அண்மைய செய்திகள்

recent
-

ஈழத் தமிழனாகப் பிறந்ததன் பெரும்பேறு கண்டுற்றேன்.....


“...இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே என்பார் திருநாவுக்கரசர்.

மனிதப் பிறவி  எடுத்ததன் பேற்றை இயம்பு வதுதான் அவரின் நோக்கம். நம் நோக்கமும் அதுவாயினும் அவர் குறிப்பிடும் பேறும் நாம் குறிப்பிடும் பெரும் பேறும் வேறுபட்டவை. அவர் இறைதாளைக் காண்பது பேறு என்பார்.

நான் எங்கள் தமிழினத்தின் உணர் வெழுச்சி காண்பதே பேறு என்பேன்.
ஆம், வடக்கின் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை தமிழரசுக் கட்சி கொண்டு வந்தபோது,

அது கண்டு எம் தமிழினம் பதறியடித்ததை; எம் இளைஞர்கள்  வீறுகொண்டெழுந்ததை கண்ணுற்ற போது இதுவே  ஈழத் தமிழனாகப் பிறந்ததன் பெரும் பேறு என்றுணர்ந்தேன்.

நேர்மையான - நீதியான - தமிழினத்தின் நம்பிக்கை  நட்சத்திரமாக -  ஈழத் தமிழினத்தின் தலைவனாக இருக்கும் வடக்கின் முதலமைச் சர் விக்னேஸ்வரனின் பதவியைப் பறிக்க பதறுகள் முடிவு செய்தன என்ற போது,

ஒரு கணப்பொழுதில் வடக்கு மாகாணம் முடங்கியது. யாரும் எங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. எங்கள் தலைவனுக்காக  நாங்களே கடைகளைப் பூட்டுகிறோம்; போக்குவரத்துச் சேவையை நிறுத்துகிறோம்; பாடசாலைகள், கல்விச்சாலைகள் எதுவும் இயங்கா! என்றுரைத்து ஒருகணப்பொழுதில் வடக்கு மாகாணத்தை ஒட்டுமொத்தமாக முடங்கச் செய்த தமிழ் மக்களின் காலம் உணர்ந்த செயல்கண்டு,

ஓ...! பெற்றேன் ஈழத் தமிழனாய் பிறந்ததன் பேறு என்றுணர்ந்தேன். பெறற்கரிய மானிடப் பிறப்பிற்கு இப்பேறு போதுமா? என்ற குறை ஏற்பட்டால்,

இதனையும் ஏற்றிடுக! என்பது போல், நேற் றைய தினமே நல்லூரில் அலையெனத் திரண்ட மக்கள், தலைவா! எதைக் கொடுத்தும் உனைக் காப்போம் என்று உணர்வுபூர்வமாக  - மனப்பூர்வமாக அண்டம் அதிர,

வானுலகத்தார் இஃதென்ன வடக்கில் பேரெழுச்சி என்று எட்டிப் பார்த்து பிரமிக்க,

ஐயகோ! எந்தப் பிரகிருதிகள் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து,

பழுத்த தமிழரசுக் கட்சியை விழுத்த முயற்சி எடுத்தார் என்று; அக்கட்சிக்குள் குறையும் குற்றமும் கொப்பளிக்க,

விட்டிடு... விட்டிடு... விசர் வேலை, பார்த்த தெல்லாம் அதுதான் என்று கூட்டமைப்பின் தலைவர் குறையளக்க,

சித்தார்த்தா, சிறிதரா, நிர்மலநாதா தூது செல்லுங்கள். கட்சிக்கு ஏற்பட்ட களங்கத்தை; மக்களின் கடும் எதிர்ப்பை சமாளிக்க, விழுந்தாலும் ரோசமும் மானமும் இல்லா மீசையில் மண் பட்டால் என்ன? படாமல் விட்டால் என்ன? ஐயாவைச் சந்தித்து அமைதிப்படுத்துக என்று முயற்சி நடக்குமளவில், 

நீண்ட பெரும் மக்கள் பேரெழுச்சி கண்ட பேறு, ஈழத் தமிழனாய் பிறந்த எனக்கு பெரும் பேறு என்றுணர்ந்தேன்.

ஓ! எங்கள் தலைவன் ஒரு கணம் கண் கலங்கிய போது, காளத்திக் கண்ணப்பனுக்கு  ஈடாய் எங்கள் தமிழ் இளைஞர்களின் இதயம் சூடாகி கொதித்த குருதி,

அவர் தம் கண்களில் கண்ணீராய் வெளிக்கிட்டதைக் கண்ணுற்ற போது, ஐயனே! ஈழத் தமிழனாகப் பிறந்த பெரும் பேறு பெற்றேன்.
- நன்றி-வலம்புரி-


ஈழத் தமிழனாகப் பிறந்ததன் பெரும்பேறு கண்டுற்றேன்..... Reviewed by Author on June 18, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.