் தனது திறமையை நிரூபித்து பல பரிசில்களை வென்ற சுருதிகா தனது அற்புதமான முகபாவங்களினாலும், தனது தாளம் தவறாத  நுணுக்கமான ஜதிக்கோர்வைகளினாலும் அரங்கத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை கட்டிப் போட்டிருந்ததில் வியப்பொன்றுமில்லை.  இவர் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ‘சலங்கை’ என்ற நடனநிகழ்விலும், ‘தாம் தீம் தகதிமி தாம்’ என்ற நடன நிகழ்விலும் பங்குபற்றி சிறப்புப்பரிசு பெற்றவர்.

மேலும் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ‘வன்னிமயில்’ நடனப்போட்டியில் முதன்முதலாகப் பங்குபற்றி 3வது இடத்தைப் பெற்ற இவர் OFFAL London board நடாத்தும் பரத நாட்டியப் பரீட்சையில் தரம்7 வரை சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளார்.

அது மட்டுமில்லாமல் 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற கிராமிய நடனப்போட்டியில் 1ஆம் பரிசையும், 2021ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து இணையத்தின் மூலமாக நடத்தப்பட்ட நடனப்போட்டியில் பங்குபற்றி ‘ நாட்டியக் கவின்மணி’ என்ற சிறப்புப் பட்டத்தையும் பெற்றுள்ளார். 

கடந்த வருடம் நட்டுவாங்கத்திலும் டிப்ளோமாவை வெற்றிகரமாக நிறைவு செய்த இவர் இந்த வருடம் (2024)  நடைபெற்ற ‘ வன்னிமயில்’ நடனப்போட்டியில் முதல் பரிசையும் வென்றெடுத்து ‘தன்னை ஈன்ற பொழுதில் பெரிதுவந்த தன் தாயாரான நிஷாந்தினி கந்தசாமி அவர்களை ஆனந்த பூரிப்பில் ஆழ்த்தியிருக்கிறார். தனியொரு பெண்ணாக தன் மகளை வளர்த்த சூழலில் ‘ நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையுமாக பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக’ நிஷாந்தினி கந்தசாமி அவர்கள் தனது ஒரே மகளான சுருதிகாவின் மேன்மைக்காக தனது உழைப்பையும் வாழ்நாளையும் அர்ப்பணித்துக் கொண்டவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. தனது தாயாரின் கடின உழைப்பையும் பரதக் கலையில் தனது தாயாருக்கிருந்த ஆழ்ந்த பற்றையும் அரங்கேற்றம் வரை ஆயத்தமாகியும் சூழ்நிலை சந்தர்ப்பம் காரணமாக அரங்கேற முடியவில்லையே என்ற தன் தாயாரின் ஆதங்கத்தையும் நன்கு புரிந்து கொண்ட அன்பான அடக்கமான வைராக்கியமான பெண்ணாகவும் நாட்டிய மயூரியாகவும் சுருதிகா மிளிர்கிறார்  என்பது பாராட்டுக்குரியது. 

அரங்கேற்ற வேளையின் மாலைப் பொழுதினிலே பிரதம விருந்தினாராக கலந்து கொண்ட நோர்வையைச் சேர்ந்த கலாசாதனா கலைக்கூடத்தின் ஸ்தாபகரான கவிதாலக்‌ஷ்மி, சிறப்பு விருந்தினராக சுவிட்சர்லாந்தில் இருந்து வருகைதந்து கலந்து கொண்ட ‘சிதறல்கள் 100’ நூலாசிரியர், படைப்பாளி, பேச்சாளர் யாழ். உரும்பையூர் து. திலக்(கிரி), அபிராமி நாட்டியாஞ்சலியின் ஸ்தாபகரும், நடன ஆசிரியருமான கலாவித்தகர் ரேணுகா சுரேஷ் ஆகியோருடன் மங்கள விளக்கேற்றுதலுடன் சுருதிகாவின் நடனம் அரங்க பூஜையை பொபினி ஶ்ரீ காமாட்சி அம்மன் ஆலய குருக்கள் சிவசுதன் ஐயாவால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தொடரந்து சுருதிகாவின் சகோதரிகளும் அபிராமி நாட்டியாஞ்சலியின் மாணவிகளுமான ஓவியா தயானந், அனாமிகா தயானந் ஆகிய சிறுமிகளால் வரவேற்புரையும், இசை வேளையின் போது முருகனைப் பற்றிய பாடலும் பாடப்பட்டது. புஷ்பாஞ்சலியுடன் ஆரம்பமாகி தொடர்ந்து கண்ட அலாரிப்பு, வஸந்த இராகத்தில் அமையப் பெற்ற ஜதீஸ்வரத்துடன் சூடு பிடித்த நடனம் ‘அம்மா’ மேல் பாடப்பட்டட (கவித்துவம்) கௌத்துவத்தில் சுருதிகா வார்த்தைகளுக்கு ஏற்ப அபிநயித்த பாங்கையும் உணர்வுகளின் பிரதிபலிப்புக்களைத் தன் நயனங்கள் வழியே சபையோரிடம் ரஸமாக சேர்த்து அனைவரின் கண்களையும் கலங்கச் செய்ததை யாரும் வாழ்நாளில் மறக்க முடியாது.

‘ தாயே இருகரம் குவித்தேன் முதற்கண் வணக்கம் உனக்கு; நீயே உலகில் பிறக்கும் வரத்தை கொடுத்தாய் எனக்கு’  என்று கர்ணரஞ்சனி இராகத்தில் கம்பீரமாகவும் அதே சமயம் தாய்ப் பசுவைத் தேடும் கன்றின் கதறலாகவும் கற்கண்டு போன்ற இனிய குரலிலே திரு. யாதவ் யாதவன் அவர்களின் அற்புதமான குரலிலே எழுந்த கவித்துவம் அனைவரையும் கட்டிப்போட்டது. இந்த அற்புதமான குரல் நாதத்துடன் இணைந்த சுருதிகாவின் நடனம் பொருத்தமான அபிநய பாவங்களுடன் சபையினரின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டது ஓர் சுகானுபவம். கவித்துவத்தைத் தொடர்ந்து திரு. யாதவ் யாதவன் அவர்களால் இயற்றி இசையமைக்கப்பட்ட ‘ கான கந்தர்வனே கோபி லோலனே’ என்ற வர்ணம் மூலம் கண்ணனின் லீலைகளைப் பல வர்ணஜாலங்களைத் தனது முகபாவங்களாலும் அபிநயங்களினாலும் சுருதிகா எடுத்துக்காட்டிய பாங்கில் கவித்துவம் கண்டு கலங்கிய கண்கள் எல்லாம் மலர்ந்து மகிழ்ந்தன.

இவ்விடத்தில் பக்கவாத்தியக் கலைஞர்களாக அரங்கத்தை இசை வெள்ளத்தில் ஆழ்த்திய கலைஞர்களின் திறமை போற்றிப் பாராட்டப்பட வேண்டியது. சுருதிகாவின் தாளநடைக்கு மெருகூட்டியவர் மிருதங்க கலாவித்தகர், நுண்கலைமானி திரு. ஶ்ரீ அபிராம் சகாதேவன். மேலும் புல்லாங்குழல் இசை வழங்கியவர் செல்வன். ஹரிசன் மோகனராஜ் மற்றும் வீணை இசை வழங்கியவர் செல்வன். சிவாநுஜன் சிவகுமாரன். இவர்கள் இருவரும் வளர்ந்து வரும் இசைக்கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது திறமை இசைவேளையின் போது அரங்கத்தினரை மிகவும் ஆனந்தமடையச் செய்து அரங்கத்தை கரகோஷத்தால் அதிரச்செய்தது. இவர்களுடன் இசைத்தட்டு வாசித்தவர் திரு. வரதராஜா அர்ஜுன் ஆவார். நிகழ்ச்சியில் நடன ஆசிரியர் கலாவித்தகர் ரேணுகா சுரேஷ் அவர்கள் தனது மாணவர்களான செல்வி ஸ்டெனிசியா சுரேஷ், செல்வன் ஜூலியன் பொண்ணுசாமி இருவரையும் நட்டுவாங்கத்தில் ஈடுபடுத்தி இளம் தலைமுறையினருக்கு ஒரு களம் ஏற்படுத்தி கொடுத்திருந்த விடயம் பலரது பாராட்டுக்களையும் பெற்றிருந்தது.

இந்நிகழ்ச்சி மேலும் 
காமாட்சி கைலைநாதர் மேல் பாடப்பட்ட அழகிய கீர்த்தனம் முருகன் மேல் பாடப்பட்ட பதம் என்று அனைத்து விதமான தெய்வங்களையும் போற்றும் படி அமைந்திருந்தமை கூடுதல் சிறப்பு.

இந்நாட்டிய நிகழ்வில் சிறப்பு நடனமாக ‘ நூலைப்படி’  என்ற பாரதிதாசன் கவிக்கு சிறப்பான ஆக்கபூர்வ நடனஅமைப்பில் சுருதிகா நடனமாடி பலரையும் பரவசப்படுத்தினார். தற்காலக் குழந்தைகள் கைத்தொலைபேசிகளுக்கு அடிமையாகி உண்பதிலும் நாட்டமின்றி, புத்தக வாசிப்பிலும் நாட்டமின்றி பாதை மாறுவதை அன்பாகத் தட்டி உரைத்து அழகிய பாவனைகளுடன் சங்கத் தழிழைப்படி என்று அகம், புறம் பற்றிய நம் தமிழர் உணர்வு வெளிப்பாட்டை அழகுற அபிநயித்துக் காட்டியிருந்தார்.
இத்தகைய அற்புதமான நடனத்தை தொய்வின்றி கலகலப்புடனும் அதே சமயம் அறிவுபூர்வமான உரையாடல்களுடன் தொகுத்து வழங்கிய திரு. ஜஸ்ரின் தம்பிராசா அவர்களுக்கும், அழகிய தரமான நிழற்படங்கள், வீடியோ பதிவுகளை வழங்கிய திரு. சிறில் ராஜபட் அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். இந்நிகழ்ச்சியில் பங்குபற்றிய சிறப்பு விருந்தினர் திரு. து. திலக்(கிரி) அவர்கள் தனது சிறந்த பேச்சாற்றலுடன் சுருதிகாவிற்கு சரியான அங்கீகாரத்தை சுருக்கமான மேடைப்பேச்சால் அளித்து சுருதிகாவின் குடும்பத்தையும் சபையோரையும் மனநிறைவடையச் செய்திருந்தார். இவ்வாறான ஒரு நல்ல நாட்டிய நிகழ்வு விஜயதசமி நன்னாளில் பிருந்தாவன சாரங்கா இராகத்தில் அமைந்த தில்லானாவுடன் சற்றும் களை குன்றாமல் இனிதே நிறைவேறியது.

ஆக்கப் பகிர்வு:-
து.திலக்(கிரி),
யாழ்.உரும்பையூர்/சுவிட்சர்லாந்து.














பிரான்சில் நடைபெற்ற சுருதிகாவின் நடன அரங்கேற்றம்… Reviewed by Author on October 23, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.