அண்மைய செய்திகள்

recent
-

இடம்பெயர்ந்தவர்களது 23 ஏக்கர் காணி வெளியார்களால் அபகரிப்பு....


புத்தளம் நகரில் புத்தளம் பிரதேசச் செயலாளர் பிரிவிற்குட்பட்ட நிந்தனிக் கிராமத்தில் மன்னார் மூர்வீதி முஸ்லிம் மக்களினால் சொந்தப் பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட 23 ஏக்கர் காணி புத்தளத்தில் உள்ள ஒருசிலரால் அபரிக்கப்பட்டுள்ளது.

1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வடமாகாணத்தில் இருந்து விடுதலைப் புலிகளால் வடமாகாணத்தை விட்டு விரட்டப்பட்ட முஸ்லிம் மக்கள் புத்தளம் உள்ளிட்ட வடமாகாணத்திற்கு வெளியே பலபகுதிகளில் அகதிகளாக தஞ்சமடைந்து இன்று வரை வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறு சுமார் 26 வருடங்களாக அகதிகளாக வாழும் வடமாகாண மக்களில் பெரும்பகுதியினர் புத்தளத்தையே தஞ்சமாகக் கொண்டு அந்த மக்களின் அரவணைப்பில் வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறு வாழ்ந்து வரும் மக்களில் பலர் அகதி முகாம்களில் வாழ்ந்து வந்த நிலையில் தத்தமது சுய உழைப்பின் பெயரில் தமது குடும்பங்களை வாழ வைப்பதற்காக தமது வசதிகளுக்கு ஏற்ப ஐந்து அல்லது பத்துப் பேர்ச்சஸ் காணிகளைக் கொள்வனவு செய்து ஒருசிலர் ஓலைக் குடிசைகளையும் மற்றொரு சாரார் தமது வசதிக்கு ஏற்ப சிறுசிறு கல்வீடுகளையும் கட்டி வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறு வடமாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தமது கிராமங்களின் அடிப்படையில் புத்தளத்தில் ஒவ்வொரு பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறு வாழ்ந்து வருபவர்களில் மன்னார் மூர்வீதியைச் சேர்ந்த முஸ்லிம் மக்களும் தமது கிராமத்தை அடையாளப்படுத்தவதற்காக புத்தள நகரப் பகுதியில் குருநாகல் வீதியில் நிந்தனி எனும் பகுதியில் 1997ம் ஆண்டு தனிநபர் ஒருவரின் பூர்வீக இடத்தில் சட்ட ரீதியாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 11101 எனும் இலக்க உறுதி மூலம் பெறப்பட்ட சுமார் 23 ஏக்கர் காணியை மன்னார் மூர்வீதி மக்களின் சமுக முன்னேற்ற அமைப்பு (ஓ.எஸ்.யு) சட்ட ரீதியாக் கொள்வனவு செய்தனர்.

மேற்படிக் காணியை 1997.01.21ம் திகதி சட்டத்தரணி முஹமட் ஸப்ரி நிலாம்டீன் என்பவரினால் பள்ளிவாசல், பாடசாலை மற்றும் பொது மண்டபங்கள் உற்பட ஒரு நபருக்கு 10பேர்ச்சஸ் படி சுமார் 276 பேருக்கு அக்காணி தனித்தனியாக அவரவர் பெயரில் உறுதி எழுதப்பட்டு வழங்கப்பட்டன.

இவ்வாறு வழங்கப்பட்ட காணியில் சுமார் 15 குடும்பங்கள் வரை அப்பகுதியில்சிறிய வீடுகளைக் கட்டி வாழ்ந்து வருவதுடன் பள்ளிவாசல் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது மேலும் சிலர் அரைகுறையாக வீடுகளைக் கட்டியுள்ளதுடன் பலர் வருமாணக் குறைவு காரணமாக வீடுகளைக் கட்டிக் கொள்ள முடியாத நிலையில் பல வருடங்கள் கடந்துள்ள நிலையில் அப்பகுதியில் தத்தமது காணிகளை எல்லையிட்டிருந்த நிலையிலும் பாராமறிப்பு சரியாக இடம்பெறாத காரணத்தால் சிறு பற்றைக்காடுகள் வளர்ந்து அந்த மக்களும் அதனைக் கண்டு கொள்ளாதிருந்தனர்.

இவ்வாறான நிலையில் புத்தளம் மற்றும் தில்லையடிப் பகுதியைச் சேர்ந்த ஒருசிலர் சில அரசியல் பின்புலங்களை கொண்டு அந்தக் காணிகளை புல்டோசர்கள், பெக்கோ இயந்திரங்கள் கொண்டு காணிகளின் எல்லைககளையும், பற்றைக் காடுகளையும் தள்ளியும் அங்கு கட்டப்பட்டிருந்த கட்டிடங்களையும், அத்திவாரங்களையும் இடித்து புதிதாக வேலிகள் அமைத்து அவற்றை தமது காணிகள் என்று கூறுவதுடன் அந்த மக்களை அப்பகுதிக்குள் செல்ல விடாது அச்சுறுத்தியும் வருகின்றனர்.

இதனை அறிந்த ஏனைய மக்கள் அங்கு சென்று பார்த்த போது விடயம் உண்மையாக இருப்பதையிட்டு புத்தளம் பொலிசில் மேற்படிக் காணிகள் அபகரிக்கப்பட்டமை தொடர்பாக பலர் முறைப்பாடுகளைச் செய்துள்ளனர்.

முறைப்பாட்டின் பின்னர் பொலிஸாரிடம் கேட்டால் பொலிஸார் காணிக்குள் சென்று நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது எனக் கையை விரித்துள்ளதுடன் வழக்குத் தொடருமாறும் கூறிவிட்டனர்.

பொலிஸாரின் இக் கூற்று பாதிக்கப்பட்ட மக்களை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளதுடன் என்ன செய்வதென்று தெரியாது அங்கலாய்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக ஓ.எஸ்.யு அமைப்பு கொழும்பில் கடந்த மாதம் ஒரு கூட்டத்தைக்கூட்டி கலந்துரையாடிதற்கு அமைவாக காணியுள்ள அணைவரையும் கடந்த மார்ச் 4ம் திகதி நிந்தனிக்கு அழைத்து கூட்டம் ஒன்றை நடாத்தியதுடன் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி, அமைச்சர் றிஷாத் பதியுதீன் பணிப்பின் பெயரில் குறித்த இடத்திற்கு வருகை தந்து அந்த மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து புத்தளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று தலைமைப் பொலிஸ் அதிகாரியுடன் கலந்துரையாடிய பின்னர் பாதிக்கப்பட்டவர்களை முறைப்பாடு செய்து வழக்குத் தாக்கல் செய்யும்படியும் கூறியுள்ளார்.

குறித்த பகுதியில் காணியை அபகரித்த குண்டர்களை கைதுசெய்யாமல் வழக்குத் தாக்கல் செய்யச் சொன்னதால் மக்களுக்கு பொலிஸார் மீது நம்பிக்கையற்றுள்ளதுடன் ஒவ்வொரு வரும் 10 பேர்ச்சஸ் காணிக்காக தனித்தனியாக வழக்குப் போட்டு தேவையற்ற செலவுகளும், கால நேரங்களுமே ஏற்படும் என்றும் பொலிஸார் சரியான முறையில் அப்பகுதிக்கு பாதுகாப்பு வழங்கி அக்காணிகளை அந்த மக்களை வேலிகள் அடைக்க நடவடிக்கை எடுத்தால் நல்லது என்ற விடயத்தைச் சுட்டிக்காட்டியும் எந்தவிதப் பயனுமில்லாது போய் விட்டதுடன் மக்கள் கவலை கொண்டுள்ளனர்.

பொலிஸார் சரியான முறையில் சட்டத்தை நடைமுறைப்படுத்தி அப்பகுதியில் ஒரு பாதுகாப்பு அரணைப் போட்டு அந்தக் காணிகளை மீட்டெடுக்க முடியும் ஆனால் இது விடயத்தில் பொலிஸார் பின்வாங்குகின்றனர்.

இது விடயத்தில் அமைச்சர் றிஷாத் உள்ளிட்ட முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் உடன் கவனம் செலுத்தி அந்தக் காணிகளை மீட்டுத் தருமாறு விநயமாகக் கேட்கின்றனர்.

இடம்பெயர்ந்தவர்களது 23 ஏக்கர் காணி வெளியார்களால் அபகரிப்பு.... Reviewed by Author on March 11, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.