அண்மைய செய்திகள்

recent
-

தாயை இழந்த பிள்ளைகள் இருவரும் தந்தையின் அரவணைப்பில் வளரும் வாய்ப்பை-வடக்கு சுகாதார அமைச்சர் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்-(படம்)



எமது நாட்டில் பாரிய குற்றங்கள் புரிந்தவர்கள் கூட மேன்முறையீடு மற்றும் பிணை என்ற பெயரில் சுதந்திரமாக உலாவி வருகின்றனர். ஆனால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கோ அச்சந்தர்ப்பம் கூட மறுக்கப்பட்டுள்ளது மாபெரும் அநீதியாகும் என வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்தார்.

அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரனை பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யக்கேரி நேற்று முந்தினம் புதன் கிழமை (21) மாலை ஜனாதிபதிக்கு வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.குறித்த  கடித்திலேயே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

-குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,,

கடந்த வார இறுதியில் கிளிநொச்சியில் நிகழ்ந்த இளம் தாய் ஒருவரின் மரணமும்,மரணச்சடங்கில் கலந்து கொள்ள மூன்று மணித்தியாலங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அவரது கணவரின் துர்பாக்கியமும்,தாயை எமனிடமும்,தந்தையை பயங்கர வாத தடைச்சட்டத்திடமும் காவு கொடுத்து விட்டு தற்பொழுது அனாதரவாக நிற்கும் இரண்டு குழந்தைகளின் பரிதாபமும் தங்களின் தயவான கவனத்திற்கு எடுத்து வரப்பட்டிருக்கும் என நம்புகின்றேன்.

-சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரன் கடந்த 2008 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருந்த  நிலையியே அவரது மனைவியும்,இரண்டு பிள்ளைகளின் தாயுமான ஆனந்த சுதாகரன் யோகராணி கடந்த 15 ஆம் திகதி மரணமடைந்தார்.

-தனது கணவரை மீட்டெடுக்கும் தனது முயற்சியில் தோல்வியடைந்ததினால் ஏற்பட்ட விரக்தி  வறுமை மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான ஏக்கம் என்பவை இவ் இளம் தாயை நோயில் தள்ளி காவு வாழங்கியுள்ளது.

-இலங்கைத் திருநாட்டின் மிக மோசமான சட்டம் என அறியப்படும் உள்ளூரிலும் சர்வதேச மட்டத்திலும் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கும் , இலங்கை அரசினால் விரைவில் நீக்கிக்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டதுமான பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஆனந்த சுதாகரன் தண்டிக்கப்பட்டுள்ளார்.

-எமது நாட்டில் பாரிய குற்றங்கள் புரிந்தவர்கள் கூட மேன்முறையீடு மற்றும் பிணை என்ற பெயரில் சுதந்திரமாக உலாவி வருவதை தாங்கள் அறிவீர்கள்.

-ஆனால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கோ அச்சந்தர்ப்பம் கூட மறுக்கப்பட்டுள்ளது மாபெரும் அநீதியாகும்.

-இன்று ஆனந்த சுதாகரன் யோகராணி தம்பதியினரின் இரண்டு பிள்ளைகளும் அனாதரவாக்கப்பட்டதற்கான முழுக்காரணம் இதே பயங்கரவாத தடைச்சட்டமே.

-இதன் மூலம் அனாதரவான இவ் இரு சிறுவர்களின் பாதுகாப்பு,பராமரிப்பு,கல்வி மற்றும் அவர்களின் எதிர்காலம் என்பன கேள்விக்குறியாகியுள்ளது.

-இன்று நாடளாவிய ரீதியில் சிறுவர்களின் நலனை பாதுகாக்கவும்,சிறுவர் பராமரிப்புக்கு  என பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் பிரிதோர் சட்டமே சிறார்களின் உரிமையினை கேள்விக்குள்ளாக்குவதென்பது எவ் வகையிலும் நியாயப்படுத்த முடியாத தொன்றாகும்.

வைத்தியர் என்ற முறையிலும்,வடக்கு மாகாணத்தில் நன்னடத்தை,சிறுவர் பராமரிப்பு என்பவற்றிற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையிலும் ஆனந்த சுதாகரன் யோகராணி தம்பதியினரின் இரண்டு பிள்ளைகளும் தாயை இழந்த நிலையில் தந்தையுடன் இருந்து பாதுகாப்பு மற்றும் அரவணைப்பு என்பன அத்தியாவசியமானவையும்,எவ்விதமான சவால்களுக்கும் உற்படுத்த முடியாதவையாகும் என்பதே எனது தாழ்மையான கருத்தாகும்.

சிறுவர் மற்றும் குழந்தைகள் மட்டில் அன்பு மற்றும் கரிசனை கொண்ட தலைவராக அறியப்படும் தாங்கள் மிகுந்த வேலைப்பளுவுக்கு  மத்தியிலும் சிறுவர்களை வீடு தேடிச் சென்று தரிசிப்பதையிட்டு மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்.

அதே வேளை அனாதரவாக்கப்பட்ட இவ் இரு சிறுவர்கள் மீதும் அதிகரித்த அன்பு மற்றும் கரிசனையை வெளிப்படுத்துவீர்கள் என நம்புவதோடு,நாட்டின் சனாதிபதியாகிய நீங்கள் இச் சிறுவர்களின் எதிர்காலம் தொடர்பில் மிகுந்த அக்கறை கொண்டிருப்பீர்கள் என நம்புகின்றேன்.

-தாயை இழந்த இப் பிள்ளைகள் இருவரும் தந்தையின் அரவணைப்பில் வளரும் வாய்ப்பை வழங்கிடுங்கள்.
-நாட்டின் எந்தச்சட்டமும் சிறுவர்களை அநியாயமாக தண்டிக்காதிருப்பதை  உறுதிப்படுத்துங்கள்.

-தாங்கள் இனங்களைக் கடந்த சிறுவர் நேயத்தலைவர் என்பதனை மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்துங்கள்.

-எனவே இப்பிள்ளைகளின் தந்தையான சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரன் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி தனது பிள்ளைகளுடன் இணைய வழி செய்யுங்கள் என தங்களை தாழ்மையுடன் வேண்டிக்கொள்ளுகின்றேன்.என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 மன்னார் நிருபர்-

 
தாயை இழந்த பிள்ளைகள் இருவரும் தந்தையின் அரவணைப்பில் வளரும் வாய்ப்பை-வடக்கு சுகாதார அமைச்சர் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்-(படம்) Reviewed by Author on March 22, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.