அண்மைய செய்திகள்

recent
-

கூட்டமைப்பும் மன்னார் ஆயர் இல்லமும் துரோகமிழைத்து விட்டதாக கூறிய கருத்துக்கு கண்டனம்

முள்ளிக்குளம் கிராம மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மற்றும் மன்னார் ஆயர் இல்லமும் துரோகமிழைத்து விட்டதாக தெரிவிக்கப்படும் கருத்தை வன்மையாக கண்டிப்பதாக  மன்னார் மாவட்ட கடற்தொழில் சம்மேளனத்தின் தலைவர் ஏ.ஜஸ்ரின் சொய்சா தெரிவித்த்துள்ளார் 

மன்னார் பனங்கட்டுக்கோட்டு மீனவர் சங்கத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கூறியுள்ளார்.


தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வட கிழக்கு இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் மன்னார் முள்ளிக்குளம் கிராமம் தொடர்பான தவறான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

குறித்த கருத்துக்கள் தொடர்பாக நாங்கள் மனவேதனை அடைகின்றோம். எனவே முள்ளிக்குளம் தொடர்பில் உண்மை விபரங்களை நாங்கள் தெளிவுபடுத்த வேண்டிய நிலை உள்ளது.

மீனவ அமைப்பைச் சேர்ந்தவர் அன்ரனி ஜேசுதாசன். எனவே மீனவ சமூகம் சார்ந்தவன் என்ற வகையில் எல்லா சமூகத்தினருக்கும் தெளிவுபடுத்த வேண்டிய நிலை உள்ளது.

கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வட கிழக்கு இணைப்பாளருடன் முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த இருவர் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முள்ளிக்குளம் மக்கள் இடம் பெயர்ந்த நிலையில் மன்னார் நகரிலும், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவிலும் குடியேறிய காலம் முதல் இன்று வரை அந்த மக்களுக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லத்தின் செயற்பாடுகள் அளப்பரியது.

அதனை நாங்கள் வார்த்தைகளினால் விபரிக்க முடியாது. ஆயர் இல்லமும், குருக்களும் மிகவும் தியாக மனப்பான்மையுடன், அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்கள்.

மன்னார் ஆயர் இல்லத்தினால் முள்ளிக்குளம் மக்களின் கடற்தொழில் நடவடிக்கைகளுக்காகவும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகவும் சுமார் 3 கோடி ரூபாவிற்கும் மேற்பட்ட கடற்தொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் அரசாங்கத்திடம் பேசி முசலி பிரதேசத்தில் காணி பெற்றுக்கொள்ளப்பட்டு தற்காலிகமாக குடியேற்றப்பட்டனர்.

காலம் செல்லச் செல்ல அந்த மக்களை சொந்தக்கிராமத்தில் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர். குறித்த நடவடிக்கைகளில் மன்னார் ஆயர் இல்லத்தின் செயற்பாடுகள் நூறு வீதம் காணப்பட்டது.

மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்களின் சேவையினை யாராலும் மறக்க முடியாது.




ஆயருடன் இணைந்து பாடுபட்ட அருட்தந்தை முரளிதரன் அவர்களையும், மறைமாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை அடிகளார் ஆகியோரை யாராலும் மறக்க முடியாது. அவர்களின் சேவைகளை வார்த்தைகளினால் விபரிக்க முடியாது.

முள்ளிக்குளம் மக்களுக்கு எதனை செய்வதாக இருந்தாலும் மன்னார் ஆயர் இல்லத்தின் அனுசரணை இன்றி யாராளும் அங்கு நுழைய முடியாத நிலை காணப்பட்டது.

அந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நாளாந்தம் அப்பகுதிக்குச் சென்று பிரதி நிதிகள் உட்பட பலரை சந்தித்து உயர் அதிகாரிகளுக்கு தெளிவு படுத்தும் நடவடிக்கைகளில் அருட்தந்தையர்கள் செயற்பட்டனர்.

இந்த நிலையில் முள்ளிக்குளம் மக்களுக்காக மன்னார் ஆயர் இல்லமும், அருட் தந்தையர்களும் செய்த தியாகங்களை கொச்சைப்படுத்தும் வகையில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வட கிழக்கு இணைப்பாளரின் கருத்துக்கள் அமைந்துள்ளன.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வட கிழக்கு இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் மன்னார் ஆயர் இல்லத்திற்கு எதிராகவும், முள்ளிக்குளத்தில் நடக்கின்ற உண்மைகளை மறைத்து தவறான தகவல்களை வெளியிட்டதற்காகவும் ஆயர் இல்லத்திடமும், அருட் தந்தையர்களிடமும், முள்ளிக்குளம் மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.

தனது பிழையை ஏற்று மன்னிப்பு கோரி அறிக்கை விடாது விட்டால் மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவ சங்கங்களும், மீனவ கிராமிய அமைப்புக்களும், சகல மீனவர்களும் இணைந்து தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் செயற்பாடுகளை மன்னார் மாவட்டத்தில் முற்று முழுதாக புறக்கணிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதோடு, இவர்களின் அலுவலகம், மற்றும் செயற்பாடுகள் மன்னாரில் இடம்பெற அனுமதிக்கப்பட மாட்டாது என்பதனை தெரியப்படுத்துகின்றோம்.

முள்ளிக்குளம் மக்கள் தற்போது மன்னார் ஆயர் இல்லம் மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மறைமாவட்ட ஒன்றியத்தின் முயற்சியினால் மீண்டும் தமது சொந்த மண்ணில் குடியேற ஆரம்பித்துள்ளனர்.

தற்போது காணி அளவீடுகள் இடம் பெற்று வருவதாக நாம் அறிகின்றோம். கடற்படையினரின் குடும்பங்கள் உள்ள வீடுகளை விடுவிக்க கால அவகாசம் கோரியுள்ளனர்.

அந்த விடையங்கள் எல்லாம் பூர்த்தியாகும் வரை முள்ளிக்குளம் கிராமத்தில் பிழைகள் இடம் பெற்றுள்ளதாக யாராலும் கூற முடியாது.

எனவே அங்கு இடம் பெறும் வேலைத்திட்டங்கள் முழுமையாக நிறைவடைந்த பின்னர் முள்ளிக்குளம் மக்களின் தேவைகள் சரியான முறையில் கிடைக்காது விட்டால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் யோசிக்க வேண்டும்.

அங்கு வேலைத்திட்டங்கள் முழுமை பெறாத நிலையில் குறை கூறுவது நாகரீகமற்ற செயலாக நாங்கள் கருதுகின்றோம்.

அந்த மக்களுக்கு நீதி கிடைக்காது விட்டால் மன்னார் மாவட்ட மீனவ சமூகம் சார்பாக நாங்கள் உதவிகளை வழங்குவோம் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி 

முள்ளிக்குளம் மக்களிற்கு கூட்டமைப்பும் மன்னார் ஆயர் இல்லமுன் துரோகமிழைத்துள்ளது! -அன்ரனி யேசுதாசன் 
http://www.newmannar.lk/2017/06/NEWS.html
கூட்டமைப்பும் மன்னார் ஆயர் இல்லமும் துரோகமிழைத்து விட்டதாக கூறிய கருத்துக்கு கண்டனம் Reviewed by NEWMANNAR on June 08, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.