அண்மைய செய்திகள்

recent
-

யுத்தம் முடிந்து 8 வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும் மக்களின் பிரச்சினைகள் தீரவில்லை! யாழில் ஜனாதிபதி...


எமக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்த வடக்கு, தெற்கு மற்றும் வெளிநாடுகளில் உள்ள நிறைய பேர் சதி செய்கின்றனர்.

இதனை பேஸ்புக் ஊடாக அவதானிக்க முடியும். குறிப்பாக நான் பேஸ்புக் பார்ப்பதும் இல்லை. இது போன்ற விடயங்களை தொடர்ந்து பார்ப்பதால் ஒரு பயனும் இல்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழில் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு இன்று சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன “ஜனாதிபதிக்கு தெரிவியுங்கள்” எனும் மக்கள் குறைகேள் நிலையத்தை திறந்து வந்துவிட்டு உறையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இன்று உங்கள் பிரதேசத்திற்கு வருகை தந்ததையிட்டு பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் முதல் வாரத்திலேயே யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்ய தீர்மானித்திருந்தேன்.

ஜனவரி நான்கு அல்லது 7ம் திகதிகளிலேயே இந்த நிகழ்வு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் சில காரணங்களால் எனக்கு வர முடியாமல் போய்விட்டது.

எனினும் இரு மாதங்கள் கடந்து உங்களை சந்தித்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். யாழ்ப்பாணத்தில் இன்று புதிய ஒரு திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.

இந்த “ஜனாதிபதிக்கு தெரிவியுங்கள்” எனும் மக்கள் குறைகேள் நிலையத்தின் மூலம் யாழ் மக்களுக்கும் எனக்கும் இடையிலான தொடர்பு வலுப்பட போகின்றது.

நாம் எந்த சந்தர்ப்பத்திலும் பிரிந்து செயற்பட கூடாது. நாம் எப்போதும் ஒன்றாக கைகோர்த்து கொண்டு இருக்க வேண்டும். இதன் மூலமே ஒருவருடைய பிரச்சினையை மற்றையவர் அறிந்து கொள்ள முடியும்.

பிரிந்து செயற்பட்டால் பிரச்சினைகளை அறிந்து கொள்வது கடினமாக இருக்கும்.பிரிந்து செயற்படும் போது ஒருவரை ஒருவர் தப்பான கோணத்தில் பார்க்கின்றோம். இதை தவிர்க்க வேண்டும்.

எனவே இந்த “ஜனாதிபதிக்கு தெரிவியுங்கள்” என்ற திட்டத்தின் மூலம் உங்களுடைய அனைத்து பிரச்சினைகளையும் எனக்கு தெரியப்படுத்தலாம்.

எமக்கு மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்திக்கொள்ள கூடாது.யுத்தம் முடிவடைந்து எட்டு வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும் மக்கள் மத்தியில் உள்ள பிரச்சினைகள் தீரவில்லை.

யுத்த முடிவடைந்துள்ள போதும் நாட்டு மக்கள் மனதளவில் வேறுப்பட்டு செயற்படுகின்றார்கள். ஒன்றாக பயணிக்கின்றார்கள். ஒரே மேசையில் இருந்து உணவு உண்ணுகிறார்கள். விளையாடுகின்றார்கள்.

ஆனால் மனதளவில் இவர்கள் ஒன்றுபட்டு செயற்படவில்லை.மனதளவில் எல்லோரும் ஒன்றுபட்டு செயற்படாமல் இருந்தால் செய்யும் அனைத்து விடயங்களும் பொய்மையாகி விடும்.

இனம், மதம், மொழி, கட்சி அரசியல் பிரதேசவாதம் பார்த்து பழகக் கூடாது. எல்லோரும் மனதளவில் ஒன்றாக வாழவேண்டும்.

advertisement
எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே அனைத்து மதங்களின் போதனைகளாக இருக்கின்றன. மதங்களின் தத்துவங்களை கவனத்தில் கொண்டு ஒற்றுமையாக வாழ வேண்டும்.

இதனால் தான் ஜனாதிபதி செயலகம், பாராளுமன்றம், மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள் என அனைத்தும் ஒன்றாக சேர்ந்து செயற்பட வேண்டும் என்கிறேன்.

கடந்த இரு வருடங்களில் வடக்கின் அபிவிருத்திக்கு பெருந்தொகையான பணத்தை வழங்கினோம். ஒரு பிரிவினர் அபிவிருத்தி பணிகளை செய்துள்ளனர்.

ஆனால் ஒரு பிரிவினர் அந்தப் பணத்தில் ஒன்றும் செய்யவில்லை. அந்த பணம் கொழும்புக்கு மீண்டும் அனுப்பப்பட்டுள்ளது.

உங்கள் பிரதேசங்களுக்கு வருகின்ற பணம் மற்றும் வளங்களை மக்கள் மத்தியில் முழுமையாக கொண்டு செல்ல வேண்டும்.

குறிப்பாக இப்போது வேலையில்லா பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் செய்வதாக கேள்விப்பட்டேன். பட்டதாரிகள் அனைவருக்கும் அரசாங்க வேலை வழங்குவது என்பது சாத்தியமற்றது.

தனியார் துறையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புக்கள் உள்ளன. அதில் பட்டதாரிகளுக்கு ஏற்ற தொழில்களும் உள்ளன.

வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யாமல் இன்று வந்து என்னோடு கதைத்து இருந்தால் இன்றே 10 பேருக்கு வேலை வாய்ப்பை பெற்று கொடுத்திருப்பேன்.

இந்த புதிய அலுவலகத்திலோ அல்லது எனது அலுவலகத்திலோ வேலை பெற்று கொடுத்திருக்க முடியும்.எந்தப் பிரச்சினையையும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். இதுவே எனது விருப்பம்.

என்னை சந்திப்பது கடினமான விடயம் இல்லை. என்னையும் எந்த நேரத்திலும் சந்திக்கலாம். எனது வீட்டு கதவு எப்போதும் திறந்து இருக்கும்.

குறிப்பாக கொழும்பில் உள்ள எனது வீட்டுக்கு நாள் ஒன்றுக்கு 150க்கும் மேற்பட்டோர் என்னை சந்திக்க வருவார்கள்.

இயலாதவர்கள் “ஜனாதிபதிக்கு தெரிவியுங்கள்” எனும் இந்த மக்கள் குறைகேள் நிலையத்தின் ஊடாகவும் சந்திக்கலாம். பிரச்சினைகளையும் தெரிவிக்கலாம்.

வடக்கில் மாத்திரமல்ல கொழும்பிலும் நாள் ஒன்றுக்கு 7க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. சில நேரம் தேவையற்ற விடயங்களுக்கும் ஆர்ப்பாட்டங்கள் உண்ணாவிரதங்கள் இடம்பெறுகின்றன.

தேவையற்ற விடயங்களுக்கு ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் உண்ணாவிரதங்களை மேற்கொள்ளும் போது ஆரப்பாட்டம் உண்ணாவிரதத்தின் பெறுமதி இல்லாமல் போய்விடுகின்றது.

நான் இனி மூன்று மாதங்களுக்கு ஒரு தடவையாவது யாழுக்கு விஜயம் மேற்கொள்ள தீர்மானித்துள்ளேன்.

advertisement
இதன் மூலம் உங்களுக்கும் எனக்கும் உள்ள நெருக்கம் அதிகரிக்கும்.

குறிப்பாக முன்னைய ஆட்சியில் இதுபோன்ற ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று உங்களுக்கு தெரியும்.

வெள்ளை வானில் வந்து தூக்கிச் சென்றிருப்பார்கள்.ஆனால் இப்போது அவ்வாறு இல்லை. சுதந்திரம் உள்ளது. அதனால் தான் இவ்வாறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.

ஆர்ப்பாட்டம் செய்வது தவறில்லை. அதனைவிட பிரச்சினையை கலந்தாலோசித்து தீர்ப்பது சிறப்பானதாக இருக்கும்.

எனவே இளைஞர்கள் இதனை புரிந்துகொள்ள வேண்டும்.

எம்மை பிரிப்பதற்கு வடக்கிலும் தெற்கிலும் நாட்டுக்கு வெளியிலும் பலர் செயற்படுகின்றனர். இதனை பேஸ்புக் ஊடாக அவதானிக்க முடியும். நான் பேஸ்புக் பார்ப்பதில்லை. அதனால் ஒரு பயனும் இல்லை.

எனவே நாம் அனைவரும் பேதம் மறந்து ஒன்றாக செயற்பட வேண்டும். மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாமல் இருக்க வேண்டும்.

மேலும் இரு மாதங்களுக்கு ஒரு தடவை அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை தனது அதிகாரிகளுடன் அனைத்து அமைச்சர்களும் யாழ்ப்பாணத்துக்கு செல்ல வேண்டும் என உத்தரவு பிறப்பிப்பேன்.

இதன் மூலமும் உங்கள் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும் என்றார்.

யுத்தம் முடிந்து 8 வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும் மக்களின் பிரச்சினைகள் தீரவில்லை! யாழில் ஜனாதிபதி... Reviewed by Author on March 05, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.