அண்மைய செய்திகள்

recent
-

முதலமைச்சருக்கு நீங்கள் செய்தது தர்மமாகுமோ? நீதியாகுமோ?


வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை இலங்கைத் தமிழரசுக் கட்சி கொண்டு வந்ததால் தமிழ் மக்களின் இதயங்கள் தணலாய் எரிகின்றன.

எங்களுக்குக் கிடைத்தற்கரிய ஒரு தலைவனைப் பெற்றோம் என்ற ஆறுதல் ஒன்றுதான் எங்களிடம் இருந்தது.

அதற்கும் உலை வைக்கும் துரோகத்தனத்தை என்னவென்று சொல்வதென மக்கள் நெக்குருக; குரல் அடைக்கக்  கருத்துரைப்பதைக் கேட்கும் போதெல்லாம் நெஞ்சம் நெகிழ்ந்து போகிறது.

ஒரு புறத்தில் தலைவன் என்றால் விக்னேஸ்வரன் போன்றல்லவா இருக்க வேண்டும் என்று நினைக்கும் போது, அட! நாம் தமிழர் என நெஞ்சு நிமிர்ந்து கொள்கிறது.

அதேவேளை மிகப்பெரும் தலைவனுக்கு நம்பிக்கையில்லாப் பிரேரணையைக்  கொண்டு வந்து உலகம் சிரிக்கும் வண்ணம்  கூத்தாடும் குப்பைத்தனத்தை நினைக்கும் போது,

இறைவா! ஏன்தான் இந்தத் தமிழினத்தில் எங்களைப் படைத்தாய் என்று மனம் ஏங்கிக் கொள்கிறது.

ஆம், வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தயாரித்து;

அதில் சிலர் கையயாப்பமிட்டு; வடக்கின் ஆளுநரிடம் கையளிப்பதற்கு முன்னர் பல தடவைகள் சிந்தித்திருக்க வேண்டாமோ!

அதிலும் நடுநிலை காக்க வேண்டிய  உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கக்கூடிய அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் அவர்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆளுநர் கூரேயிடம் கையளித்தார் எனும் போது, வள்ளுவத்தின் நீதி புதைக்கப்பட்டதல்லவா?

காலைப்பொழுதில் முதலமைச்சருக்கு வாழ்த்து, இரவுப் பொழுதில் முதலமைச்சருக்கு எதி ராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கைய ளிப்பு. இது அவைத் தலைவரின் நடுவு நிலைக்கு அழகா என்பதை அவரே தீர்மானிக்க வேண்டும்.

ஐயா! ஆரை நம்புவது? தர்மம் அந்தளவுக்கு விலை போய்விட்டதா? பதவி ஒன்றுதான் இந்த உலகில் பெயர் தரக்கூடியதா? பதவி கிடைத்ததால் அழிவைச் சந்தித்தவர்களின் வரலாறு இல்லையா? ஏன்தான் இப்படி எல்லாம் செய்கிறார்கள்.

அடுத்த தேர்தல் பற்றி நீங்கள் சிந்திக்கவில்லையா? அல்லது சிந்திக்க யாராவது தடை போடுகிறார்களா? சபை உறுப்பினர் ஒருவர், நந்தவனத்தில் ஓர் ஆண்டி... என்று பாடுகிறார்.

ஐயா! பாட்டின் பொருள் யார்க்குரியது. நீங்கள் பாடிவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா?

இறுதியாக ஒன்று,  கெளரவ மாகாண சபை உறுப்பினர்களே! உங்கள் மனச்சாட்சிப்படி முடிவு எடுங்கள்.

மக்களின் மனநிலை அறிந்து அதற்கு மதிப்புக் கொடுங்கள். முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கரத்தைப் பலப்படுத்துங்கள். நிச்சயம் தமிழ் மக்கள் உங்களைப் போற்றுவர்.

தென்னிலங்கை அரசுடன் - பேரினவாதத்துடன் சேர்ந்து அரசின் நிகழ்ச்சி நிரலில் இயங்குபவர்களின் சதித்திட்டத்துக்கு உங்கள் எதிர் காலத்தைப் பாழாக்கி விடாதீர்கள். உண்மையை உணர்ந்து; தமிழ் மக்களின் அவலம் அறிந்து முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு பக்கபலமாக இருங்கள்.

போர் தந்த பெருந்துயர் போக்க நெஞ்சுக்கு நீதியாக முடிவெடுங்கள். இது இந்த மண்ணில்  நிகழ்ந்த தியாகத்தின் பெயரால் கேட்கப்படுகிறது.
-நன்றி-வலம்புரி-

முதலமைச்சருக்கு நீங்கள் செய்தது தர்மமாகுமோ? நீதியாகுமோ? Reviewed by Author on June 16, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.