அண்மைய செய்திகள்

recent
-

பாதிக்கப்பட்ட சமூகங்கள் வன்முறையில் ஈடுபடாமல் அமைதி காக்கும் நிலை இன்று வரை உள்ளது-மன்னார் சர்வமதப் பேரவை

கொழும்பு உயர் மறைமாவட்டப் பேராயர் உட்பட பல தலைவர்களின் வேண்டு கோளுக்கு இணங்க பாதிக்கப்பட்ட சமூகங்கள் வன்முறையில் ஈடுபடாமல் அமைதி காக்கும் நிலை இன்று வரை உள்ளது. என மன்னார் சர்வமதப்பேரவை தெரிவித்துள்ளது.

மன்னார் சர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம் பெற்ற அவசர கலந்துரையாடலை தொடர்ந்து,விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,,

உயிர்ப்பு ஞாயிறு அன்று தேவாலயங்களிலும், நட்சத்திர விடுதிகளிலும் இடம் பெற்ற தற்கொலைத் தாக்குதல்கள் காரணமாக முழு நாடும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாகியிருக்கின்றது.

ஏதுமறியா அப்பாவி மக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ள நிலையில் இந்த நாடு மிகுந்த சோகத்தில் மூழ்கியுள்ளது.
தமது இன்னுயிர்களை இழந்த மக்களுக்கு எமது அஞ்சலிகளைத் தெரிவிப்பதோடு அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணம்பெறவேண்டுமென இறைவனை இறைஞ்சுகின்றோம்.

 தமது அன்புக்குரியவர்களை இழந்து ஆறாத்துயரில் மூழ்கியிருக்கும் அனைவருக்கும் எமது ஆழந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றோம்.

ஒரு குறிப்பிட்ட மதத்தவர்களை இலக்குவைத்து அவர்களின் ஆலயத்தில் அதுவும் அவர்களின் வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களையும், வெளிநாட்டவர்களைக் குறிவைத்து நட்சத்திர விடுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களையும் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். இத்தாக்குதல் தொடர்பாக எமது ஆழந்த கவலையையும் வெளிப்படுத்தி நிற்கின்றோம்.

இத்தாக்குதல் சம்பவம் நடைபெற்று ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், இன்றைய சூழ்நிலை தொடர்பாக நாம் எமது அக்கறையைச் செலுத்தவேண்டியவர்களாக இருக்கிறோம்.

 தமது அன்புக்குரியவர்களை இழந்து நிற்கும் உறவுகளின் கவலையும் கண்ணீரும் ஒருபுறம், இன்னும் என்ன நடக்குமோ என்ற பயமும் பதட்டமும் மறுபுறம். தாக்குதலை நடத்தியவர்கள் இனம்காணப்பட்டுள்ள சூழ்நிலையில் இந்நாட்டில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு எதிரான கோபமும் அவர்களைச் சந்தேகத்துடன் பார்க்கும் நிலையும் உருவாகியுள்ளது.

அதேவேளை முஸ்லிம் மக்களும் அச்சத்துடன் வாழும் ஓர் சூழ்நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சிக்கலான நிலையில் இன்று நாம் அனைவரும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

கொழும்பு உயர் மறைமாவட்டப் பேராயர் உட்பட பல தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பாதிக்கப்பட்ட சமூகங்கள் வன்முறையில் ஈடுபடாமல் அமைதி காக்கும் நிலை இன்றுவரை உள்ளது.

 இது ஆறுதலான அதேவேளை பாராட்டப்பட வேண்டியதொன்றாகும். இந்த  அமைதியான நிலை தொடர வேண்டும் என விரும்புகின்றோம்.
இத்தாக்குதல் சம்பவங்களை இந்த நாட்டில் உள்ள பல இஸ்லாமிய அமைப்புக்கள் வன்மையாகக் கண்டித்துள்ளதோடு தமது ஆழ்ந்த கவலையையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளன.

 இந்த நாசகாரச் செயல்களைச் செய்தவர்களை இஸ்லாமியர்கள் என்று ஏற்றுக்கொள்ளவோ, இறந்த தீவிரவாதிகளின் உடல்களைப் பொறுப்பேற்று அடக்கம் செய்யவோ இஸ்லாமிய அமைப்புக்கள் வெளிப்படையாகவே மறுத்துள்ளன.

இத்தாக்குதல் சம்பவத்தோடு தொடர்புடையவர்களைக் கைதுசெய்து விசாரணை செய்யும் நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டுள்ள நிலையில் அப்பாவிகளான பொதுமக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாதென நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் அப்பாவி மக்கள் துன்புறுத்தப்படக்கூடாது. அனைவரது அடிப்படை மனித உரிமைகளையும் மதித்து உண்மைகளைக் கண்டறிய முனைய வேண்டும்.

இந்தக் குற்றச்செயல்களைச் செய்த குறிப்பிட்டதொரு குழுவினருக்காக இந்நாட்டில் வாழும் முழு இஸ்லாமிய சமூகத்தையும் சந்தேகக்கண்கொண்டு பார்ப்பதோ, அவர்களுக்கெதிரான வெறுப்புணர்வை வளர்ப்பதோ தவிர்க்கப்பட வேண்டும்.

இதுபோன்ற துர்ப்பாக்கிய நிகழ்வுகள் இனியும் நடைபெறாதிருப்பதை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும். அப்பாவி மக்களின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

இழப்புகளைச் சந்தித்த மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதோடு, அவர்களுக்கு உளவியல் ரீதியான ஆற்றுப்படுத்தல்களை மேற்கொள்வதற்கும் ஆவண செய்ய வேண்டும். பயத்திலும் பதட்டத்திலும் வாழும் அனைத்து சமூக மக்களும் தமது சுமுகமான வாழ்க்கை நிலைக்கு திரும்புவதற்குரிய வழிவகைளை நாம் அனைவரும் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து இன, மத மக்களும் இணைந்து வாழும் மன்னார் மாவட்டத்தில் இந்த இக்கட்டான வேளையில் அனைத்து மதத்தலைவர்களும் சமூகத் தலைவர்களும் தமது வேறுபாடுகளைக் களைந்து ஒன்றிணைந்து செயலாற்ற முன்வரவேண்டும். சமூகங்களுக்கிடையில் இத்தலைவர்கள் பாலமாகத் திகழ்ந்து, உறவையும், ஒன்றிப்பையும் ஏற்படுத்த முன்வர வேண்டும்.

இந்நாட்டின் இனங்களுக்கிடையில், மதங்களுக்கிடையில் மீண்டுமொரு பாரிய இடைவெளி தோன்றியுள்ளது. இந்நிலையில் இந்நாட்டு மக்களாகிய நாம் அனைவரும் மிகுந்த நிதானத்துடன் செயலாற்ற வேண்டும். உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டு கருத்துக்களைப் பதிவிடுவதையோ, பேசுவதையோ, செயற்படுவதையோ தவிர்த்து, அறிவுபூர்வமாக செயலாற்ற வேண்டும்.
நல்மனம் கொண்ட அனைத்து மக்களின் ஒத்துழைப்புடன் மீண்டும் இந்த நாட்டில் அமைதியும், இன மத நல்லிணக்கமும் ஏற்பட நாம் அனைவரும் தொடர்ந்து உழைப்போமாக.என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.






பாதிக்கப்பட்ட சமூகங்கள் வன்முறையில் ஈடுபடாமல் அமைதி காக்கும் நிலை இன்று வரை உள்ளது-மன்னார் சர்வமதப் பேரவை Reviewed by Author on May 01, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.