அண்மைய செய்திகள்

recent
-

கடமையை செய்பவனுக்கு வெற்றி, தோல்வி இல்லை மக்கள் பேரெழுச்சியில் முதல்வர் உரை....


கடமையைச் செய்யும் ஒருவனுக்குத் தோல்வியும் இல்லை  வெற்றியும் இல்லை என தெரிவித்த வடக்கு மாகாண முதலமைச்சர், நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன், மக்கள் நலன் சார்ந்த  நடவடிக்கைகளையும் தொடர்ந்து முன்னெடுப்பேன் என அலைகடலெனத்திரண்ட மக்கள் முன் உறுதி அளித்துள்ளார்.

 வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கண்டித்தும், முதலமைச்சருக்கான தங்கள் பேராதரவை வெளிப்படுத்துமுகமாகவும் தமிழ் மக்கள் பேரவை யினால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டனப் பேரணி நேற்றைய தினம் காலை இடம் பெற்றது.

இந்தப் பேரணியில் கலந்து கொண்டு நல்லூரில் அமைந்துள்ள முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் கூடிய பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தின் மத்தியில் முதலமைச்சர் உரையாற்றும் போதே மேற்கண்ட வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

இங்கு திரண்டிருக்கின்ற ஜனக்கூட்டத்தைப் பார்க்கும் போது, இது வரை காலமும் நாங்கள் செய்ததற்கு ஒரு அர்த்தம் இருக்கின்றது என்பதை உணரக் கூடியதாக இருக்கின்றது. இந்தச் சேவையைத் தொடர்ந்தும் செய்து கொண்டேவருவேன். நாங்கள் எங்களுடைய கடமைகளைச் செய்து கொண்டு வரும் போது பலருக்கு பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

அதனால் தான் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அண்மையில் இங்கு வந்து சென்ற போது விரைவில் விக்னேஸ்வரன் தன்னுடைய பதவியைப் பறி கொடுத்து விடுவார் என்று கூறியிருந்தார்.
அவர் அவ்வாறு கூறும் போது நான் நினைத்தேன் எனக்கும் அவருக்கும் எந்த விதமான பிரச்சினையும் இல்லை, அவர் எதற்காக இவ்வாறு கூறுகின்றார் என்று. இந்த வேளையில் தான் இதன் பின்னணியில் என க்கு எதிராக கொழும்பில் சதித்திட்டம் ஒன்று தீட்டப்பட்டிருப்பதை உணர முடிந்தது. அதனால் தான் அவர் அப்படி கூறியுள்ளார்.

அந்த சதி எவ்வாறு தீட்டப்பட்டது என்றால்,  சதியில் ஈடுபட்டவர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை. அதாவது  எமது அமைச்சர்களுக்கெதிரான குற்றச்சாட்டுகள் குறித்து அறிக்கைகள் வெளிவரவிருக்கின்றது. அது தொடர்பில் முதலமைச்சர் இரண்டு வழிகளில் முடிவெடுத்தாக வேண்டும்.
அமைச்சர்களைக் காப்பாற்றுவதற்காக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதில் எது நடந்தாலும் அதைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது என்று அவர்கள் நினைத்திருந்தார்கள்.

அதாவது அவர்களைக் காப்பாற்றினால் குற்றம் செய்தவர்களை இவர் காப்பாற்றி விட்டார் என்று அதை ஒரு காரணமாகக் காட்டி முன்னோக்கியிருப்பார்கள். இப்போது அவர்களைத் தண்டிக்கப் போய், அவர்களைத் தண்டித்தால் அது  ஒரு பிழை என்ற முறையிலே இப்பொழுது ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஆகவே இதில் எது நடந்திருந்தாலும் என்னை வெளியேற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்திலே தான் அவர்களுடைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. அவர்களுடைய எண்ணத்துக்கான பதிலை நீங்கள் கூறிவிட்டீர்கள்.

மக்களுடைய பிரச்சினைகள் பல இருக்கின்றன. அவற்றை நாங்கள் தீர்க்க முனைகின்ற போது எமது வட மாகாண சபையிலும் வேறு இடங்களிலும் தேவையில்லாத விடயங்களைப் பேசிப் பேசிக் காலத்தை வீணடித்து விட்டோம். அந்த அடிப்படையிலே தான் என் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அது என்ன நடக்கிறது? எவ்வாறு போகப் போகிறது? என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை.

ஒன்றே ஒன்றை மட்டும் நான் உங்களுக்குக் கூறுவேன். நாங்கள் தொடர்ந்தும் எங்களுடைய கடமைகளைக் கட்டாயம் செய்வோம். கடமையைச் செய்யும் ஒருவனுக்குத் தோல்வியும் இல்லை.  வெற்றியும் இல்லை. அந்த நிலையில் இருந்து நாங்கள் எங்களுடைய கடமைகளைச் செய்ய வேண்டும் என்று தான் விரும்புகிறோம்.

ஒரு சில விடயங்களை நான் இந்த இடத்திலே குறிப்பிட விரும்புகிறேன். இவ்வாறான விசாரணைகள் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை விடுத்ததும் எங்களுடைய உறுப்பினர்கள் தான். தவறுகள் நடைபெறுவதாக எனக்கு நேரடியாக சொல்லியிருந்தால் கட்டாயம் நடவடிக்கை எடுத்திருப்பேன்.
அதைவிட்டுத் தங்கள் பெயர் பத்திரிகைகளில் வரவேண்டும் என்பதற்காக வட மாகாண சபையை நாறடித்து இயக்கியதனால் தான் நாங்கள் இந்த விசாரணைக்குழுவை அமைத்தோம்.

விசாரணைக்குழு இரண்டு பேரைக் குற்றவாளிகள் என்று தீர்த்தது. மற்றைய இரண்டு பேர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்க முடியாமல் போய் விட்டது. அவர்கள் மீதான முறைப்பாட்டாளர்கள் விசாரணைகளுக்கு வரவில்லை. அதனால் அவர்கள் விடுவிக்கப்பட்டதால், அவர்கள் குற்றவாளிகள் இல்லை என கூறித்திரிகிறார்கள் என்றும் அவர்கள் குற்றவாளிகள் அல்ல என்று அர்த்தம் இல்லை. அதைவிட அவர்கள் சம்பந்தமாக வேறு வேறு குற்றங்களும் அவர்கள் மீது இப்போது கிடைத்திருக்கிறது. இது சம்பந்தமாக மேலும் ஒரு விசாரணை நடைபெறும்.

இது வட மாகாணத்தின் முதலாவது மாகாண சபை. இந்த சபையிலே ஊழல் சம்பந்தமாக நாங்கள் நடவடிக்கை எடுக்காமல் விட்டால் தொடர்ந்தும் இதைத்தான் நாங்கள் சந்திக்க வேண்டிவரும். இதற்குரிய நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துக் கொண்டு வருகிறோம். இவ்வாறான சனக்கூட்டம் எங்களுக்குச் சார்பாக நடக்கும் போது, எங்களுடைய பாதை சரியென்று எனக்குப் படுகிறது.
அன்பார்ந்த தமிழ் மக்களே! உங்களுடைய நலன் சார்ந்த சகல நடவடிக்கைகளையும் நான் எடுப்பேன் என்று உங்களுக்கு உறுதிமொழி அளிக்கின்றேன் என தெரிவித்தார்.                                        

கடமையை செய்பவனுக்கு வெற்றி, தோல்வி இல்லை மக்கள் பேரெழுச்சியில் முதல்வர் உரை.... Reviewed by Author on June 18, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.