அண்மைய செய்திகள்

recent
-

இனப் பரம்பலை சிதைக்கும் நோக்குடனான குடியேற்றம்: இளைஞர் அணி குற்றச்சாட்டு

எம் தேசத்தை பாலைவனமாக்க அனுமதியோம் முல்லைத்தீவு மாவட்டத்தில் கூழாமுறிப்பு பகுதியில் பாரியளவிலான வன அழிப்பை மேற்கொண்டு, இனப் பரம்பலை சிதைக்கும் நோக்குடனான குடியேற்றத்தை தடுத்து நிறுத்தவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம் என இளைஞர் அணி குறிப்பிட்டுள்ளது.

இனப் பரம்பலை சிதைக்கும் நோக்குடனான குடியேற்றத்தை தடுத்து நிறுத்த கோரி இளைஞர் அணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஏற்கனவே மன்னாரில் வில்பத்து, வவுனியாவில் பம்பைமடு, முல்லைத்தீவில் குமாரபுரம் அடர் வனங்கள் முஸ்லிம் மக்களை குடியேற்றும் நோக்குடன் அழிக்கப்பட்ட வேளையில் இன நல்லிணக்கம் கருதி நாம் அனைவரும் அமைதி காத்திருந்தோம்.

ஆனால் இப்போது நிலமை எல்லை மீறுவதை அவதானிக்கின்றோம். எதிர்கால வாக்கு வங்கி அரசியல் நோக்குடன் நடந்து வரும் இந்த வன அழிப்பு, வடக்கின் இனப் பரம்பலில் பெரும் தாக்கத்தை செலுத்தப்போவதுடன், இதுவரை காலமும் நம் முதுசமாகப் காப்பாற்றி வந்த வனமும் அழிக்கப்படுகின்றது.

இது இயற்கையில் பெரும் மாறுதல்களைக் கொண்டு வந்து, ஒரு பாலைவன தேசத்தை உருவாக்கி விடும் என ஐயப்படுகின்றறோம்.

இப்போது, முல்லைத்தீவு மாவட்டத்தில் கூழாமுறிப்பு கிராமத்துக்கு அருகில் இருக்கின்ற, முள்ளியவளைக்கும் - ஒட்டுசுட்டான் வீதிக்கும், நெடுங்கேணி - புளியங்குளம் வீதிக்கும் இடைப்பட்ட 177 ஏக்கர் வாரிவண்ணான் காட்டை அழித்து முஸ்லிம்களைக் குடியேற்றம் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த வன அழிப்புத் திட்டம், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காலத்திலேயே ஆரம்பித்து விட்டது என்றாலும், மக்களின் எதிர்ப்புக் காரணமாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. இப்போது மீளவும் வனத்தை அழிப்பதற்கான முயற்சிகள் தீவிரம் கொள்ளத் தொடங்கப்பட்டுள்ளது.

போரின் பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள் குடியேற்றம் நடந்து கொண்டிருந்த வேளையில், 1444 முஸ்லிம் குடும்பங்களுக்கு முஸ்லிம் குடும்பங்களுக்கு காணி வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை அப்போதிருந்த அரச அதிகாரிகளுக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி நடந்த காணியற்றவர்களுக்கான காணி கச்சேரியில் 902 குடும்பத்தினர் கலந்து கொண்டிருக்கின்றனர். காணியற்றோர் எனக் கூறி காணி கோரிய 1444 பேரில் மிகுதியானவர்கள் யாரென, அதனைக் கோரியவர்களுக்கே தெரியாமல் இருந்தமை வியப்புத் தரும் விடயமாக அந்நாட்களில் பேசப்பட்டது.

அவ்வாறு காணி கச்சேரிக்கு வருகை தந்த 902 பேரிலும், 544 குடும்பங்களே காணி பெறத் தகுதியானவர்கள் என கச்சேரியின் முடிவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் முள்ளியவளை ஐயன் கோவிலுக்கு அருகான பகுதி தொடக்கம் கூழாமுறிப்பு வெள்ளை மலை ஏத்தம் வரையான கன்னிவனத்தை அழித்து புதிய குடியேற்றத்தை உருவாக்க மக்களும் விரும்பவில்லை.

வனவளத் திணைக்களமும் விரும்பவில்லை. காரணம் அது இலங்கை வன இலாகாவால் பாதுகாக்கப்பட்ட வனம் என்கிற வகைக்குள் உள்ளடக்கப்பட்டிருந்தமை ஆகும்.

எனவே தான் வன வளத்துறை கூழாமுறிப்பில் இருந்து வாரிவண்ணாக்காடு வரைக்கும் உள்ள 177 ஏக்கர் அடர் வனத்தை அழித்து காணிகளைப் பெற்றுக்கொள்ள அனுமதியளித்திருக்கிறது. (இது தொடர்பில், முஸ்லிம் மக்கள் மத்தியில் அதிகாரம் செலுத்தும் தரப்பினர் மகிந்த ஆட்சிக்காலத்தின் இறுதியில் தமக்கு சார்பான அதிகாரிகளை நியமித்து, இவ்வாறு அனுமதி பெற்றுக்கொண்டனர் என்ற குற்றச்சாட்டும் உண்டு)

இந்த அனுமதியும் இலங்கையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நியமங்களுக்கு விரோதமானதாகவே இருக்கின்றது. இலங்கையில் 300க்கு மேற்பட்ட மரங்களை வெட்டி வனம் அழிக்க வேண்டுமாயின் ஜனாதிபதி சுற்றுச்சூழல் ஆணைக்குழுவில் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால் இங்கு அந்த அனுமதி பெறப்பட்டதாகத் தகவல் இல்லை.

மாறாக மாவட்ட சுற்றுச்சூழல் குழுவின் அனுமதியுடனேயே காடழிப்புக்கு அத்திவாரமிடப்பட்டுள்ளது. 1990ம் ஆண்டில் முல்லைத்தீவில் இருந்து வெளியேறிய முஸ்லிம்களின் தொகை 1000 குடும்பங்களுக்கு உட்பட்டதென அவர்களின் பதிவுகளிலேயே கூறப்பட்டுள்ளது.


இப்போது மாஞ்சோலை, ஹிச்சிராபுரம், சூரிபுரம், குமாரபுரம் ஆகிய பகுதிகளில் குடியேறியுள்ள முஸ்லிம் மக்களை விட, மேலதிகமாகவே 1444 பேருக்கான காணிகள் கோரப்பட்டிருக்கின்றமை, இனப்பரம்பலை சிதைக்கும் நோக்குடனான செயல் எனப் பலரும் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.

போருக்குப் பின்னரான நல்லிணக்க முயற்சிகளைக் கட்டியெழுப்பும் விதமாக உருவாக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கூட, இனப் பரம்பலை சிதைக்கும் விதமாகக் குடியேற்றங்களை உருவாக்கக்கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளமை இவ்விடத்தில் நினைவிற்கொள்வேண்டும்.

இந்த நிலத்திலிருந்து இடம்பெயர்ந்து சென்ற முஸ்லிம்கள் மீள் குடியேறுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது.

ஆனால் எங்கள் வளங்களை அழித்து, எங்களின் பண்பாட்டை, பொருளாதார மூலங்களை சிதைத்து, இந் நிலத்துக்கே உரிய பௌதீக பண்பாட்டு விழுமியங்களை அழிக்கும் திட்டமிட்ட சட்டவிரோத குடியேற்றங்களை அனுமதிக்கமாட்டோம்.

எனவே இவ்வாறான வன அழிப்பையும், திட்டமிட்ட குடியேற்றங்களையும் உடனடியாக சம்பந்தப்பட்ட தரப்பினர் நிறுத்த வேண்டும். நிறுத்தத் தவறின் மேலும் பலம் சேர்த்து எம் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை முன்னெடுப்போம் என இளைஞர் அணி குறிப்பிடுகின்றது.
இனப் பரம்பலை சிதைக்கும் நோக்குடனான குடியேற்றம்: இளைஞர் அணி குற்றச்சாட்டு Reviewed by NEWMANNAR on July 15, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.