அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா வைரஸை முறியடிக்க இதுவே ஒரே வழி! சி.வி.விக்னேஸ்வரன் விளக்கம் -


தமிழரின் பாரம்பரிய வாழ்க்கை முறையே கொரோனா வைரசை முறியடிக்க ஒரே வழி என்பதே எனது கருத்து என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வாராந்த கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கேள்வி - ஐயா! நீங்கள் அரசியல் மட்டுமல்லாமல் பல விடயங்கள் பற்றியும் தயங்காமல் உங்கள் கருத்துக்களை இந்த “வாரத்துக்கொரு கேள்வி” மூலமாக எம்முடன் பகிர்ந்து வருகின்றீர்கள்.
இப்பொழுது உலகம் பூராகவும் உச்சரிக்கப்படும் ஒரு சொற்றொடர் தான் “கொரோனா வைரஸ்” என்பது.
தமிழர்களுடன் தொடர்புபடுத்தி அது பற்றி உங்கள் சிந்தனைகளை வழங்க முடியுமா? எம் மக்கள் தற்போதைய நிலையில் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?

பதில் - தமிழரின் பாரம்பரிய வாழ்க்கை முறையே கொரோனா வைரசை முறியடிக்க ஒரே வழி என்பதே எனது கருத்து.
1. அந்த நாட்களில் காலை எழுந்து வீட்டைப் பெருக்கி மஞ்சள் நீர் வீட்டிற்குத் தெளிப்பார்கள். சாணத்தால் முன் வாசலைப் பூசி மொழுகுவார்கள். பின்னர் எம் பெண்கள் கோலம் போடுவர்.
வாசலில் ஒரு வாளியில் மஞ்சள் நீர் கலந்து வைத்து பக்கத்தில் ஒரு பாத்திரத்தை வைப்பார்கள். வெளியிலிருந்து வருகின்றவர்கள் அனைவரும் செருப்பை வெளியில் வைத்துவிட்டு கை, கால் அலம்பிய பின்னரே உள்நுழைவார்கள்.
2. அடுத்து எம் பெண்கள் மஞ்சள் பூசி குளித்த பின் தலைவாரி, பூச்சூடி, வீபூதி பூசி, நெற்றிக்கு குங்குமம், சந்தனம் வைப்பார்கள்.
ஆண்களும் குளித்த பின்னர் விபூதி பூசி சந்தனம் வைப்பார்கள். சிலர் குங்குமம் வைப்பார்கள். இவற்றுள் சாணம், மஞ்சள், விபூதி, சந்தனம், குங்குமம் போன்றவை யாவுமே கிருமிநாசினிகள்.
3. காலையில் கொத்தமல்லி அல்லது சுக்கு (வேர்க்கம்பு அல்லது காய்ந்த இஞ்சி) கலந்த கோப்பியையே உட்கொள்வார்கள்.
4. மரண வீடுகளுக்குச் சென்று வருவோர் வீட்டினுள் அனுமதிக்கப்படமாட்டார்கள். கட்டியிருக்கும் உடை அததனையையும் களைந்து கழுவப் போட்டு, தலையில் குளித்த பின்னர் புது உடைகள் உடுத்தே உள்ளே வர வேண்டும்.
வைத்தியசாலைகளுக்குப் போய்வருவோரும் முற்றாகக் கை கால் அலம்பிய பின்னரே வீட்டினுள் நுழையலாம். குளித்த பின் வாழையிலையில் உணவு உட்கொள்வார்கள். வாழையில் ஓளடத குணங்கள் உண்டு.
5. ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் அவசியம் சாம்பிராணி பிடிப்பார்கள். அல்லது சந்தனத் திரிகளைக் கொழுத்துவார்கள்.
6. எவரையும் முதன் முதலில் அன்றைய தினம் சந்தித்தால் கை கூப்பியே வணக்கந் தெரிவிப்பார்கள். கைலாகு கொடுத்து வைரசுகளை விலை கொடுத்துவாங்கமாட்டார்கள். சுத்தம் சுகந் தரும் என்பது எமது பண்பாட்டில் ஊறிய ஒரு கருத்து.
7. வீட்டில் துளசி, வேம்பு, கற்பூரவள்ளி, திருநீற்றுப் பச்சை போன்ற மரங்களை தவறாது வளர்ப்பார்கள். கொத்தமல்லி இலையை உணவுடன் பல முறை கிழமைக்குக் கிழமை சேர்த்துக் கொள்வார்கள்.
8. காய்ச்சல், தடிமன், மூச்சடைப்பு, தலையிடி என்று வந்தால் மூலிகைகளினால் ஆன கஷாயத்தையே மூன்று நாட்கள் உட்கொள்வார்கள். நோய் போய்விடும்.
எனக்குநினைவிருக்கும் வரையில் கொத்தமல்லி, இஞ்சி, பற்படாகம், திப்பிலி, சிற்றரத்தை, மிளகு, அதிமதுரம், கற்பூரவள்ளி, மரமஞ்சள், கறுவா என்று பல மூலிகைகள் வெவ்வேறு தருணங்களில் பாவிக்கப்பட்டன.
9. தும்மல், இருமல் வந்தால் கிருமிகள் பரவாதிருக்க சால்வையால் அல்லது புடவை நுனியால் முகத்தை மூடி தும்முவதற்கு பாவிப்பார்கள்.
10. அக்காலத்தில் மனிதர்கள் மிக அருகில் அமர்ந்திருக்கமாட்டார்கள். சற்று இடைவெளிவிட்டே அமர்ந்திருப்பார்கள். ஆண்களும், பெண்களும் வெவ்வேறாக வீட்டினுள் இருப்பார்கள்.
11. வெளியாட்கள் வீட்டுக்கு வந்து போன பின் (பொதுவாக தூர இடங்களில் இருந்து வந்து போனபின்) வீட்டை உடனே நீர் கொண்டு அவர்கள் இருந்துவிட்டுப் போன இடங்களை வீட்டார் கழுவுவார். சாம்பிராணி பிடிப்பார்கள்.
இவற்றையெல்லாம் எம் முன்னோர்கள் செய்து வந்து பாதி வழியில் நிறுத்திவிட்டார்கள். பொதுவாக Dettol ஐப் பாவிக்கத் தொடங்கினார்கள்.
இனியாவது எமது பாரம்பரிய தமிழர் வாழ்வு முறையை நாங்கள் பின்பற்றுவோமாக! தென்னிந்திய கடலூரிற்கு நான் முன்னர் சென்று வருவதுண்டு. நான் காலையில் கிராமத்தைச் சுற்றி நடைபவனி வருவேன்.
ஒவ்வொரு வீட்டிலும் அண்மைக் காலங்களில் கூட நான் அதிகாலையில் கண்டது வாசலை சாணத்தால் மொழுகுதலும், கோலம் போடுதலும், வீட்டு வாசலில் மஞ்சள் நீரை கை கால் கழுவ வைப்பதுமையே!
தமிழர் வாழ்க்கை முறை ஒரு மதமன்று! சமயமன்று! அது விஞ்ஞான ரீதியாக சுகாதாரமாக, சுத்தமாக வாழும் முறை.
எம்மைக் கிருமிகள் அண்டவிடாமல் செய்ய எமது ஆதி அறிஞர்கள் வகுத்த எளிமையான வழிமுறையே எமது பாரம்பரிய வாழ்க்கைமுறை. கொரோனா வராதிருக்கவும் எமது வாழ்க்கை முறை துணைபுரியும்.
எனினும் மனித குலத்துக்கு இன்று பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கும் கோவிட் 19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து எங்களையும், எங்கள் உறவினரையும், சுற்றத்தாரையும் முழு சமூகத்தையும் பாதுகாக்கும் மிகப் பெரும் பொறுப்பும் எம் எல்லோருக்கும் இன்று ஏற்பட்டிருக்கின்றது.
கொரோனா வைரஸின் வீரியத்தை விடவும் எமது அலட்சியமும் பொறுப்பு அற்ற தன்மையுமே நோயின் பரவுதலுக்கான பிரதான காரணமாக இனறு காணப்படுகின்றன. எங்கள் அலட்சியமே கொரோனா பரவுவதற்கான முதல் அறிகுறி.
தயவு செய்து வைத்தியசாலை பணிப்பாளர்கள், மருத்துவர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் எமக்கு வழங்கும் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக நாங்கள் எங்கள் வாழ்க்கை முறைமையை மாற்றி அமைத்துக் கொள்ளுவோமாக.
நோயின் தாக்கம் தற்போது வடக்கு, கிழக்கின் பகுதிகளிலும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இயன்றளவுக்கு சமூகத்தில் இருந்து விலகி வாழ பழகிக் கொள்வோமாக! அநாவசிய பயணங்களை தவிர்த்துக் கொள்ளுவோமாக.
சிறந்த சுகாதார முறைகளை பின்பற்றுவோமாக. வெளியே சென்று வந்தால் கைகளை சவர்க்காரம் இட்டு குறைந்தது 20 செக்கன்களுக்கு கழுவுவோமாக.
நோய் தொற்று சந்தேகம் ஏற்பட்டால் உடனே மருத்துவ ஆலோசனையை பெறுவோமாக. அரசாங்கத்தின் ஊரடங்கு உத்தரவுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதில் தவறில்லை.
ஏற்கனவே, ஒரு இன அழிப்புயுத்தத்தினால் பாரிய ஒரு உயிரழிவை சந்தித்துள்ள நாம் கொரோனா எங்களை அணுகாமல் பாதுகாத்துக் கொள்ள எம்மாலான சகல வழிகளையும் கையாள வேண்டும்.
அத்துடன் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அரசாங்கம் பிறப்பித்துள்ள தொடர் ஊரடங்கு உத்தரவு காராணமாக, நாளாந்தம் கூலி வேலை செய்தும், மீன்பிடி போன்ற நாளாந்த வேலைகளை மேற்கொண்டும் வாழ்ந்துவரும் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர் என்று அறிகின்றேன்.
அரசாங்கம் இவர்களுக்கான உதவித் திட்டம் ஒன்றை உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
இதேவேளை, அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக எனது பெயரிலும் எனது கட்சியின் பெயரிலும் சிலர் போலியான முகநூல் கணக்குகளை திறந்தும் இணைய தளங்கள் வாயிலாகவும் தவறான கருத்துக்களையும் தகவல்களையும் பரப்பி வருகின்றமை எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கொரோனா தொடர்பில் நான் வெளியிட்டதாக ஒரு போலியான அறிக்கையை வெளியிட்டு சிலர் அநாகரிகமாக நடந்து கொண்டிருக்கின்றார்கள்.
பொதுமக்கள் இத்தகைய போலியான தகவல்கள் குறித்தும் அவற்றைப் பரப்புபவர்கள் குறித்தும் எச்சரிக்கையாகவும் வழிப்பாகவும் இருக்க வேண்டும் என்று இந்த சந்தரப்பத்தில் வேண்டுகோள் விடுகின்றறேன்.
எனது எந்த ஒரு அறிக்கையும் எனது அலுவலக்தால் உத்தியோகபூர்வமாக மின்னஞ்சல் மூலம் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுமே ஒளிய இவ்வாறான முகநூல் கணக்குகள் வாயிலாக அனுப்பப்படமாட்டா.
இந்த இக்கட்டான காலகட்டத்தில் அல்லும் பகலும் அயராது மருத்துவ பணியாற்றிவரும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மற்றும் ஏனைய மாவட்டங்களின் வைத்தியசாலை பணிப்பாளர்கள் மற்றும் அனைத்து மருத்துவர்கள், தாதிமார்கள், சிற்றூழியர்களுக்கும் எனதும் எமது மக்களினதும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
மருத்துவ செயற்பாடுகள் ஒருபுறம் இருக்க எமது மக்களை பதற்றம் அடையாமல் இருக்கும் வகையிலும், அதேவேளை அவர்கள் போதிய விழிப்புணர்வுடன் செயற்படும் வகையிலும் எமது மருத்துவர்கள் பணியாற்றுவதை அறிகின்றேன்.
இந்த வகையில் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவ கலாநிதி சத்தியமூர்த்தி மற்றும் ஏனைய மருத்துவர்கள் விடுத்துவரும் கோரிக்கைகள், அறிவுறுத்தல்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குங்கள்.
கொரோனா வைரஸை முறியடிக்க இதுவே ஒரே வழி! சி.வி.விக்னேஸ்வரன் விளக்கம் - Reviewed by Author on March 24, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.