அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை மனித உரிமைகள் நிலை குறித்து பிரிட்டன் பாராளுமன்றில் சிறப்பு விவாதம்!


இலங்கையின் மனித உரிமைகள் நிலை தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று சிறப்பு விவாதம் ஒன்று இடம்பெற்றது. இதில் இலங்கை வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று காரசாரமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவரான கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் பெரி இந்த விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றினார்.

இலங்கையில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், 2015ம் ஆண்டு இலங்கை அரசாங்கம் வழங்கிய பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் பாதுகாப்பு, நல்லிணக்கம் தொடர்பான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று அவர் கரிசனை வெளியிட்டார்.

போர்க்குற்றங்கள் தொடர்பான நீதிப் பொறிமுறைகளை உருவாக்குவது குறித்த கால அட்டவணை எதையும் இலங்கை கொண்டிருக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

இந்த விவாதத்தின் போது, போர்க்குற்றங்கள் தொடர்பான நீதிப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதற்கு இலங்கை மறுப்புத் தெரிவித்து வருவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

வெளிநாட்டு நீதிபதிகள், சட்டவாளர்கள், வழக்குத் தொடுனர்களை அனுமதிக்க முடியாது என்று இலங்கை ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் தெளிவான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அவர்கள் முற்றிலும் உள்நாட்டு பொறிமுறை ஒன்றையே அமைக்கப் போவதாக கூறியுள்ளனர்.

இலங்கை இராணுவத்தைப் பாதுகாப்போம் என்று மூத்த அமைச்சர்கள் கூறியுள்ளனர் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் பெரி சுட்டிக்காட்டினார்.

இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹியூகோ ஸ்வயர், மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இலங்கை அரசாங்கம் நுட்பமான சமநிலை ஒன்றைப் பேண முயற்சிப்பதாக குறிப்பிட்டார்.

இலங்கையில் தேசிய ஒற்றுமை அரசாங்கம் இல்லாவிட்டால், அங்கு எந்த முனையிலும் முன்னேற்றத்தை பார்த்திருக்க முடியாது.

நாங்கள் கூறுகின்ற எல்லாவற்றையும், செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கும், வாதிடுவதற்கும் முன்பாக, இலங்கையின் உள்நாட்டு அரசியல் நிலவரங்கள் குறித்து பரந்தளவிலான புரிதல் இருக்க வேண்டியது அவசியம் என்று ஹியூகோ ஸ்வயர் தெரிவித்தார்.

இந்த விவாதத்தில் உரையாற்றிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் விவகாரங்களுக்கான அடிநிலைச் செயலர் ரொபியாஸ் எல்வூட், 30/1 தீர்மானத்தில் உறுதியளித்தபடி பல வாக்குறுதிகளை இலங்கை இன்னமும் நடைமுறைப்படுத்தவில்லை. எனினும், வாக்குறுதிகளை நிறைவேற்ற மேலும் காலஅவகாசம் தேவைப்படுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

30/1 தீர்மானத்தின் தொடர்ச்சியாக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வருவது குறித்து இலங்கையுடனும், மூலத் தீர்மானத்தை முன்வைத்திருந்த ஏனைய நாடுகளுடனும் பிரித்தானியா கலந்துரையாடி வருகிறது.

எஞ்சியுள்ள வாக்குறுதிகளை இலங்கை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்ற வழிகாட்டும் கொள்கையின் அடிப்படையிலேயே எமது கலந்துரையாடல்கள் அமையும்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உயர் மட்டப் பேச்சுக்கள் மற்றும் திட்ட நிதியை வழஙகுவதன் மூலம், இலங்கையின் முன்னேற்றங்களை ஊக்குவிக்க வேண்டும்.

அரசியலமைப்பு சீரமைப்பில் இலங்கை அரசாங்கம் முன்னேற்றங்களை எட்ட வேண்டும். எதிர்கால உறுதிப்பாடு மற்றும் செழிப்புக்காக அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்.

காணிகள் மீள ஒப்படைக்கப்பட வேண்டியது மிகவும் முக்கியம். வடக்கு -கிழக்கில் இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டுள்ள தனியார் காணிகள் மீள ஒப்படைக்கப்பட வேண்டும் என்று பிரித்தானியா தொடர்ந்து கோரி வருகிறது. அதனை நாம் தொடர்ந்து செய்வோம்.

காணாமல் போனோர் பணியகத்தை உருவாக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அதற்குத் தேவையான நிதியை வழங்குதல் மற்றும் அதனை செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இலங்கை மனித உரிமைகள் நிலை குறித்து பிரிட்டன் பாராளுமன்றில் சிறப்பு விவாதம்! Reviewed by Author on March 01, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.